பஸ்ஸில் ஏறி ஜன்னல் ஓரம் அமர்ந்து வழக்கம்போல் தன் புலம்பலை ஆரம்பித்தான் ஆதவன்.

 "நம்ம வாழ்க்கை இப்படியே போய்டுமா. ஏன் நா நினைக்கிறதே எதுவும் நடக்க மாட்டேங்குது".

வடபழனியிலிருந்து மெட்ராஸ் யூனிவர்சிட்டி செல்ல 13 ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தான் ஆதவன். இரண்டு டோர் பஸ்களை விட்டு விட்டு பின்னால் வந்த ஒயிட் போர்டு பஸ்ஸில் ஏறினான். டிக்கெட்டை வாங்கி மோதிர இடுக்கில் சொருகி காற்று வாங்க ஜன்னல் வழியே வெளியே திரும்பியவன், ஸ்கூட்டரில் ஒரு ஜோடி குலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்து, இந்த 28 வயதிலும் தனக்கு கல்யாணமாகாதது எங்கோ தான் செய்த பாவம் என மனதிற்குள் புலம்பி தன் பொறாமையை ஜன்னலுக்கு வெளியில் இறக்கி வைத்துவிட்டு தன்னை ஆறுதல் படுத்திக் கொள்ள பேருந்துக்குள் திரும்பினான். ஆறுதலாய் ஏதோ ஒன்றைத் தேடினான் ஆனால் அவன் கண்ணில் பட்டது ஒரு வெள்ளை நிறப் பலகையில் ஒட்டப்பட்ட பச்சைநிற திருக்குறள்.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்".

அது அவனுக்குப் புரியவும் இல்லை ஆறுதல் அளிப்பதாகவும் இல்லை. ஜன்னலோரக் கம்பிகளுடன் தனிமையில் புலம்புவது தான் ஆறுதல் என ஆதவன் புரிந்து கொண்டான்.

 "தம்பி நீங்க மெட்ராஸ் யுனிவர்சிட்டி தானே இறங்கணும்". கன்டக்டர் அவன் தோளைத் தட்டி எழுப்பினார். அவன் விழிக்கும் முன் தன் உடைமைகளை அவசரமாகத் தொட்டு சரிபார்த்துக் கொண்டு இறங்கினான்.

"போலாம் ரைட் ரைட்".

பேருந்து அவனைக் கடந்து சென்றது.

 வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் கதாநாயகன்கள், சென்னையின் வரவேற்பை இரண்டு நிமிடங்கள் பார்த்துவிட்டு காலடி எடுத்து வைப்பது போல அந்த மெட்ராஸ் யுனிவர்சிட்டியின் முகப்பை பார்த்து ஆச்சரியத்தில் நின்று கொண்டிருந்தான்.

"இங்க அட்மிஷன் பார்ம் எங்க வாங்கணும்".

"இப்படியே நேரா போயிட்டு அந்த பில்டிங்குக்கு பேக் சைடு போனா இதே மாதிரி நீல சட்டை போட்டு ஒரு வாட்ச்மேன் இருப்பார் அவர்கிட்ட கேட்டுப் பாரு".

அந்த உயர்ந்த பெரிய மரங்களின் நிழல்களுக்கிடையே அவன் நடந்து செல்லும் போது, அந்த மரங்களுக்கும் மரத்தடி நிழலில் இருக்கும் கான்க்ரீட் பெஞ்சுகளுக்கும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தன் வருகையைப் பதிவு செய்தான். கடைசி மரத்திடம் அறிமுகமாவதற்குள் அவன் அட்மிஷன் பார்ம் தரும் வரிசையைக் கண்டறிந்தான். அந்த வரிசையின் கடைசி ஆளாகத் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள பின்னாடி திரும்பிப் பார்த்தான். அந்த வரிசை மெதுவாக நகரத் தொடங்கியது. அந்த வரிசையும், வரிசையின் அசைவும் அவன் சொந்த ஊரான பழனியில் உள்ள முருகன் கோவிலில் புத்தாண்டு ஸ்பெஷல் தரிசனத்திற்காக மெதுவாய் நகரும் கூட்டத்தில் நிற்பதைப் போல் அவனுக்கு உணர்த்தியது.

அந்த வரிசையில் மெதுவாக முன்னேறி அரைமணி நேரத்தில் அட்மிஷன் ஃபார்ம் வாங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

"சொல்லுங்க"

கேள்வி வந்து 3 நொடிகள் ஆகியும் இவனிடம் பதிலில்லை. சிறு சிறு கட்டங்கள் கொண்ட அந்த வலை வேலியில் அவள் முகத்தை தெளிவாய்க் காண முயற்சித்தான். கண்களை விரித்து முகம் மிளிர்ந்தான். அவன் குழப்பங்களும், புலம்பல்களும் மெதுவாய் அவனை விட்டு நீங்குவதை உணர்ந்தான். அட்மிஷன் பார்ம் அவள் கையிலிருந்து இவன் கைக்கு வர இந்த பூமி இன்னும் மெதுவாய் சுழல்வதைப்போல் உணர்ந்தான். இவன் நினைவிலிருந்து நீங்காது நீளும் ஒரு புன்னகையை அவள் முகத்தில் சுமந்தாள். இந்த உலகம் என்று ஒன்று இல்லை என விவாதிக்கத் தயாராக இருந்தான். உன்மையாகவே அவன் வேறு ஒரு உலகில் இருந்தான். அவன் தன் குழப்பங்கள் முற்றிலும் நீங்கியவன்போல் புன்னகைத்து நின்றான்.

