உலகளாவிய மொழிகள் பலவும் தத்தமது செவ்வியல் இலக்கியங்கள் மீதான நுணுக்கப் பார்வையினை காலந்தோறும் கோணங்களை மாற்றி, உத்திகளைக் கையாண்டு முன்ன பிறவற்றோடு பொருத்திப் பார்த்து உட்கிடக்கைகளைக் கண்டு காட்சிப்படுத்துவதை அல்லது ஆவணப்படுத்துவதை செய்துகொண்டே இருக்கின்றன. வாழும் உலகச் செம்மொழிகளில் ஒன்றான தமிழின் இலக்கிய வெளியிலும் இத்தகைய ஆய்வுகள் பரவலாக நடைபெறுவதைக் காண்கிறோம். எனினும் ஒரு சில ஆய்வுகளே விதிகளோடும் சூழலும் மோதிப் பல புதியப் புலப்பாடுகளுக்கு இட்டுச்சென்று வியப்பில் ஆழ்த்துகின்றன. இத்தகைய முயற்சியாகவே சமீபத்தில் ஒரு ஆய்வு நூலைக் கண்ணுற நேரிட்டது. சங்ககாலத் தினைப்புன வேளாண்மையில் ஆண்-பெண் உழைப்பும் சமூக மாற்றமும் என்ற தலைப்பிலமைந்த பேராசிரியர் மா.பரமசிவன் அவர்களின் அந்நூல் குறித்து இக்கட்டுரை விவரிக்க முனைகிறது.

           ma paramasivan book காலந்தோறும் நடந்தேறியுள்ள சங்க இலக்கியப் பனுவல்கள் மீதான வரலாற்றுப் புரிதலுடனான இனவியல், மானுடவியல், உளவியல் எனவான பல்வேறு ஆய்வுகளுக்கு மத்தியில் இந்நூல் உழைப்பு - சமூகமாற்றம் - மக்கள் மதிப்புறுச்சூழல் அவற்றுக்கிடையேயான பதிவுகளைக் காட்ட முயற்சிக்கிறது. பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. நூன்முகம் நூலின் மதிப்புநிலையை மேம்படுத்துவதாயும், நடுநிலைத் தன்மையைப் பறைசாற்றுகிறதாயும் அமைகிறது. பாயிரப் பாங்கினை முழுவதும் ஏற்று நூலமைத்தல் நூலாசிரியன் மீதான மதிப்புநிலையை உயர்த்தி, நூல் வாசிப்பிற்கான உந்துதலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

            சங்ககால வேளாண்மையினை முதற்கூறாக விளக்கப்போந்த ஆசிரியர்,  ஆண்-பெண் தலைமைத்துவம் குறித்த தமது பார்வையினை இலக்கியத் தரவுகளின் வழியாக நிறுவிட முயலுகிறார். வேட்டைச்சமூகம் - வேளாண்சமூகம் என்ற வளர்ச்சிப் படிநிலைகளைப் பட்டியலிடுகின்றபோது சங்க நூலாதாரங்களைத் தேவையானவாறுக் கையாண்டு கருத்துக்களுக்கு வலுவேற்றிக் கொள்கிறார். குறிப்பாக, காட்டெரிப்புச் சமூக வேளாண்மை குறித்தத் தரவுகள் மனிதன் நெருப்பினை வாழ்வியல் ஆயுதமாக்கியமை குறித்த தொல்வரலாற்றுப் பார்வையோடு அமைத்திருப்பது சிறப்பு. அதற்கான அடைவுகளாக நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலானத் தரவுகளைத் தந்தமை வாதத்தை நிலைபெறச் செய்கிறது. பலகாறும் அறிஞர் பெருமக்கள் பதிவு செய்த வேளாண்சமூகம் குறித்த கருத்துநிலையை ஆசிரியர் மேலும் புதிய தகவல்களால் செழுமைப்படுத்த முனைந்துள்ளார்.

