இருள்


இரவை
விழுங்கிக் கொண்டிருக்கிறது
யாருமற்ற
ரயில் தடத்தின் 
பாலத்திற்கடியில்
நடந்து கொண்டிருக்கிறேன்
என்னையும்
விழுங்கப் பார்க்கிறது
மெதுவாய்
ஊர்ந்து பாதையை
தொடர்கிறது
திடீரென
தெருமுனையின்
குழல் விளக்கு
தெறித்த வெளிச்சத்திலிருந்து
பயந்துப் போய்
பொந்துகளில் 
பதுங்கியிருக்கிறது
எலியைப் போல.

நகர நாகரிகம்

பூட்டப்பட்ட
வீடுகளைக் கொண்டு 
நகரத்து
வீதிகளெங்கும் 
வெறிச்சோடியே
கிடக்கின்றன
வாயில்கள் தோறும்
மாட்டப்பட்டிருக்கும்
வாசகங்கள்
பொறிக்கப்பட்ட
பலகை
தீர்மானமாகவே
எழுதியிருப்பார்கள்
வெளியாட்கள்
உள்ளே வராதீர்
நாய்கள் ஜாக்கிரதை
இது நகர நாகரிகம்.

 

மழை இரவு

ஒரு மழை இரவின்
வெற்று வெளியில்
தனிமையில்
நடந்திருந்தேன்
வெகு தூரத்திலிருந்து
நெடிய சப்தத்துடன்
ஒளி கடந்துச் சென்றது
மோட்டார் சைக்கிள்
எதையும் பொருட்படுத்தாமல்
நடந்தேன்
நடையின் சப்தத்தைவிட
மழைச்சாரலின்
சப்தம்
குறைந்திருந்த நேரம்
சாலையின்
குறுக்கும் நெடுக்குமாய்
தவளை, பாம்பு
நத்தை, நண்டு
தனிமையின் 
பிடியிலிருந்து
விலக்கின என்னை

 

Pin It