முன்னுரை

மலேசிய எழுத்தாளர் தேவ் அந்தோணி அவர்களின் இரண்டாவது எழுத்துப் படைப்பான ‘தெ ரேட் பைசிக்கள்’ என்னும் 300 பக்கங்களுக்கு மேலான ஒரு நாவலனாது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்வதேச டூமிளின் இலக்கிய விருதிற்குக் (the International Dublin Literary Award) கிட்டத்தட்ட 150 நூல்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், உலகிலேயே ஆங்கில கதைகளுக்கு ஆக அதிகமான பரிசு தொகையான €100,000 மதிப்புள்ள இந்த விருதைப் பெறும் நூல்கள் சிறந்த இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் ‘தெ ரேட் பைசிக்கிள்’ நாவல் விருதைத் தட்டிச் சென்று மலேசியா மண்ணிற்கு மணம் சேர்த்து விட்டது.

the red bicycleஎழுத்தாளரின் முதல் நாவலும் Love And Struggle: Beyond The Rubber Estates (Gerakbudaya, 2012) ரப்பர் தோட்ட ஊழியர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களையும் சமூக ஏற்ற தாழ்வுகளையும் ஆண்டான் அடிமை தனத்தையும் முதலாளித்துவத்துயும் கதையோட்டத்தில் பெருக்கெடுத்து ஓடச் செய்து சிற்றோடையாக காதலும் ஒடச் செய்திருக்கிறார்.

சரி, நமது ‘தெ ரேட் பைசிக்கிள்’ நாவலுக்கு வருவோம். மலேசியாவின் வரலாற்றுச் சுவடுகளைத் தோண்டி எடுத்து நாட்டின் அரசியல் முறைகள், நடந்த அராஜகங்கள், ஏழை எளியவர்களின் பணி இடங்களில் நடந்த அநியாயப் போக்கு, குறிப்பாக ஆதரவற்ற ஏழைகளின் வாழ்க்கைமுறை என அனைத்து இடங்களைக் கௌவிக் கொண்டு கதையை விறுவிறுப்பாக நகர்த்தியது எழுத்தாளர் தேவ் அவர்களின் புரட்சிகரமான எழுத்துகள்!

கதைச்சுருக்கம்

இந்த நாவலின் கதைச் சுருக்கம் என்னவென்று பார்த்தால் பல இடங்களில் நடக்கும் சம்பவங்களைக் கோர்த்து ஒரு சங்கிலியாகக் கதை கரு வளர்கிறது. இதில் முக்கிய சம்பவங்கள் என்ன வென்று பார்த்தால், மலேயாவில் (இப்போதைய மலேசியா) Communist Malaya party கட்சி வலுவிழந்து காணப்பட்ட காலம், மலேயாவின் இடதுசாரிகளும் மூழ்கி கொண்டிருந்த வேகம் மற்றும் தொழிலாளிகள் உரிமைகளுக்காகப் போராடும் காலம் என எழுத்தாளர் வரலாற்று நிகழ்வுகளை முத்திரை பதித்துள்ளார். நாவலின் முதல் இயல் ஆகஸ்து 1942 ஆம் ஆண்டில் பத்துமலை (கோலாலம்பூர்) அருகிலுள்ள ஒரு ரகசிய இடத்தில் நிகழ்ந்த கூட்டத்தில் CPM அமைப்பிலுள்ள உயர் பதவியிலுள்ள அதிகாரிகளும் அடுத்த கட்ட நிலையில் உள்ள தலைவர்களும் கலந்து கொண்டர். இரண்டாம் உலகப் போர் பல நாடுகளைப் பந்தாடிய வண்ணம் இருக்க மலாயாவும் ஜப்பானியர்களின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் CPM அமைப்பு பிரிட்டஷ் காலணியுடைய அரசாங்கத்தோடு சேர்ந்து ஜப்பானியர்களை அடித்து விரட்டி அவர்களின் கொடுங்கோல் ஆட்சியை அடியோடு அழிக்கப் பல திட்டங்களைத் தீட்டியது.

தென்கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா ஜப்பானியர்களிடம் பட்ட வேதனைகளையும் கொடுமைகளையும் சொன்னால் சொல் மாளாது, எழுதினால் ஏடு கொள்ளாது. பத்துமலையில் ஜப்பானியர்களைக் கவிழ்க்கச் சதி திட்டப்படுகிறது என்ற செய்தியை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்த ஜப்பானிய ராணுவ காவலர் படையினரான கேம்பேயிட்டாய் (Kempeitai) அனைத்துக் கம்பூனிஸ்த்துவினரைப் போட்டுத் தள்ளியது.

