"ரித்திகா உன்ன கோதண்டராமன் சார் கூப்படறாரு. எதோ டவுட் கேட்டிருந்தையாமே... ."

தீவிரமாக புத்தகத்தை ப் பார்த்துக் கொண்டிருந்த ரித்திகா சற்று கவனம் சிதறாமல் காணப்பட்டாள். வகுப்பறையின் ஜன்னலில் வரும் இளம் காற்று அவள் நெற்றியில் விழுந்து கொண்ட சிகை ஒன்றை சலனப்படுத்தியதில் புத்தகத்தில் ஆழ் தியானத்தில் இருந்தவள் மீண்டு கொண்டாள். மீண்டுகொண்டவள் காற்றின் திசைக்கொண்டு இசைந்துகொண்டிருந்த அழகான மரம் ஒன்றை ஜன்னலுக்கு வெளியில் தன் கண்களால் அழகாக்கினாள். மரத்தின் அசைவு அவள் மனதில் பல கவிதை வரிகளை உலுக்கியது. புத்தகத்தை மூடிக் கொண்டவள் ஒரு காகிதத்தை திறந்துகொண்டாள்.

மனதில் வரைந்த வரிகளை தன் பேனாவால் உயிர் கொடுத்தாள்.

"என்னமா…… ரித்திகா வீட்டுக்கு இன்னும் போகலையா... ... ."

நாற்பத்தைந்து வயதான கோதண்டராமன் தன் திறமையால் பள்ளி நிர்வாகத்திடம் அதிக செல்வாக்கை பெற்றவர். இவர் மேல் விழும் எந்த புகாரும் பொய்த்துப் போகும்.

"சார்... .அதுவந்து... .."

"ஒன்னும் இல்லம்மா…. நாளைக்கு என்னோடபிராக்டிக்கல் பரிட்சை.. எல்லாமே படிச்சு முடிச்சிட்டையா... சந்தேகம் ஏதும் இல்லையா.. நான் அப்போவே ரம்யாகிட்ட சொல்லி விட்டனே... "

"இல்ல சார் எனக்கு சந்தேகம் எல்லாம் நீங்க பாடம் நடத்தும்போதே போயிருச்சு."

"ஒன்னும் பிரச்சனை இல்லை இருந்தா எப்போ வேணுனாலும் என்ன பார்க்கலாம். "

"ஓகே சார் நன்றி.."

"ஒலம்புஸ் பக்கம்தான் போறேன்…….. வரையா... கூட்டிட்டுப் போறேன் "

"இல்ல சார், நான் பஸ்சுல போறேன் "

பேசிக் கொண்டே விடை பெற்று கொண்ட ரித்திகா, பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தாள். மேகம் நீர்க்குடங்களை சுமந்த வண்ணம் பகலை இருட்டிக்கொண்டு வந்தன. ஒன்றாக திரண்டு கார்மேகங்கள் அவள் கண்களை சூழ்ந்து கொண்டதில் சற்று மெய்மறந்து போனாள்.

விழுந்து கொண்ட ஒரு துளி, அவள் தவத்தை கலைத்தது.

சிறுதுளி பெருந்துளியானது... . மழை பேய் மழையானது.

பேருந்தில் கூட்டம் பிதுங்கி வழிந்ததால் நிற்காமல் சென்றது. நிறுத்தத்தில் நின்று கொண்டவர்கள் டாக்ஸி மற்றும் ஆட்டோ துணைகொண்டு மழையில் இருந்து தப்பிக்கப் பார்த்தார்கள்.

ரித்திகாவின் இந்த பன்னிரெண்டாம் வகுப்பு, வாழ்க்கையின் பல நிலைகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது. அப்பா நடத்தும் தேநீர் கடையை பெரியதொரு அடுமனையாக வேண்டும், ஊசி கொண்டு அன்றாட கிழிஞ்சலை தைக்கும் அம்மாவின் கைகளில் தையல் இயந்திரம்,தம்பிக்கு சைக்கிள் என பட்டியல்கள் நீண்டுகொள்கிறது. இதற்கிடையில் படிப்பின் இடைவெளியில் கவர்ந்து கொள்ளும்,இந்த இயற்கையுடன் தன்னை ஒரு கவிஞராகி கொள்வது வாழ்கின்ற நிறைவை ஏற்படுத்திவிட்டுப் போகும்.

