sulunthi“சமகாலப் படைப்பாளி என்பவன் மக்களின் ஊடாக வாழ்பவன், கடன் கத்திகளில் உழல்பவன். ஊஞ்சல், நாற்காலியில் குந்தி எழுதும் பொதுத் தன்மையிலிருந்து விலகி வட்டாரப் படைப்புகள் என்கிற நிலைக்கு நகர்கிறபோது இன்னார், இனியார், இந்த இடம், அந்த இடம் எனக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் படைப்பாளிக்கு ஏற்பட்டு விடுகிறது”.- (கண்மணி குணசேகரன் – சமகால நாவல்களில் சாதிய அரசியல் முன்னுரை)

தமிழிலக்கிய நீண்ட வரலாற்றில் புனைவுகளால் நெய்த பதினங்களின் இருப்பும், வளர்ச்சியும் மிக முக்கியமான இடத்தைக் கைக்கொள்வன. காரணம் இத்தகையப் புதினங்கள் காலத்தின் பதிவுகள் என்பதோடு அந்தந்த காலக்கட்டத்தில் மொழி, பண்பாடு, வெகுமக்கள் வாழ்வியல் மற்றும் இனவரைவியல் என்கிற விழுமியங்களைப் பதிவு செய்யும் முக்கியப் பங்காற்றுகின்றன

“மானுடவியலின் முக்கியப் பிரிவுகளுள் ஒன்றாக இனவரைவியல் (Ethnography) அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு (Ethnic group) அல்லது பண்பாட்டை விவரிக்கும் கலை அல்லது அறிவியலே இன வரைவியலாகும்.

ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பண்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டு அவற்றை முறையாகத் தொகுத்து வழங்குதல் இனவரைவியலின் நோக்கமாதலால், இது அடிப்படையில் வருணனைத் தன்மை கொண்டதாகவே அமையும்.

ஒப்பீட்டு முறையிலான ஆய்வுகளுக்கும் கொள்கைசார் விளக்கங்களுக்கும் இதில் இடமில்லை. ஆனால் சமூக மானுடவியல், பண்பாட்டு மானுடவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் இனவரைவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இம்மூன்று அறிவுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத் தரவுகளை இனவரைவியல் வழங்குகிறது.

இனவரைவியல் ஆய்வு தொடர்பாக ஒரு தனிப்பட்ட மக்கள் குழுவிடமிருந்து பின்வரும் செய்திகள் தரவுகளாகச் சேகரிக்கப்படுகின்றன

1. பொருள்சார் பண்பாடு
2. வாழ்க்கைப் பொருளாதாரம்
3. நுகர்வு முறை
4. பரிமாற்ற முறை
5. சமூகக் கட்டுப்பாடு

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினை ஊடுருவிப் பார்க்க மேற்கூறிய தரவுகள் பெரிதும் துணை புரிகின்றன. அத்துடன் அதன் பண்பாட்டையும் நாகரீகத்தையும் இத்தரவுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

ஓர் இலக்கியப் படைப்பு சிறந்து விளங்க வேண்டுமானால் அதில் இடம்பெறும் மாந்தர்களும், அம்மாந்தர்களின் பின்புலத்திலுள்ள சகல இயக்கங்களும் உரிய பொருட்களும் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட வேண்டும்.

இலக்கியத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இன வரைவியல் செய்திகள் அவ்விலக்கியத்தில் இடம் பெறும் பாத்திரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பொருத்தமான பின்புலத்தை உருவாக்க உதவுகின்றன.”( இனவரையிலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்)

“ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான்; ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும், நிலைகளிலும், ‘பிரத்தியட்சங்கள்“ எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதயவீணையில் மீட்டிவிட்ட கரங்களைக் கொண்டு, நான் இசைக்கப்புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்.” [ எம் .ஏ.நுஃமான்]

பெருமன்னர்களை, பிரமிப்பூட்டும் அந்தப்புர அழகிகளை, கட்டவிழ்க்க முற்படும் கச்சைளை, சரியாக அந்நேரத்திலேயேப் பாயும் கட்டாரிகளையே வரலாற்றுப் புதினங்களென வழங்கிய சாண்டில்யப் பாண்டியத்யங்களுக்கு மாற்றாக எளிய மக்களின் வாழ்வை, அவர்தம் மொழியில் பதிவு செய்து சரித்திரம் படைத்தவர் பிரபஞ்சன்.

‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’, போன்ற பிரபஞ்சனின் மக்கள் வரலாற்றுப் புதினங்களின் வரிசையில் எளிய மக்களோடு கலந்த பண்டுவம் படித்த நாவிதன் ஒருவனது வாழ்வைப் பதிவாக்கியிருக்கும் முத்துநாகுவின் முதல் நாவல் ‘சுளுந்தீ’.

“ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், உளவியல் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டெழுதும் நாவலானது அம்மனிதர்களினதும், சமூகத்தினதும் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சமய வாழ்வு மற்றும் வாழ்வியல் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிப்பது அவசியமாகும்.

அப்பொழுதுதான் அந்நாவலைப் படிக்கும் வாசகன் அதில் இடம்பெறும் சமூகச் சூழலோடு ஒன்றிவிட முடியும். அத்துடன் அந்நாவலில் இடம் பெறும் பாத்திரங்கள் அவை சித்தரிக்கப்படும் காலச்சூழலோடு பொருந்தி நிற்கும்”.

வரலாற்று நாவல்கள் என்பவை சமகால நிகழ்வுகளைத் தவிர்த்து, பழங்காலத்து ஆட்சியாளர்கள் (வேந்தர்கள், குறுநில மன்னர்கள்) நிலைப்பட்ட வாழ்க்கையை, அக்காலச் சூழலில் வழங்கிய மொழியின் (எழுத்து வழக்கு மொழியாகக் கட்டமைத்துக் கொண்டு) தன்மையோடு படைத்துக் காட்டுவதாகும்.

அடிப்படையில் இவ்வரலாற்றுக் கதைகளின் தோற்றப் பின்புலம் என்பது மேற்கத்திய சூழலில் இருந்துதான் முதன்முதலில் தமிழ்ச் சூழலுக்கு வந்தது. அந்தவகையில் இந்தியச் சூழலில் வரலாற்று நாவலுக்கான தோற்றம் என்பது முதன்முதலில் வங்காள மொழியில் உருப்பெற்றுள்ளது.

1801 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘பிரதாபத்திய சரித்திரம்’ என்பதே முதல் வரலாற்று நாவலாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 1865இல் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘துர்கேச நந்தினி’ (குறுநில மன்னர்களின் மகள்) என்பதும் வரலாற்று நாவலாக அடையாளப் படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய மொழிகள் அனைத்திலும் வரலாற்றுப் புனைவுகள் தோன்ற வழிவகுத்தது எனலாம்.

ஒரு மகாப்பேரரசு மறையும் நேரத்தில் நாட்டில் நிலவும் குழப்பங்கள், ஆட்சியதிகாரப் போட்டிகள் எவ்வண்ணம் இருக்கும் என்கிற வினாவுக்கு பெரும்பதிலாய் ‘சுளுந்தீ’ 18 ம் நூற்றாண்டின் பின்னணியில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய, வடுக மக்களின் தமிழக குடியேற்றம், நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் ‘கன்னிவாடி’ எனும் பாளையத்தின் மையம், பாண்டியத் தலைநகரின் மாற்றத்தின் பின்னணி, எதிர்க் கேள்விக் கேட்டவர்கள் ‘குலநீக்கம்’ செய்யப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வனங்களில், மலைகளில் துறந்து வாழும் அவலம் – என்கிற பின்புலத்தோடு எழுதப்பட்ட ‘சுளுந்தீ’ , நூலுக்காக மிக அதிகமாக உழைத்திருப்பதை புதினத்தின் போக்கும் செல்நெறியும் புலப்படுத்துகின்றன.

வட்டார இலக்கியமானது ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகள், அவர்களி்ன் மாறுபட்ட வாழ்க்கை முறைகளோடும் அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் எதார்த்தமாக வெளிப்படுவது எனக் கொள்ளலாம்.

வட்டார நாவல்கள் என்பவை வாழ்க்கையின் எதார்த்தங்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக்கூறுவது கிராம மக்களின் வாழ்க்கையை அவர்களது இயல்புகளை, எண்ணங்களை, செயல் துடிப்புகளை எல்லாம் ஜீவனோடு சித்தரிப்பது.

மக்களின் பேச்சு வழக்குகளை உள்ளபடியே எடுத்தாள்வது. இவ்வாறான தன்மைகளைக் கொண்ட நாவலை எழுதுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். வாழ்க்கை, அனுபவம், முற்போக்கு சிந்தனைகளும் பெற்றவர்கள் கையில் இந்த விதமான நாவல்கள் புதிய வேகத்தையும் புதிய பரிமாணங்களையும் அடைகின்றன.[சு.சண்முகசுந்தரம்].

போர்களால் ஏற்பட்ட பஞ்சம் திருச்சிராப்பள்ளி சூழ்ந்த பகுதிகளையே பெரிதும் வாட்டிற்று. பஞ்ச ஒழிப்பு திட்டங்களைக் கவனிப்பதற்காகச் சொக்கநாதன் தலைநகரை மீண்டும் மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினான். திருச்சிராப்பள்ளியில் அரண்மனை முதலிய பொதுப் பணிகளுக்காகவே திருமலை நாயகன் கட்டிய கலைக் கோயில் மாளிகையின் பகுதிகளை அவன் அழித்துப் பயன்படுத்தியதாக அறிகிறோம்.

கலைமாமன்னன் பிறந்த அதே மரபுக்குள்ளேயே கலைப் பண்பறியாக் கலை அழிவாளன் சொக்கநாதனும் தோன்றினான் என்று காண்கிறோம்.[ தென்னாட்டு போர்க்களங்கள் – கா.அப்பாத்துரை] என்கிற பன்மொழிப்புலவரின் கூற்ரோடு புதினத்தின் கால அடிப்படை பொருந்திப் போகிறது

‘சுளுந்தீ – சமகாலத் தேவையான ‘சூழலியல்’ குறித்து பெருங்கவலைக் கொள்கிறது. மிகச் சாதாரணமாக நாமிப்போது உபயோகிக்கும் ‘வெடிமருந்து’ எனும் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் வரலாற்றைப் பதிவாக்கியிருக்கிறார் முத்துநாகு.

‘இன்று வெடிமருந்தாக மட்டுமே அறியப்படும் மருந்துகள் பண்டுவத்தில் (வைத்தியம்) செந்தூரம் (பஸ்பம்) தயாரிக்கப் பயன்படுபவை. இந்த மருந்துகளைக் கொண்டு போர்க்களங்களில் வெடியாகப் பயன்படுத்தும் (EXPLOSIVE) தொழில்நுட்பம் சுமார் 1652ல் கண்டறியப்பட்டு 1660ல் உலகம் முழுதும் பரவியது’ என இந்தப் பின்னணியிலேயே ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய ஹைதர் அலியின் எழுச்சியை, திப்பு சுல்தானின் மகாவீரத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

வெறுந்தகவல்களின் குப்பைக்கூடையா புதினம் என்பது? அப்படியெனில் முதல் வாசிப்பிலேயே ஒதுக்கி விடலாம். ஆனால் அடிப்படையில் முத்துநாகு பாரம்பரியமாக மருத்துவம் அறிந்தவர்.

சுளுந்தீ புதினத்து பாண்டுவத் தகவல்கள் பாத்திரங்கள் வழியே பொருத்தமான இடத்தில் பொருத்தமானப் பாத்திரங்களின் உரையாடல்களாகப் பொருந்திப் போவது சிறப்பு. ஒரு வகையில் பண்டுவம் எனும் சித்த மருத்துவத்தின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டதோ இந்நூல் எனும் வகையில் பல நோய்களுக்கு வைத்தியம் பரிந்துரைக்கப்படுகிறது.

தொழில்முறையாக படைப்பாளர் மூன்றாம்கண்ணர் (Photographer) அதனாலேயே காமிராப் பார்வையில் நாவலின் பல நிகழ்வுகள் நகர்கின்றன.

நாயக்கர் குலமரமான புளியமரத்தை சாலையோரம், கோயில், குளக்கரைகளில் நாயக்க மன்னர்கள் நடவு செய்ததை முத்துநாகு பதிவு செய்திருப்பதை வாசிக்கும் நேரத்தில், தங்க நாற்கரங்கள் சாலையோர தருக்களைச் சீவித் தள்ளியதை மறக்க இயலவில்லை. கூடவே மரங்களை வெட்டி சாய்த்து கொளுத்திப்போட்டு ‘போராடிய’ ஒரு கட்சியின் போராட்டமும்.

நாவல் பயணிக்கும் காலக்கட்டத்தில் தோல்பட்டறை, புகையிலை போன்றவை. தமிழகத்துக்கு அறிமுகமாகும் தகவலையும் அறிய முடிகிறது. கூடவே ‘சேசுசபை’யின் இருப்பும் தொடர்புகளும்.

புதினம் முழுக்க டச்சுக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே தரப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் பிற அய்ரோப்பியரான பிரிட்டிஷ், பிரெஞ்ச், போர்ச்சுக்கீசியர் தம் இருப்பை கா.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளார்.

நாவலின் மையம் கன்னிவாடியை மட்டுமே FOCUS செய்வதால் திருச்சி தலைநகர் மாற்றம், செஞ்சியின் ஆட்சிமையம் போன்றவை Out of focus ஆகிறது.

சுளுந்தீ கதை மையம் ‘கன்னிவாடி’ யாக இருப்பினும் கதையின் நகர்வில் திருப்பாதிரிப் புலியூர் (இன்றைய கடலூர்), செஞ்சி கர்நாடகவின் மேலக்கோட்டை (Mel kote) எனப் பல பிரதேசங்களுக்கும் பயணப்படுகிறது.

நாவலின் இரண்டாம் கதைநாயகனாக மாடன் ஒற்றைக் குழந்தையாக பிறந்ததாலேயே அடமும், சொல்பேச்சும் கேட்காதவனாகவும், EGO எனும் தன்னகங்காரமும் மிகுந்தவனாக இருக்கிறான். சமகாலத்து ஒற்றைக் குழந்தைகளின் சரித்திரக் காலத்து குறியீடா மாடன்..?

எழவு வீட்டில முப்பதுநாள் முடியாம அடுத்தவங்களைத் தொடக்கூடாது. நம்ம தொழிலுக்கு அந்த சாத்திரமெல்லாம் கிடையாது மகனே” என மகன் மாடனிடம் கூறுகிறான் ராமப்பண்டுவனை இழந்த வல்லத்தாரை.

அதே இடத்தில் இன்னொரு காட்சி, கண்டாங்கிச் சேலையில் ஆ்ததாவைப் பார்த்துப் பழகியவன், வெள்ளைச் சேலையில் தாலி இல்லாமல் கழுத்தில் காதில் ஏதும் இல்லாமல்.. கண்ணீருடன் மூனியாக காட்சி தந்தாள் வல்லத்தாரை… (பக்கம் 340) புதினத்தின் காலமான 1 ம் நூற்றாண்டில், கைம்பெண்ணுக்கு மங்கலத் தாலி நீக்கலும், வெண்சேலை உடுத்தலும் வழக்கத்துக்கு வந்து விட்டதா என்பதை ஆய்வறிஞர்கள் விளக்க வேண்டும்.

சுளுந்தீ புதினத்துக்குள் பயணப்படுகையில் எனக்குள் எழுந்த இதுபோன்ற பல வினாக்களின் தொகுப்பை படைப்பாளி முத்துநாகு-வுக்கு அனுப்பிட அவரும் சலிக்காமல் பதில் தந்தார். அந்த தொகுப்பு இங்கே:

 சுளுந்தீ புதினத்தின் களம் வரலாறும் புனைவும் கலந்தது..எனில் வரலாற்று க் காலம் எது?

நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கரின் காலமான 1650 முதல் 1680 வரை

 இச்சாபத்தியம்-விளக்க முடியுமா?

இச்சாபத்தியம் :ஆண் பெண் கலவி உறவு தவிர்க்கும் பத்தியம்.

 நாவலில் டச்சுக்காரர்கள் மட்டுமே குறிப்பிடப் படுகிறார்கள்.பிற ஐரோப்பிய வணிகர்கள் பற்றிய குறிப்புகள் இல்லை யே ஏன்?

கதைக்களம் செல்லும் பாதையில் உள்ளவர்கள் மட்டுமே சொல்ல இயலும் என்பது தாங்கள் அறிந்ததே

 திருப்பாதிரிப்புலியூர்-ல் -இன்றையக் கடலூர் -சமண மடம் இருந்ததாகத்தான் செய்தி.ஆனால் நாவல் அங்கு சைவ மடம் குறித்து பேசுகிறது...சற்றே விளக்கமுடியுமா?

திருப்பாதிரிபுலியூர் வீரசைவ மடம் இன்றும் உள்ளது. கர்நாடகாவில் உருவ வழிபாடு இல்லை.. திருப்பாதிரிபுலியூரில் வீரசைவ மடம் இன்றும் உள்ளது. அது குறித்த பல ஆய்வுகள் வெளியாகியுள்ளது.

ஏகப்பட்ட கல்வெட்டுகள் அதன் சுவரில் உள்ளன. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்தக்கோவில் (மடம்) இயங்குகிறது. கருநாடகா வீரசைவமடத்தில் உருவ வழிபாடு இருக்காது. ஆனால் இங்கு ஆவுடை லிங்கம் உண்டு

 இந்த நாவலை எழுத எத்தனை ஊருக்கு அலைந்தீர்கள்..எவ்வளவு காலம் ஆயிற்று

தமிழகம், கருநாடகம், கேரளம், பகுதிகளுக்கு சென்று வந்தேன். காலம் நான் குறிப்பிட்டால் மிகையாக இருக்கும் என்பதால் எனது பதிலை தவிர்க்கிறேன்.

 பண்டுவம் குறித்த தகவல்களை எங்கே சேகரீத்தீர்கள்..இந்த மருத்துவ முறைமை இன்றைக்கும் பயனளிக்குமா

பண்டுவ குடும்பத்தின் வாரிசு என்பதால் எனக்கு பண்டுவம் அறிந்து தெரிய வேண்டிய கட்டாயச் சூழல். சித்த மருத்துவத்தில் உள்ள தாதுகளால் தயாரிக்கப்படும் செந்தூரம், பற்பம் இவைகளை முறைப்படி தயாரித்தால் இன்றும் முழு பலன் தரும். பல பண்டுவர்கள் இதை செய்து கொண்டு உள்ளார்கள். பலரும் பயன்பட்டு வருவதை நான் நேரில் கண்டு வருகிறேன்.

 திண்டுக்கல் தோல் பட்டறைகள் இந்நாவல் நிகழும் காலத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனவா?

ஆம். நாயக்கர் ஆட்சியின் துவக்க காலமான திருமலை நாயக்கர் காலத்திலே தோல் பதனிடும் பட்டறைகள் வந்து விட்டது. மன்னர் சொக்கநாதநாயக்கர் ஆட்சியிலே அது பெருக்கம் கண்டது.

 கத்தை என்பது எந்த மன்னரின் /ஆட்சியின் நாணய வகை(currency)?

வராகன் (பன்றி) என்பது விஜயநகர ஆட்சியாளர்களின் லட்சினை. இதன் பெயரிலே நாணயம் வெளியிடப்பட்டது. பத்து வராகன் ஒரு கத்தை. இச்சொல் தற்போது வரை உள்ளதால் இக்கேள்வி எழுந்துள்ளது.

 சித்தரிடம் சேர்ந்து பண்பிலும் பண்டுவத்திலும் தேர்ந்த ராமனும் தன் மனைவியை செருப்பால் அடிக்க நினைப்பது...ராமப்பண்டுவனின் பாத்திரத்துக்கு அழகு சேர்ப்பதா

நீங்கள் குறிப்பிடும் நிகழ்வு நூலில் இல்லை.

 ”உனக்கு மருத்துவச்சி வேல சொல்லிக்கொடுத்தவள செருப்பால அடிக்கனும்”[பக் 253]

இப்படி காலும் இல்லாமல் தலையும் இல்லாமல் கேள்வி இருந்ததால் நினைவுக்கு வரவில்லை. அந்த இடத்தில் அது சரிதான். வண்டுகள் துளையிட்டால் அதிலிருந்து மிக நுண்ணிய தூசிகள் வருமென்ற ஆத்திரத்திலும், விறகினை எடுத்து வைக்காமல் பழமொழியாக பதில் சொன்னால் கோபம் வரும் தானே.

 புதினம் நிகழும் காலத்தில் பிரிட்டிஷ் ,போர்ச்சுகீசியர்,மற்றும் பிரெஞ்சு நுழைவுகள் இருப்பினும் டச்சுக்காரர்கள் மட்டுமே புதினத்தில் குறிப்பிடப்படுவதற்கு சிறப்பான காரணங்கள் உண்டா…? டச்சுக்காரர்கள் கதைக்களத்தில் கொண்டுவர தேவையான கதைக்களம் அமையவில்லை.

 மாடன்...single child syndrome எனும் ஒற்றைப்பிள்ளைகளுக்கே உரிய அடங்காத்தனம்,சொல்பேச்சு கேளாமை,போன்ற குறைபாடுகளுடன் படைக்கபட்டதற்கு உளவியல் காரணங்கள் ஏதும் உண்டா…? மாடன் பாத்திரத்தை முழுமையாக படித்தால் இக்கேள்வி இருக்காது என்றே நினைக்கிறேன். அவன் வீறு கொண்டு எழுந்திட பல சூழல் காரணங்கள் நூலில் உள்ளது

 நாவல் நிகழும் காலத்தில் கைம்பெண்டிர்க்கு வெள்ளை சேலை,தாலியின்மை போன்ற சடங்குகள் உண்டா..

ஆம்

 பர்லாங்,விசில் சத்தம் போன்ற பிறமொழிகளின் கலப்பு.. எப்படி?

விசில் என்ற ஆங்கில சொல் இரண்டு இடத்தில் உள்ளது. மூன்றாம் பதிப்பில் திருத்தி விட்டோம்.[என்னிடம் உள்லது நான்காம் பதிப்பு]. பர்லாங் எனும் சொல் போர்த்துகீச்சியர் சொல், புழக்கத்தில் இருந்ததற்கான நாயக்கர் கால ஆவணங்கள் தெளிவுபடுத்துகிறது. அது நில அளவை முறையை போர்த்துகீச்சியரை கொண்டுதான் அளவிட்டுள்ளனர் எனபதை தஞ்சை நாயக்கர் கால சான்றுகள் தெளிவுபடுத்துகிறது.

 பன்றிமலைச் சித்தர் தங்கியிருந்த குகைதான் கொடைக்கானல் குணா குகையா?

இல்லை. சித்தர் பொடவு என்ற சிறுகுகை பன்றிமலையில் உள்ளது. நீங்கள் குறிப்பிடும் பகுதியில் பிரிட்டீஷார் ஆட்சியிலே மனித நடமாட்டம் ஏற்பட்டது

 இந்த புதினத்தை வெகுமக்கள் நூல் என அழைத்தல் சரியாக இருக்குமா

இந்த வினாவை முத்துநாகு மிக அமைதியாக கடந்து விடுகிறார். ஆனால் “தமிழ் இலக்கியச் சூழலில் 1990களுக்கப் பிறகான காலவெளி என்பது கோட்பாடுகளை முன்னிறுத்தி இலக்கியங்களை அணுகுதல் என்பதாக உருமாறியது. அதோடு இலக்கியத்தின் பொருண்மை என்பது விளிம்புநிலை மக்கள் பற்றியதாகவும், அவர்களின் அவல வாழ்க்கையைப் பதிவு செய்தல் என்பதாக முன்னெடுக்கப்பட்டது.

இன்றையச் சூழலில் வட்டார இலக்கியப் படைப்புகள் குறைந்துள்ளன. மாறாகச் சாதியம் குறித்த விமர்சனங்கள் மற்றம் சாதிய அரசியல் குறித்த எதிர் உரையாடல்கள் தொடர்ந்து முழுவீச்சாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் சாதி சார்ந்து செயல்படுதல், சாதிய இறுக்கமாகுதல், தான் சார்ந்த சாதியை வெளிப்படையாக எடுத்துரைத்தல் போன்ற செயற்பாடுகள் தீவிர மடைந்துள்ளதைக் கவனிக்க முடிகிறது. மொத்தத்தில் வட்டார நாவல்களி்ல பேசப்படும் வட்டார வாழ்க்கை என்பதும், சாதியம் என்பதும் ஒற்றைப் படித்தான பதிவுகளாகவே இருக்கின்றன.

தமிழ் மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியதான எதார்த்த வாழ்வியலை நாவலில் பதிவுசெய்யும் முயற்சியை முதல்முதலில் மார்க்சீய படைப்பாளர்கள்தான் தோற்றுவித்தனர்.

இருப்பினும் அவர்களால் எழுதப்பட்ட நாவல்களில் சாதியப் பார்வை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு வர்க்கப் பிரச்சினை முதன்மையாகப் பேசப்பட்டது என சுட்டுகிரார் முனைவர் ஸ்ரீதர் [சமகால நாவல்களில் சாதிய அரசியல் - முனைவர் ச.ஸ்ரீதர்].

எனினும், ஒரு புதினத்தின் வழியாக, பொருத்தப்பாட்டோடு பாத்திரங்களின் மொழியிலேயே நாட்டு மருத்துவம், மாட்டு வாகடம், குதிரை வாகடம், நிலவியல், விலங்கியல், தாவரவியல், வட்டார, வழக்காற்றுப் பதிவுகள், மானுடவியல் எச்சங்கள், தொன்மங்கள் இவற்றோடு காலத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்று குறிப்புகள் எனப் பல வண்ண நூல்களால் நெய்யப்பட்ட ‘சுளுந்தீ’ அடிக்குறிப்புகள் ஏதுமில்லா முதல் வட்டாரபின்புலத்தோடு, வரலாற்று பின்னணியில் எழுதப்பட்ட, இனவரைவியல் நாவலென மதிப்பிடலாம்.

- அன்பாதவன்