'மதவெறிக்கு எதிராக மனிதநேயத்தை மாற்றாக உயர்த்திப் பிடித்து முன்னெடுத்த பல போராட்டங்களில் உயிர்நீத்த ஆயிரக்கணக்கான எங்கள் உயிரினும் மேலான தோழர்களுக்கு'

என்ற முதல் பக்க படையல், இந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

அடிமை வர்த்தகம் நடந்த காலங்களில் 'How to make a Negro Christian' என்ற நூலில் கருப்பின அடிமைகளை எவ்வாறு அடக்கி வைக்க வேண்டும் என்று விரிவாக எழுதியுள்ளார் ரெவரண்ட் சார்லசு சோன்சு 1844ல் எழுதப்பட்ட இந்நூல் பதினாறாம் நூற்றாண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட கருப்பின அடிமைகள் தங்களது கட்டளைகளை மீறி விடாதபடி அதே நேரத்தில் இவர்கள் கட்டளைக்கு ஏற்றபடி அடங்கி நடப்பதற்காக ஏற்படுத்திய வழிமுறைகளின் தொகுப்பு என்றே கூறலாம்.

naraga maligai200 ஆண்டுகளாக ஒரே இடத்தில், ஒரே மாதிரியான கட்டமைப்பில், ஒரே மாதிரியான முதலாளிகளின் கீழ் வாழ்ந்த கருப்பின அடிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது நிலைமையை உணர்ந்து எதிர்க்குரல் எழுப்ப ஆயத்தமான வேளையில் கூட்டு எதிர்ப்புணர்வின் நீட்சியாக வெடிக்கக் காத்திருந்த புரட்சி, எழுந்து விடாதபடி தடுப்பதற்காக வெள்ளையர்கள் பயன்படுத்திய யுத்திகளில் ஒன்று கருப்பின அடிமைகள் மத்தியில் கிருத்துவ மதத்தை பரவலாக்கியது.

எண்ணிக்கையில் அதிகமாக இருந்த கருப்பின அடிமைகள் ஒன்று சேர்ந்தால் வெள்ளை முதலாளிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி விடும் என்ற காரணத்தினாலே கருப்பின அடிமைகள் வசிக்கும் பகுதிகளில் தேவாலயங்களை கட்டினர்.

வடிகால் இல்லாத வேதனை அரும்புகள், வெறுப்பு மொட்டுக்களாக வளர்ந்து புரட்சியாக பூத்து, விடுதலை பூங்காவை நோக்கி பயணிப்பது சமூக அறிவியல் விதி என்றே சொல்லலாம்.

நூற்றாண்டு வேதனைக்கு தேவாலயங்களில் தான் தீர்வு இருக்கிறது என்ற நம்பிக்கையை விதைத்தான். அடக்குமுறையிலிருந்து கடவுள் விடுவிப்பார் என்றும் வன்முறை சாத்தானின் ஆயுதம் என்றும் தொடர் போதனைகளால் அடிமை, அடிமையாகவே தொடர்ந்தான், புரட்சிக்குப் பொருந்தாத மதம் எனும் போதைப்பொருளுக்கும் அடிமையானான் முற்றிலும் கையாலாகதவனான், அமைதியும் அடிமைத்தனமும் நீடித்தது அங்கே.

அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அழிப்பதற்கு பல வழிமுறைகளை ஐரோப்பியர்கள் கையாண்டனர் அதில் முதன்மையானது அவர்களுக்கு ஐரோப்பிய மொழிகளை கற்றுக் கொடுத்தது, அவர்களை கிருத்துவர்களாக மாற்றியது, நாம் அனைவரும் கிருத்துவர்கள் தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டு செவ்விந்தியர்கள் ஐரோப்பியர்களை தங்களில் ஒருவராக கருதி ஏமாந்த வேளையில் அமெரிக்க நிலப்பரப்பை ஐரோப்பியர்கள் முழுவதுமாக தங்கள் வசப்படுத்திக் கொண்டனர் என்பது வரலாறு.

ஆண்டான் - அடிமை என்ற இரண்டே பிரிவாக பிரித்ததன் விளைவே, அடிமைகளால் தங்கள் நிலைக்கான காரணிகளை கண்டுபிடிக்க எளிதானது, அவர்களது நியாயமான வெறுப்பும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெள்ளையர்கள் மீது விழுந்தது.

 

இந்த யுக்திகள் எல்லாம் மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் ஐரோப்பியர்கள் பயன்படுத்தினர்.