இந்தப் பத்து மலை இடத்தில் நடந்த வெறியாட்டம் ஜப்பானியர்களுக்குஎதிராகக் குரல் கொடுத்த முக்கிய புள்ளிகள் பலரைச் சின்னாபின்னாமாக்கி விட்டது. நாவலானது இந்தப் படுகொலைகளை நிகழ்த்த உதவிய அந்த ஒற்றனின் செயல்பாடுகளையும் திட்டங்களையும் விளக்கமாக எடுத்து விளம்புகிறது. இந்தப் பயங்கர துரோகத்தை அடித்தளமாகக் கொண்டு எழுப்பட்ட கதையில் கற்பனை கதாமாந்தர்களும் இருக்கின்றனர். இருந்தாலும் வாசகர்களின் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கதாமாந்தரும் இடம் பெற்றுள்ளது. ஜப்பானியர்களுக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் மாற்றி மாற்றி தகவல்களைத் தந்து இருத்தரப்பினரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவிட்டு மிக விரைவாக வளர்ந்தவன் ஒற்றன் கதாபாத்திரம் ஆகும்.

காதலும் கலந்துள்ளது

இந்தப் போராட்டங்களிடையே மலாயா கம்பூனிஸ்த்தினரின் வேதனைகளும் இடர்பாடுகளும் போராளிகளின் வாயிலிருந்தே உதித்த உண்மை சம்பவங்களாக நாவலில் வாசகர்களிடம் பேசுகின்றனர். வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தும் வாசகர்களின் மனத்திரையில் திரையிடும் அளவிற்கு எளிமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அமைந்தன. இதுவே இந்த நாவலின் வெற்றி என நான் கருதுகிறேன். குறிப்பாக உண்மையும் கற்பனையும் கலந்து சொல்லக்கூடிய கதையோட்டத்தில் காதலர்கள் நுழைகிறார்கள். பத்து மலை இடத்தில் நடந்த படுகொலையிலிருந்து தப்பித்த குப்பு என்கிற இந்திய இளையருக்கும் சின் லெங் என்னும் சீன பெண்ணுக்குமிடையே மலர்ந்த காதல், இனங்களைத் தாண்டி வளர்கிறது. சின் லெங்வின் அம்மா ஜப்பானியர்களின் கொடூர கொடுமைக்கு ஆளாகி இறந்தார். அந்தச் சீனப்பெண்ணுக்கு ஆதரவாகவும் அன்பாகவும் இருந்தது குப்புவின் அறிமுகம்.

இந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொர் வாசகருக்கும் தோன்றும் ஒரு செய்தி என்னவென்றால் இது போன்ற கலப்பு இன காதல்கதைகளையும் பகிர்ந்து கொள்ளவும் ஜப்பானியர்களையும் பிரிட்டிஸ் அதிகாரிகளையும் வீரத்தோடு எதிர்த்துப் போராடிய சாதாராண மக்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் பல மக்கள் இருப்பார்கள். ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையிலும் அரசியல் முறையிலும் இக்கதைகள் காற்றோடு காற்றாகக் கரைந்து போயிருக்கும்.

முக்கிய செய்திகள்

தேவ் அந்தோணியின் படைப்பானது குன்றின் மேலிட்ட விளக்காக இரு செய்திகளை மக்களுக்குப் பறைசாற்ற விரும்புகிறது. மலாயா கம்பூனிஸ்த்துவினர்கள் எல்லாருக்கும் உரிமைகள் சமம்; குறிப்பாக ஏழை எளிய தொழிலாளிகளின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அப்போது தான் மொழி, மதம், இனம் போன்றவற்றை தாண்டி சமத்துவ நாடாக மலாயா உருவாகும் என்ற நம்பிக்கை வேட்கையைக் கொண்டிருந்தனர். அடுத்து அவர்கள் யாவரும் ரஷ்யவிலிருந்தும் அல்லது சீனாவிலிருந்து எந்தவொரு கட்டளைகளையும் ஏற்க மாட்டார்கள். அவர்களின் மண்ணுக்கும் மக்களுக்கும் சூழலுக்கும் எது பொருத்தமானதோ அதைத்தான் செய்வோம் என்ற சீர்தூக்கும் பார்வை கொண்டவராகத் திகழ்ந்தனர். கத்தி, கடப்பறை, துப்பாக்கி, அரிவாள் தூக்கி கொண்டு போகிற வருவோரை வெட்டும் காட்டுமிரண்டி கூட்டம் அவர்கள் இல்லை என்பதை நெத்தியடியாக நினைத்து வாழ்ந்து வந்ததைப் படம் பிடித்துக் காட்டியது இந்த நாவல்.

