”செம்புலம்” என்ற சொல்லுக்கு வறண்ட நிலம் அல்லது பாலைவனம் என்ற பொருள் இருக்க, முன் அட்டையில் இருந்த தலைப்பின் எழுத்துக்களும் சற்றேரக்குறைய அரபு எழுத்துக்களை ஒத்திருக்கவே, இந்நூல் ஒருவேளை இஸ்லாமிய மக்களின் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கிறதோ அல்லது வறண்ட நிலப்பரப்பை பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதையோ என்ற சந்தேகம் என்னைப் போன்ற தொடக்க நிலை வாசிப்பாளர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது.

ira murugavel novel sempulamஇருப்பினும், அட்டைப்பட ஓவியம் ஒருவித ஈர்ப்புத்தன்மைக்கு ஏற்ப உயர்ந்தெழும்பும் சூறாவளிக் காற்றும் அதற்கு இணையாக வீரியத்துடன் விண்ணில் பாயும் வீரனின் வாள் வீச்சும் ஏதோ ஒரு சரித்திர நாவலுக்கு அடித்தளமோ என்றுகூட எண்ணத் தோன்றியது. பின்புற அட்டைவேறு, ”எந்த துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது” என்ற வரிகள் மற்ற சந்தேகங்கள் போதாதென்று மேலும் இந்நூலை வாசித்தே தீருவது என்று மூளைக்குள் வயலின் சத்தம் ரீ..ரீ..ரீங்காரமிட்டது. (அதாங்க தலைக்குள் ’ங்கொய்’…ன்னு ஒரு சத்தம்)

பொன்னுலகம் பதிப்பகத்தின் வெளியீடான ‘செம்புலம்’ நாவலை வாசித்துவிடுவது என்று சபதம் எடுத்ததற்கு மேலும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கிறது. (ம்க்கும்… இது வேறயா? சொல்லித்தொலை என்பவர்களுக்கு) இந்நூல் வெளியீடு 31.12.2017 அன்று ஈரோட்டில் நடைபெற்றபோது இந்நூலை பெற்றுக்கொண்டது நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுவன் சச்சின். 320 பக்கத்தை மூன்றே நாளில் முழுமூச்சுடன் வாசித்து விட்டது மட்டுமல்லாமல் மேடையிலேயே ’நச்’சுன்னு நான்கு வரிகளில் கதைச் சுருக்கத்தையும் சொல்லி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். நூலாசிரியரே மிரண்டுபோனதை தூரத்திலிருந்து பார்த்தவர்களுக்கு மங்கலாய்த் தெரிந்தது.

வெளியே சின்ன மேஜையொன்றில் புத்தகங்களை ஒய்யாரமாய் அடுக்கி வைத்து வியாபாரத்தைத் தொடங்கி இருந்த திருப்பூர் குணாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு வழியாய் புத்தகத்தை சிறப்புக் கழிவுடன் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி வீட்டுக்கு வந்தவுடன் எப்போதும் போல் மூலையில் போடாமல், முழுவீச்சில் முன்னுரையை வரிவிடாமல் வாசித்து முடித்து முதல் அத்தியாயத்திற்கு வந்த போதுதான் ஆர்வம் கட்டுக்கடங்காமல் தொற்றிக்கொண்டது.

கொங்கு மண்ணுக்கே சொந்தமான ‘ங்க’ சேர்ந்த அழகிய கொங்குத் தமிழ் முதல் அத்தியாயத்தில் ‘பாட்டி சொன்ன கதை’ என்ற தலைப்பில் கண்களை அகலமாய் விரிய வைத்தது. வாசிப்பு வேகத்தில் இதயத்தின் ’தடக்.. தடக்..’ சத்தம் அருகில் இருப்பவர் வரைக் கேட்டது.

ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரின் நாடங்களில்தான் இரண்டு விதமான கதைக்களங்கள் இருக்கும். ’MAIN PLOT’,(மையக்கரு) ‘SUB PLOT’(உபகரு) என்ற பெயரில். ஆனால் நான்கு பாகங்களைக் கொண்ட இந்நாவலோ முப்பரிமாணத்தை தாண்டி நாற்பரிமாணக் கோணங்களைக் கொண்டதாக இருக்கின்றது`

காவல் பயிற்சிக் கல்லூரியில் உள்ள நடைமுறைகள், சட்டதிட்டங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், சகபயிற்சி மாணவர்களின் வீராப்பு மிக்க செயல்பாடுகள் போன்ற தகவல்கள் மட்டுமல்லாமல் பயிற்சிக்குப் பிறகு காவல் நிலையத்தில் செய்யப்படும் விசாரணை, அதற்கு உறுதுணையாக பூர்த்தி செய்யப்படும் அல்லது செய்யப்பட வேண்டிய படிவங்கள், சட்ட நுணுக்கப் பிரிவுகள் (செக்சன்ஸ்) என்று முழு விவரங்களும் காவல் துறையில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல் போலவே அமைந்திருந்தாலும் ஒரு கொலை விசாரணையைத் தொடங்கி அது பரிணமிக்கும் விதத்தை, கதைகளினூடே விறுவிறுப்பு குறையாமல் முதல் பாகமான ‘காமாட்சிபுரம் காவல்நிலையம்’ என்ற தலைப்பின் கீழ் கிடைத்துவிடுகிறது.

அவசரகதியில் ஒற்றைவரியில் கதை என்ன? எனக் கேட்கத்துடிக்கும் ஆர்வலர்களுக்கு ’இது கதையா?’ என்றால் இது கதை மாதிரி ஆனால் கதை இல்லை என்று சற்றே விளக்கமாகச் சொல்லிவிடலாம். ஏனெனில், இந்நூலை எங்கே தொடங்கி எப்படி முடிப்பது என்ற விபரத்தையும் கதை தடைபடாமல் எப்படி கொண்டு செல்வது என்ற சூட்சுமத்தை ஆசிரியர் இரா.முருகவேள் தெளிவாய்த் தெரிந்து வைத்திருக்கிறார்.

