மனதைக் கட்டவிழ்த்து, பரந்துபட்ட சமூக விழுமியங்களை, காத்திரமாக விரித்துக் கூறுவதில் படைப்பிலக்கியங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதிலும், ஒரு நாவல் தனக்கான காத்திரத்தன்மையை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கும். நாவலாசிரியர் லக்ஷ்மி சிவக்குமாரின் ‘இப்படிக்கு…… கண்ணம்மா’ நாவலில், கதைக்களமும் கதைமாந்தர்களின் செயல்பாடுகளும் வாசகத் தன்மையை மீறி நாவலுக்கான நுவல்பொருளை விரவிக் கொண்டே இருக்கின்றன. கதை எதை நோக்கிச் செல்கிறது என்கிற பேரார்வத்தை பெரும்பாலும் கதையின் முடிவு தீர்மானிக்கும். நவீனப் போக்கில், இந்த நாவல் முகநூலின் காதல் பரிவர்த்தனைகளால் லாக்இன் இல் தொடங்கி லோடிங்கில் இடைப்பட்டு, லாக்அவுட் இல் நிறைவடைகிறது.

ippadikku kannammaமுகநூலில், டிலோனி டிலக்ஸி என்ற போலி முகவரியில், கண்ணம்மா, சம்பத்துக்கு அறிமுகமாகிறாள். அவள் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண். இருவருக்குமான காதல். வலைதளத்தில் வளர்கிறது. ஒருகட்டத்தில், இருவருமே நெக்குருக காதலிக்கின்றனர். சம்பத்திற்கு திடீரென ஏற்பட்ட வாகன விபத்தால் இடுப்புக்கு கீழ் பகுதி செயலிழக்கிறது. இனியும் கண்ணம்மாவின் மனத்தில் தேவையற்ற ஆசையை வளர்க்கக் கூடாது என்ற எண்ணத்தில், வார்த்தைகளால் விலகிச் செல்கிறான். கண்ணம்மாவின் தீர்க்கமானக் காதலால் சம்பத்தை தேடிச் சென்னை வருகிறாள். சம்பத்தின் உறவினர்களைச் சம்மதித்து அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். காமம் ஒரு பொருட்டல்ல காதலே ஆத்மார்த்தமானது என்ற வீச்சோடு செயற்கை முறை கருவூட்டல் செய்து குழந்தைகள் பெறுகிறாள். முடிவில், சம்பத், கண்ணம்மா மற்றும் குழந்தைகளோடு இழந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்தி வாழ்கிறான்.

நாவல் இரண்டு தொகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து பாகங்கள். முதல் பாகம் ‘விபத்துக்கு முன்னாள்’ எனும் உப தலைப்போடு துவங்குகிறது. 13 அத்தியாயங்கள். முழுக்க முழுக்க தலைமை மாந்தர் சம்பத் மற்றும் அவர் நண்பர்களின் சென்னை வாழ்க்கை குறித்துப் பேசுகின்றன. சம்பத் தஞ்சையைச் சேர்ந்தவன். மென்பொருள் நிறுவனத்தின் பொறியாளராகச் சென்னையில் பணி புரிகிறான். தாய்மாமன் பிரகலாதன். அவர் குடும்பம் சென்னையில் வசிப்பதால் சம்பத்துக்கு உறுதுணையாக இருக்கிறார். நண்பர்கள் சந்துரு, திலக், சேகர் மற்றும் பிரபா இவர்களுடன் சம்பத்தும் இன்குடில் எனும் இல்லத்தில் வாடகைக்கு இருக்கின்றனர். சந்துருவின் உறவுக்காரர்களான அகிலேந்தர் அவர் மனைவி தினகரி, மகன் அஷ்வத், சுப்புதாத்தா இன்குடிலுக்கு சொந்தக்காரர்கள். அதனால், சம்பத் உட்பட ஐந்து பேருக்கும் வசிப்பிற்கான பிரச்சனைகள் இல்லை. தங்கும் விடுதிகள் நடத்திவரும் பணக்கார அப்பாவின் கணினிக் கனவை மீறி கட்டிடப் பொறியாளராகும் சந்துரு. எப்படி இருந்தாலும் தொழில் விவசாயம்தான் அதைக் கைவிடமாட்டேன்.ஆனாலும் என் கனவு சினிமா எனத் திரையுலகில் முயற்சி செய்யும் திலக், அஃப்ரின் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டவர். சாதியைக் காரணம் காட்டி அவள் குடும்பமே உணவில் விசம் வைத்து அவளை ஆணவக் கொலை செய்கின்றனர். குடித்துக் குடித்து அஃப்ரின் நினைவுகளை செல்லரிக்கவும் மீட்டெடுக்கவும் செய்யும் நாற்பது வயது சேகர். தவிர்க்க முடியாமல், கூர்நோக்கு இல்லத்தில் வளர்ந்து ஆளாகி நண்பர்களுக்காக இன்குடிலில் உணவு தயார் செய்து காத்திருக்கும் பிரபா,இவர்களுடன் கூட பயணிக்கும் ஆட்டோ ஓட்டுனர் குமரப்பன், மனநோயாளியான அவர் மனைவி செல்லம்மா. தன்மகன் ரமேஷ்தான் இந்தப் பிரபா என்பதைச் சொல்லமுடியாமல் தவிக்கும் இவர்களின் பாசப்போராட்டம்.

திருவிழாவிற்கு சென்ற இடத்தில் திலக்கின் தங்கையை காதலோடு பார்த்து, கதையின் இறுதிவரை குற்ற உணர்வில் தலை குனியும் பிரபா, சம்பந்துக்கு பூரணியின் மீதான ஒருதலைக் காதல், சென்னை ஐ.டி. நிறுவனத்தில் சக தோழியான கவிதாவின் பொஸசிவ், உதயா, சம்பத்திற்கான மேன்மை பொருந்திய அண்ணன் தங்கை உறவு, சம்பத்தின் பெற்றோர்களான திருநீலன், லக்ஷ்மி, வெளிநாட்டில் வசிக்கும் யமுனா மற்றும் மஞ்சரி என்ற இரண்டு சகோதரிகள், ஊடாகக் கண்ணம்மாவின் காதல். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அவளின் அம்மா சத்யவதி, அப்பா நிலமகன், கொழும்புவில் இருக்கும் சகோதரி மருத்துவர் மாதினி, அண்ணன் மயூரன்,லண்டனில் பணி செய்யும் தம்பி மணிமாறன், விபத்திற்கு பின், மனம் குன்றிய தன் மகளை சம்பத்திற்கு மணம் முடிக்க வைப்பதில் சுயநலமாகவும்,கண்ணம்மாவின் அன்பின் உயர்வு கண்டு விலகிச் செல்வதில் பெருந்தன்மையாகவும் நடந்து கொள்ளும் விபத்துக்கான காரணகர்த்தா, பணக்காரர் குருதத். நடைபாதையை வாழ்விடமாகக் கொண்ட வேலாயுதம், சாம்பசிவம். இவர்களின் கட்டமைப்பில் துளிர்க்கிறது நாவல்.

