சென்ற விமர்சனத்தின் தொடர்ச்சி:

(சென்ற விமர்சனத்தின் பின் (குசும்பு) குறிப்பில், தமிழ் நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே விமர்சனத்துக்கு தொடரும் போட்ட முதல் ஆள் நானாகத்தான் இருக்கும் என்ற வாசகத்துடன் முடித்திருந்ததின் தொடர்ச்சி இந்த ”செம்புலம் – விமர்சனம்-2”)

பொன்னுலகம் பதிப்பகத்தால் இரா. முருகவேள் எழுதி வெளியிடப்பட்டுள்ள “செம்புலம்” நாவலுக்கு ஏராளமான விமர்சனங்கள் முகநூலிலும் வலைதளங்களிலும் வந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு விமர்சனமும் அல்லது மதிப்புரையும் வேறுவேறு கோணங்களில் காரசாரமாக அலசி ஆராயப்படுகிறது. அதற்குக் காரணம் அந்நூலில் சொல்லப்பட்ட கதைக் களமும், அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மையக்கருவும்தான். சமகால நிகழ்வுகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சாதிய வெறியும் அதனால் ஏற்படுத்தப்பட்ட வலிகளும், எதிர்பாராத பின் விளைவுகளும் பாரபட்சமில்லாமல் விவரிக்கப்பட்டுள்ளது.

sempulam back wrapper

மேலோட்டமாய்ப் பார்த்தால் இது புனைவுகளுடன் கூடிய ஒரு நாவல் போலத்தான் தெரியும். ஆனால் உண்மையில் சமூகத்தைப் பிளவுபடுத்த மேற்கொள்ளப்படும் சாதி அரசியல், அதன் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினரிடையே ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் என்று இந்நாவலில் சொல்லப்பட்ட எதையும் உதாசீனப்படுத்த முடியாதபடி சமூக அவலங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

இதைத்தானே தொன்றுதொட்டு பல ஆண்டுகளாய் தமிழக வரலாற்றில் முதல் முறையாக என்ற தலைப்பின்கீழ் சினிமாக்களில் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்ற பெயரில் கண்டு ரசித்து(?) வருகிறோம். அல்லது சமீபகாலமாய் கிராமப்புற கோயில் விழாக்களில் இரு சமூகத்தினருக்கு இடையிலான அசம்பாவிதம் என்ற சொற்களால் பல ஊடகங்களில் கண்டும் கேட்டும் வருகிறோம்.

 இந்நிகழ்வுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் செய்தியாய் கேட்டபோதும் கண்டபோதும் ஏற்படுத்தாத பிரம்மிப்பை, அதிர்வலையை, தாக்கத்தை அல்லது கசப்பான உண்மையை தற்போது நமக்கு மிக அருகே அரங்கேறி வரும் ஆணவக் கொலைகள் பெரிதும் கவலை கொள்ளச் செய்கிறது. இப்படியே இதை நீடிக்க விட்டால் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரையோடிக் கொண்டிருக்கும் இந்த சமூகச் சீரழிவு கட்டுக்கடங்காமல் நீடித்து எங்கே போய் முடியும் என்ற பதைபதைப்பை ஏற்படுத்துகிறது`

சரி, இந்நாவல் ஆணவக்கொலையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதை மையக் கருவாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், நவீன அடிமைதனத்தின் ஒரு பகுதியாக சிறு மற்றும் பெரு நகரங்களுக்கு அருகில் செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்படும் கெடுபிடிகள், தவிர்க்கமுடியாத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அதன் தொடர்ச்சியாய் மையம் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் என எல்லாவற்றையும் பேசுகிறது.

பெரும் முதலாளிகளிடம் சிக்கி, வறுமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கும் அடித்தட்டு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக தன் வாழ்நாளைத் தெரிந்தே அடமானம் வைக்கும் நிலையையும், இடைத்தரகர்களின் மிரட்டல்களுக்கு இரையாகும், ஏழ்மை நிலையிலுள்ள இன்றைய சமூகம் எவ்வாறெல்லாம் சக்கையாய் பிழியப்பட்டு துப்பப்படுகிறார்கள் என்பதையும் அவர்களின் கையறு நிலையையும், நிர்கதியாய் விடப்படும்போது அவர்கள் எதிர்கொள்ளும் விபரீதங்களையும், பரிதாப நிலையையும் ஒருசேர விவரிக்கிறது இந்நாவல்.

ஆகச்சிறந்த விவசாயம் அழிந்து வருவதற்கு காலம்மாறிப் பெய்யும் மழையும், பல நேரங்களில் பொய்த்துப் போகும் பருவமழையும் மட்டுமே காரணமாகச் சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி வளர்ந்து வரும் நாடுகளின் முதுகெலும்பாய்த் திகழும் போக்குவரத்து அதன் ஒரு பகுதியாக அசுரவேகத்தில் விரிவாக்கப்படும் நீளமான சாலைகள். அதற்காக ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் பாழ்பட்டுப்போன அல்லது அதிகரித்துக் கொண்டே வரும் தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற எண்ணிலடங்கா விபரங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நாவல்.

