பெருமழை ஒன்றினைச் சந்திக்கத் துப்பில்லாத, திட்டங்கள் ஏதுமில்லாத அரசின் கையாலகாத்தனம், மேல் முதல் கீழ் வரை ஆட்சியதிகாரங்களின் பொறுப்பின்மை, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, பல மனிதர்களின் மரணம் மறைத்த மகாப் பொய்… ஊடகங்களின் ரேட்டிங் போட்டியும் திரும்பத் திரும்பக் காட்டி பீதியை அதிகரித்தலும், நல்ல உள்ளங்களின் உதவி, சாமானியர்களின் சுயநலம் என நாவல் என்னும் பிரம்மாண்ட கித்தான் முழுவதும் மனிதம் என்கிற தூரிகை கொண்டு பெருங்கோட்டோவிய மொன்றினை தீட்டிச் செல்கிறார் சைலபதி.

peyal2015 இல் சென்னை வெள்ளத்தின் போது மழையை வெள்ளத்தை பீதியோடு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்க விமான நிலையம் வெள்ளத்தால் செயலிழக்க, கண்முன்னே நன்கு பழகிய சைதை பாலம் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்ற அச்சம்!. உடனடிப் பயணத்துக்கும் வழியில்லை. சென்னை உறவுகளை நட்புகளைத் தொடர்புகொள்ள வழிதெரியவில்லை. இந்த மனநிலையை மீண்டுவரவைத்த சிறுநூலாக ஓவியர் புகழேந்தியின் ‘சென்னை வெள்ளம். ஒரு குடும்பம் அடைந்த இன்னல்களை ஒரு நாட்குறிப்புபோலப் பதிவுசெய்திருந்த ஓவியர் புகழேந்தியின் எழுத்து தந்த உணர்வுகளுக்குச் சற்றும் குறையாமல் சைலபதியின் ‘பெயல்.’

 பெயல்: நிஜமா… புனைவா…இயற்கையின் மீது விமர்சனமா…அதிகார மமதையின் மீதான சவுக்கடியா…கார்ப்பரேட் முதலைகளின் கருணையின்மையின் பதிவா… எல்லாம் தான் ,அது பெருந்துயரொன்றின்கோட்டோவியம்.

பெயலில் சிறப்பென நான் உணர்வது மிக நெருக்கமான சமகாலத் தன்மை. 2015ல் கடந்த ஓர் நிகழ்வு எந்த அளவுக்கு படைப்பாளனுக்குள் நுழைந்து இம்சித்துக்கொண்டிருந்தால் 2017 இல் 190 பக்க நாவலாக வெளிப்பட்டிருக்கக்கூடும்.

ஒரு பெருமழை; மனநிலை பாதித்து புலன்களை அடக்குமா… காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க இளமையின் துயரத்தோடு வாழ்வோடு போராட இயலுமா… கார்த்திக் – ரேவதி இணை அவநம்பிக்கையின் வெளிப்பாடா… நம்பிக்கையின் குறியீடா…

இந்தியாவுக்குள் எதுநடந்தாலும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் இளைஞர்களை முகம் மறைத்த கறுப்புத் துணியுடன் காண்பித்து அவப்பெயர் ஏற்படுத்துவதையே தொழிலாகக் கொண்ட ஆட்சியமைப்புகள்… மூளையில்லா ஊடகங்கள், யூனஸ் போன்ற பாத்திரத்தை (திரு. யூனஸ் – ஓர் உண்மை மனிதர்) எப்படி எதிர்கொள்ளும். இங்கேதான் சைலபதி யார்பக்கம் இருந்து எழுதுகிறார் என்பது தெளிந்த வாசகனுக்குப் புலனாகிறது

”ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக்கோவை தான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும் நிலைகளிலும் ’பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களை தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு, நான் இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்” என்னும் படைப்பாளி இராஜம் கிருஷ்ணன் அவர்களின் மேற்கோளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது சைலபதியின் ‘பெயல்.’.

“பசி அவர்களை மிருகமாக மாற்றியிருக்கிறது. வயதானவர்களை வீதிக்குத் துரத்துகிற இரக்கமற்ற பிள்ளையைப் போல வெள்ளம் இவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடிங்கிக்கொண்டு வீதியில் நிறுத்திவிட்டது. ஒரே நாளில் நகரைப் பிச்சைக்காரர்களின் கூடாரமாக்கிவிட்டு இன்னும் அடங்காத வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது.” (ப.177)நேற்றுவரை அவர்களின் முகவரிகள் வேறு… பின்புலங்கள் வேறு… இயற்கையின் சீற்றத்துக்கு முன் விசிட்டிங்க் கார்டுகளுக்கு ஏது வேலை! புரட்டிப்போட்ட வெள்ளத்தின் முன் மண்டியிட்ட மனிதர்களை நான்கே வரிகளில் படம் பிடித்திருக்கும் சைலபதியின் எழுத்துழைப்பைப் பாராட்டுவதா… கிடைத்த இடத்தில் எல்லாம் வீடுகள் கட்டி நீராதார வழிகளை அடைத்துவிட்ட பேராசை மனிதர்களை விமர்சிப்பதா…?

