வெங்கலம் ச.மோகனின் “இந்த நூற்றாண்டின் போதிமரம்”

சிந்தித்தால் பேசலாம், மனம் உருகினால் கவிதை எழுதலாம் என்பார் பேரறிஞர் அண்ணா. அப்படி தான் சிந்தித்து இந்த சமூகத்திடம் பேச வேண்டிய, பகிர வேண்டிய, போதிக்க வேண்டிய விசயங்களையெல்லாம் மனம் உருகி கவிதையாக்கி தந்திருக்கிறார் வெங்கலம் ச.மோகன் அந்த கவிதைகளின் தொகுப்பு தான் “இந்த நூற்றாண்டின் போதிமரம்”.

vengalam mohan bookதன் பால்ய காலம் தொட்டு இளமை காலம் வரை வாழ்வில் அவர் கடந்த அத்தனை வாழ்வியல் கூறுகளையும் எளிமையான மொழி நடையில் கிராமத்தின் சுவடுகள் மாறாமல் நவீன கவிதை வடிவில் கடந்த காலங்களை கவிதை வழியே கண்முன்னே காட்சிபடுத்துகிறார். 

“வழிப்போக்கனா நான்

இல்லை

யாத்ரீகன்

நிறைய எழுத

நிறைய நடக்கிறேன்.”

மனதில் உதித்த கருவை பிரசவிக்க ஒரு எழுத்தாளனின் நிலையில் நின்று அதன் வாழ்வியலை முதல் கவிதையாய் தந்திருக்கிறார். எதார்த்தமும், கற்பனையும் ஒன்றையொன்று மிகாமல் நம்மிடம் வந்து சேர்கின்றன.

இயற்கை மீதான இவரின் ரசனையும் ஆர்வமும் கானத்திடையே வழிந்தோடிவரும் சிறு ஓடையின் நீரினைப் போல கவிதை வழியே நம் மனங்களை சிலிர்த்திட செய்கின்றன. இயற்கையின் அழகியல் அதன் தற்போதைய நிலை குறித்து சிலாகித்தும், கவலையுற்றும் வருகின்றன. இயற்கையோடு இயைந்த உவமைகளை கொண்ட கவிதைகள் அதன் பசுமை மாறாமல் பொருள் உணர்த்துகின்றன. காதலின் ஏக்கத்தைக் குறிக்கும் கவிதை ஒன்று இப்படி தொடங்குகிறது. 

“மலை சூழ் கானகத்து

மைனாக்களை கொணர்ந்து

பெறுஞ்சோறாக்கி

தின்னக் கொடுத்தால்

தீங்கனிகள் தான்

வேண்டுமென்று கேட்டுக்கும்”

இயற்கையை மட்டுமல்லாது நம் நெஞ்சங்களில் பொக்கிசமான நினைவுகளாய் பொதிந்துள்ள 1980களின் 90களின் நினைவுகளையெல்லாம் ஆழ்மனதில் இருந்து மேலெழும் நீர்குமிழாய் கவிதைகளில் ஆங்காங்கே!... தபால் அட்டை, பல்லாங்குழி, ரேடியோ, பத்து பைசா நாணயம், வாடகை சைக்கிள், வர்ணக்குச்சி, நுங்கு வண்டி, டூரிங் கொட்டாய், என படிப்போர் மனதையும் பார்வையையும் அடுத்தடுத்த வரிகளை நோக்கி கண்களை மிளிர செய்கின்றன. 

இந்த தொகுப்பின் கனிசமான கவிதைகள் தத்துவார்த்த கவிதைகளாகவும், ஞானியர்களின் ஞான மொழிகள் போன்றும் கற்பனை கலந்த முதிர்ச்சியோடு அமைந்துள்ளன. 

“இடப்படுவது தூண்டில் தான்

என்பதை அறியும்

ஞானம் கொடு”

மீனுக்கு பேசத்தெரிந்திருந்தால் கடவுளிடம் இப்படிதான் கேட்டிருக்கும் என்பதாய் இந்த கவிதை வரிகள் எத்தனை ஆழமான பொருள் பொதிந்தவை.

         “வீணையோ யாழோ

         இன்னபிற எதன் நரம்புகளாலும்

         மீட்டமுடியாத எல்லையற்ற

         ஏகாந்த இசையது”

பிரசித்தி பெற்ற ருஃபாயித் கவிதைகளின் சாயலில் மௌனத்தை கொண்டாடி தீர்த்திருக்கிறது இந்த வரிகள்.

         என்னுரையில் அவர் சொல்லியது போல கண்ணதாசனின் ரசிகனான இவரின் கவிதைகளில் தத்துவார்த்தம் இருப்பதில் வியப்பில்லை ஆனால் மானுட சமூகத்தின் முக்கிய சிக்கல்கள் மீது இந்த தத்துவங்களை உதிர்த்திருப்பது மட்டுமல்லாது. சித்தர்களின் வார்த்தைகள் போன்று நறுக்கென முடிகின்றன.

         “மொய்க்கிற

         ஈக்கள்

         பிணத்தின்

         சாதி அறியாது”

மற்றும்

         “கடவுள் எதற்கும்

         கவலைப்படுவதில்லை

         மானுடம் தான்

         மதம் கொண்டலைகிறது”

போன்ற வரிகள் அதற்கு சான்று பகர்கின்றன. எதுகை மோனைகளோடு அழகுற அமையும் வார்த்தைகள் இவரின் கைகளுக்கு வசப்பட்டிருக்கின்றன. யாரையும் காயம் செய்யாத வரிகள், நல்ல மொழி நடை, தனித்த பாடுபொருட்கள் என நூல் முழுமைக்கும் வழு சேர்க்கின்றன. கவிதை நடை வாசிப்பவரை வசீகரித்து உள்ளிழுத்து செல்லும் தன்மை கொண்டதாகவும், பக்கங்களையும் தலைப்புகளையும் துறந்து நிற்கிறது “இந்த நூற்றாண்டின் போதிமரம்”. பல்வேறு படைப்புகளுக்கு மத்தியில் தவிர்க்க முடியாத தரமான படைப்பாக இந்த கவிதை நூல் வெளிவந்துள்ளது. 

நூலின் பெயர்     :       “இந்த நூற்றாண்டின் போதிமரம்”

நூலின் ஆசிரியர்  :       வெங்கலம் ச.மோகன்

வெளியீடு  :       அபிஸன் எண்டர்பிரைசஸ்

சென்னை - 87

பதிப்புரிமை        :       நூல் ஆசிரியர்

முகவரி      :       5/352, செல்லியம்மன் நகர்,

கிருஷ்ணாபுரம் - 621 116,

வேப்பந்தட்டை வட்டம்,

பெரம்பலூர் மாவட்டம்.

தொடர்புக்கு: 95000 45604

பக்கங்கள்  :       120

விலை        :       ரூ.100 

 விமர்சனம்: பா.வசந்தன்

 

Pin It