இயற்கை வரையும் கோலத்தின் அச்சாரப் புள்ளிகளாய் ஆண் பெண் இடையே ஊடுருவும் காதல் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம் என்றபோதும் அரசியல் காரணத்துக்காக ஆண்ட பரம்பரை என்றும் குலப்பெருமை என்று முறுக்கேற்றப்படும் இளம் தலைமுறை, தங்களை மீறி இங்கே யாருமில்லை என்று நம்பிக் கொண்டு திரிவதும், காலம் காலமாய் அடிமைப்பட்டது போதும் இனியும் இந்த அவலநிலையைப் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று பீறிட்டுக் கிளம்பும் சமூக அடித்தட்டு இன இளைஞர்கள் ஒருபுறமும், உணர்ச்சிகளின் எடை கூடக்கூட, கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியத் தராசுத்தட்டு மேலும் கீழும் உயர்ந்தும் தாழ்ந்தபடியே ஆடிக்கொண்டிருப்பது அனைவரையும் கவனத்தில் கொள்ள வைக்கிறது.

முழு நாவலையும் ஒரே புத்தகத்தில், நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொடுத்துள்ளதால் கதையின் சிறப்பம்சம் சிறிதும் சிதையாமல், சொல்ல வேண்டிய அனைத்தையும் வரிசைப்படுத்தி மிகச்சிறந்த நாவலாகக் கொடுக்க முயன்றுள்ளார் இந்நாவல் ஆசிரியர். அதற்கு உறுதுணையாக கையாளப்பட்டிருக்கும் மொழிநடை. காதுகளில் ராகம் பாடும் கொங்குத் தமிழ். விகல்பமில்லாத கிராமத்துக் கதைகள் என்று விறுவிறுப்புக் குறையாமல் வாசிப்பதற்கு இலகுவாய் இருக்கிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும், தனித்தனி கதாப்பத்திரங்களை முன்னிலைப்படுத்தும் போதும், வர்ணிக்கும் போதும் அவரவர்களின் இயல்பான குணநலன்கள், அவர்கள் சார்ந்து வாழும் சமூகச் சூழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, உளவியல் சிக்கல்கள் என அனைத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ளமுடிகிறது. மேலும் கதை நகரும்போது அவர்களுடனே பயணிக்கும் உணர்வைத் தருகிறது.

காவல்துறைப் பயிற்சியில் கற்றுத்தரப்படும் பாடங்கள், கொலை விசாரணையின்போது காவல்துறையினரின் வரம்புக்குட்பட்ட அதிகார எல்லைகள், அவர்கள் மேற்கொள்ளும் நேர்த்தியான நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் செயல்பாடுகள், உண்மையறியும் குழுவின் நிலைப்பாடு என அனைத்தும் அட்டவணை போட்டுப் பட்டியலிட்டது போலவே தோன்றுகிறது. அப்போதெல்லாம் நாம் வாசித்துக் கொண்டிருப்பது கதையல்ல உண்மைச் சம்பவம் என்றே நம்ப வைத்துவிடுகிறது.

மிகமுக்கியப் பெண் கதாபாத்திரங்களாக வலம்வரும் பூரணி மற்றும் அமுதா நம் மனதிற்குள் ஆழமான வடுவை ஏற்படுத்திச் செல்கிறார்கள். மொத்த உணர்வலைகளையும் அதிர்வலைகளையும் மாறிமாறி ஏற்படுத்தும் அப்பாவிகளான இருவரும் கடைசியில் கையறுநிலையில் அல்லாடுவதுதான் அடக்கமுடியாத கண்ணீரை வரவழைக்கிறது.

அழுத்தமான கதைக்கு இடையே இழையோடும் நகைச்சுவையை ஆங்காங்கே காணமுடிகிறது. இயல்பான உரைநடை நாவலுக்கு வலுச்சேர்க்கிறது. சமகால சமூக சீர்கேடுகளை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் அதைப்பற்றி சிந்திப்பதற்கான அவசியத்தை உணர்த்தி சரியான தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது இரா.முருகவேளின் “செம்புலம்”நாவல்.

இந்நாவலின் கதைச் சுருக்கத்தை ஏறக்குறைய முதல் விமர்சனத்திலேயே விலாவாரியாக அலசி விமர்சித்தாகிவிட்டது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே சுற்றி வருவது அத்தனை அழகல்ல. ஆகவேதான் அதைத் தவிர்த்து அதற்குப் பக்கபலமாய் கட்டமைக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட விசயங்களை விவாதப்பொருளாக இந்த விமர்சனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மேலும் இது போன்ற விசயங்களை பல்வேறு கோணங்களில் விவாதிப்போம், விமர்சிப்போம் ஆரோக்கியமான தீர்வை முன்வைப்போம். தேவைப்பட்டால் பல்வேறு துறைகளிலிருந்து ஆலோசனைகளையும் பெறுவோம்

”செம்புலத்திற்குச் சற்றேனும் நீர் வார்ப்போம், சமமான சமூகத்திற்கு வழிகொடுப்போம்”