அன்று முள்ளிவாய்க்கால்.
இன்று இடிந்தகரை.

அங்கே 3 இலட்சம் தமிழர்களுக்கு 3 இலட்சம் சிங்கள இராணுவம்.
இங்கே 10000 தமிழர்களுக்கு 10000 அரசு படைகள்.

அப்போது பதுங்கு குழியில் தமிழ் மக்கள்.
இப்போது மாதா கோயிலில் தமிழ் மக்கள்.

அவர்களும் மக்களுக்கு உணவையும்,நீரையும் தடுத்தார்கள்.
இவர்களும் மக்களுக்கு உணவையும், நீரையும் தடுக்கிறார்கள்.

அந்த நாளில் பத்திரிகை, தொலைக்காட்சிகள் ஈழப்படுகொலைகளை இருட்டடிப்பு செய்தன.
இந்த நாளில்  பத்திரிகை, தொலைக்காட்சிகள் இடிந்தகரை செய்திகளை  இருட்டடிப்பு செய்கின்றன.

அங்கே அவர்கள் சிங்களர்கள்.
இங்கே நாம்,
இந்தியர்கள்?
தமிழர்கள்?
மனிதர்கள்?
??????????

உதயகுமார் அவர்களின் பள்ளிக்கூடம், கணிப்பொறி, பள்ளி பேருந்து போன்றவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குடிநீர், உணவு போன்றவை கூடங்குளத்திற்குள்ளே செல்வது காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளதால், உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் காட்டு வழி, கடற்கரையோர வழிகள் மூலமாக அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று உணவுப் பொருட்களை சேகரித்து வருகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு தேவையான பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது; மருந்து பொருட்கள் கையிருப்பும் குறைந்துள்ளது.

கூடங்குளத்தில் மக்கள் மிகவும் அபாயகரமான சூழலில் உள்ளார்கள்! எந்த நேரமும் அவர்கள் தாக்கப்படலாம்! அதை தடுத்து நிறுத்த நம்மால் இயன்றதைச் செய்வோம்! அதன் முதல்கட்டமாக,

"சென்னையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம்".

பெண் எழுத்தாளர்கள் முதலில் இன்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள்! அனைவரும் உண்ணாநிலைப் போராட்டம் நடக்கும் இடமான 'தாயகம்' (ம.தி.மு.க. அலுவலகம், எழும்பூர்) வரவும்!

செய்தியைப் பரப்புவோம்! ஒன்று திரளுவோம்!

கோரிக்கைகள்:

1. கூடங்குளம் பகுதியில குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினரை திரும்பப் பெறவேண்டும். ஓர் அறவழிப்போரட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு போடப்பட்டிருக்கும் காலவரையற்ற 144 தடையுத்தரவு நீக்கப்படவேண்டும்.

2. குடி நீர், மின்சாரம், சுகாதார வசதிகளை முடக்குவதன் மூலம் ஒரு மக்கள் போராட்டத்தை ஓர் அரசு முடக்க நினைப்பது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்  செயலாகும். இதேபோல் உணவு, மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான பால் போன்ற அத்தியாவசிய தேவைகள்கூட காவல்துறையால் தடுக்கப்படும் நிலை தொடரக்கூடாது.

3. இடிந்தகரையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளித் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது குழந்தைகளின் அடிப்படை உரிமையையே மறுப்பதாகும். உரிய பாதுகாப்புடன், குழந்தைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும்.

4. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. தங்கள் வாழ்வாதாரங்களையும் தங்கள் சந்ததிகளின் வாழ்வுரிமைக்காகவும், ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்புக்காகவும் போராடிவரும் மக்களின் கோரிக்கையை ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் மேல் ஏவிவிடப்படும் நியாயமற்ற வன்முறை, அரசு ஜனநாயக நியதிகளுக்குப் புறம்பாக நடத்திவரும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றை எதிர்க்க ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

- கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம்