குளிர்காய நினைக்கும் நெருப்பு, தாகத்தோடு இருக்கும் கடல், இனிப்புக்கு ஏங்கும் கரும்பு, இசையைத் தேடும் மூங்கில், வாசனை பெற விரும்பும் சந்தனக்கட்டை என்ற முரண்களில் இருந்து ஒரு தலைப்பு உதித்திருக்கிறது, ‘காற்றின் புழுக்கம்’ என்று.  உவமைக் கவிஞர் சுரதாவால் பாராட்டு பெற்ற ஆரூர் தமிழ்நாடன் எழுதியிருக்கும் மரபுக் கவிதைகளின் இதயத் துடிப்பு கேட்கும் தொகுப்பு இது.  நமக்குக் கிடைத்த முதல் நூலான தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை கவிதையின் வடிவம் காலத்தோடு ஈடுகொடுத்து வெவ்வேறு மாற்றம் பெற்றிருக்கிறது.  ஆனால் கவிதை என்றால் அது மரபுக்கவிதைதான் என்ற கவிஞரின் முன்னுரை வாக்கியத்தோடு முரண்படுகிறேன் நான்.

aaroor tamilnadan poemsமனிதன் தன் உயிர்ப்பண்பை எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாத்து வரவேண்டும்.  மலர்கள் வாடிவிடுமே என்று நினைத்துவிட்டால் தாவரங்கள் என்றோ பூப்பதை நிறுத்தியிருக்கும்.  ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் இருப்பது இந்த உலக இயக்கத்தின் தேவை.  வானம் முழுவதையும் பொதுவுடைமையாக்கும் ‘நேயமே நமது பாதை’ என்ற கவிதையில் விதியைத் திருத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையூட்டும் ஆரூர் தமிழ்நாடன் சூது விளையாடும் போது வஞ்சகம் செய்தல் ஆகாது என்று அடித்துப் பேசுகிறார்.  நேசத்தோடு வாழ்வது நமது பாதையாக இருக்க வேண்டும் என்பதும் அவரின் விழைவு.

“தாயங்கள் உருட்டும் போதும்

சகுனியாய் ஆவ தில்லை

நேயமே நமது பாதை

நிகழ்வெலாம் இன்பம் தானே!”

என்பது எல்லா காலத்திற்கும் ஏற்றதான சிந்தனை.

பூமிக்கடியில் தண்ணீர் இருப்பதற்கும், பறவைகள் மரங்கள் கூடு கட்டுவதற்கும், காற்றில் ஈரம் தங்குவதற்கும், கடல் எல்லைக்கு உட்பட்டிருப்பதற்கும், இயற்கை உணவை விளைவிப்பதற்கும் ஒரு காரணம் உண்டு.  அதற்கு ‘காதல்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  கவிஞரும் இந்தத் தொகுப்பில் அகப்பாடல்களைப் பாடிப் பரவசப்பட்டிருக்கிறார்.  தன் மனத்திற்குப் பிடித்தமானவள் தான் விரும்பும் எல்லா இனிமைக்குச் சமமானவள்.  அவளின் வருகை கனவுகளிலும் தீப்பற்றிக் கொள்ளும் என்று தன் விரக தாபத்தைக் கூறுகிறான்.  இருளில் உழன்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் விடியலைத் தருபவளும் அவளே.

“வாழ்வின் இருள்நடுவே

வைகளையின் சுவையேற்றி,”

என்கிறது கவிதை.

விழிகளை மலர்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்; வேல் என்று வர்ணிப்பவர்களும் உண்டு; மீன் என்ற உவமை கண்களுக்குப் பொருந்தும்.  ஆனால் எறும்பு என்ற கற்பனை புதுமையானது.  அதிலும் இதயத்தைக் கடிக்கும் எறும்பு என்பது இன்னும் புதுமை.

பெண்மை கொண்டாடப்படவேண்டிய நிலைமாறி காலுக்குக் கீழாகத் தள்ளி மிதிக்கும் கொடுமை மனிதநேயமுள்ள எந்த மனிதனும் விரும்பமாட்டான்.  குழந்தைப் பருவத்திலிருந்தே ஆசைகளும், கனவுகளும், லட்சியங்களும், சுயகௌரவமும் இல்லாமல் வாழ நிர்பந்திக்கிறது சமூகம்.  வீட்டிச் சிறையிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் வாழ்கிறாள் பெண்.  அதனால் காற்றுக்கும் புழுக்கும் ஏற்படுகிறதாம்; கண்ணீரும் தேம்பி அழுகிறதாம்.  பெண்களை ஆசைத்துணையாகக் கருதும் மனநிலை மாறவே இல்லை.  இதனால் வீட்டில் உள்ள உறவுகளையும் ‘காவலர்கள்’ என்கிறது பாடல்.

மீண்டும் வேறு ஒரு சிறைக்கு மாற்றும் விதமாகத் திருமண ஏற்பாடு.  தாலி கட்டும் கணவன் எப்படி இருப்பான் என்று தெரியாமலே வாழ்வை ஒப்படைக்கும் அவலத்தை எண்ணும் மங்கைக்குத் தன் காதல் பற்றிய கனவும் கலைந்த கனவாகி விடுகிறது.

“நேற்றின் முதுகுடைத்த

நினைவெல்லாம் வலிக்குதடி,’’

என்கிறது அப்பாடல்.  மகளிர் தங்கள் விருப்பு வெறுப்புகளைச் சொல்லிக் கொள்ள விழியில்லை.  எனவே அவர்களின் ஆசைகளைத் தன் கவிதை மூலமாகவும் கவிஞர் வெளிப்படுத்தியுள்ள அழகிய தொகுப்பு இது.  “பெண்கள் அக உணர்வை வெளிப்படுத்தக்கூடாது என்னும் துருப்பிடித்த கருத்தாக்கத்தை உடைக்கும் நோக்கில் பெண்ணியக் குரலாய் ஒலிக்கும் சில கவிதைகள்…” என்ற முன்னுரையோடு அமைந்த கடைசிப் பக்கங்களில் வெளியான கவிதைகள் கூடுதல் அழகு சேர்க்கின்றன.

“வீணையடி நீ எனக்கு – அதில்

மேவும் விரல் நானுனக்கு,”

என்ற வரிகளை நினைவிற்குக் கொண்டு வருகிறது காதலைப் போற்றும் ‘நகரும் இசையாம்…!’ என்ற கவிதை.  காதல் நதியாக அவனிருந்தால் கவிதை அலையாக அவள் இருக்கிறாளாம்.  இவன் நாதக் குழலாக உருவெடுத்தால் அவளோ நகரும் இசையாக மாறுகிறாளாம்.  தன்னை விளக்காகவும், முகிலாகவும், பேசும் இதழாகவும் – இப்படிப் பல்வேறு பொருளாகவும் உணரும் காதலன் தன் காதலியைச் சுடராகவும், மழையாகவும், மொழியாகவும் எண்ணிக் கொள்கிறான்.  இனியும் பிரிவு என்ற இருளில் மூழ்கிக் கிடக்கலாகாது.  விரைவில் நான் இணையலாம் வா என்று அழைக்கும் விதமே தனியழகு.

“நேற்றின் சதியில் நான் பிரிந்தோம் – அது

               நிகழ்த்திய வலியை நாமறிந்தோம்

தோற்பின் இருளைத் துரத்திடலாம் – இனித்                                            

               துன்பியல் நாடகம் முடித்திடலாம்,’’

என்று வரிகள் தோறும் ஏழு சொற்களை அமைத்து எழுசீர் ஆசிரிய விருத்தத்தைத் தோற்றுவித்து கவிதையை எழவைத்துள்ளார் கவிஞர்.

அம்புவிழி, மது இதழ், வேல்மூக்கு, கனி கன்னம், வெல்வெட்டு இமைகள், இரவு குழல், நிலவு முகம், தேக்குமரக் கழுத்து, மூங்கில் தோள், உடுக்கை இடுப்பு, வாழைத்தொடை என்று பூவையின் உறுப்புநலன் பாராட்டும் சாதாரண கவிதையாகத் தொடங்கப்பட்டது ‘ஏனிந்த ஏமாற்று’ என்ற கவிதை.  ஆனால் முடிக்கும் போது பெண்ணைச் சொர்க்கும் என்று சொல்லி,

“ஆக்குகிற மூலத்தைத் துணையென் றார்கள்

அடடாவோ எல்லாமே ஏமாற் றன்றோ?”

என்று உலகம் தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சொல்கிறார் ஆசிரியர்.  எல்லாவற்றிற்கும் மூல முதன்மையான அம்மையை வாழ்க்கைத் துணை என்று சொல்லி விட்டார்களே என்பதில் கவிஞரின் வருத்தம் வெளிப்படுகிறது.

கவிதைகள் வழியாக கவலைகள் இல்லா உலகத்தைப் பார்க்க விரும்பும் கவிஞர் பேராசைப் பேய்களையும், ஊழல் பெருச்சாளிகளையும், பதவிக்கு ஏங்கும் அடிமைகளையும், செயலற்ற அதிகாரவர்க்கத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறார்.  அப்பொழுது துன்பம் விடைபெற்றுக் கொள்ளும்.  கண்ணீரைக் குடிநீராக்கும் வழியைச் கண்டுபிடித்தால் தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் இருக்காது என்பது கவிவேந்தர் மு. மேத்தாவின் திடமான எண்ணம்.  தன் பகுதியில் வாழும் குடிமக்கள் கண்ணீர் சிந்த ஆட்சி செய்யும் அரசன் இருந்தானேயானால் அந்தக் கண்ணீருக்கு அந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் பலம் உண்டு என்று அச்சரிக்கை விடுக்கும் கவிதைகள் மேத்தாவைப் போலவே கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க கவலைகள் நம்மை விட்டு வலக வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கின்றன.

யாசித்துப் பிழைக்கும் சூழல் உருவானால் அந்தக் கடவுளே கெட்டு ஒழிதல் வேண்டும் என்கிறார் வள்ளுவப் பேராசான்.  இது போன்ற ஒரு தார்மீகக் கோபம் வெளிப்படுகிறது, ‘படைப்பவனைப் படைப்பேன்’ என்ற கவிதையில்.  இறைவன் மனிதனைப் படைக்கும் காலம் மலையேறி மனிதன் கடவுளை உருவாக்கும் காலத்தில் இருக்கிறோம் நாம்.  மனிதன் படைக்கும் இறைவன் இரக்கம் மிகுந்தவனாக, மகத்துவம் செய்பவனாக, அட்சயபாத்திரம் ஏந்தியவனாக இருப்பான்.  இதன் பயனாக அழுக்கு – இழிவு இல்லாத, இனவெறி – மதவெறி அற்ற, இனிய அன்பான அறிவும் அறனும் கொண்ட இன்பமயமான உலகம் உருவாகும்.  ஒருவேளை இதற்குத் துணை செய்யாத தெய்வம் இருக்குமேயானால் அதைத் தூக்கிலிட்டுக் கொன்றுவிடலாம் என்று வழியும் சொல்கின்றன கவிவரிகள்.

இரவையும் பகலையும் அறியாமைக்கும் அறிவுக்கும் சொல்லும் இடத்தில் இரவையும் பகலையும் கைகளாகச் சுட்டுகிறது கவிதை.  ஒரு மனிதன் பசித்திருந்தாலும் இந்த உலகம் இருப்பதில் பயனில்லை என்பது மகாகவி பாரதியாரின் பார்வை.  அதனால்தான் இவரும் இந்தத் தொகுப்பில் பசியில்லாத உலகத்தை கனவு காண்கிறார்; வஞ்சகமற்ற மனிதனைக் கனவு காண்கிறார்; இயற்கையின் பாடலைத் தனக்கான இசையாக இசைத்துக் கொள்கிறார்.  உலகம் முழுவதையும் ஒரே சமுதாயமாக எண்ணிக் கொள்ளும் ஆசிரியருக்கு மகிழ்ச்சி அன்றி வேறில்லை. 

வானத்தைப் பரிசளித்த கவிக்கோ நம்மை விட்டு நீங்கினாலும் இறவாத வரம் பெற்றவர் என்று கொண்டாடும் கவிஞர் தானும் இல்லாமல் போகும் ஒருநாளில் கவிதை மூலம் இறவாமல் வாழ்வேன் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்.  உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று பாடிய கவிதைப் பரம்பரையில் வந்தவர் என்பதாலோ என்னவோ மரணத்தின் தறுவாயில் இருந்தாலும் புன்னகை செய்வேன் என்றும் இரவுகளையே பகலாக மாற்றிவிடுவேன் என்றும் கானம் இசைக்கிறார். 

காலங்காலமாகச் சொல்லி வரும் தத்துவத்திற்கு ஒரு முடிவு கட்டுகிறது ‘திருக்கதவு’.  மனத்திற்குள் இருக்கும் தடைக்கற்களை மனத்திரைகளைக் கதவுகள் என்று விவரிக்கிறது கவிதை.  இதில் அறியாமை இருளைத் துறக்கவும் வழி சொல்லப்படுகிறது.  உயிர்கள் தங்கள் சுவடைப் பதித்துச் செல்ல தன்னைச் சிற்பம் போலச் செதுக்கிக் கொள்ள வேண்டும்.  இதனால் விளையும் சிந்தனைப் பூக்கள் இந்த உலகத்தைப் புதுப்பிக்கும்.  வாழ்க்கையின் தொடர்ச்சியைப் பேசும் நேரத்தில்,

“வந்தவர்கள் போவதுதான் வாழ்க்கை என்று

வக்கற்றோர் பேசுவதை ஒதுக்க வேண்டும்

வந்ததெல்லாம் செயற்கரிய செய்த வாறு

வாழ்வதற்கே என்பதைநாம் உணர வேண்டும்,”

என்கிறார்.  பழஞ்செய்திகளின் மீதான இந்த மீள்பார்வை காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகிறது.

வகுப்பறையில் ஆசிரியர் ஒருமுறை தவறாகப் பாடம் புகட்டிவிட்டால் அதனால் ஒரு தலைமுறையே பாழாகிவிடும்.  ஆனால் மாணவர்கள் ஆசிரயரின் கருத்தைத் தவறாக மாற்றுவார்களானால் அந்தச் சித்தாந்தமே கெட்டு அழியும்.  அப்படித்தான் உயிரிரக்கதைப் போதிக்க வந்த நெறியைத் தவறாக மாற்றியதன் விளைவாக வன்முறையை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.  அகிம்சையைப் போதிக்கும் புத்த சமயத்தைப் பின்பற்றுவோர் மேற்கொள்ளும் வன்முறை ஆசிரியரை வெகுவாகப் பாதித்திருக்கிறது.  பூக்களை விதைத்த பின் பன்மடங்காகப் பூக்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்து அறுவடை செய்த போது முள் கிடைத்ததாம்.  ஆசைகளைத் துறக்க வேண்டிய புத்த பிக்குகள் அறத்தைத் துறந்துதான் அவலத்திலும் அவலம்.  புத்தன் கொடுத்த வரமான ஞான போதனைகளைச் சிங்களவர்கள் சாபமாக மடை மாற்றம் செய்து தமிழர்கள் மேல் காட்டும் இழிவைப் பேசுகிறது ஒரு கவிதை.  அங்கே புத்தன் கண் கலங்கியபடி, கவிஞரின் கைகளைப் பிடித்துத் தான் விதைத்துச் சென்றதைக் காட்டினான் என்று சொல்லும் தருணங்கள் கவிதையின் உச்சம்.

உலகத்தில் எத்தனையோ அறிஞர்கள் வந்திருக்கிறார்கள்.  தன்மானம், பகுத்தறிவு என்று சொன்னவுடன் நினைவிற்கு வரும் தலைவர் இவர்தான்.  தமிழ்நாட்டு மண்ணைச் சமத்துவம் பார்க்கும் மாநிலமாக மாற்றினார்.  பெண் விடுதலைக்கு வித்திட்டவரும் அவரே.  அவரால் சமூகநீதி நடைமுறைக்கு வந்தது.  காட்டு விலங்குகளைப் போல வாழ்ந்தவர்களைக் கருத்து சொல்லி மனிதர்களாக மாற்றினார்.  அவரைப் பகுத்தறிவுப் பகலவன் என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது.  ஆரூர் தமிழ்நாடானோ ‘ஈரோட்டுக் கதிரோன்’ என்று போற்றிப் பரவுகிறார்.  தமிழ்நாட்டின் பெரியாரை உலகம் முழுதும் சொந்தம் கொண்டாடி மகிழ்கிறது.

இன்னும் எத்தனையோ தெறிப்புகளைத் தொகுப்பு முழுக்க பார்க்க முடிகிறது.  வாசித்துப் பாருங்கள்!  நேசித்து மகிழுங்கள்!

நூல்: காற்றின் புழுக்கம்
ஆசிரியர்: ஆரூர் தமிழ்நாடன்
விலை: ரூ.120 மட்டும்
வெளியீடு: பேசும் புதிய சக்தி பதிப்பகம், சென்னை

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா