பூடகமும்.. புதிரும் நிறைந்த மாடப்புறாக்களின் மத்தியில் இருக்கும் ஒரு மாய மாளிகையில் நின்று வெண்ணிற இரவுகள் சாமரம் வீச உதிரும் சொற்களால் ஆனது இப்புத்தகம்.

கவிதைக்கென்றே வலிய திணித்த தோரணை அற்ற சொற்கள் வாய்த்திருப்பது "அம்பிகா" என்ற படைப்பாளிக்கு அற்புதம் சேர்க்கிறது.

ambikavarshini 300தமிழின் தூரம் இவருக்கு மிக அருகாமையில் இருக்கிறது. பூக்களை சூடுகையில் எல்லாம் இவரின் கவிதைகள் புல்லாங்குழல் வாசிக்கின்றன. புல்லாங்குழல் வாசிக்கையில் எல்லாம் இவர் கவிதைகள் புன்னகை குரல் சேமிக்கின்றன.

இரண்டு பகுதிகள் கொண்ட இக்கவிதை புத்தகத்தில் என்னை உறைய வைத்து உலர வைத்தது -அன்பை சொல்ல குறியீடொன்று - என்ற பின் பகுதி கவிதைகள் தான். குறிப்பாக தலைப்பிடாத சில கவிதைகள்.

ஓரிரு வார்த்தைகளில் கவிதையை செய்யும் லாவகம் போகிற போக்கில் அம்பிகாவுக்கு கிடைத்து விடுகிறது. ஒரு கவிதையில் தலைப்பிலேயே "உணர் நிலம்" என்ற சொல்லாடலில் மொத்தக் கவிதையையும் திரும்ப உணர வைக்கும் சூட்சுமம் நுட்ப மென் நோக்கில் நாம் காண இயலுகிறது.

"அன்றைக்கு எனக்கு மட்டும்
வெள்ளையுடுத்திய காளான்
அதன் பிறகான எந்த மழைக்கும்
மயங்கிச் சரியவில்லை"

இப்படி ஒரு கவிதை. நானாக புரிந்த எதுவோ என்னுள் தானாக அவிழ்கிறது. தானாக அவிழ்ந்த எதுவோ நானாக கவிதை புரிகிறது.

அம்பிகாவின் கவிதைகள் பெரும்பாலும் உடல் போர்த்திய சுடு வெயிலில் கண்கள் மட்டும் தெரிய கவசமணிந்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டியின் கண்களைக் கொண்டதாகவே இருக்கிறது.

மூங்கில் மரத்தைச் சுற்றி
குறுந்தகடாய்
உதிர்ந்து கிடக்கின்றன
சருகுகள்
காற்று சுழன்றால் தேவலாம்
ஒரு மெல்லிசைக்கு

கடைசி சொல்லில் எங்கிருந்தோ வந்து அப்பிக் கொள்ளும் 'அட' ஆழத்திலிருந்து வரும் எதிரொலி. பரிணாமம் கொண்ட நவீன அத்தியாயத்தின் அடுத்த பக்கத்தின் முன்னுரை இப்படி ஓர் இசையோடு தான் புறப்படும். அந்த மெல்லிசையை கண் கொண்டு காண முடிகிறது. பெரிய பெரிய வரங்கள் சிறு சிறு தவங்களிலேயே கிடைத்து விடும். இயற்கையை அம்பிகாவின் கண்களில் பார்க்கிறேன். எனக்குள் அற்புதம் நிகழ்கிறது. அற்புதத்தின் வாயிலாக தேக்கு மரப்பூக்களின் தோளில் சிறு பூச்சியாகிறேன். இப்புத்தகத்தை முதல் முறை படிக்கையில் கண் கட்டிய நிழல் தேசம் உணர்ந்தேன். மூன்றாம் முறை படித்த பிறகு இன்னும் இரு கண்கள் சேர்ந்த மூன்றாம் பிறை உணர்ந்தேன். நான்காம் ஐந்தாம் முறைக்கும் தகும் இந்த மீச்சிறு மேக மூட்டம்.