இந்நூல் ஒவ்வொரு சமூகக் கட்டமைப்பிலும் வாழும் சகமனிதனின் உணர்வுக் குவியலாகவும், புனைவுகள் இல்லாத பதிவுகளாகவும், புழங்கித் தேய்ந்துவரும் வார்த்தைகளில் சொன்னால் ‘கூடக்குறைய இல்லாமல்’ யதார்த்தத்தை அதிக மேல்பூச்சு இல்லாமல் யதார்த்தமாகவே நினைவுகூறப்பட்டுள்ளது. இதை வாசிக்கும்போது அட! இது நம் வாழ்விலும் நடந்ததுபோல் இருக்கே! என்று உணர முடிகிறது. இடையிடையே இச்சமூகம் திருந்த வழியே இல்லையா? என்ற ஆதங்கம் கொள்ளவும் செய்கிறது.

பாகம் இரண்டு ’பூரணி’ என்ற தலைப்பின் கீழ், பிறப்பால் ஆதிக்க சாதியைச் சார்ந்ததாக சித்தரிக்கப்பட்டிருக்கும் பத்து வயது சிறுமி பூரணி, பிறப்பால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்ததாக சித்தரிக்கப்பட்டிருக்கும் பாஸ்கர் என்ற சிறுவனுடன் கொள்ளும் எல்லையில்லாத நட்பு விகல்பமில்லாமல் நம் கண்முன்னே நடமாடுகிறது. அந்த இருவரும் வளர்ந்த பின் ஒரே பாதையில் பயணிக்கும் போதும், இடையிடையே சந்தித்துக் கொள்ளும்போதும், ஏற்படும் உணர்வுக் கலவைக்கு சொற்கள் இல்லாமல் போகிறது. கதைப்படி அவர்கள் இருவரும் வெவ்வேறு உறவுகளுடன் பயணிக்கிறார்கள் என்பது சிலிர்ப்பூட்டுகிறது.

பாகம் மூன்று – ’ஷீலா ரெஜிப் பிரியா’ என்ற தலைப்பின் கீழ், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்முறைகள் நடத்தப்படும்போது முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறதா? பதிவு செய்யப்பட்ட வழக்கு அரசால் நீதிமன்றத்தில் சரியாக நடத்தப்படுகிறதா என்று கண்காணிக்கும் பணியை செய்ய ஒரு ஜெர்மானிய பன்னாட்டு மனித உரிமை அமைப்பான ’விழிப்பு’ அமைப்பில் செயல்படும் ஷீலாவின் குறிப்புகள் இக்கதைக்கு பக்க பலம்.

பாகம் நான்கு – அமுதா என்ற தலைப்பின் கீழ். இந்நாவலின் மூன்று பாகங்களையும் இணைக்கும் மையப்புள்ளி என்றபோதும் கடைசி வரை அமுதா என்ற இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தில் இவளைச் சுற்றி சுழன்றடிக்கும் சாதிய வன்கொடுமை பற்றியோ, பெரும் முதலாளிகளிடம் சிக்கித்தவிக்கும் அடிமைமுறை பற்றியோ. சமூக அவலங்களைப் பற்றியோ, சாதிச் சங்கங்களால் முறுக்கேற்றப்படும் இளம் தலைமுறையின் போக்கு பற்றியோ ஏதும் அறியாமல் கடைசிவரை நிராதரவாய் வலம் வரும் அழுத்தமான கதாபாத்திரம் அமுதா.

இந்நூல், குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்கு ஏராளமான தரவுகளுடன் உள்ளது என்பதை உறுதியுடன் சொல்லமுடியும். தனித்தனி கதாப்பாத்திரங்களின் வரலாறு மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதார வாழ்வியல் பின்னணி மற்றும் சமகால சமூக சிக்கல்களும் திறம்பட பின்னப்பட்டு கதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதெல்லாம் சரி, இக்கதை சாதி வெறியால் ஏற்பட்ட ஆணவக் கொலையாமே? கொல்லப்பட்ட பாஸ்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவனாமே? கொலை செய்தது ஆதிக்க சக்தி என்றும் ஆண்ட பரம்பரை என்றும் மார்தட்டிக் கொள்ளும் உயர்சாதியினரின் இரக்கமற்ற செயலாமே? அப்போ இரு வேறு சமூக சக்திகளுக்கு இடையிலான வன்மங்களைப் பற்றியதா? பொருளாதார சுரண்டல் பற்றியதா? நவீன அடிமைத்தனத்தில் உட்கூறுகளா? போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் எழுந்த வண்ணம் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

 இந்நாவலை குறைந்த பட்சம் ஒவ்வொரு பக்கத்தையும் அலசி ஆராய வேண்டிய அல்லது விவாதிக்க வேண்டிய தேவை இன்றளவில் இருக்கிறது. மேலும் இந்நூலை விமர்சிக்க சில கால அவகாசம் தேவைப்படும் என்பதால் இந்நூலைப் பற்றிய பலதரப்பட்ட கோணங்களில் விலாவாரியாக அடுத்த விமர்சனத்தில் விரைவில் சந்திப்போம், அதுவரை காத்திருங்கள்…….

  (தொடரும்…)

பின் (குசும்பு) குறிப்பு:

தமிழ்நாட்டிலேயே ஏன், இந்தியாவிலேயே விமர்சனத்துக்கு தொடரும் போட்ட முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்.

- வே.சங்கர்

Pin It