உழைப்பாளர் வர்க்கத்தின் தலைவர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பி.டி.ரணதிவே, மற்றும் நாவலர் நெடுஞ்செழியன், தமிழறிஞர் மு.வரதராசனார், எழுத்தாளர் அகிலன் ஆகியோரின் வாழ்த்துரைகளோடு 1970 மே மாதம் துவக்கப்பட்ட செம்மலர் ஏராளமான இலக்கியச் சாதனைகள் நிகழ்த்திய மகிழ்ச்சி நிறைந்த பெருமிதத்தோடு இன்று 41-வது ஆண்டில் உற்சாக நடைபோடுகிறது.

உலகத் தொழிலாளர்களின் இலட்சிய ஒருமைப்பாட்டுத் தினமாகிய மேதினத்தில் தோன்றிய செம்மலர், அதன் ஆதர்சத்தோடு தன்னை ஒரு முற்போக்கு இலக்கிய இதழாக அறிவித்துக்கொண்டது. இந்திய சுதந்திரப்போராட்டக் காலத்தில் தேச சுதந்திரத்திற்காகவும் அல்லல்படும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் சேவையாற்றிய பத்திரிகைகள் பல உண்டு. அவற்றின் அடியொற்றி, இன்று சுதந்திர இந்தியாவில், பெற்ற சுதந்திரத்தையும் தேசத்தின் இறையாண்மை யையும் பாதுகாக்கவும் உழைப்புச் சுரண்டலும் அடிமைத்தனமும், வறுமையும் தீண்டாமை ஒடுக்குமுறையும் அகன்று மக்கள் புதுவாழ்வு காணவும், புதிய நல்ல பண்பாடு மலரவும் தன் எழுத்தால் சேவையாற்றி வருகிறது செம்மலர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, உலக சமாதானம், அடிமைப்பட்ட நாடுகளின் எழுச்சிக்கும், சோசலிச தேசங்களின் மேன்மைகளுக்கும் ஆதரவு-எனும் உலகளாவிய பார்வையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டது செம்மலர். இத்தகைய பார்வையோடுதான் இந்தியாவிலும் உலகிலும் முற்போக்கு ஏடுகளும் முற்போக்கு எழுத்தாளர்களும் எழுத்துப் பணி யாற்றினார்கள். நடுநிலை, சார்பில்லாமை என்பதெல்லாம் எந்த ஏட்டுக்கும் இல்லை. அதுபோலவே செம்மலருக்கும். உழைக்கும் மக்கள் நலன், தேசநலன் முதல் சோசலிச இலட்சியம் வரை செம்மலருக்குச் சார்பு உண்டு.

பரபரப்பு, பாலியல் கவர்ச்சி, மர்மம் என்று வாசக மனங்களை மலினப்படுத்தி காசு பண்ணும் வணிகம் ஒன்றையே குறியாகக் கொண்டு நடத்தப்படும் பல தமிழ் ஏடுகளுக்கிடையே- இவற்றுக் கெல்லாம் மாறுபட்ட தரத்தில்- ஏற்படும் சிரமங்களையும் எதிர்கொண்டு வெளிவருகிறது செம்மலர். மகிழ்ச்சிகரமான இந்த 41-வது ஆண்டில் மேதின வாழ்த்துக் களோடு, எழுத்தாளர்கள், வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் ஆகிய அன்பர்கள் அனைவரிடமும் செம்மலர் கோருவது இன்னும் கூடுதலான- மேலும் மேலும் வளர்முகமான உங்களின் நல்லாதரவைத்தான்.

 

Pin It