‘காலடியில் ஆகாயம்’ கவிதைத் தொகுப்பை எழுதிய ஆனந்த் மனநல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் உள்ளவர். ‘கசடதபற’வில் கவிதை எழுதத் தொடங்கி ‘ழ’ இதழிலும் எழுதியிருக்கிறார். சிறுகதை, குறுநாவல் ஆகிய வடிவங்களையும் கையாண்டுள்ளார். இப்புத்தகத்திற்கு க.மோகனரங்கன் முன்னுரை எழுதியள்ளர்; பின்னுரை ஆனந்த்.

 41 கவிதைகள் உள்ள இப்புத்தக முன்னுரை ஆனந்த் கவிதைகளின் இயல்புகளை விளக்கி வாசகனுக்கு உதவி செய்துள்ளது. அதிலிருந்து சில குறிப்புகள். 1. உரைநடையின் தாக்கத்திற்குட்பட்ட சாதாரண வரிகள். 2. மொழியின் ஜாலத்தையோ நடையின் கட்டறுந்த பாய்ச்சலையோ காண முடியாது. 3. கவிஞன் கூறாததை வாசகன் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.

 புத்தகத்தின் முதல் கவிதை ‘எல்லாமும் எப்போதும்’… என் பார்வையில் இது இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதை! இதில் கனவுத் தன்மை, குறியீட்டியல் அணுகுமுறை, படிமம் ஆகிய இயல்புகள் அமைந்துள்ளன. இந்திய ஆன்மிகப் பார்வை இன்றைய அறிவியல் கருத்தோடு ஒத்துப் போகும் விஷயமே கருப் பொருளாக அமைந்துள்ளது. மனிதன் தன் மூதாதையர்களின் கூட்டுக் கலவைதான் என்பதே கவிதை வழிச் செய்தி. இதுவே மிக நல்ல கட்டமைப்புடன் அற்புதமான கவிதையாக வடிவெடுத்துள்ளது.

 எனக்கு இறப்பு இல்லை
 இது எனக்குத் தெரிந்தது
 நான் மண்ணுக்குள் போன பின்பு.

கவிதையின் தொடக்கத்திலேயே கற்பனை மிகச் சரியாக வேர் பிடித்து விட்டிருக்கிறது.

 என் முப்பாட்டன் கல் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்
 அவரும் என்னைக் கவனிக்கவில்லை
 மேலும் கீழே சென்றேன்
 அங்கு நான் ஒரு சிலை செய்து கொண்டிருந்தேன்

மிக வித்தியாசமான வெளிப்பாட்டில் எல்லா வரிகளும் அவசியமாகின்றன.

 மண்ணை விட்டு வெளியே வந்ததும் பளீரெனப் புரிந்தது
 நான் செய்து கொண்டிருந்தது என் மகன் சிலை

என்று முடியும் கவிதை மனித இனத் தொடர்ச்சியை விளக்குகிறது. படிமம் தொடர்ந்து அமைந்துள்ளது. “சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் ; முடிவே இல்லாதது” என்ற பாடல் வரி நினைவிற்கு வருகிறது. பாட்டி பேரனை “என்னப் பெத்த ராசா” எனக் கொஞ்சுவது வழக்கு!

 ‘காத்திருத்தல்’ தத்துவக் கவிதை!

 சொட்டு சொட்டென்று
 சொட்டி
 என் குடம் எப்போது நிறைவது?

 மண்ணில் விதைகள்
 மழை பார்த்து நிற்கின்றன
 தாகத்தில் உடல்
 தன் உதிரத்தையே குடிக்கிறது

 தோல் வெடித்த பூமியின்
 ஒரு வெடிப்பினுள்ளிருந்து
 அந்த மலர் மலரும் போது
 காலையாகி இருக்கும்.

என்பதில் வாழ்வியல் சார்ந்த தத்துவப் பார்வை சூசகமாக உணர்த்தப் படுகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் நியாயமான கவலைதான் இக்கவிதையின் கருப் பொருள் என்பது என் யூகம். வருமானம் போதவில்லை என்பதை முதல் பத்தி சுட்டுகிறது. மூன்றாம் பத்தியில் தாங்க முடியாத பொருளாதாரக் கஷ்டம் பேசப்படுகிறது. மகன் வேலைக்குப் போனால்தான் குடும்பம் தலைநிமிரும் என்ற கருத்தையே ‘அந்த மலர் மலரும் போது’ என்ற வரி குறிப்பிடுகிறது. யூகத்திற்கு எத்தனையோ முகங்கள்!

 ‘அதனால்தான்’ – என்ற கவிதை…

 நீ என்னருகில்
 இருப்பதை விட
 இன்னும்
 அருகில் நான்
 இருக்கிறேன். இது
 எவ்வாறு சாத்தியமென
 நீ கேட்கிறாய்

 அதனால்தான்

கவிதை முடிந்ததும் சிந்திக்க வைக்கிறது. கேள்வி எழுகிறது. பதில் யூகத்தில்தான் கண்டடைய வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கிறது. இது எதிர் – கவிதை உத்தி கொண்டது. ‘அதனால்தான்’ என்பது ஆழ்ந்த காதலைக் குறிப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு மெல்லிய புதிர்த்தன்மையில் கவித்துவம் வைக்கப்பட்டுள்ளது.

 ‘அகாலம்’ ஒரு மர்மக் கவிதை!