நவீன், பிரமோத், லாவண்யா - இந்தப் பாத்திரங்கள் புதுமாதிரியான படைப்புகள். நவீன வாழ்வின் அவசர அபத்த கணங்களின் முடிவுகள். விளைவுகள் யாவற்றையும் செறித்து வாழும் சமகாலத் தலைமுறையின் குறியீடுகள். ‘தலைவர்’ பாத்திரம் திராவிட அரசியலுக்கு ஒரு பதச் சோறு. சந்தடி சாக்கில் முன்னாள் முதல்வர் வாழ்ந்த பகுதிகளையும் செய்த உதவிகளையும் கோடிட்டுக் காண்பித்து கடந்துவிடுவது சைலபதியின் லாவகம். கோபால், பழனி போன்ற பாவப்பட்ட மனிதர்களுக்கும் நாவலில் இடமுண்டு. பெரியவர் குமாரசாமியின் ஒரு சின்ன முன்னெடுப்பு பெரிய விளைவுகளை உண்டு பண்ணுகிறது. ஆனால் வெள்ளத்தின் அகன்ற நாக்கு பெரியவரையும் தின்று செரித்துவிடுவது தான் வாழ்வின் அவலச்சுவை.

சுய அனுபவத்துடன் நாவல் எழுதுகிவோர்க்கு இத்தகைய இடர்பாடு இல்லை. ஏனெனில் அவர்கள் நேர்ந்தெடுத்த களத்துடனும், அங்கு வாழும் மனிதர்களுடனும் நிகழும் நிகழ்வுகளுடனும் இணைந்த ஒன்றாக அவர்களது வாழ்க்கை அனுபவம் அமைந்திருக்கும்” என்கிற பேரா. ஆ. சிவசுப்பிர மணியன் கூற்றுப்படி சைலபதி வெள்ள மனிதர்களுடன் வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையாகாது. ஏனென்றால் புனைவுச் சித்திரங்களோடு ஊடாக யூனஸ், வெதர்மேன் போன்ற நிஜப்பாத்திரங்கள் புதினத்தின் மதிப்பீட்டைக் கூட்டுகின்றன.

ஒரு பன்னாட்டு நிறுவனம் இயற்கை சீற்றத்தால் இறந்துபோன தம் ஊழியர்களின் தகவல்களை மறைக்கிறது. ‘கவர்’ வாங்கிச் செய்திகளைக் கவர் செய்யும் ஊடகங்கள் வழக்கம் போல் TRP Ratingக்காக வாந்திச் செய்திகளை திரும்பத் திரும்ப வழங்கிக் கொண்டிருப்பதையும் தன் எழுத்தால் கோடிட்டுக் காண்பிக்கும் சைலபதி வெகுமக்களுக்கு விரோதிகள் யார்யாரென வாசகனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்த்தி விடுகிறார். எந்தப் பன்னாட்டு நிறுவனம் ஊழியர்களின் மரணச் செய்தியை மறைத்ததோ அந்த அலுவலகத்துக்கு எதிரே பிரம்மாண்டமான மருத்துவமனையிலும் சில அசம்பாவிதங்கள் பதிவாயின. அது குறித்து இதுகாறும் எந்தவித படைப்புகளும் வரவில்லை. அந்தச் சம்பவங்களும் எங்குமே பெயலில் பதிவாகவில்லை.

சைலபதியின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவன் என்ற வகையில் அவர் படைப்புகளில் ’அமானுஷ்யம்’ ஒரு முக்கிய உத்தியாக உலவுகிறது. ‘பெயல்’ நாவலிலும் இறந்தவர் பேசுகிறார். தகவல் சொல்கிறார். காதலியைப் பற்றிச் சொல்லி காதலுக்குப் பரிந்துரைக்கிறார். இந்த ‘அமானுஷ்யம்’ – என்கிற உத்தி சைலபதியின் பலமா, பலவீனமாவென வாசகன் தான் முடிவெடுக்க வேண்டும்.

நாவலுக்கு முன்னுரைத்திருக்கும் இரா. முருகவேள் கூறும் வரலாற்று உண்மைகளை உள்வாங்கி இந்நாவலை வாசிப்பது வாசகனுக்குப் புதிய அர்த்தச் செய்திகள் புலப்படும். போலவே பல்வேறு செய்திகளைப் பூடகமாக சொல்லி பொருள்தரும் முகப்பையும் வாசகன் தவறவிட்டுவிடக்கூடாது.

‘பெயல்’ யதார்த்த வகை எழுத்தென்றாலும், சூழல் குறித்த அதி அக்கறையுடன் எழுதப்பட்ட நாவல். எல்லாவற்றையும் நாவலில் சொல்லிவிட்டு அமைதியான நதிபோல இயங்கிக்கொண்டிருக்கும் சைலபதி போன்றவர்களால் எல்லோருக்கும் பெய்யும் மழை.

- அன்பாதவன்