ஆனால் கற்பனை செய்து பாருங்கள் கிட்டத்தட்ட இதே மாதிரியான அடக்குமுறையை ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது திணித்து, உழைப்பது உனது பிறவிக் கடமை, கைமாறு எதிர்பார்ப்பது தெய்வகுற்றம், என்ற கோட்பாட்டை மதம் என்ற சாட்டையை வைத்து அனைவரையும் பின்பற்றச் செய்தவன் எத்தகைய கொடியவனாக இருக்கமுடியும்.

நீயும் நானும் ஒரே மாதிரி தான் இருக்கின்றோம், பிறகு எதற்காக நீ உயர்ந்தவன் என்று கேள்வி எழுந்து விடக்கூடாது என்பதற்காக,

"தைவதினம் சகத்சர்வம், மந்திரதினம், துதைவதம்; தன்மந்திரம் பிராமனதினம் பிராமண மம தேவத" என்று சமற்கிருதத்தில் சொல்லப்படும் வேதத்திற்கு,

"உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது, கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவன், மந்திரங்கள் பிராமணன் கையில் உள்ளது, அதனால் பிராமணனே கடவுள்" என்று பொருளாம்.

பொது கிணற்றில் தண்ணீர் எடுக்காதே, நாங்கள் பயன்படுத்தும் சாலையை பயன்படுத்தாதே, நாங்கள் வணங்கும் கோயிலுக்கு வராதே என எண்ணற்ற தடைகளைப் போட்டு, அவனே தன்னை தாழ்ந்தவனாக நினைக்கும் அளவிற்கு ஒரு சதிகார கட்டமைப்பை ஏற்படுத்தினர்

அந்த கட்டமைப்பிற்கு வலு சேர்க்கும் விதமாக மக்களை நான்காக பிரித்து ஒரு வேலையும் செய்யாமல் கடவுளின் நிழலில் வயிறு வளர்த்த கூட்டத்தினர். எஞ்சியுள்ள மூன்று பிரிவினரும் தங்களுக்கு (அடிமைகள்) கீழானவர்கள் என்றும் இரண்டாம் நிலையில் இருக்கும் அரசர்களுக்கு கீழே வணிகர்களும், உழைப்பாளிகளும் இருந்ததால் அவ்விரண்டு கூட்டத்திற்கு மேலானவன் என்ற மமதையில் தனக்கு மேலாக அமைந்த ஒரு சிறிய கூட்டத்தை ஏற்றுக்கொள்வார்.

இங்கே அதிக பாதிப்பிற்குக்குள்ளான கடைசி அடிமையின் நேரடி வெறுப்பு அவனை ஏவும் மூன்றாம் இடத்தில் இருப்போர் மீதே அதிகம் பாயும். மூன்றாம் இடத்தில் இருப்பவனது கோபம் இரண்டாம் நிலையில் இருப்பவனை தாண்டாது. தனக்கு கீழே இரண்டு பிரிவு மக்கள் இருப்பதை தக்கவைத்துக்கொள்ள விரும்பும் இரண்டாம் நிலைக்காரன், தனது உயிரை கொடுத்தாவது இந்த கூட்டமைப்பிற்கும் அதன் ஆணிவேரான முதல் வகுப்பினர் மீது ஒரு துரும்பு கூட விழாதவாறு பார்த்துக்கொள்வான்.

மேலிடத்தில் இருக்கும் தங்களுக்கு போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தங்களைத் தவிர யாரும் கல்வி கற்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர், நால்வர்ணத்தில் முதலாம் வர்ணத்தவர்.

சண்டை சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை முன்னிலைபடுத்தி எவ்வித போர் சூழலிலிருந்து தங்கள் சந்ததிகளை பாதுகாத்துக் கொண்டார்.

அன்று ஏதோ நம் முன்னோர்கள் அப்பாவியாக இருந்ததால், உழைப்புச் சுரண்டல் செய்யமுடிந்தது என்று குறைத்து மதிப்பிட வேண்டாம் என ஓங்கி ஒலிக்கும் எச்சரிக்கை மணிதான், இந்த நரக மாளிகை.

மேற்சொன்ன காலச்சூழலை மீட்டுருவாக்கம் செய்திடவே, வரலாறு காணாத வலிமையோடு, அச்சுறுத்தும் செயல்திட்டத்தோடு களமிறங்கியுள்ளது ஆர். எசு. எசு. எனும் பிராமணர் அமைப்பு.