சம்பத், கண்ணம்மா இதில் யார் முதன்மை பாத்திரம் என்ற மருகலில் கதை நகர்த்துதலிலும், உணர்வு வெளிப்பாட்டிலும் இருவரும் ஒருவரையொருவர் விஞ்சி நிற்கின்றனர். இரண்டாவது பாகத்திலிருந்து கண்ணம்மாவிற்கும் சம்பத்திற்குமான கசிந்துருகும் முகநூல் காதல், கவித்துவ வார்த்தைகளின் தகிப்பிலான ஊடல், இலங்கை போர் குறித்த அச்சம், அதற்கான சூழல், இடையிடையே நண்பர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், மனப்பதிவுகள் நான்காம் பாகம் வரை புலப்படுகின்றன. ‘விபத்திற்கு பின்னாள்’ எனக் கோடிட்ட இங்கிருந்துதான் கதையின் உச்சம் வெளிப்படுகிறது. வாழ்க்கையின் மீதான துயரங்களை வெண்ட்ரிலோகிசம் எனும் பொம்மைப் பேச்சால் கடந்து போகிறவன் சம்பத். விபத்தினால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு முடங்கிப்போனதை அறியாத கண்ணம்மா அன்பை, காதலை, சுமந்தபடி சம்பத்தை தேடி வருகிறாள். ஐந்தாம் பாகத்தில், சம்பத்துடனான மண வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்கிறாள். தாம்பத்ய வாழ்க்கைக்கு தகுதியற்ற தன் மகனுக்கு இவளின் பிடிவாதத்தை காரணம் காட்டலாமா? திருமணம் முடிப்பது சரியாகுமா? என்கிற உணர்வுச் சலம்பலில், மனக்குழப்பத்தில் சிக்குண்டு கிடக்கும் பெற்றோர்கள். அனைத்தையும் கண்ணம்மா புறந்தள்ளுகிறாள். மருத்துவத்திற்கு தன்னைத் தயார்செய்கிறாள். சம்பத்தை கைகோர்க்கிறாள். சம்பத்திற்கும் கண்ணம்மாவிற்கும் நிலாந்தன், நிறைநிலா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர். கண்ணம்மா பணிக்குச் செல்கிறாள். குழந்தைகள் பள்ளிப்பருவத்தை எய்துகின்றனர். கண்ணம்மாவின் அம்மா சத்யவதியும் தன் மகளுக்கு ஒத்தாசையாக பேரப்பிள்ளைகளோடு தங்கிவிடுகிறார். இவர்களுடன் சம்பத், அன்பால் கட்டுண்டு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்கிறான்.

