காலப் போக்கில் நிரந்தர வேலைகள் எந்த அலுவலகத்திலும் இருக்கப் போவதில்லை என்பதை கேள்விப்படுவது, உண்மையாகி விடும்போல் இருக்கிறது. உலக வங்கியின் விருப்பம் இது என்று சொல்லப்படுகிறது. யார் விருப்பம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும், உலக வங்கியின் விருப்பம் மட்டும் நிச்சயம் நிறைவேறிக்கொண்டு தான் இருக்கிறது. சில நேரங்களில் அதன் விருப்பம் சற்று தாமதமாக்கப் படலாம். மற்றபடி தடுக்கப்பட்டதாய் ஏதும் தட்டுப்படவில்லை. இதையெல்லாம் அலுவலகத்தில் வேலை பார்க்கின்ற அடித்தட்டு ஊழியர்கள் உணர்ந்து கொண்டதாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இதோடு மட்டுமல்லாமல் வேலை செய்யும் அலுவலகத்திலுள்ள பொருள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஊழியர்களிடம் குறைந்து விட்டதைப் போல் தோன்றுகிறது. நான் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. 'அதிகாரிகள் அப்படித்தான் சொல்வார்கள்' என்று என் காது படவே பேசிக்கொள்வது சற்று வருத்தத்தைத்தான் வரவழைக்கிறது. யாருக்கும் பொறுப்பு இருப்பதாய் எனக்குப் படவில்லை. அலுவலகத்திலுள்ள பொருள்கள் பாதுகாப்பில்லாமல் கிடப்பதாகவே தோன்றுகிறது.

சென்ற மாதம் மட்டும் இரண்டு முறை அலுவலக சொத்துக்கள் களவு போய்விட்டது. ஒவ்வொரு முறையும் புகார் கொடுக்க காவல் நிலையம் போகும் போதும் மிகவும் கூச்சமாய் இருக்கிறது. அதற்கேற்றாற்போல் காவலர்கள் என்னைப் பார்க்கும் பார்வையும், கேட்கும் கேள்விகளும் சற்று வேதனையையும் சலிப்பையும் தருகிறது. அலுவலக விதிப்படி புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கையைப் பெறவேண்டும். முதல் புகாரைத் தந்தபோது நான் பட்ட வேதனைகள் சொல்லி மாலாது. எதிர் பாராதவிதமாக முதல் திருட்டு அந்த மாதம் இருபத்தொன்பதாம் தேதி நடந்து விட்டது. நான் புகாரைக் கொடுத்து முதல் தகவலறிக்கையை கேட்டபோது,

"சார், இது மாதக் கடைசி. இப்பொழுது, நீங்கள் கேட்டபடி இதைத் தந்தால் எங்கள் கணக்கில் ஒதைக்கும். நீங்க ஒன்னாம் தெதிக்கு மேல் வாங்க முதல் தகவல் அறிக்கையை வாங்கிட்டு போகலாம்." என்றார் உதவி ஆய்வாளர். நானும் திரும்பிவிட்டேன்.

சொன்னபடி ஒன்றாம் தேதி சென்றேன். காவலர் ஒருவர் மட்டும் காவல் நிலையத்தில் இருந்தார். விசாரித்தபோது "அய்யா கோர்ட்டுக்குச் சென்றுள்ளதால் இன்று பார்க்க இயலாது." என்று அங்கு இருந்தவர் தெரிவித்தார். நானும் மறு பேச்சுப் பேசாமல் அலுவலகத்திற்கு திரும்பினேன்.

அடுத்த நாள் காவல் நிலையம் சென்றேன். மாவட்டத் தலைநகருக்கு முதல்வர் வருவதால் பந்தொபஸ்த்துக்காக அய்யா சென்றுள்ளதாய்ச் செய்தி சொல்லப்பட்டது. அதற்கு அடுத்த நாள் வரச் சொன்னார்கள். 'குயர் கணக்கில் காகிதமும், கார்பன் தாளும் கேட்காமல் தவணைதானே சொல்கிறார்கள்.
பரவாயில்லை' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு திரும்பினேன். ஒரு வாரம் அலைந்துதான் முதல் தகவல் அறிக்கையை பெற என்னால் முடிந்தது.

இரண்டாம் புகாரை கொடுக்க நான் சென்றபோது என்னை அவர்கள் நடத்திய விதமே தனிதான். 'பேசாமல் களவு போன பொருளை வாங்கி வைத்துவிட்டு வெளியே தெறியாமல் அமுக்கி விடாலாமா' என்று கூட நான் நினைத்ததுண்டு. அவ்வளவு கேள்விகள் கேட்டார்கள்.

இப்பொழுதெல்லம் நான் தினமும் காலையில் தவறாமல் காவல் நிலையம் சென்றுவிட்டுத்தான் அலுவலகம் போகிறேன். இந்த புகாருக்கு எப்போது முதல் தகவல் அறிக்கை தருவார்களோ? யாருக்குத் தெரியும்! தற்சமயம், கூச்சம் கொஞ்சம் எனக்குக் குறைந்திருக்கிறது. மற்றபடி மாற்றம் ஏதும் இல்லை.

இன்று காவல் நிலையம் சென்றபோது, சற்று நேரம் உட்காரச் சொன்னார்கள். வேறு வழியின்றி காத்திருந்தேன். நேரத்தைக் கழிக்க வேண்டி அங்கு நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சற்றேறக்குறைய முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் அங்கே வந்தாள். இடுப்பில் ஒரு நைந்துபோன பெண் குழந்தை ஒட்டிக்கொண்டிருந்தது. அதற்கு ஒரு வயது இருக்கலாம். தயங்கித் தயங்கி அவள் வருவதைப் பார்த்தால், அவள் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வருகிறாள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. வந்தவள் நாங்கள் இருந்த அறைக்கு சற்று தூரத்தில் காவல் துணை ஆய்வாளர் பார்வையில் படும் வண்ணம் நின்று கொண்டிருந்தாள். எதேச்சையாய் திரும்பிய துணை ஆய்வாளர் அவளைப் பார்த்து அருகிலழைத்தார். கூனிக் குறுகி வந்தவளிடம் அதட்டிக் கேட்டார்.

அதட்டும் கலையை, இவர்களுக்கு தனியாகச் சொல்லிக் கொடுப்பார்களோ என்னவோ! அந்த அதட்டில் உண்மை கூட ஒளிந்து கொண்டு பின் உளரலாய் வெளியே வரும். அப்படி ஒரு தொணி.

"என்னம்மா வேணும்?"

"பாஸ்போர்ட் தொலைஞ்சு போச்சுங்கய்யா."

"என்னது பாஸ்போர்ட்டா? யார் பாஸ்போர்ட்?"

"எங்க வீட்டுக்காரர் பாஸ்போர்ட்ங்கய்யா"

"எப்படிம்மா தொலஞ்சுது?"

"எங்க வீட்டுக்காரர் கும்பகோணத்திலே இருந்து பட்டுக்கோட்டைக்கி பஸ்ல வந்தப்போ தொலைஞ்சு போச்சுங்கய்யா."

"இந்தக் கதையெல்லம் விடாதே. காசெல்லம் பத்திரமா இருக்கும், பாஸ்போர்ட் மட்டும் தொலைஞ்சு போகுமா?"

".................." கண்களிலிருந்து சில துளி கண்ணீர் மட்டும் அவளிடம் பதிலாய்.

"எங்கே வீட்டுக்காரனேக் காணும்?"

"நேத்து ரெண்டு பேரும் வந்தோமுங்கய்யா. அய்யா நீங்க வெளியூர் பொயிட்டதாச் சொன்னாங்க. திரும்பி பொயிட்டோமுங்க. இன்னக்கி அவருக்கு கய்ச்சலுங்கய்யா. வீட்டுலே படுத்துகெடக்குறாங்கய்யா."

"யாரு கிட்டே கதை விடுறே? பஸ்ஸிலே வந்தா பாஸ்போர்ட் பறந்தா போயிடும்." என்று அதட்டினார் துணை ஆய்வாளர்.

அவ்வளவுதான். கேவி அழ ஆரம்பித்து விட்டாள் அவள்.

"அய்யா நான் சொல்லுறது உண்மைங்கய்யா. எங்க வீட்டுக்காரர் பஸ்லே ஏறி கொஞ்ச தூரம் போனாலே தூங்கிடுவாருங்கய்யா. அப்படி தூங்கினப்போ எங்கினயோ விழுதுட்டுதுங்க. அய்யா நீங்கதான் இந்த ஏழைகி ஒதவனும்." கண்ணீர் அவளுக்குப் பெருகியது.

"பாஸ்போர்ட்டை ஏஜண்ட் கிட்டே வித்துபுட்டு வந்து நாடகமா ஆடுறே?"

"இல்லைங்கய்யா. உண்மையா தொலைஞ்சு போச்சுங்கய்யா." என்று கேவினாள்.

"ஒங்க வீட்டுக்காரனுக்கு என்ன வேலை?"

"கூலிவேலைங்கய்யா."

"கூலி வேலைக்கு எதுக்கு பாஸ்போர்ட்? போய் வேலயே ஒழுங்கா பாருங்க."

"அய்யா...அய்யா, அப்படி சொல்லாதீங்கய்யா. எங்க நாத்துனா வீட்டுக்காரர் வெளி நாட்டுலே இருந்து விசாவை ஒரு மாசத்துலே அனுப்புறேன்னு போனு பேசினாங்கய்யா. நீங்க ஒதவி பண்ணினா வேறே பாஸ்போர்ட் எடுக்காலாமுன்னு ஏஜண்ட் சொல்லுராருங்கய்யா." என்று கேவினாள்.

