Human faces அவன் ஆபீஸ் போயிருந்தபோதே மனோ வீட்டிற்கு வந்து கல்யாண ஆல்பத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தான். அவன் வீட்டிற்குள் நுழையும்போதே, ‘‘சித்தப்பா உன் போட்டோ’’ என்று அம்முக்குட்டிதான் கையில் ஆல்பத்துடன் ஓடிவந்தாள். பேண்டைக் கழற்றிப் போட்டுவிட்டு, வெறும் லுங்கியுடன் திண்ணையில் உட்கார்ந்து ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டினான். அந்த புகைப்படங்கள் வேறு ஒரு குதூகலமான உலகத்துக்கு அவனைக் கொண்டுபோயின. அந்த ஆல்பம் முழுவதும் சந்தோஷமும் பெருமையும் நிரம்பி வழிந்தது. கைகளால் அதன் முதுகில் தடவிக்கொடுத்தான்.

சில படங்களின் நேர்த்தியில் அவன் தன்னைக் கரைத்துக் கொண்டபோதும், அருகில் அவளும் உட்கார்ந்திருக்க மனசு விரும்பி ஆல்பத்தை மடிமீது வைத்துக் கொண்டே அவளைத் தேடினான். அவள் அடுப்படியில் வேலையாயிருந்ததால், அவளைக் கூப்பிட தைரியம் வரவில்லை.

ஒருவேளை இந்த ஆல்பம் ஒரு வாரத்திற்கு முன்பே வந்திருந்தால், ‘‘என்ன பெரிய வேலை... அம்மாவைச் செய்ய சொல்லிட்டு வா’’ என்று சத்தம் போட்டு அழைத்திருப்பான். கடந்து போன ஒரு வாரம் அவனை, அவளை, வீட்டை எல்லோரையும் மௌனமாக்கிவிட்டது.

இந்தக் கல்யாணப் பேச்சை ஆரம்பித்து வைத்ததே அம்மாதான். அவன் ஒவ்வொரு முறையும் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனபோது, அம்மா அவனைச் சம்மதிக்க வைக்கச் செய்த முயற்சிகளையெல்லாம் நினைவுபடுத்திப் பார்த்தான். நீண்டநாள் யோசனைக்குப் பிறகு அவன் சம்மதித்த போது இந்த உலகமே தன் கைக்கு வந்துவிட்டதைப்போல மகிழ்ந்த அம்மா அவள்... கல்யாணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பேச்சு ஆரம்பித்து விட்டது. தெருவில் பாயை விரித்துப் போட்டு இரவில் வெகுநேரம்வரை அம்மா தெருப்பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாள். இப்போதிருந்தே பேசுவதற்கு என்ன இருக்கிறது இந்தக் கல்யாணத்தில் என்று தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் அம்மாவுக்குச் சொல்லவும், அவர்களுக்குக் கேட்கவும் நிறைய இருந்தது.

கல்யாணத்திற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பே வீடு தன் இயல்பிலிருந்து விடுபட்டு சுறுசுறுப்பாய் இயங்கியது. வழக்கமான தன் வீட்டு மௌனம் கலைந்து, பேச்சும் சிரிப்புமாய் மாறிவிட்டது. இதைத்தான் அம்மா கல்யாணக்களை என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறாள்.

அப்பா தன் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்துப் பேசி, பந்தலுக்கும், மைக்செட்டிற்கும் ரொம்ப சீப்பாக பேசி முடித்துவிட்டு வந்து அன்று இரவு அவனிடமும், அம்மாவிடமும் அந்த நண்பருக்கும் தனக்குமான நட்பு வந்த கதை, அவரின் நல்ல குணம், அவர் மனைவி, பிள்ளைகள் என்று ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவனுக்கென்று அந்தக் கல்யாணத்தில் ஒதுக்கப்பட்ட வேலை இருபதாயிரம் ரூபாயைக் கடன் வாங்குவது மட்டும்தான். மற்ற எல்லா வேலைகளையும் அப்பா, அம்மா, சேது அண்ணன், திண்டிவனத்தில் இருந்து இதற்காகவே தன் மகளோடு பத்து நாட்களுக்கு முன்னாலேயே வந்துவிட்ட சுசீலா சித்தி, எல்லோருமாய்ப் பகிர்ந்து கொண்டார்கள். இதுவரை இவன் பார்த்தேயிராத சிலர் எல்லாம் வீட்டிற்கு வந்து கொண்டும், போய்க் கொண்டுமிருந்தார்கள்.

ஒவ்வொருவர் வருகைக்கும் அம்மாதான் ஓடிவந்து, ‘‘இவரு நம்ப சுசீலா சித்தியோட மூத்த மருமகன்டா, விழுப்புரம் பெரியார் டெப்போவுல வேலை’’ ‘‘இவ எங்க அண்ணன் மருமகளோட மூத்தவ’’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். அம்மாவை இப்படிப்பட்ட அபூர்வமான சந்தோஷங்களில் எப்போதாவது தான் பார்க்கமுடியும். சேது அண்ணன் கல்யாணத்தில், அப்புறம் அம்முக்குட்டி பிறந்தபோது, அதற்கப்புறம் இப்போதுதான்.