திரைத்தன்மைக்கான கட்டமைப்பும் நவீன உத்திக் கையாளலும் இயல்பான வாசிப்புத் தன்மையிலிருந்து நம்மை வேறுகட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றன. சமூக அக்கறையும், துடிப்புமிக்க இளைஞன் சம்பத். உடல் உறுப்பு தானம், இரத்ததானம், கைவிடப்பட்டோர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவனாக கதை நெடுக வலம் வருகிறான். அலைபேசியில் ஒவ்வொரு பெயர் பாதுகாக்கப்படும்போதும் அவர்களுடைய இரத்த வகையையும் சேர்த்து சேமிப்பது வலிந்து காத்திருக்கும் மனிதநேயத்தின் உச்சம். சம்பத்தின் மாமா பிரகலாதனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் நேரம், அரிதான A2B நெகட்டிவ் இரத்தவகை கிடைக்கவில்லை. அன்றைய இரவு மாமாவிற்கு சவரம் செய்ய வந்த மாரிமுத்துவின் இரத்தம் கொடுக்கப்படுகிறது. உயிர் பிழைக்க உதவும் இரத்தத்தில் ஏது சாதி என்பதை சம்பத் வலியுறுத்துகிறான். ஒருசமயம், சம்பத்திற்கு தஞ்சாவூரில் பெண் பார்க்க காத்திருக்கிறார்கள். அவன் சென்னையில் குருதிக்கொடை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். உடனே பெண் பார்ப்பதை நிறுத்துவிட்டு நோயாளிக்கு இரத்தம் கொடுக்கிறான். ‘அவசரத்துக்கு ஒரு யூனிட் இரத்தம் குடுக்குறதும், பத்துமாசம் சுமந்து பெறும் ஒரு தாயோட புனிதமும் ஒன்றுதானடான்னு நீதானம்மா எனக்கு சொன்ன…? என அம்மாவிடம் கேட்பதில், இளைஞர்களின் சமூகப் பொறுப்பு வியக்கவைக்கிறது. சமூக அக்கறை என்கிற பேரில் வெற்று அறிவுரைகள் கூறாமல், காரியத்தில் காட்டுபவனாக சம்பத் இருக்கிறான். உதாரணமாக, உடல் உறுப்பு தானத்தில் மக்கள் இன்னும் விழிப்படைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான். தன் தந்தை திருநீலன் இறந்தபோதும் துணிச்சலாக அதை செயல்படுத்திக் காண்பிக்கிறான். சம்பத்திற்கு நேர்ந்த விபத்திலான தருணத்தில், எலும்புமுறிவு ஏற்பட்ட இடத்தை அசைக்காமல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும் எனக் கையாளவேண்டிய உடனடி முதலுதவிகளும். விபத்திற்கான காரணம் குறித்த முன் எச்சரிக்கைகளும் முன்வைப்பது, நாவலாசிரியரின் மருத்துவத் தகவலையும் நமக்கானப் புரிதலையும் ஏற்படுத்துகிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை எதிர்பார்ப்புகள் இன்றி பார்த்துப் பார்த்து கம்யூனிசச் சிந்தனையோடு செய்து வரும் சம்பத்தின் எண்ண ஓட்டத்தில், நாவலாசிரியர் லக்ஷ்மி சிவக்குமார் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்ணம்மாவிற்கும் சம்பத்திற்கும் இடையேயானக் காதல் பரிமாற்றங்களைக் குறிப்பிட்டுப் பேச வேண்டும். முகம் கூடக் காணாமல், வார்த்தைகளின் ஆளுமைகளுக்குள் கரைந்தும் கரைத்தும் காதலைச் சொல்லியிருக்கிறார். விடிந்தது அறியாமல், இரவு முழுக்க சேட்டிங் செய்கிறார்கள். விடியப்போகும் காலை… விடிந்துவிட்ட காதல்…தொடங்கிவிட்ட கவிதைப் பேச்சு… காலையிலேயே கவிதையாய் பேசுகிறாளே! உனக்கு ஏன் அந்த நிலை? / உன்னால்தான்…/ எனக்குள் நான் ஆழ்ந்து… என்னையே நான் நேசிக்கத் தொடங்கிவிட்டேன்/என்னுள் நீ இருப்பதால்தானோ../ இதிலென்ன சந்தேகம்/ என்னையா உனக்கு பிடித்திருக்கிறது..? எதைத்தான் பிடிக்காது இப்போ?/ உன்னைப் பிடித்த பின்பு/ எல்லாமே பிடித்துப் போகிறது/ என்னையே பிடித்துப் போய்விட்ட உனக்கு/ எல்லாமும் பிடிக்கத்தானே செய்யும்/ நான் மின்னல் ஆகிறேன்/ உன் பார்வைகள் என்னுள் இடியென இறங்குவதால்/உன் மின்னலில் நான் மின்னுகிறேன்/ என் மின்னல்களின் வெளிச்சம் நீ என்கிறாள். ஆமாம் என ஆமோதிக்கிறான். சரி தூங்குங்க என்கிறாள். மின்னிவிட்டு எப்படித் தூங்குவது என்கிறான். கண்களை மூடிக்கொள்..நித்திரை தழுவாமல் இறுகப் பற்றிக் கொள் என்கிறாள். குட்நைட் சொல்கிறார்கள். பொழுது விடிகிறது. இப்படியாக வரிகளுக்கு உயிரூட்டி, பித்தேறி, அந்தச் சுகத்தில் துய்ப்பது காதல் என்பதை மனத்துள் சிரிக்கும் கலையால் உள்வாங்க முடிகிறது. காதல், கவிதைகளை இயற்றுகிறதா? அல்லது கவிதைகள், காதலை இயக்குகிறதா என்கிற கிலேசத்தில் அவர்களின் ரகசியங்கள், நம் இருக்கைகளை ஆக்கிரமிக்கின்றன.

“அன்பெனும் தளத்தில்/ ஆயிரம் கதைகள்/ நமக்குள் நாமே பேசி/வார்த்தைகளை அள்ளி வீசி/சிந்திச் சிதறி/பகிர்ந்தெடுத்து பின்/ திருடுவதாய் கதைபேசி/ நீ ஆம் என்பதும்/ நான் இல்லை என்பதும்/நான் ஆம் என்பதும்/ நீ இல்லை என்பதும்/ இப்படித்தான் கழிந்து போகிறது/ ஒவ்வொரு நாழிகையும்/ இருந்தும் நீண்டே செல்லும்/நமக்கான தேடல்கள் ஒன்றாயினும்-நாம்/ கொஞ்சம் சுயநலவாதிகளே! எனக் கண்ணம்மா சம்பத்திற்கு கவிதை அனுப்புகிறாள். காதலைச் சொல்லும்போதெல்லாம் எவ்வளவு பெரிய செய்தியையும் வரிகளுக்குள் அடக்கி நாவலாசிரியர் கவிஞராக உருமாறிவிடுகிறார்.கவிதையில் அரும்பி கவிதையாய் கனிகிறது சம்பத், கண்ணம்மாவின் உயிர்ப்பு.

“விபத்தினால் ஆன இயலாமை, சமூகத்தின் மீதான போதாமை இவைகளால் விளைந்த தத்துவார்த்த வரிகள், நாவலை மெருகூட்டுகின்றன. சுப்புதாத்தாவை சொல்லும்போது, “விலைபோகா பொருளை கூவாமல் கொள்ளை லாபத்திற்கு விற்றுவிடும் பார்வை அவருடையது” என்கிறார். சம்பத்தின் மனநிலையை குறிப்பிடுகையில், “தன் முகத்தை மூர்க்கக்கரம் கொண்டு ஸ்பரிசிக்கும் காற்று, சோகப் படிமங்களை துடைத்தெறிந்து, ஆயாசப் பூக்களின் இதழ் கொண்டு வருடிக் கொடுப்பதை சம்பத்தால் உணர முடிந்தது” எனவும், மனிதனின் மூளைகள், யாரும் படித்துவிட முடியாத சங்கேத வார்த்தைகளை சதா…..எழுதிக்கொண்டே இருக்கிறது என்றும் கூறுகிறார். ஈழப்போரில் பாதிக்கப்படும் தமிழ் மக்கள், தமிழ் பேச பயப்படுகிற சூழலை, “தமிழ் பேசுவதென்பது கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சயனைடு குப்பியை தொண்டைக் குழிக்குள் கிடத்திக் கொள்வதற்கு ஒப்பானதாயிருக்கிறது.”என்கிறார்.

நாவலின் இறுதிப்பகுதியில் கண்ணம்மாவிடம், தாம்பத்தியத்திற்கு தகுதியில்லாதவன் என்றபடி சம்பத் அலுத்துக் கொள்கிறான். நீங்கள் தகுதி எண்டு எதைச்சொல்ல வாரியல்…? தாம்பத்யத்த வச்சுத்தானே சொல்றீங்கள்…? அது எனக்குப் புரியாது எண்டு நினைச்சிங்கள் எண்டால் நீங்கள் முட்டாள். மணவாழ்க்கை தாம்பத்யத்த வச்சும்தான் இருக்கு. ஆனா வயசாயிடுச்சின்னா ச்சீ..ந்னு போயிடும் தானே…? அதுமட்டும்தான் மணவாழ்க்கைய நிறைவு பண்ணுதா?அன்புங்கற உணர்வு நிறைவு பண்ணாதா?கல்யாணமே ஆகாத, கல்யாணமே பண்ணிக்காத எத்தனையோ பேருக்கு முதல்ல தேவைப்படுறது அன்பு ஒன்னாதான் இருக்க முடியும்.உதாரண பொண்டாட்டியா இருந்துட்டு போகிறன் நான்” எனத் தன்னைக் குறுக்கிய கண்ணம்மா,

திருமணத்திற்குப் பிறகு, ஒவ்வொரு இரவைக் கடப்பதென்பதும் நெருப்பில் நடப்பதைப் போலிருக்கிறது. கண்களிலும் சிரிப்பிலும் போதையேற்றி எதற்காக சம்பத்தின் மீது அப்படியொரு மோகப் பார்வையைப் பார்த்திருக்க வேண்டும் என்றுகூட கண்ணம்மாவுக்குத் தோன்றியது. சிலநேரங்களில் எதற்காக வந்தோம் என்றுகூட நினைக்கத் தோன்றியது. பேரன்பையும், பெருங்காதலையும் மட்டும் கொட்டி, இரவுகளை நகர்த்திவிடலாம் என்றெண்ணிய ஒவ்வொரு இரவும், ஊடலின் உச்சம் வரை அழைத்துச் சென்றுவிடுகிறது. அதற்குமேல் பயணிக்க முடியாதொரு இயலாமையிலும், அவஸ்தை நிரம்பிய வெறுமையிலும்தான் ஒவ்வொரு பகலுமே தொடங்குகிறது “ என்கிற இந்த முரண்தான் காமத்தின் நிதர்சனம்.

“காமத்திற்கான உச்சத்தை… அதன் எச்சத்தை… இயற்கையாக நிகழவிடும் எந்த சந்தர்ப்பமுமின்றி அதை மருத்துவமாக எடுத்துக்கொண்டதே தெய்வீகம்தான் என்ற செருக்கு கண்ணம்மாவிடம் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். அதற்கான சாத்தியங்கள் குறைவுதான். அன்பு வயப்பட்டவளாக சித்திரிக்கப்பட்டவளை செருக்கு ஆட்படுத்திவிட இயலாது. மன ஒடுக்குதலுக்கான இடத்தை பல நேரம் தியாகத்தன்மை தனதாக்கிக் கொள்கிறது. இந்த உணர்வு முரணை தவிர்த்திருந்தால், நாவலுக்குள் ஏகோபித்த கேள்விகள் எழும்பியிருக்கும். சவாலான இப்பகுதியை கவனமாக நகர்த்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

ஒருசமயம், கண்ணம்மா பணியின் பொருட்டான அசதியில், சம்பத்திற்கு முத்தமிட்டு குட்நைட் சொல்லாமல் உறங்கிவிடுகிறாள். தன்னைத் தவிர்க்கிறாளோ என்ற பதற்றத்தில் அவன் மனம்படும் பாட்டை சொல்லியிருக்கும் விதம் வெகு சிறப்பு. கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் நிராகரிக்கவும் இயலாமல் மனதிற்குள் புகைந்து புகைந்து அழும் சம்பத்தின் மனவோட்டம் மனம் கசிய வைக்கிறது. ஆங்காங்கே சிக்மண்ட் பிராய்டு குறித்த கருத்தும் உளவியல் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கதைக்கான தேவையும் கூட.