பெண் வேறு என்ன செய்ய முடியும் குரல் உயர்த்தினாள் குட்டும், தலை தாழ்த்தினால் இயலாமை கிரீடம் சூடும் சமூகத்திற்கிடையில்.

மழை நின்ற பாடில்லை, நேரம் வேகமாக ஓடிக் கொண்டது. மழை, தூறலுடன் சற்று ஓய்வெடுத்துக் கொண்டது. பேருந்து ஒன்றும் வருவதாக தெரியவில்லை. வீட்டில் வேறு தேடிக் கொண்டிருப்பார்கள்.

"ஹை …ரித்திகா... ... ... ... . இன்னுமா போகுல….. வா... . நான் ட்ரோப் பன்றேன்."

கோதண்டராமனின் குரல்.

"இல்ல சார் பரவா இல்ல... ."

" அட என்ன மா சைல்டிஸா.. பிஹேவு பன்னரே... இருட்டிட்டே வருது அடுத்த மழை வரதுக்குள்ள வீட்டுக்கு போக வேன்டாமா.."

மறுப்பு சொல்வதற்கு தகுந்தவாறு இல்லை சூழ்நிலை.

வேறு வழியில்லாமல் அந்த ஆசிரியரின் இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.

வண்டி சுங்கம் சாலையை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

“நல்ல நெருங்கி உட்காருமா கீழே விழுந்தர போறே” என்றதும், சற்று நெருங்கி அமர்ந்தாள். இந்த உலகில் இக்கட்டான சூழ்நிலைகளில் எங்கிருந்தோ ஒரு கைகள் நம்மை பற்றிக்கொள்கிறது, அந்த கைகளில் சில நொடிகளில் குழந்தையாய் போகிறோம்... . ஆனால்...

"ரித்திகா... .. என்ன குளிரடிக்குதா... "

ரித்திகாவின் மனவோட்டம் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டது.

"இல்ல சார்... ."

"பரவாயில்ல மா…. என்ன வேணும்னா பிடிச்சுக்கோ.. "

பதில் இல்லை..

"ரித்திகா கிளாஸ்சுல உன்ன மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. தெரியுமா... ."

"சார்... ... ... ... " நடுக்கத்துடன் குரல் தொனித்தது.

"பிராங்கிலி ஸ்பீக்கிங்... . உன்கூட தனியா பேசணும்னு நினைச்சதுண்டு... ஆனா அது நடக்கல... உன் கையெழுத்து.. உன் பேச்சு... உன் அழகு... அப்பறம் உன்.... வேண்டா சொன்னா சொல்லிட்டே போகலாம்"

அவள் மேல் கம்பளிப்பூச்சி ஊறுவது போல இருந்தது... "சார் …. என்ன சார் இப்படியெல்லாம் பேசறீங்க... ."

"உன்ன புடிச்சுதுனு சொல்லறது தப்பா... அப்படியே தப்புனாலும் நீங்க தப்பு பண்ணறது இல்ல... பாரு இன்னைக்கு மழை வரும்னு தெரிஞ்சும் நீ ஏன் குடை கொண்டுவருல... எல்லாம் அப்படித்தான்... ."

தொடர்பே இல்லாமல் உவமை கோர்த்துக் கொண்டிருந்தார் கோதண்டராமன்.

நெருங்கி உட்காரச் சொன்னதற்கான காரணம் இப்போதுதான் புரிந்துபோனது ரித்திகாவிற்கு. அப்போது தடைபட்ட மனஓட்டம் மீண்டும் தொடர்ந்தது... ‘இக்கட்டான சூழலில் நீட்டப்படும் கரம் எதிர்பார்ப்பு வலைகளை பின்னிக்கொண்டு வருவது சமயங்களில் கண்களை கட்டிவிடுகிறது…’

எதுவும் பேசாமல் வந்தாள், ரித்திகா.