"நீ என்ன செஞ்சுகிட்டிருக்கிறே?"

"நானும் கூலி வேலேதான் பார்க்குறேங்கய்யா."

"வெளி நாட்டுக்குப் போறதுக்கு கூலி வேலே செஞ்சே பணம் கட்டிபுடுவியா."

"முடியாதுங்கய்யா. அங்கே போயி சம்பாரிச்சு பணத்தே கட்டிகலாமுன்னு எங்க நாத்துனா வீட்டுக்காரர் சொல்லுராருங்கய்யா."

அவளையும், அவள் சொல்வதையும் பார்த்தால் உண்மையைப் போலத்தான் எனக்குத் தோன்றியது.

துணை ஆய்வாளர் என்னிடம் திரும்பி, "பாஸ்போர்ட்டே எஜண்ட்கிடே வித்துபுடுவாங்க சார். அவனும் அதிலே இருக்குற போட்டோவை புடுங்கிபுட்டு வேறயே ஒட்டி சிங்கப்பூருக்குக் கொண்டு போயி இன்னொருத்தனுக்கு வித்துபுடுவான். இங்கே வந்து பாஸ்போர்ட்டை காணும் கண்டுபுடிச்சு குடுங்கன்னு புகார் கொடுத்துகிட்டு நிப்பாங்க. இதெயெல்லாம் எங்கே போய் கண்டு புடிக்கிறது? இவங்களுக்கெல்லாம் இதுதான் வேலை." என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த பெண்ணையும் அவள் அணிந்துள்ள ஆடைகளையும் பார்த்தால் அவளிடமிருந்து வருவது பொய்யாக இருக்காது என்று மட்டும் தோன்றுகிறது.

நான் நினைப்பதை வெளியே சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் எனக்கு முதல் தகவல் அறிக்கை இன்று கிடைக்குமா? பதிலேதும் சொல்லாமல் பல்லை மட்டும் இளித்தேன் பரிதாபமாக.

இந்த நேரத்தில் ஒரு சொகுசுக் கார் காவல் நிலையத்திற்கு முன் வந்து நின்றது. காரிலிருந்து பெரியண்ணன் இறங்கினார். அவருடைய சொந்தப் பெயர் இது இல்லை. ஆனால் இந்த நகரத்தில் இவரை இப்படித்தான் எல்லோரும் அழைக்கிறார்கள். 'எந்தப் பிரச்சனையாயிருந்தாலும் இவருகிட்டே கொண்டு போனால், தீர்த்து விட்டுருவார்' என்று சொல்லிக் கொள்கிறார்கள். அரசியலிலும் நல்ல செல்வாக்கு இவருக்குண்டு; அடியாட்களும் இவரிடம் நிறைய உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

காவல் துறை ஆய்வாளர் அந்த காரைப் பார்த்ததும் தன்னுடைய இருக்கயை விட்டு எழுந்தார். பெரியண்ணனை நோக்கி நடந்தார். பெரியண்ணன் பெரிய கும்பிடு போட்டார். காவல்த் துறை ஆய்வாளர் அவர்களும் எல்லா பல்லையும் காட்டி கும்பிடு போட்டார். இருவரும் காருக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டு ஏதோ பேசிக்கொண்டார்கள். சுமார் பத்து நிமிடம் இது நடந்தது. துணை ஆய்வாளர் அங்கிருந்தே எனக்குச் சொன்னார், "சார், நாளைக்கி வாங்க பாத்துகிடலாம்." காரிலேறி பெரியண்ணனோடு பறந்துவிட்டார்.

'இன்னும் எத்தனை நாள் நான் அலைய வேண்டுமோ' என்று நினைத்துக் கொண்டு, அந்தப் பெண்ணைப் பார்த்தேன். மிகவும் பாவமாக இருந்தாள். பத்துப் பதினைந்து தடவை அலந்து விட்டதாய் அவள் என்னிடம் சொன்னாள். பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில் நான் இருப்பதாய் உணர்ந்து வருத்தப்பட்டேன். 'ஒரு அலுவலகத்தில் அதிகாரியாய் உள்ள எனக்கே இந்த நிலை. இவள் எத்தனை நாள் அலையப் போகிறாளோ, என்னென்ன பாடுபடப் போகிராளோ?!' என்று நினைத்துக் கொண்டு வெளியேறிய பொழுது, எங்கோ "காவலர் உங்கள் நண்பன்" என்று எழுதி வைத்திருந்த வாசகம் என் ஞாபகத்திற்கு வந்தது. வாசகத்திலுள்ள 'உங்கள்' என்ற சொல்லில் அந்த அபலைப் பெண்ணும் நானும் 'எப்போது இடம் பிடிக்கப் போகிறோமோ!' என்ற ஆதங்கத்தோடு நடையைக் கட்டினேன்.

- பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It