தினைப்புனத் தெளிச்சப் பார்வை

            சங்ககால மக்களின் இயற்கை வேளாண்மையே வாழ்வியல் சார்ந்தச் செறிவானச் சமூகக் கட்டமைப்பிற்கு அடித்தளம் என்பதை செவ்வியல் இலக்கிய சான்றுகள் வழி உறுதி செய்கின்றார் நூலாசிரியர். வேளாண் குடிமைச்சமூகத்தின் உணவுமூலங்களை தினை எனும் பொதுப்பெயரிட்டும் அது சார்ந்த வழக்குகளைத் தினைப்புன வேளாண்மை மரபு என்று குறிக்கிறார். சங்கப்பனுவலோர்  தரும் வரலாற்றோடு ஒட்டிய இலக்கியச் சான்றுகளை மையமிட்டு நகரும் இந்நூல், தினைப்புன வேளாண்மையை உருவாக்கம், இடைநிலைக்காப்பு, இறுதி அறுவடை என வேளாண் நியதிகளோடு மக்கள் வாழ்வியல் கலந்திருத்தலைச் சான்றுகளுடன் பகுத்துக்காட்டி தெளிச்சப்பாட்டைத் தருகிறார்.

            காட்டெரிப்புச் சமூகநிலையைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு அவியுணவு நுகர்வினை ஆவலாகக் கொண்ட சமூக அமைப்பு உருவாக்கப்பட்ட வரலாற்றிற்கு இந்நூல் அடைதந்து அடித்தளமிடுகிறது. தினைப்புனக்காப்பு எனும் இடைநிலையினை விளக்கப்போந்த ஆசிரியர், வேளாண் மரபில் பாதுகாத்தல் என்பது பெரும்பணியாய் நிலவியமையும் அவற்றில் உழைப்புப் பகிர்மானம் சிறப்பிடம் பெற்றிருந்தமை குறித்தும் விளக்கிக் காட்டுகிறது இந்நூல். தினைப்புனம் காத்தலை காகமும், குறும்புள்ளினமும் விரட்டிக் காத்தல் என எண்ணவொட்டாது யானை, கேழல், ஆமா என கடுமாக்களிடமிருந்தும் காக்கின்றப் பெரும்பணியை ஆணும் பெண்ணும் ஏற்றமையும் அதன்பாற்பட்டச் சங்க அடைவுகளும் ஆசிரியர் எடுத்துரைத்தலின் சிறக்கிறது இந்நூலின் வாசிப்பு.

            ஆண் பெண் உழைப்புப்பகிர்வு குறித்து கூறுகையில், சமூகக்குழுக்களில்  ஆண்-பெண் என்பதனை வன்-மென் பண்புநலன்கள் மேலிடுமாறு பெரிதும் போற்றப்படாமையையும் உடலமைப்பு பெண்டிரின்   உழைப்புத் தடையாக அமையாசிலையை இப்பகிர்மானம் வழியாக எடுத்துரைக்கிறது. விதைத்தல் களை எடுத்தல், காத்தல், அறுத்துக் களமேற்றித் தூவுதல் என சமமாகவே உழைப்புப் பங்கேற்பு நிலவியமைக்கானச் சான்றுகளை இந்நூல் தாங்கி நிற்கிறது. வேளாண்மக்களின் சமூகநிலை குறித்து விவரித்த ஆசிரியர், தாய்வழி- தந்தைவழித் தலைமைத்துவம் குறித்த ஆழமான விவாதத்தை நடத்தி இருப்பது சிறப்பு. சுருக்கமான விவாதம் என்றாலும், செறிவாக அமைந்து எதிர்பார்ப்புகளைத் தூவி விரிவான வாசிப்பிற்கு வழி திறந்திருக்கிறது.

