மோடியின் வருகைக்குப் பின்னால் இராணுவரீதியில் இந்தியா என்னவாகிக்கொண்டிருக்கிறது என்பதை விளக்கி ஒரு நூல் “இரையாகும் இறையாண்மை”. மிகவும் முக்கியமான விஷயம் இந்நூலின் ஆசிரியர் அழகேஸ்வரன் பாதுகாப்புத்துறையில் பணியாற்றுகிறார். சம்பளம் வாங்கினோமா, ஜாலியாக வாழ்ந்து அனுபவித்தோமா என்றில்லாமல் தனது துறைசார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து சமூக கடமையாற்றும் அவரது பொறுப்புணர்வுக்கு நாம் ஒரு சல்யூட் அடிக்கலாம்.  

azhakeshwaran bookதமிழக வாசிப்பு மட்டத்தில், தமிழ் வாசிப்பு தளத்தை மட்டுமே கொண்ட அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இல்லாத ஒரு விஷயம் இராணுவம் குறித்த அறிவு. நமது மூளையில் பதியவே இல்லாத, அதேநேரத்தில் அரசின் மிக முக்கியமான அங்கமாக இருக்கும் இராணுவம் குறித்துப் பேசுகிறது இந்நூல்.

அமெரிக்கா விரித்தது மோடிக்கான பட்டுகம்பளமா? இந்தியாவுக்கான வலையா?

இதுதான் நூல் எழுப்பும் முக்கிய கேள்வி.

“...2014-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டது. 2002 குஜராத் மாநிலத்தில் முஸ்லீம் விரோத படுகொலைகளைத் தூண்டியதில் மோடி வகித்த பாத்திரத்திற்காக அவரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா, 2014 ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெலை குஜராத்திற்கு அனுப்பி மோடியை சந்திக்குமாறு பணித்தது...

... அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் ராணுவ அமைச்சர் சூக் ஹேகனும் பிரதமரை சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து மோடி அமெரிக்காவிற்கு முதல்பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்டர் உலகில் எந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சரையும் சந்தித்திராத வகையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை ஏழுமுறை சந்தித்துப் பேசினார். மோடி தலைமையிலான பா.ஜ.க பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒபாமா மற்றும் ட்ரம்ப் ஆட்சி காலங்களில் இருநாட்டு வெளியுறவுக் கொள்கைகளில் பிரச்சினைகள் இருந்தபோதும் இராணுவ உறவுகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன...” இப்படியான முன்னுரையுடன் நூலாசிரியர் அழகேஸ்வரன் இந்தியாவின் அமெரிக்க சார்பையும் அதனால் சீனா முதலான நாடுகளுடன் ஏற்படுகிறப் பிரச்சினையையும் விளக்குகிறார்.

இந்தியா ஒளிர்கிறது! இந்தியா வளர்கிறது! இந்தியா வல்லரசாகிறது! என்று மக்களிடம் ஜம்பம் அடிக்கிற ஆட்சியாளர்களின் முகத்திரையை இந்நூல் கிழித்தெறிகிறது.

நூலை தாண்டி ...

நமது நூலாசிரியர் உட்பட எல்லோருமே பதறுகிற ஒரு விஷயம் என்னவென்றால் இந்திய அயலுறவுக் கொள்கை குறித்ததாகும். எல்லோருக்கும், ‘இந்தியா நடுநிலையான நாடு என்றும்; அதனால் எந்த  வல்லாதிக்கங்களின் வேட்டைக்கும் இரையாகாத நாடு என்றும்; இந்தியா நடுநிலையின் மூலம் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதுபோலவே மற்ற மூன்றாம் உலக (பின்தங்கிய) நாடுகளையும் வல்லாதிக்கங்களின் வேட்டையிலிருந்து பாதுகாக்கிற நாடாகும்’ என்றும் கருத்து இருக்கிறது. இதற்கு காரணம் இந்தியா இதுவரை “கூட்டுசேரா இயக்கம்” அல்லது “அணிசேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM)” என்ற கொள்கையைக் கொண்டிருந்தது.

அணிசேராக் கொள்கையின் தேவை!

“கூட்டுசேரா இயக்கம்” அல்லது “அணிசேரா இயக்கம்” என்பது எந்தவொரு அதிகாரமிக்க நாட்டின் சார்பாகவோ அல்லது எதிராகவோ அமைப்பாகாத நாடுகளின் கூட்டிணைவாகும் எனக் கூறப்படுகிறது. இது 1961-இல் உருவாக்கப்பட்டது. அப்போது ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

நேருவை பற்றிய மாயை அலாதியானது. உலகெங்கும் போராடிய மக்களுக்கு ஆதரவானவராக நேரு போற்றப்படுகிறார்.

“இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, 1946-இல் அவர் இடைக்கால அரசின் பிரதமராக இருந்தபோது டச்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு சுகர்ணோ தலைமையில் இந்தோனேசியா போராடிக்கொண்டிருந்தது. அப்போது முதலாவது ஆசிய மாநாட்டை கூட்டிய நேரு “டச்சு ஏகாதிபத்தியமே வெளியேறு” என்று இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்கு ஆதரவாக தீர்மானம் போட்டார். அதேபோல கறுப்பின மக்களை ஒடுக்கிய தென்னாப்பிரிக்க அரசை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டுமென ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிபெற்றார்.

எகிப்தில் நாசர் தலைமையில் மன்னராட்சியை ஒழித்து தோன்றிய புதிய அரசை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள் படையெடுத்து நசுக்க முயன்றபோது, அணிசேரா நாடுகளின் உதவியுடன் அதை தடுத்து நிறுத்தியவர் நேரு” என பல பில்டப்புகள் உள்ளன.

இந்த கருத்துகளின் அடிப்படையில்தான் உலகெங்கும் சுதந்திரத்திற்காக போராடுகிற மக்களுக்கெல்லாம் பகிரங்கமாக ஆதரவு கொடுத்தவர் நேரு என்றும்; அது ஏகாதிபத்திய எதிர்ப்பு குரல் என்றும்; அப்படிபட்ட நேருவின் அணிசேரா கொள்கைதான் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை என்றும்; அதனால் இந்தியா ஈழ விடுதலைக்கு ஆதரவாகத்தான் செயல்படும் என்றும் நம்பிக்கைகள் விதைக்கப்பட்டு அவை இன்றும் தொடர்கின்றன.

இந்தியாவை நேருவின் நல்லெண்ணம்தான் வழிநடத்தியதா?

இந்தியாவில் அதிகார மாற்றம் நடைபெற்ற நேரத்தில் உலகத்தில் வெவ்வேறு நலன்களையுடைய இரண்டு அதிகார மையங்கள் இருந்தன. 1. சுரண்டலுக்கு எதிரான உலகை அமைப்பதை இலக்காகக் கொண்ட சோவியத் இரசிய கூட்டமைப்பு. 2. சுரண்டலை உத்தரவாதப் படுத்துகிற வேலையை முன்னெடுத்த அமெரிக்க வல்லரசு.

இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? அது சுரண்டலுக்கு எதிரான உலகை அமைப்பதை இலக்காகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, சுரண்டலை உத்தரவாதப் படுத்த வேண்டுமென்கிற முதலாளிகளின் கனவையே இலட்சியமாகக் கொண்டிருந்தது.

ஆனால், சுரண்டல் மூலம் கொழுக்க நினைத்த இந்திய முதலாளிகளுக்கு சொந்தமாக முன்னேற முடியாத முட்டுக்கட்டையும் இருந்தது; அது இப்போது வரைக்கும் நீடிக்கிறது.

ஒரு நாடு சுயமாக சொந்த வழியில் முன்னேற வேண்டுமானால் அது தன் இயற்கை வளங்கள் குறித்த அறிவியல் ஆற்றலோடு, அந்த இயற்கை வளங்களை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துகிற சொந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளோடு தொழில் மற்றும் விவவசாயத் துறைகளை உருவாக்கி முன்னேற வேண்டும்.

ஆனால், 1947-இல் அதிகாரத்தை அடைந்தவர்களின் நோக்கம் சொந்த வழியில் முன்னேறுகிற தொழில் மற்றும் விவவசாயத் துறைகளை உருவாக்குவதல்ல. அவர்கள் வெள்ளையர்களால் ஏகாதிபத்தியங்களை சார்ந்து இயங்குகிற வகையில் உருவாக்கப்பட்டவர்கள். ஆனாலும் அவர்களுக்கு பிரிட்டனின் கட்டுபாட்டுக்குள் வளர்கிற போக்கை உடைக்க வேண்டியத் தேவையிருந்தது. புதிதாக வளர்ந்துவந்த அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான் உட்பட பல நாடுகளை சார்ந்து இயங்கினால் இன்னும் கூடுதல் பலனடையலாம் என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது. அதற்கு இரண்டு உலகப்போர்களும் உதவி செய்தன. போர்களினால் பிரிட்டன் பலவீனமடைந்தது. அதிகார மாற்றம் சாத்தியமானது.