இந்தநாவலின் இன்னொரு முக்கிய கூறு என்னவென்றால் இந்தக் சி.பி.எம் (CPM) உறுப்பினர்கள், அடிமட்டத் தொழிலாளிகளான பால்வெட்டு ஊழியர்கள், விவசாயிகள், செருப்பு தைப்பவர்கள், சிறு உணவு கடை வைத்திருப்போர், கரி சுரங்கத்தில் வேலை செய்வோர், துப்புரவு தொழிலாளிகள் எனப் பலதரப்பட்ட பிண்ணனி கொண்ட பல்லின இனத்தாரைப் பிரிட்டிஷ் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்று உறுதியாக நம்பினர். மேலும், குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்க்காமல் உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்க வேண்டும் என்று போராடினர்.

கதையை விறுவிறுவென படிப்பதைவிட இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பின்னணி தகவல்களை அறிந்து கொண்டு வாசிக்கும்போது இன்னும் ஆழமான புரிதல் உருவாக வாய்ப்பு இருக்கும்.

உதாராணத்திற்கு நம் இந்திய பால்வெட்டு ஊழியர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள்

1941 ஆம் ஆண்டு. உலகயுத்தம் மலாயாவின் வட எல்லையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. மலாயாவின் மூலப் பொருட்களுக்கு ஐரோப்பாவில் ஏகப்பட்ட கிராக்கி. யுத்த தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு மலாயாவின் ரப்பரும், ஈயமும் பெருமளவில் தேவைப்பட்டன. “இங்கு ரப்பர் தொழில் உற்பத்தியைப் பாதிக்கும் எவ்விதமான கீழறுப்புச் செயல்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தோட்ட முதலாளிகளுக்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

மலாயாவிலுள்ள தமிழர்கள் இந்திய தேசிய காங்கரசின் ஏகாதிபத்திய போர் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதில்லை என்ற முடிவினை பின்பற்றக்கூடும் என்று அஞ்சிய பிரிட்டீஷ் காலனித்துவ அலுவலகம் மலாயா ரப்பரின் முக்கியத்துவத்தையும் அதன் உற்பத்தியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் தடுத்து நிறுத்த அவ்வலுவலகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரிட்டீஷ் இந்திய அலுவலகத்திற்குக் கீழ்க்கண்டவாறு தெரிவித்தது:

“இன்றைய சூழ்நிலையில், பாதுகாப்பு நோக்கில் மலாயா ஒரு மிக முக்கியமான இடமாகும், உண்மையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது ஒரு கிழக்கு சுவராகத் திகழ்கிறது. அதன் கேந்திர முக்கியத்துவத்திற்கு அப்பால், நமது போர் நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலர் ஈட்டுவதற்கு அடித்தளமாக விளங்கும் ரப்பர் உற்பத்தியை நிலைநிறுத்துவது மிக, மிக முக்கியமாகும். ஆகையால், நமது போருக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதில் நேரடியாகச் சம்பந்தப்படாத இடங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல் அல்லாமல், அங்கு (மலாயாவில்) உருவாகும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்."

எந்த விலை கொடுத்தாவது, ரப்பர் உற்பத்தியை நிலை நிறுத்த வேண்டும். ஏனென்றால், ரப்பருக்கு அவ்வளவு கிராக்கி இருந்தது. இலண்டன் காலனித்துவ அலுவலகம் பிப்ரவரி மாதம் 1941 ஆம் ஆண்டு வெளியிட்ட கீழ்க்காணும் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியது: “அமெரிக்கா 430,000 டன் ரப்பரை எடுத்துக் கொள்கிறது..., 75,000 டன் ஈயத்தை வாங்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் நாம் அறிந்து கொண்டது என்னவென்றால் நாம் ஜூன் மாதம் 1942 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யக் கூடிய எல்லா ஈயத்தையும் இன்றைய நிலையில் வாங்கியுள்ள அவர்கள் (அமெரிக்கா) விரும்புகிறார்கள்."