தத்துவங்கள் சொல்கிறபோது அதுகுறித்த அதிகப்படியான விளக்கம், நாவல் வாசிப்பிலான ஈர்ப்பை தடை செய்கிறது. நாவலை முதலில் வாசித்தபோது, முதல் பாகம் என்ன சொல்ல வருகிறது என்ற குழப்பம் உண்டானது. தவிர்த்திருந்தால் காதல் பேசும் நாவலாக மிளிர்ந்திருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. முழுமையான வாசிப்பிற்கு பின், சம்பத் இத்தனைத் துள்ளளோடு இருந்தவன் என்பதற்கான முன் விளக்கப் பகுதியாக இருந்திருக்கலாம் என்ற நிறைவு தோன்றுகிறது. பெண்ணியப் பார்வையில், முகநூலில் பேசுவதை மட்டும் நம்பி தன் ஒட்டுமொத்த உறவுகளை முறித்துக் கொண்டு, ஒரு பெண் தூர தேசத்தில் இருந்து காதலனைத் தேடி வருவாளா? காதலனைப் பற்றிய நம்பகத்தன்மையில் கண்ணம்மாவின் முடிவு சரியானதா? என்கிற அச்சம் எழுகிறது.

இரண்டாம் பாகத்தில் துவங்கிய எழுத்து ஓட்டம், தொய்வின்றி சிறப்பாக அமைந்துள்ளது. எழுத்தின் வன்மை, புனைவு, மொழி ஆற்றல், கதை சொல்கிற போக்கு, இலகுவாய் வந்தமைகின்றன. கண்ணம்மா பேசுகிற ஈழத் தமிழும் பிராமண பாஷையும் சுவாரஸ்யம். நமக்கு முன்னால் சம்பத்தும் கண்ணம்மாவும் பேசிக்கொள்வதைப் போன்ற நெருக்கத்தன்மையை நடையில் கொண்டுவந்திருப்பது அலாதியானது. வெண்ட்ரிலோகிசம், லோடிங் வளையம், லேப்டாப்பின் பேட்டரிக் குடுவை, மௌனத்தடம், மௌனத்தாண்டவம், சாது விலங்குகள், மிதக்கொல்லி போன்ற வார்த்தைகள் நாவலாசிரியரின் புதுமைத் திறனுக்கானச் சான்று.

“எப்போதுமே திறமையுள்ள ஒருவர், சவாலை எதிர்கொள்ள நேரிடும்போதெல்லாம் அஷ்டாவதானியாக மாறிவிடுவதுதான் வைராக்கியமுள்ளவனின் இயல்பாக இருந்து விடுகிறது. சம்பத் அஷ்டாவதானியாயிருந்தான்”. (ப.148), “அவர்களின் உடல் குறையின் மீதுள்ள பச்சாதாபத்தால், அவர்களின் சுயமரியாதையை மழுங்கடிக்கப் பார்ப்பதுகூட ஒருவகையான அடக்குமுறைதானே?” (பக்.155,156)

அந்த அடக்குமுறைக்கு எதிரான அஷ்டாவதானியாக சம்பத் இருக்கிறான். கழிவிரக்கத்தின் மீதான மாளிகையில் வாழவிரும்பாதவன் அவன். காதலைக் கொண்டாடுகிறவள் கண்ணம்மா. நாவலின் பிரதானம் இவர்கள் என்றால், அன்பால் வேயப்பட்ட சுயமரியாதையின் வெற்றிச் சிலாகிப்பில் நாவலாசிரியர் லக்ஷ்மி சிவக்குமாரின்“இப்படிக்கு கண்ணம்மா” என்றென்றும் கொண்டாடப்பட வேண்டியவள்.

- முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி

நாவல்: இப்படிக்கு... கண்ணம்மா
பதிப்பகம்: முடிவிலி வெளியீடு
பக்கம்: 300 
விலை: ரூ. 200/-
 
புத்தகம் வாங்க:
 
பதிப்பக முகவரி: எண்:22, கீழவெள்லாளர் தெரு.
                                  கரந்தை, தஞ்சாவூர் -613 002.
                                   மொபைல்: 99943 84941
                                    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..
 
************
 
யாவரும் பதிப்பகம்.
பிளாட் எண்: 214, 
3,புவனேஸ்வரி நகர்,
வேளச்சேரி,
சென்னை - 600042.
பதிப்பக தொடர்புக்கு: 90424614729841643380.
 
************
 

டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,
சென்னை - 600078.  தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)