இப்படி ஏகாதிபத்தியங்களை சார்ந்து இயங்குகிற ஆளும்வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிதான் நேரு. அவர் அவ்வர்க்கங்களின் அரசியல் நலனையேப் பிரதிபலித்தார், அதற்கான கொள்கைகளையே வகுத்தளித்தார்.

அந்தவகையில் அன்றைக்கு உலகத்தில் சுரண்டலுக்கு எதிரான உலகை அமைப்பதை இலக்காகக் கொண்ட சோவியத் இரசிய கூட்டமைப்பு மற்றும் சுரண்டலை உத்தரவாதப் படுத்துகிற வேலையை முன்னெடுத்த அமெரிக்க வல்லரசு என வெவ்வேறு நலன்களையுடைய இரண்டு அதிகார மையங்கள் இருந்த நிலையில் இந்தியாவிலிருந்த ஆளும்வர்க்கங்களுக்கு ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துவதைவிட இரண்டையும் பயன்படுத்துவது இலாபகரமானதாக இருந்தது. ஆகையால்தான் அணிசேராக் கொள்கை என்ற பேரில் நடுநிலைவாதம் முன்வைக்கப்பட்டது.

ஆகையால் அணிசேராக் கொள்கை என்பது சுயமான, எந்த சார்பும் அற்ற கொள்கை என்று பொருளல்ல. அது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை சார்ந்திருப்பதற்கான கொள்கையேயாகும்.

எனவே இந்தியா ஒருபோதும் சுயசார்பு நிலையைக் கொண்டிருக்கவில்லை; கொண்டிருக்கவும் முடியாது. அதேபோல அதன் சார்புத்தன்மை என்பது யாரோடு சார்ந்திருந்தால் அதிக இலாபம் என்னும் இந்திய ஆளும்வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டது.

இப்படி இந்தியா எந்தெந்த வகையில் யார்யாரை சார்ந்திருக்க வேண்டுமென்று தீர்மானிக்கிற ஆளும்வர்க்கங்கள் இருக்கின்றன; அந்த ஆளும்வர்க்கங்கள் ஏகாதிபத்தியங்களை சார்ந்துதான் இயங்க முடியும் என்ற தவிர்க்க முடியாத நிலையிருக்கிறது என்பதை நூலாசிரியர் வெளிபடுத்தவில்லை.

இதனால் நமக்கு பிரச்சினைக்குரிய இந்திய முதலாளிகள் தெரியாமல் போய்விடுகிறார்கள். மோடிக்கு பதிலாக அல்லது பி.ஜெ.பி-க்கு பதிலாக காங்கிரசிற்கு ஓட்டு போட்டால் பிரச்சினை தீர்ந்தது என்ற தவறான வழிகாட்டல் உருவாகிவிடுகிறது.

ஆனாலும் என்ன, இத் தெளிவுகள் கூட இதுபோன்ற நூல்களின் வெளிச்சத்திலிருந்தே பெற முடியும். கூடுதலாக, “எங்க சாதிக்காரங்க நினைத்தால் நாட்டையே பிடித்துவிடுவோம்” என்றும் “ஒரு நான்குபேர் சேர்ந்தால் புரட்சி நடத்திவிடலாம்” என்றும் பிதற்றுகிறவர்களுக்கு இந்நூல் ஒரு பாடமாக இருக்கும். இந்தியா என்பது ஒட்டு சீட்டல்ல; அது பலம் வாய்ந்த இராணுவத்தையும் கொண்டிருக்கிறது; அந்த இராணுவமும் அமெரிக்கா முதலான நாடுகளின் பிடிக்குள் இருக்கிறது; ஆகவே இந்திய அரசை எதிர்கொள்ள வேண்டுமென்றால் இந்திய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் இராணுவத்தையும் எதிகொள்ள வேண்டுமென்ற படிப்பினையை இந்நூல் ஏற்படுத்துகிறது. ஆகவே அரசியல் ஆர்வமுள்ள எல்லோரும் படிக்கவேண்டிய நூல் இது.

நூல் பெயர் : இரையாகும் இறையாண்மை

ஆசிரியர்   : அழகேஸ்வரன்

பக்கங்கள்  : 56

விலை     : 40 ரூபாய்

வெளியீடு   : Vashviya, H – 242, phase – 2, Annanagar, Thiruchi – 26

பேச        : 94437 01812

- திருப்பூர் குணா