book reviewஇந்திய விடுதலையின் ஐம்பதாவது ஆண்டான 1997ல் Idea of India என்ற நூலை ஆசிரியர் சுனில் கில்நானி எழுதினார். சுனில் கில்நானி லண்டன் அரசர் கல்லூரியில் இந்தியா குறித்த துறையில் பணிபுரியும் வரலாற்றுத் துறை பேராசிரியர். உலக அளவிலும் குறிப்பாக இந்தியாவில் Idea of India என்ற சொல்லாடல் அரசியல் வாதிகளால், அறிஞர்களால் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு இந்த நூல் பிரபலமானது. பரவலாகவும் வாசிக்கப்பட்டது.

இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற பெயரில் இந்த நூலை அக்களூர் இரவி மொழிப் பெயர்த்துள்ளார். 2017ல் வெளிவந்த இந்த நூலை வெளியிட்டதன் மூலம் சந்தியா பதிப்பகம் முக்கிய சமூக கடமையொன்றை ஆற்றியுள்ளது எனலாம். சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ‘திசையெட்டும் விருது’ 2018ம் ஆண்டு இந்த நூலுக்கு கிடைத்தது.

ஜனநாயகம், பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்ற கருதுகோள்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவரும் இந்த நூலை கொண்டாடலாம்.

விடுதலைப் பெற்ற இந்தியா ஒரு ஜனநாயக நாடாக எப்படி உருவானது, இந்தியா என்கிற கருத்தாக்கம் எப்படி உருவானது என்பதை இந்நூலில் சுனில் கில்நானி ஆய்வு செய்கிறார். திட்டக்குழு, நீதிமன்றங்கள், சட்டம் இயற்றும் சபைகள் உருவான வரலாற்றையும் கூறுகிறார். இவற்றுடன் இந்தியக் குடிமகன் தன்னை எப்படி பொருத்திப் பார்க்கிறான் என்பதையும் விளக்குகிறார். (மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் தர மறுப்பவர்களால் ஆள மறுக்கிறார்கள்).

விடுதலை பெற்று ஜனநாயகமாக உருவாகியிருக்கும் இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாத்திருப்பதையும், தொடர்ச்சியாக தேர்தல்கள் நடந்திருப்பதையும், அரசியல் சார்பற்ற இராணுவத்தையும், குடிமைப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதையும், சாமானியனும் அணுகும் அளவில் செயல்படும் நீதிமன்றங்களையும் இந்தியாவின் சாதனைகளாகச் சொல்லுகிறார்.

இந்தப் பெருமிதங்கள் நிறைவைத் தருகின்றனவா? இல்லை. போராடிக் கொண்டிருக்கும் காஷ்மீர் ஒருபுறம், போராடினாலும் கண்டு கொள்ளப்படாத வடகிழக்கு மாநிலங்கள் மறுபுறம் இவற்றை கேள்விக்குள்ளாக்குகின்றன. படித்த மேல் தட்டு வர்க்கம்தான் குஜராத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதலை நடத்தியது.

இந்தியாவை கட்டமைத்த, அதன் எதிர்காலத்தை கனவு கண்ட சிற்பிகளான நம் முன்னோர்கள் முன்வைத்த லட்சியங்களான பன்மைத்துவமும், சகிப்புத் தன்மையும், மதச் சார்பின்மையும் இன்றைக்கு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதை கவலையோடு பேசும் ஆசிரியர் இந்தியாவை அது ‘ஹிந்து பாகிஸ்தானாக’ மாற்றிவிடுமோ என்று அஞ்சுகிறார்.

இவற்றை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு எதிர்க் கட்சிகள் பலவீனமாக உள்ளன. மாநில மட்டத்தில் ஒரு காலத்தில் தீர்க்கப்பட்ட பிரச்சனைகள் மேல்மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மையப்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறிப்போனது என்கிறார்.

மிக ஆழமான வார்த்தைகளை ஆசிரியர் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, ‘அரசிற்கும், சமுதாயத்திற்கும் இடையிலான ஒரே இணைப்புப் பாலமாக ஜனநாயகம் என்கிற ஆகுபெயர் விளங்கி நிற்கிறது.’

நேரு மீது பெரும் மதிப்பை வெளிப்படுத்தும் ஆசிரியர் ( நேருவின் வரலாற்றை எழுதி வருகிறார்) விடுதலை பெற்றபிறகு இந்தியாவில் உருவான அமைப்புகளுக்கு, கருத்துகளுக்கு நேரு அடிப்படைக் காரணம் என்று கூறுகிறார்.

அறிஞர் மகலநோபிஸ் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் இரண்டு அறைகளை ஒன்றிணைத்து 1931ல் உருவாக்கிய புள்ளியியல் கழகமே திட்டக்குழுவிற்கு, பிற்காலத்தில் ஐந்தாண்டு திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்கிறார். (திட்டக்குழு இப்பொது கலைக்கப்பட்டுவிட்டது).

பசுவதைச் சட்டத்தை விரும்பாத நேரு, அது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை மாநிலங்களுக்கு தள்ளிவிட்டார் என்கிறார். அதுபோன்றே வேளாண் சீர்திருத்தங்களும். இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் நல்ல முறையில் செயல்படுத்தப்படாததற்கு, மாநில மட்டத்தில் காங்கிரஸின் முக்கிய வாக்கு வங்கிகளாக செயல்பட்ட நிலக்கிழார்களே என்கிறார். தன்னை சூழ்ந்திருந்த வலதுசாரிகளின் மத்தியில்தான் நேரு இயங்க வேண்டியிருந்தது என்கிறார்.

நூலின் இருபதாம் ஆண்டு அமெரிக்கப் பதிப்பிற்கு -2017- சுனில் வழங்கியுள்ள முன்னுரை தற்கால கவலைகளை வெளிப்படுத்துகிறது. இராணுவ ஜீப்பில் கட்டப்பட்டு, கேடயமாக நாள் முழுவதும் இழுத்துச் செல்லப்பட்ட ஃபாருக் தார் என்ற இளைஞன் அடுத்த தேர்தலில் வாக்களிக்க வருவானா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

ஜனநாயகம், நகரங்கள், எதிர்கால கோவில்கள், இந்தியன் யார், நவீனத்துவ துகில் என்ற அத்தியாயங்களில் சமகால இந்திய வரலாற்றையும், இந்தியா கடந்து வந்த பாதையையும், இருபதாம் நூற்றாண்டில் முகிழ்த்த ஆளுமைகளைப் பற்றியும் 'வேறுபட்ட சொற்பாங்கில்' சுவையுடன் விவரிக்கிறார்.

இந்த நூல் அறிமுக கூட்டம் ஒன்றை தி நகர் காந்தி கல்வி நிலையமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக் குழுவும் நடத்தின. தத்துவ நூலைப் போன்ற இந்த வரலாற்று நூலை சமகால இந்திய வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டோர் அவசியம் படிக்க வேண்டும்.

சந்தியா பதிப்பகம் சென்னை-83/ 2017/ 335 பக்கங்கள்/ ரூ.315. தொடர்பு:8072778518. 04424896979

- பீட்டர் துரைராஜ்