ஒரு கவிதையில், குளவி ஒன்று அறைக்குள் வந்து விடுகிறது. எதையோ தேடி வட்டமிடுகிறது. அங்க இங்கன்னு கோடுகள் இழுக்கிறது. அந்த கோட்டின் வழியாக வெயிலும் நிழலும் மாறி மாறி தோன்றுகிறது. ஆனால் அதன் எல்லா தடங்களையும் அறை தலையில் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறி அழித்து விடுகிறது.

நானும் அந்த ஜன்னலில் புகும் ஒளியோடு நிரம்பியிருக்க அங்கே நிகழும் பௌதீக மாற்றத்தை கண்டுணர முடிகிறது. வரிகளின் வழியே நுழைவது சிரமம் தான் என்றாலும்.... சிரத்தைக்கு பின் சிறகுண்டு......நம்பலாம். மிகத் தீவிரமாக குளவியின் முதுகில் சுருண்டமர்ந்து கவிதை செய்திருக்கிறார். கவிதையும் தனக்கான ஒரு குளவியை செய்திருக்கிறது. வெயில் நுழையும் கீற்று வெளியின் தூசுப் படலத்தில் உருண்டு செல்லும் நுட்பத்தை தானாகவே கற்பனித்துக் கொண்டதில் அதி அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. ஆதலால் அடுத்த பக்கம் செல்ல அன்று முடியவில்லை. அடுத்த நாளில் "கண்ணீரையெண்ணி காமுறுகிறேன்" என்ற ஒரு நீண்ட வரியில் நின்று அமர்ந்து யோசித்து துவளுகையில்...... "இந்த உணர்வெனுக்குப் பிடித்தமில்லை" என்ற கவிதையின் கடைசி வரியை பிடித்துக் கொண்டு தேக்கு மரம் தாவுகிறது மனம்.

முதல் பகுதியில் ஏறக்குறைய எல்லாமே சற்றே பெரிய கவிதைகள் தான். சில கவிதைகள் கவிதைகளாக ஆரம்பித்து கவிதைகளாக முடிகின்றன. சில கவிதைகள் கவிதைகளாக ஆரம்பித்து கவிதைகளாக முடியவில்லை. இடையில் தவித்து நின்று வழி மாறி திசை மாறி சில கவிதைகள் தன்னை அங்கேயே மாய்த்துக் கொள்ளும் மாயமும் அரங்கேறுகிறது. அதன் பிறகு வெற்றுப்பயணம் தான் வரிக்கு வரி. எழுத ஆரம்பிக்கும் போது இருக்கும் மனநிலையை ஆசிரியர் இடையில் எங்கோ தொலைத்து விடுதல் அடிக்கடி நிகழ்கிறது. "கூழாங்கல்" பற்றிய ஒரு நீள் கவிதை... கவிதைக்கான அச்சில் நேர்த்தியாக ஆரம்பித்து நேர்த்தியாக முடிகிறது. இடையில் இரு பத்தி அனாவசியமாய் இணைத்திருப்பதை ஒரு வாசகனாக பரிதவிப்போடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த புத்தகத்தில் ஆக சிறந்த ஒரு கவிதை இருக்கிறது.

"மழலை வெயில்" என்ற தலைப்பில் (தலைப்பை மாற்றி இருக்கலாம்) அப்படி ஒரு நேர்த்தி. அப்படி ஒரு சொல்லாடல். அப்படி ஒரு கண்டெண்ட். திரும்ப திரும்ப படித்து விட்டு இளைப்பாறும் மனநிலையை இழந்த போது மீண்டும் ஒரு பெரு வீச்சோடு பச்சக் குதிரை தாண்டும் அக் கவிதையை மெச்சத்தான் வேண்டும்.