ரப்பருக்கு நல்ல கிராக்கி இருந்தது. நல்ல விலை இருந்தது. ஆனால், போதுமான தொழிலாளர்கள் இல்லை. போர்த் தளவாட தொழில்களின் அதிகரித்துக் கொண்டு போகும் மூலப் பொருட்களின் தேவைகளை இருக்கிற தொழிலாளர்களை அடிமை-வேலை வாங்கி உற்பத்தியை பெருக்கினார்கள். எந்த நபராவது ரப்பர் உற்பத்தியைச் சீர்குலைக்க முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று காலனித்துவ அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஐரோப்பிய போரில் ஏகாதிபத்திய பிரிட்டனின் வெற்றி அல்லது தோல்வி மலாயாவின் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சார்ந்து இருந்தது.

இந்திய ரப்பர் தொழிலாளிகளுக்குச் சலுகை கிட்டியதா?

தங்களது உழைப்பிற்கு இவ்வளவு கிராக்கியைக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறப்பான சலுகையைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை. 1941 ஆம் ஆண்டில், சீன ஆண் பால்வெட்டு தொழிலாளிக்கு ஒரு நாள் சம்பளம் 85 காசு. சில தோட்டங்கள் $1.20 காசு வரை ஒரு நாள் சம்பளமாகக் கொடுத்தன. ஆனால், இந்திய ஆண் பால் வெட்டுத் தொழிலாளியின் ஒரு நாள் சம்பளம் 50 காசு மட்டுமே.

அமைதியான வேண்டுகோள்களின் (பிச்சை கேட்டதன்) பலனாகக் காலனித்துவ முதலாளிகள் மிக மன எரிச்சலோடு 5 காசு சம்பள உயர்வல்ல, வாழ்க்கை படிச் செலவு பிப்ரவரி மாதம் 1941 ஆம் ஆண்டிலிருந்து கொடுக்க முன் வந்தனர். இதன் மூலம் ஓர் இந்திய தோட்டத் தொழிலாளியின் தினச் சம்பளம் 55 காசிற்கு உயர்ந்தது.

இந்த 5 காசு வாழ்க்கை படிச்செலவு அளித்ததற்குக் கை மாறாக காலனித்துவ அரசு இந்தியா அல்லது ஜாவாவிலிருந்து தொழிலாளர் களைக் கொண்டுவருதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தோட்ட முதலாளிகள் கேட்டுக் கொண்டனர். மேலும், தோட்டங்களில் தோட்டத் தொழிலாளரின் “முன்னேற்ற” மற்றும் ‘சீர்திருத்த' மன்றங்களின் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தோட்ட முதலாளிகள் கேட்டுக் கொண்டனர்.

தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கம் (மலேசியாவில்)

சஞ்சிக்கூலிகளாக அழைத்து வரப்பட்டு மனித உரிமை எற்ள ஒன்றை நுகர முடியாமல் உடல் உழைப்புக்காக மட்டுமே தயார்ப்படுத்தப்பட்ட மக்களாகத் தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கம்.ஆணுக்கு ஒரு சம்பளம் பெண்ணுக்கு ஒரு சம்பளம் என்று பேதம் பாராட்டிய காலத்தில் அதனை முறியடித்து அனைவரும் சம்ம என்கிற நிலையைச் சங்கம் உருவாக்கியது. தொழிலாளர்கள் முதலாளிகள் என்கிற பாகுபாட்டின் காரணமாகத் தொழிலாளர்களுக்கும் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீட்டுக் கொடுப்பதில் சங்கம் போராடி வெற்றி பெற்றுள்ளது. அறுபதாம் ஆண்டைத் தாண்டி இயங்கிக் கொண்டிருக்கும் மலேசியாவின் தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தே ஆக வேண்டும்.

முடிவுரை

‘தெ ரேட் பைசிக்கள்’ என்னும் நாவல் வாசகர்களை சைக்கிளில் ஏறி உட்கார வைத்து ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு வரலாற்றுச் சுவட்டிற்கும் அழைத்துச் சென்று ஒரு நல்ல கற்றல் பயணத்தை மேற்கொள்ள வைக்கிறது. பொதுடைமை தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இலக்கியம் என்னும் ரோதையில் இந்த நாவலைப் பயணிக்க வைத்த மலேசியா எழுத்தாளர் தேவ் அந்தோணி அவர்களுக்குப் பாராட்டு!

இனி ஒரு இனி ஒரு

விதி செய்வொம்

விதியினை மாற்றும் விதி செய்வோம்!

- கலைவாணி இளங்கோ, சிங்கப்பூர்