             சமூக தரநிர்ணயத்தை சங்கச் சான்றுகளோடும், அட்டவணைகளோடும் மேற்கொள்ளும் ஆசிரியர், வேட்டைச் சமூகத்திலிருந்து நாடோடி அல்லது இடப்பெயர்வுச் சமூகமாகவும், காட்டெரிப்புச் சமூகமாகவும் இருந்தபோது தாவர உணவின் குன்றா வளமையை உணர்ந்து, வேளாண் பயிர்செய்தலில் நிலைபெறுதலை ஆசிரியர் விளக்கிக் காட்டுகிறார். இதன் வழியாக வலியது வாழும் என்ற நியதியை மாற்றி எளியதும் தம் முயற்சியால் உழைப்பால் நிலைபெறும் என்கிற நிலைக்கான நகர்வாக ஆசிரியரின் ‘நிலைபேற்றுச் சமூக மாற்றநிலை’ எனும் வாதத்தின் வழி உணரலாம். வேளாண்சமூகமாக நிலைபெற்ற மக்கள் பிற குழுக்களிடமிருந்து தம்மைத்தாம் தற்காத்துக் கொள்வதற்காகவும், உணவிற்காகவும், நிலத்திற்கும் போராடும் சூழல் நிலவியமையும் ஆசிரியர் விளக்க முயல்கிறார். மன்னுறு, தன்னுறு போர்கள் என்ற வகையிலான தொல்காப்பியம் முன் வைக்கும் சூழலோடு நிற்கிறார்.

            உணவினைச் சார்ந்து மக்கள் குழுவினைச் சிறுகுடி, முதுகுடிகளாக வகைப்படுத்தியும், காரணகாரியங்களை விளக்கியும் நிற்கிறார் ஆசிரியர். தொல்காப்பியக் கருப்பொருள் பகுப்பினைத் தம் கருத்தாக்கத்திற்குத் துணையாக கொண்டு விவரிக்கிறார். குறிஞ்சி மக்களும் அவர்தம் உணவு சார்ந்த தொழில்களும் சிறுகுடி மக்களாக வகை செய்வதற்கும், தொல்குடி அல்லது முதுகுடி என்று முல்லை, நெய்தல் நில மக்களைக் குறிப்பதற்கும் சங்கத் பாடல்களையே சான்றாக்கி நிற்கிறார்.

            கற்பு எனும் கோட்பாட்டினைக் குறித்த சங்கநூல் பார்வையாகவே தமது கருத்தினை வைத்து, மாறுபட்டக் கோணங்களில் பொருத்திப் பார்க்கின்றத் தன்மை சிறப்பு பெறுகிறது. முல்லை சான்ற கற்பு, அணங்குறு கற்பு அல்லது கடவுள் கற்பு என்றப் புதுமையானப் பார்வைக் கோணங்கள் புராணத் தோய்வின்றி புதுச் சிந்தனையைத் தூண்டுகின்றன. மரபும் பண்பாடும் பற்றிய மாற்றுச் சிந்தனைகளைச் சான்றுகளோடு நிறுவியிருக்கும் இந்நூல், தற்கால மரபின் விழுமியங்களையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை. எறிசோறு, செந்தினைப் பரப்பல், உடல் கீறிப் புதைத்தல் என்னுமாறு தமிழக சமகால மரபுகள் பலவுங்காட்டி வியப்பிலாழ்த்துகிறது.

            மொத்தத்தில் சங்ககாலம் சார்ந்த மரபியல், இனவியல், மானுடவியல், பண்பாட்டியல், உழைப்பு, மக்கள் உறவுநிலை மற்றும் சமூகநிலை மாற்றங்கள் குறித்து ஆய்கின்ற வகையில் வெற்றி பெறுகிறது.  ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அதிகப்படியானத் தகவல்களோடும், சான்றுகளோடும் அமையும் இந்நூல், வரவேற்கத்தக்கது. ஆசிரியரின் முயற்சியும் முன்னெடுப்பும் வாழ்த்துக்குரியது.

நூல்:- சங்ககாலத் தினைப்புன வேளாண்மையில் ஆண்-பெண் உழைப்பும் சமூக மாற்றமும்

அன்னம் பதிப்பகம்,

மனை எண்- 1, நிர்மலா நகர்,

தஞ்சாவூர் - 613 007

தொலைப்பேசி : 04362-239289

- சி.விஜய், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை-625514.