வீட்டுக்கு வந்த ஒவ்வொருவரிடத்திலும் தனக்கு என்ன வேலை? எங்கே வேலை? மாசத்துக்கு எத்தனை நாள் லீவு, இந்த வேலை எனக்கு எப்படிக் கிடைத்தது? மேலதிகாரியிடம் முதுகுத்தண்டு வளைய நடந்து கொள்கிறேனா? என்றெல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. இந்த நாட்களில் அவனின் வழக்கமான உலகம் நைந்து போய் இருந்தது. நண்பர்கள், இலக்கியம், ஓவியம் என்று எல்லாமும் இல்லாத உலகத்தில் அவன் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதற்கான ஒத்திகையைப் போலிருந்த இதையே சகித்துக்கொள்ள முடியாமல் நெளிந்தான்.

ஆனாலும் இந்த மாதிரியான நேரங்களில் அவன் மீது விழுந்த மற்றவர்களின் பார்வை வழக்கமான பார்வையாய் இல்லை. அது பெருமைமிக்கதாக, ஒருவித அன்பும் பிரியமும் நிறைந்ததாக மாறியிருப்பதை நினைத்து அவனே உள்ளுக்குள் சந்தோஷித்தான்.

கல்யாணத்திற்கு முந்தின நாள் காலையிலிருந்தே போட்டோ எடுப்பது ஆரம்பித்துவிட்டது. இந்த நெரிசல், அவர்கள் நிமிஷத்திற்கு நிமிஷம் மாற்றி மாற்றிப் பேசிய பேச்சுக்கள், எதிலும் கொஞ்சமும் எரிச்சலடையாமல் மனோ அவர்களைத் தன் கேமராவுக்குள் பதிவு செய்துகொண்டிருந்தான். ஒவ்வொரு படத்தை எடுத்து முடிக்கும்போதும் ஒருவித திருப்தி அவன் முகத்தில் படர்வதையும், இலேசான புன்னகையால் அதை அவனே அங்கீகரிப்பதையும், அத்தனை சலசலப்புக்கிடையிலும் இவன் கவனித்த நிமிஷங்கள் இப்போது ஞாபகத்திற்கு வந்தன.

கல்யாணத்துக்கு முந்தைய இரவு, கடைசி பஸ்ஸில் இறங்கி ஆட்டோ பிடித்து வந்த லலிதா அக்காவும், அவள் குழந்தைகளும் தான் போட்டோ எடுத்துக்கொள்வதில் அதிக ஆர்வமாயிருந்தார்கள். பவுடரை முகமெல்லாம் அப்பிக் கொண்டு, ‘‘எங்க ப்ரீத்தியை மட்டும் தனியாக ஒன்னு எடுங்க’’, “ரமேஷையும் ப்ரீத்தியையும் சேர்த்து...”, ‘‘டேய் எங்க குடும்பத்தோட நீயும் வந்து நில்லுடா’’ என்று அவனை வேறு இழுத்து இழுத்து நிற்க வைத்துக்கொண்டிருந்தாள். அக்காவின் கல்யாணத்திற்கு முன் எடுக்கப்பட்டு வீடு முழுவதும் நிறைந்திருக்கும் போட்டோக்களை நினைவுபடுத்திப் பார்த்தான். இந்த லலிதா அக்காவுக்குத்தான் போட்டோ எடுத்துக்கொள்வதில் எத்தனை பிரியம்?

வந்த ஆல்பத்தில் ஒவ்வொரு படமாக நுட்பமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்தப் படம், அதில் தெறிக்கிற சந்தோஷம், அதன் பின்னணி, என்று ஒவ்வொன்றாய் ரசிக்க, கொஞ்ச நாட்களாய் வீட்டில் படர்ந்திருந்த மௌனம், நேரம் ஒதுக்கித் தந்தது. இந்த மௌனத்திற்கும் இந்தப் புகைப்படங்களுக்குமான தொடர்பு மனதை என்னவோ செய்தன. எவ்வளவு கஷ்டப்பட்டு மறக்க முயன்றும், கல்யாணத்தன்று நடந்த நிகழ்ச்சிகள் வரிசை வரிசையாய் வந்து மனதில் நின்றுகொண்டன.

