வாழ்க்கை எப்படிப் பட்டதாய் அமைய வேண்டும் எனத் தீர்மானித்து பிறவி எடுப்பதென்பது இயலாத காரியம் தான்.ஆனால் வாழ்தல் என்பது நம் வசம் தானே.வானம் பார்த்து கிடப்பதும், நிலவு பார்த்து ரசிப்பதும், நட்சத்திரக் கணெக்கெடுத்து மகிழ்ச்சியில் சோர்வதும்.

தாய் தந்தையின் அருகாமையில் கட்டுண்டு கிடப்பதும், பள்ளித் தோழமையில் பகிர்ந்துண்டு மகிழ்வதும், சற்றே பால்யம் தவறவிட நிலம் பார்த்தோ, நகம் கீரியோ புன்னகைக்குள் பொத்தி வைத்த புதிர் அறிய தவிப்பதும்.

கல்லூரியில் சில பாடங்கள் கற்பிக்கப்படுவதும், கற்றுக் கொள்ளப் படுவதும், பின்னோக்கிய வாழ்வில் வேலை என்றும் என அணைத்தும், அடித்தும் சொல்லிக் கொடுத்து விட்டுப் போகின்றது எது ஒன்றோ யாராலோ, யார் யாருக்கோ……

நகருகிறோமா? நகர்த்தப் படுகிறோமா? என்பதாகிப் போகையில், பல சமயம், காற்றடிக்கும் திசையெங்கும் பறப்பதென்பதே வாழ்வாகிப் போகிறது.

"பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு"

திரு.இரா.பூபாலன் அவர்களின் இந்தக் கவிதைத் தொகுப்பிலிருந்து சற்று நேரம் காற்றில் உலா சென்று வந்த இறகொன்றின் பயணமாகிப் போகலாமே….

"அறையின் சுவற்றில்
மாட்டியிருந்த அந்தக்
குளத்தில்
கொக்கை வரைந்தவன்
ஒரு மீனைக் கூட
நீந்த விடவில்லை
ஒற்றைக் காலைத்
தூக்கியபடி
வெறிக்க வெறிக்க
என்னையே பார்க்கும்
கொக்கின் அலகில்
மீனாகிறேன்
நான் இப்போது"…….

இப்படித் தான் தொடங்குகிறது அந்த இறகின் பயணம்.

சுவரில் மாட்டியிருக்கும் ஒரு புகைப்படத்தின் தேவதைக் கதைகளுக்குள்
நுழைய விரும்பிய குட்டிப் பெண் அந்தக் புகைப்படம் திருப்பி பார்த்து வழி தேடி தோற்பது போல்….

பொய்செய்தல்….

உண்மைக்கு எதிரான ஒன்றிரண்டு பொய் சாட்ச்சியத்தில் அதற்கு உண்மைபோலவே ஒப்பனைகள் பூசிக் கொள்ளவேண்டுமாம்…

மிக முக்கியமாய் அதற்கு
மனசாட்ச்சியை ஒரு
கந்தல் துணியைப்
போல கழற்றி சாக்கடையில்
வீசியெறியச் சம்மதிக்க வேண்டும்….

நிஜம் தானே….எந்த உண்மைகளும் போலிகளாப் போய் விட்ட உலகில் அதனை கையில் வைத்துக் கொண்டு கதறி அழுபவன் எல்லாம் பைத்தியக்காரர்களாக அல்லவா சித்தரிக்கப்படுகிறார்கள்.

நிழல் உலகம்….

நான் எப்படி வேண்டுமானாலும் இருந்து போகிறேன், உத்தம முகமூடி மாட்டி, சிரிப்பொன்றை கவசமாக்கி, அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லி, வலி பகிர்ந்து நாடகமாடி இளைப்பாறுதல்களும், எல்லை மீறுதல்களும்.மலிந்து கிடக்குமிவ்வுலகில்…பொய் முகத்துடன்

புனை பெயருடன்
ஒரு வேளை
நீயுமிருக்கலாம்
என்ற எண்ணம்
வரும் போது
மட்டும் ஒரு கணம்
நின்று-பின்
துடிக்கிறது இதயம்….

பொய்மை சூழ் உலகில், நம்மைத் தவிர்த்து மற்ற அத்தனையும் நியாயமாக இருக்க வெண்டும் என்றென்னும் நிதர்சனம்.

சிறுவயதில் கோடாரிக் கதைகள் கேட்டிருப்போம், இப்போதெல்லாம் வனம் அழித்து குடியேறும் மிருகங்களாகிப் போனதில், வரம் கொடுத்த தேவதைகளின் அறியாமையில் மேல் ஆத்திரம் தான் வருகிறது, " தங்கம், வெள்ளி, இரும்புக் கோடாரிகளை அவனுக்கே பரிசாகத் தந்த, வனதேவதையை நேரில் பார்த்தால் பளாரென அறைந்து கேட்டிருப்பாராம்….

"கோடாரிகளே இல்லாத
மனிதனாக அவனை
மாற்றி விடும்
மதிக் கூர்மை கூட இல்லாத
நீ என்ன தேவதையென"

எது அழித்து எது தேடிச் செல்கின்றோம் என்பது வலிக்கின்ற நிஜம்.

காலத்தை உறைய வைக்கும் புகைப் படங்களில் கூட, பொறுப்புகளின் களைப்புகளிலும், கடுமையிலும் தான் ஒரு தகப்பனின் முகம் பதிவாகிறது

"உறைவித்த புகைப்படத்தில் கூட
அவர் உதடுகள் முணுமுணுத்தபடி இருந்தன
பிள்ளைகளை படிக்க வைக்கனும்
வீடு கட்டனும் என்று நீளமாய்"….

கடமையில் கட்டுண்டு இருக்கும் தக்கப்பன்களுக்கு என்ன கைமாறு செய்து விட முடியும், கடசி வரை அவர்களை காப்பது தவிர…..

பெரும் கவி பிரமிள் அவர்கள் சொன்னது போல

"சிறகிலிருந்து பிரிந்த
இறகொன்று
காற்றின் தீராப் பக்கங்களில்
தன் வாழ்வை எழுதிச் செல்கிறது"

இப்படித்தான் கடந்து செல்கின்றது வாழ்வென்பது என எப்போதும் கணிக்க முடியாததாகிப் போகிறது. உதிர்ந்து போனதோ, உதிரப் போவதோ, எது ஒன்றாயினும் காற்றின் பக்கங்களில் ஏதேனும் ஒன்றை எழுதிக் கொண்டே தான் இருக்கின்றன.

கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் ஆசிரியர் சொல்லி இருப்பது போல

"எல்லா தப்பித்தல்களுக்கும், மறு மொழிகளுக்கும், வலிகளுக்கும், கையெடுத்துக் கொண்ட உத்தி தான் கவிதைகள். எல்லாக் கவலைகளிலிருந்தும் காப்பாற்றி விடுகின்றன, வேறெந்தப் போக்கிடமும் இல்லாததாலேயே நான் கவிதைகளை அண்டிப் பிழைக்கின்றேன்"

சுமைகளோ சுகங்களோ எழுதித் தீர இன்னும் இன்னும் கிடைக்கட்டும் இது போல இன்னும் நிறைய கவிதைகள். சற்றே இளைப்பாறல் தேடி படித்தும் பயணப்பட்டும் வரலாம் "பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகுடன்"