"மாய ஆடு" என்ற தலைப்பு கொண்ட கவிதையில் கடைசியாக "என்னை" சேர்த்திக் கொண்டேன். கவிதை முழுமை அடைந்தது. "காட்டிக் கொடுக்கப்பட்ட தேவன்" என்ற கவிதையில் தேவனின் ரட்சிப்பு. ராட்சசனின் தித்திப்பு.

கொஞ்சம் ஆழ்ந்து படிப்போருக்கு புரிதலில் நீட்சி உண்டு. நுனிப் புல் மேய்பவர்களுக்கு இவர் கவிதைகள் தன் வாசலைத் திறக்காது. முதல் தொகுப்புக்கான தவிப்புகள் ஆங்காங்கே தெரிகின்றன. முதல் தொகுப்புக்கான பாவனை இல்லை. புழக்கத்தில் இல்லாத சொற்களை மிக லாவகமாக பயன்படுத்தும் அம்பிகாவின் கவிதைகளில் விழித்திருக்கும் போதே ஒரு மயக்க நிலையைக் காண முடிகிறது. பின்னிரவு தலை விரித்தலில் நிகழும் கவிதைகளை ஜன்னல் திறந்து பறக்க விடும் யுக்தியை சில கவிதைகளில் ஒளித்திருக்கிறார். மிக மிக மெல்லிய நீரோடையில் கால் அமிழ்த்தி அமர்ந்திருக்கும் கவிதைகளுக்கு கண்டிப்பாக நகப்பூச்சு இல்லை. மருதாணி சிவப்பு தான்.

வீடு மாறுதல் என்ற தலைப்பில் ஒரு கவிதை.

விடிய விடிய திமிறிக் கொண்டிருக்கும்
வீடு மாற்றத்தின் திமிலை
அடக்க முயற்சிக்கும் இந்த தூக்கத்துக்கு
கனவுகளே சிராய்ப்புகள்
நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில்
தேயும் நிலவென
கொம்பு சீவிக்கொண்டிருக்குமதன்
புழுதி முனைப்பில்
பழைய வாடைகை வீடு

ஒரு வாடகை வீட்டில் இருந்து இன்னொரு வாடகை வீட்டிற்கு செல்வதற்கான வேலைகளை செய்யும் அவ்விரவை அப்படியே கண் முன்
நகர்த்துகிறார். கொடுந்துயரத்தின் முன் நின்று நட்சத்திரம் ரசிப்பதென்பது கவிஞர்களுக்கு தான் சாத்தியம்.

ஒரு கவிதையில்........"தூக்கத்தினால் மட்டுமே விழித்துக் கொள்ள முடிகிறது" என்று ஒரு வரி வருகிறது. ஆழம் மிக்க சொற்றடர். வயதுக்கும் வாழ்வுக்கும் தொடர்பில்லை என்பதை மீன்டும் மீண்டும் உணர மீண்டும் நினைவூட்ட இந்த வரி போதுமானதாக இருக்கிறது. ஞானத்தின் திறவுகோல் இப்படி எப்போதேனும் அதுவாகவே தன்னை திறந்து கொள்ளும்.

இப் புத்தகத்தின் மிகப்பெரிய பலவீனமாக கருதுவது இதன் அட்டைப் படத்தைத் தான். இனி இது போன்ற அட்டைப் பட தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆசிரியர். தலைப்பும் இத்தனை நீளமாக இருந்திருக்க வேண்டாம்.

"அம்பிகாவர்ஷினி"யின் கவிதைகள் பனிமூட்டங்களில் பயணிப்பவை. மலை உச்சியில் அமர்ந்து கொண்டு நீலக் குடை செய்யும் பின்னிரவு நட்சத்திரங்களை கொண்டிருப்பவை. மறுமுறை படிக்கையில் மந்திரக் கோல்கள் நகர்ந்து கொள்ளும். மறுமுறையும் படிக்கையில்..... மாய வரிகள் நவிழ்ந்து கொள்ளும்.

- கவிஜி

*
நூல் : தேக்கு மரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்
ஆசிரியர் : அம்பிகாவர்ஷினி
விலை : ரூ 90
படி வெளியீடு