ஆர். எசு. எசின் பல பயிற்சிகளை பெற்றபின் சங்கத்தின் தத்துவ பிரிவில் சுமார் ஏழு ஆண்டுகள் ஊழியராக செயலாற்றினார் நாக்பூரில் உள்ள ஆர். எசு. எசு. தலைமையகத்தில் அழைக்கப்படும் விசேட பயிற்சியையும் பெற்றிருக்கிறார் ஆர். எசு. எசு. பரிவாரத்தின் இயக்கங்களில் ஒன்றான சுதேசி சயின்சு மூவ்மெண்ட் தலைமையில் நடக்கும் வேத கணித பயிற்சியை 2002ம் ஆண்டுகளில் முடித்தார் அந்த இயக்கத்தின் மாநில வேத கணித பயிற்சியாளராக செயல்பட்டார் ஒரு ஆண்டு பாலகோகுலம் அமைப்பின் கரூர் மாவட்ட தலைவராக செயல்பட்டார் ஈசி மேக்சு என்ற தலைப்பில் இந்திய கணித சாத்திரத்தை ஆதாரமாகக்கொண்டு ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் இப்போது சங்க்பரிவார அமைப்புகளில் இருந்து வெளியேறி சி பி எம் இதில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

சங்கப் பரிவார் அமைப்பின் மோக வலையில் அகப்பட்டு இந்து ராட்டிரம் அமையவேண்டும் என்பதற்காக ஏற்றுக்கொண்ட மிகக்கொடூரமான பாதையில் பயணிக்கும்போது சந்தர்ப்பவசத்தால் கண்டறிந்த உண்மைகளை பார்த்து நிலைகுலைந்து போன சுதீசு மினி என்ற முன்னாள் ஆர். எசு. எசு. ஊழியரின் 25 ஆண்டு சங்கபரிவார் அனுபவங்களின் ஒப்புதல் வாக்குமூலமே இந்த நூல்.

அமெரிக்க வல்லரசின் முகவராக செயல்பட்ட சான் பெர்க்கின்சு எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்று உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் பன்னாட்டு மூலதனத்தின் வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதையும் பழங்குடி மக்கள் உள்ளிட்ட பூர்வகுடிமக்கள் வேட்டையாடப்படுவது சான் பெர்க்கின்சு அனுபவங்களிலிருந்து எழுதி இருப்பார் அந்த நூலைப் படிக்கும்போது பேரதிர்ச்சி ஏற்படும் அதே போல் ஆர். எசு. எசு. எனும் பாசிச பாணி இயக்கத்தில் 25 ஆண்டு காலம் செயல்பட்ட சுதீசு மினி ஒரு நிலையில் உண்மையை புரிந்துகொண்டு அந்த அமைப்பில் இருந்து வெளியேறினார்.

நூலின் வாயிலாக நாம் அறிந்தது, பிஞ்சு மனங்களில் இசுலாமியர் மீதான வெறுப்பு முதலில் விதைக்கப்படுகிறது கூடவே இந்தியாவின் பெருமைகளும் சிறப்புகளும், பல நேரங்களில் பொய்யானவையும் உண்மை போன்றே போதிக்கப்படுகிறது.

இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற கருத்து இளம் மனங்களை எதற்கும் துணிந்தவர்களாக வார்த்து எடுக்கிறது. வெறுப்புணர்வின் இலக்காக கிருத்துவம் ஆன்மிக தளத்திலும் பொதுவுடமைக் கட்சிகள் (கம்யூனிச கட்சி மற்றும் அமைப்புகள்) அரசியல் தளத்திலும் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

இறுதியாக இந்து அறத்தை கடைபிடிக்காத, இந்துக்களில் ஒரு பகுதியினரை, குறிப்பாக நாலாம் வர்ணம் என்ற தன்னடக்கம் இல்லாமல், தன்மானத்துடன் வாழும் தலித் மக்களை அழிக்கும் அளவிற்கு அப்பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு வளர்கிறது.

யோகா, வேதம், ஆயுர்வேதம், இராமாயணம், மகாபாரதம், கீதை, முன்னோர்களின் அறிவாற்றல், நாட்டு மருத்துவம் போன்றவற்றை முகமுடிகளாக மாட்டிக்கொண்டு நம்மை ஆயிரமாண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் வேலைத்திட்டமே இந்துத்துவ செயல்திட்டம்.

'நரக மாளிகை' - ஓர் அபாயச் சங்கொலி!

மூலம் (மலையாளம்): சுதீசு மின்னி தமிழில்: சதாசிவன்
பதிப்பகம்: மேழி புக்சு, மதுரை
பக்கங்கள்: 150
விலை ரூபாய்: 120

- இராசகுரு கார் பாலன்