தலைமைச் செயற்குழுக் கூட்டம் - பெரியார் திராவிடர் கழகம்

நாள் : 01.08.2010       இடம் : திருச்சி

 தீர்மானங்கள்:

 1. எண்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புக் கருத்துக்கள் பெரியார் அவர்கள் காலத்திலிருந்து தங்குதடையற்று நடந்து வந்த நிலைக்கு மாறாக சென்னை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாகவும் கோவை மாநகரில் பல ஆண்டுகளாகவும் காவல் துறையிடம் அனுமதிக்கு அணுகும்போது வெகுசிலரின் எதிர்ப்புக்குப் பணிந்தும், காவல்துறை அதிகாரிகளின் இந்துமத உளவியல் காரணமாகவும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களுக்கும் சிலவேளைகளில் மந்திரமா? தந்திரமா?நிகழ்ச்சிகளுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் அனுமதி மறுப்பது வழக்கமாகிவிட்டது.

 அதேவேளை அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக அரசு அலுவலகங்களில் குறிப்பாகக் காவல் நிலையங்களில் கடவுள் படங்களை வைப்பதும், இந்துமத பூஜைகள் நடத்துவதும் புதிது புதிதாகக் கோவில்கள் கட்டுவதும் அரசு விழாக்களில்கூட பூமிபூஜை, யாகம் என நடைபெறுவதும் (அரசியல் சட்டம் வழிகாட்டும் அறிவியல் மனப்பான்மை, ஆய்வு மனப்பான்மை வளர்த்தல் ஆகியவற்றுக்கு முரணாகவும்) இயல்பாகிப் போய்விட்டது.

 அதுபோலவே மாணவர்களின் கல்வியைக் குலைக்கும் வகையில் அரையாண்டுத் தேர்வின்போது அய்யப்பன் பேராலும், முழுஆண்டுத் தேர்வின்போது மாரியம்மன், காளியம்மன் போன்றவற்றின் பேராலும் இரவு முழுவதும் ஒலிபெருக்கிகளை அலறவிடவும், திருவிழாக்களின் பேரால் இரவு முழுவதும் மேளம் அடிக்கவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவல்துறை அனுமதிப்பதும் தங்குதடையின்றி நடைபெற்றுவருகிறது.

 எனவே அவ்வாறான விதிமீறல்களின்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் அரசாணை களையும் சுட்டிக்காட்டி உரியோர்களுக்கு மனு அளித்தும், உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அதன்நகல்களை அனுப்பியும் மதச்சார்பின்மைக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரான செயல்களை நிறுத்துமாறு முதல்கட்டமாக வேண்டுகோள் அனுப்புவது என்றும் - வேண்டுகோளைப் புறக்கணித்து சட்டவிரோதமாகச் செயல்படுவார்களேயானால் ஆயுதபூஜை போன்ற எதேனும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அரசு அலுவலகங்களுக்குள் குறிப்பாக காவல்துறை அலுவலகங் களுக்குள் நுழைந்து அத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை களில் ஈடுபடுவதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 2. கழக உறுப்புகளோ, உறுப்பினர்களோ நூல், துண்டறிக்கை போன்றவற்றை கழகத்தலைவர், பொதுச் செயலாளர்கள் ஆகியோரின் முன்அனுமதியும் ஒப்புதலும் பெறாமல் கழகத்தின் பெயரால் (பெரியார் திராவிடர் கழகம்) வெளியிடக்கூடாது என்று இச்செயற்குழு முடிவுசெய்கிறது.

 3. நீண்ட நெடுங்காலங்களாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்களின் நிலைமைகளையும் வளர்ச்சிகளையும் அறிந்து அப்பிரிவினரின் முறையான முன்னேற்றத் திட்டங்களை வகுப்பதற்கு வாய்ப்பாக 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் “சாதிவாரிக் கணக்கெடுப்பை”யும் செய்யவேண்டுமென மத்திய அரசினை வலியுறுத்துகிறது.

 4. மத்திய அரசின் கல்விநிறுவனங்களிலும் உயர்கல்விநிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களை முழுமையாக நிரப்பத்தக்க வகையில் மாணவர் சேர்க்கை விதிகளை வகுத்தளிக்குமாறு மத்திய மனிதவளத்துறை அமைச்சகத் தையும் மத்திய அரசையும் இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

 5. புதிய பொருளாதாரக்கொள்கை அமுலானபிறகு வேலைவாய்ப்புகள் தனியார்துறைகளில் மட்டுமே அதிகம் கிடைக்கக்கூடிய நிலையில் தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 மத்தியில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்குப் பயந்து இந்த முக்கியமான சமூகநீதிக் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டதை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசும் இதில் கண்டும் காணாதது போல ஒதுங்கி நிற்காமல் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து மத்திய அரசை வற்புறுத்த மன்வரவேண்டும் என்று செயற்குழு வற்புறுத்துகிறது.

6. தமிழ்நாட்டில் ஜாதி-தீண்டாமை பல்வேறு வடிவங்களில் கிராமங்களில் பின்பற்றப் பட்டுவருவதை வேடிக்கைபார்க்கும் தமிழகக்காவல்துறையின் மனிதஉரிமைப்பிரிவை இழுத்து மூடும் போராட்டத்தின் நோக்கங்களைத்  தமிழகம் முழுவதும் பரவலாக கொண்டுசென்று தாழ்த்தப் பட்டோருக்கு ‘ அரிஜன்’ என்று பெயர்சூட்டி அவர்கள் உரிமைக்கு எதுவும் செய்யாத காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி தீண்டாமைக் கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் காவல் துறையின் மனித உரிமைப் பிரிவை இழுத்துமூடும் போராட்டத்தை நடத்துவது என இக்குழு முடிவு செய்கிறது.

7. தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைகள் எல்லைமீறிக் கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை விமர்சித்த வர்களும் சுவரொட்டி ஒட்டியவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.  கருத்துக்களைப் பரப்பி கலாச்சாரப் புரட்சிக்கு வழிவகுத்த பெரியார் மண்ணில் கருத்துரிமையை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி, பெரியார் - அண்ணா கொள்கைகளுக்கு எதிரானது என்பதை இக்குழு சுட்டிக்காட்டி கண்டிக்கிறது.

 8. அனைத்துசாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்கீழ் 207 பேர் அர்ச்சகர் பயிற்சியை முடித்தும் அர்ச்சகர் ஆக முடியாத நிலையே நீடிக்கிறது. பெரியார் நெஞ்சில் தைத்த முள் அப்படியே நீடிக்கிறது. மக்கள் மன்றத்தால் ஏற்கப்பட்டு, நீதிமன்றங்களால் தடுக்கப்பட்டுவரும் இந்த சமூக இழிவு ஒழிப்பு சட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டுமென இக்குழு வலியுறுத்துகிறது.

- பெரியார் திராவிடர் கழகம்