‘‘யாருக்குத்தாண்டா கஷ்டம் இல்லை. கூடப் பொறந்தவளுக்கு ஒரு பட்டுப்பொடவை எடுக்க முடியல? அப்புறம் எதுக்குடா இவ்ளோ பெரிசா கல்யாணம்? எங்கியாவது ரிஜிஸ்டர் ஆபீசுல போய் பண்ணிக்க வேண்டியதுதானே’’ என்று தன் குழந்தைகளை இழுத்துக் கொண்டு அந்த ராத்திரியில் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்த லலிதா அக்காவின் முகத்தையும், இதற்காகவே காத்திருந்தது போல அவசர அவசரமாய் ஒரு ஒயர்க்கூடையை எடுத்துக்கொண்டு நடந்த மாமாவின் முகத்தையும் இந்த ஆல்பத்தில் தேடிக்கொண்டிருந்தான்.

‘‘நாங்க ஒண்ணும் சோத்துக்கு வக்கத்துப் போயிடலம்மா, கூடப்பொறந்தவளாச்சேன்னு பத்து நாளக்கி முன்னாலேயே வந்தேம்பாரு. என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்...’’ என்ற சுசீலா சித்தியின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.

‘‘என்னை விடும்மா, அவ என்ன நெனைப்பா, இப்படி ஒரு பொடவையை எடுத்திருக்கானே, கூடப் பொறந்தவனுக்குச் செய்யற மரியாதையா இது? கொஞ்சம் எளச்சிட்டா ஒலகமே இப்படித் தான்மா’’ என்று பேசிய சேது அண்ணன்தான் இந்த புகைப்படங்களில் உலகத்துச் சந்தோஷங்களையெல்லாம் முகத்தில் ஒழுகவிட்டுக்கொண்டு நிற்கிறான்.

பழைய காட்சிகளில் மனசு அறுந்துபோனது. கல்யாணம் என்பது இத்தனை கசப்பானதாகவா இருக்கும்? அவனுடைய கவிதைகளின் உலகத்தைப் போல, ஓவியங்களின் உலகத்தைப் போல சந்தோஷமானதில்லையா? இது புதுசு. இந்த அடிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கன்னத்தைத் திருப்பிக் காட்டக் காட்ட, பல திசைகளிலிருந்தும் அடி விழுகிறது.

‘‘இன்னக்கி ஷாப்பிங் போறோம் பொறப்படு’’. புறப்பட்டார்கள். அவள் மறுக்க மறுக்க அவளின் குளிர்ச்சியான நீள நீளமான விரல்களைப் பிடித்துக்கொண்டே நடந்தான். கர்வமாயிருந்தது. அந்த டெய்லர் கடையில் நின்று, இப்படி கைப்பிடித்து நடந்தவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்ட நாட்கள் நினைவுக்கு வந்தன. அவர்கள் அப்போது இவனை என்ன நினைத்திருப்பார்கள்? இவனுக்கெல்லாம் வேலை கெடைச்சி ... செட்டில் ஆகி அப்புறம் கல்யாணம் முடிச்சி ...

இதோ என் மனைவியின் விரல்களில் நான். அன்று இரவு வீட்டிற்குத் திரும்பும்வரை உற்சாகம் ஒட்டிக்கிடந்தது. அவள் அந்தப் புடவையை அம்மாவிடம் காட்டாமலிருந்திருந்தால் அது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீடித்திருக்குமோ?

‘‘எப்படி அத்தை இருக்கு இந்தப் பொடவை? அவரு மொத மொத எனக்காக வாங்கித் தந்தது. வெலைதான் கொஞ்சம் ஜாஸ்தி. நானூத்தி அம்பது ... ஜாக்கட்டோட ...’’

‘‘பொடவை நகைல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல இருபத்திரண்டாயிரம் கடனை அடைக்கிற வழியப்பாருங்க ரெண்டுபேரும். அவன்தான் எடுத்தான்னா நீ சொல்லத் தேவலை?’’ என்கிற வார்த்தைகளைக் கொட்டும்போது இருந்த அம்மாவின் முகம் இந்த ஆல்பத்தில் ஒரு இடத்திலும் பதிவாகவில்லை.

இப்போது அவனுக்குள் ஒரு வித்தியாசமான ஆசை ஊர்ந்தது. அப்பா, அம்மா, சேது அண்ணன், அண்ணி, சித்தி, லலிதா அக்கா என்று எல்லோரையும் இப்போது மறுபடியும் படங்கள் எடுத்து ஒரு ஆல்பம் போட்டுப் பார்க்க வேண்டும். இரண்டாவது ஆல்பத்திற்கான முகங்களின் விகாரங்களை நினைத்துப் பார்க்க முடியாமல் ஆல்பத்தை மூடினான்.

‘‘சித்தப்பா எனக்கெங்க காட்பரிஸ் சாக்லெட்?’’ என்று சிரிப்பொழுக எதிரில் அம்முக்குட்டி நின்றிருந்தாள். கல்யாண ஆல்பத்திலும் அம்முக்குட்டியின் முகம் மட்டும் இப்படியே தான் இருந்தது.

- பவா செல்லதுரை
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It