"டி எதாவது சாப்பிடரையா... "

"வேண்டாம் சார்... என்ன அந்த பஸ் ஸ்டாப்ல விட்டிங்கனா.. நான் வீட்டுக்கு போயிருவேன்.

"ஏம்மா இப்படி பயப்படற... நானே கொண்டு வந்து வீட்டுலே விடறேன்... "

" வேண்டாம் சார்... "

" என்ன பிடிக்கலையா... "

கோதண்டராமனின் வார்த்தைகள் ரித்திகாவை எரிச்சலூட்டியது. சகித்துக் கொண்டாள், மழையை வஞ்சிக் கொண்டாள்...

"சார் வண்டியை நிறுத்துங்க சார்.. நான் போய்க்கிறேன்.."

அதன் பிறகு மௌனம் கொண்ட கோதண்டராமன் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டார்.

"ரித்திகா…. இந்தம்மா உங்க கெமிஸ்ட்ரி சார் பேசறாராமா.." என்று தன் அலைபேசியை கொடுத்தார் அப்பா.

"என்ன ரித்திகா தூங்கிட்டையா... சும்மா தான் கூப்பிட்டேன் பத்திரமா போய் சேர்ந்துட்டையா... உனக்கு என்கூட வண்டீல வந்தது எப்படி இருந்துது... நான் வண்டி நல்லா ஓட்டறேனா... "

"சார்... எனக்கு ஒன்னும் புரியல சார்.. ஏன் என்கூட இப்படியெல்லாம் பேசறீங்க... எனக்கு தப்பா தெரியுது.." என்று குரல் நடுங்கியது.

"உன்ன பிடிச்சுருக்குனு எப்படியெல்லாம் சொல்லியாச்சு... நாளைக்கு போர்டு பிராக்டிகல்.. எப்படியோ நான் தான் பார்த்து மார்க் போடணும்.. ஸ்கூலுக்கு வா பேசிக்கலாம்... "

பேசுவதற்குள் எதிர்முறை துண்டிக்கப்பட்டது...

“ரோல் நம்பர் டென்... ”

உப்பை பரிசோதித்துக் கொண்டிருந்த ரித்திகா கோதண்டராமன் குரலைக் கேட்டு அதிர்ச்சியுடன் அவரருகில் சென்றாள்.

“என்ன புடிச்சிருக்குனு சொல்லு பிராக்டிகல் புல் மார்க் போடறேன்….” அந்தக் குரல் இருவருக்கு மட்டுமே ஒலித்தது. தலைநிமிராமல் இருந்தாள் ரித்திகா

“இந்தா… ஓகேன்னா ……… உனக்காக வாங்கின கேக்…”

கேக்கை வாங்கிக் கொண்டவள் பதில் பேசாமல் அவள் இடத்திற்கு நகர்ந்தாள். பரிசோதனை முடித்தவுடன் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தனர். கோதண்டராமன் மெதுவாக ரித்திகா அருகில் வந்தார்.

 கொடுத்த கேக் பெட்டியைத் திறந்தார்.

அதில் ஒரு கேக் உண்ணப்பட்டிருந்தது...

வெகு நாள் கனவு நிறைவேறி விட்டதாக இருந்தது அன்றைய கோதண்டராமனின் முகம்.

“என்னமா புடிச்சுதா………… இன்னைக்கு வெளில போலாமா...”

“போலாம் சார்… இன்னொரு கேக்கை நீங்க எடுத்துக்குங்க….”

“ஓ அப்படியா... இதோ எடுத்துகிறேன்…..”

சாப்பிட்டவன் முகம் திடீரென வெளுறியது. தொண்டை இறுகியது... நெஞ்சு அடைத்தது.

இப்பொது நிமிர்ந்து பார்த்த ரித்திகா போலாமா சார்...

என்று இதழோரத்தில் நகைத்துக் கொண்டாள்.

பரிசோதனை செய்யும் இடத்தில் ‘மெர்குரிக் குளோரைடு’ கொண்ட குப்பி திறக்கப்பட்டிருந்தது.

- சன்மது