 ஒரு இலை உதிர்வதால்
 மரத்துக்கு ஒன்றுமில்லை

 ஒரு மரம் படுவதால்
 பூமிக்கு ஒன்றுமில்லை

 ஒரு பூமி அழிவதால்
 பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை

 ஒரு பிரபஞ்சம்
 போவதால்
 எனக்கு ஒன்றுமில்லை

மேற்கண்ட கவிதை பற்றி க.மோகனரங்கன் முன்னுரையில் தரும் விளக்கம் உதவுகிறது. இக்கவிதையின் கடைசி வரியில் வரும் ‘எனக்கு’ என்ற சொல் கவிதை சொல்லியைக் குறிக்கவில்லை. மாறாக, கடவுளைக் குறிக்கிறது என்ற குறிப்பு கவிதையின் எல்லா கதவுகளையும் திறந்து விடுகிறது. வாசகனின் புரிதல் எளிதாகிறது.

 ‘வினோதம்’ கவிதை, பொருள் சேகரித்தல் பற்றிப் பேசத் தொடங்கி
(கிளிஞ்சல், படிகம், பெண்ணின் முகம் காட்டும் கல்) மெல்லிய தத்துவ விசாரத்துடன் முடிகிறது.

 உருட்டி யாரும்
 வைக்காத உருண்டையாய்
 உலகம் வெளியில்
 சுற்றும் வினோதம்
 -----------------------------
 -----------------------------
 எல்லா இடமும்
 வினோதம் நிறைய
 எதை எடுத்து
 எங்கே வைப்பது

எளிமையான கவிதையாக இருப்பதாலேயே இது வித்தியாசமாக இருக்கிறது.

 இத் தொகுப்பில் இருண்மைக் கவிதைகளுக்குப் பஞ்சமில்லை. ‘உள்ளேயும் வெளியேயும்’ என்ற கவிதையில் பூடகத்தன்மை விரவிக் கிடக்கிறது. மேலும் ஒரு நல்ல படிமம் காணப்படுகிறது.

 வெளியே
 அக்கோடிக்கும் இக்கோடிக்கும்
 நீளும் சிறகு விரித்து
 வண்ணங்கள் கடந்த
 இந்தப் பறவை மட்டும்
 மெல்லப் பறந்து
 கொண்டு இருக்கிறது.

என்பதில் படிமம் பூதாகாரம் கொண்டுள்ளது. கவிதையின் தொடக்க வரிகள் கீழ் வருமாறு…

 ஒரு மாபெரும் மரத்தையும்
 சூழ்ந்து நின்ற வெளியையும்
 மழை பெய்த மாலை ஒன்றுடன்
 சேர்த்து விழுங்கினேன்

இதில், விழுங்கியது யார்? என்ற கேள்விக்குப் பதில் இக்கவிதையில் எங்கே தேடினாலும் இல்லை. ஒரு கோணத்தில் பார்த்தால் ‘காலம்’ தன் கூற்றாகச் சொல்வது போல் இக்கவிதை அமைந்துள்ளதா? என் யூகத்திற்கு ஆதாரம் கவிதையின் முத்தாய்ப்பு.

 எங்கு
 எப்போது
 என்பதுதான்
 தெரியவில்லை

இதுபோல் இருண்மையின் கோரப் பிடியில் சிக்கி யூகங்களுக்கு வழிவகுக்கும் கவிதை எக்காலத்தில் புரியும்?

 ‘பாழில்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை. இக்கவிதையின் தலைப்பின் கீழ் ஒரு அடைப்புக் குறி, அதன் கீழ் மூன்று புள்ளிகள் உள்ளன. இதற்கு என்ன பொருள்? கவிதையின் முடிவில் மூன்று புள்ளிகள். அதன் கீழ் அடைப்புக் குறி ஆனந்த் சார்! புதுமைக்காக இப்படியுமா சிந்திப்பது?

 இத் தொகுப்பில் ‘சந்திப்பு’, ‘சொல்வதும் நிழலும்’, ‘நம் கதை’ போன்ற நீள் கவிதைகளும் உள்ளன. அவை சிக்கலான வெளிப்பாடு கொண்டவை என்பதால் அவற்றைப் படிக்கச் சலிப்பு தோன்றுகிறது. ‘சொல்வதும் நிழலும்’ கவிதையில் ‘சொல்’ என்னும் சொல் பலப்பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இடையிடையே தத்துவம் அடிநாதமாய் ஊடாட ஒரு சுய தர்க்கப் பின்னல் அமைந்துள்ளது.

 சற்றைக்கு முன்…

 சற்றைக்கு முன்
 ஜன்னல் சட்டமிட்ட வானில்
 பறந்து கொண்டிருந்த
 பறவை
 எங்கே?
 அது
 சற்றைக்கு முன்
 பறந்து கொண்டிருக்கிறது

 இது தீவிர இலக்கிய வாசகர்களை அதிகம் கவர்ந்த கவிதை. காரணம் கடைசி வரி. இறந்த காலம் நிகழ் காலமாக காட்டப்பட்டுள்ளது. இந்தப் ‘பிழை’தான் அபரிமிதமான கவித்துவத்தை கவிதைக்குள் பாய்ச்சி, கவிதையைக் காலம் வெல்லச் செய்திருக்கிறது.

 நிறைவாக இருண்மைக் கவிதைகள் தற்கால புதுக்கவிதையின் சரிவுக்கு பெருங்காரணமாக உள்ளன என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. அடுத்த பதிப்பிலாவது கவிதைகள் புரிய வேண்டி, சில குறிப்புகள் தரப்படலாம். ஓவ்வொரு கவிதைக்கும் மோகனரங்கனைத் தேடிப் போக முடியாது. புத்தகத்தின் இறுதியில் ஆனந்த் எழுதியுள்ள பின்னுரையில் நடை கடினமாகத்தான் உள்ளது. இவர் தீவிர இலக்கிய வாசகர்களுக்காக எழுதுகிறவர் என்று புரிகிறது. அவரவர் சுதந்திரம் அவரவர்க்கு என்று திருப்தி அடைய வேண்டியதுதான்!

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It