"அடுத்து வாங்க"

அவள் வாய்வழி வந்த அந்த வார்த்தை இவனை இயல்பு நிலைக்குத் திரும்பியது.

நெடுந்தூரப் பாலைவன பயணத்தில் இளைப்பாற நிழல் கிடைத்ததைப் போல அவள் புன்னகையில் இளைப்பாறினான்.

எல்லா கட்டங்களையும் வேகமாகக் கிறுக்கி நகர்ந்த பேனா ‘பிரிவு’ என்ற கட்டத்தில் ஒரு நொடி நின்றது. முதல் முறையாக அவன் செயலுக்கு எந்த ஆலோசனையும், எதிர்ப் பேச்சும் வராதது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. எந்த தடங்கலுமின்றி அவன் விரும்பிய படிப்பை படிக்கப் போகிறான். யோசனை நேரம் முடிந்ததை உணர்த்துவது போல பேனாவை ஒரு சுழற்று சுழற்றி ஆவேசமாக அந்தக் கட்டத்தை நிரப்பினான். B.A தமிழ் என அழுத்தமாகக் அந்த கட்டம் நிரப்பப்பட்டிருந்தது.

 சிறுவயதிலிருந்தே பொறியியல் படிப்பில் தான் ஆதவனுக்கு ஆர்வம் இருந்தது. ஆர்வக்கோளாறில் ஆசையை அப்பாவிடம் சொன்னது தான், வாழ்நாளில் தான் செய்த மிகப்பெரிய தவறு என பல பேருந்து ஜன்னல் கம்பிகளிடம் அவன் புலம்பியதும் உண்டு. பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து பொறியியல் கல்லூரியில் சேர்வது குடும்ப சூழலுக்கு ஒத்துவராது என்பதால் பத்தாம் வகுப்பில் 413 மதிப்பெண் பெற்ற ஆதவனை, உறவினர் ஒருவரின் அறிவுரையின் பெயரில் அரசு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ இன்ஜினியரிங் பிரிவில் சேர்த்தார் செங்குட்டுவன்.

ரியல் எஸ்டேட் மற்றும் ஈமு கோழி வளர்த்தலை விட கல்வி அன்று அதிக லாபம் தரும் வணிகமாக இருந்தது.

தனியார் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் டிவியில் விளம்பரம் போடுவது மட்டுமே கல்வியின் வளர்ச்சியாக இருக்கிறது.

செங்குட்டுவன் தன்னை ஒரு அரசியல்வாதி என வெளி உலகத்துக்கு சொல்லிக் கொண்டாலும் கட்சிப் பிரசுரங்களை விநியோகஸ்தம் செய்யும் கட்சிக்காரனாக மட்டும்தான் அந்தக் கட்சி அவரைப் பார்த்தது. மணிமேகலை இதை பலமுறை சொல்லியும் மகள் உதயா பிறக்கும் வரை அது செங்குட்டுவனுக்குப் புரியவில்லை. ஆதவனை பாலிடெக்னிக்கில் சேர்ப்பதற்கு உதயாவும் ஒரு வகையில் காரணமாக இருந்தாள். அவன் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வருவதற்கு ஒரு மாதம் முன்னர் தான் உதயா சடங்காகியிருந்தாள்.

"பெரியவ படிப்புக்கு எல்லாத்தையும் செலவழிச்சிட்டா அப்புறம் பொண்ணுக்கு என்னங்க பண்ணுவோம்?" அம்மாவின் பொறுப்பும் கூட ஆதவனுக்கு எதிராய் நின்றது.

மூன்று வருடப் படிப்பை முடித்துவிட்டு பட்டயதாரியாக வெளியே வந்தான். "பட்டயதாரி"அந்த வார்த்தை அவன் வாழ்க்கையை இவ்வளவு கடினமாக்கும் என்று அவன் என்றும் நினைத்ததே இல்லை. நினைத்தாலும் அவன் வாழ்க்கையில் எதுவும் அவன் நினைத்தால்போல் நடந்ததே இல்லை. முன்னமே அவன் இதைப்பற்றி நினைத்திருந்தாலாவது இப்படி ஒரு திருப்பம் அவன் வாழ்வில் நடந்திருக்காமல் இருக்கும்.

ஆபிஸ் பாய், டெலிவரி பாய், மார்க்கெட்டிங், டிரைவர் என நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறான். உதயாவுக்கு அவன் லவ் பண்ண பையனையே முறைப்படி சம்பந்தம் பேசி சீரும் சிறப்புமாகவும் தடல்புடலாகவும் கடன்வாங்கி கல்யாணத்தை முடித்து வைத்தான். அந்த கடனும் இருப்பது கூடவே சேர்ந்து ஆதவன் தலையில்தான் ஏறியது.

மணிமேகலையும் செங்குட்டுவனும் சுயதெம்பை இழந்திருந்தனர். குடும்பத்தின் மொத்த பொறுப்பும் ஆதவனிடையே வந்தடைந்தது. இவ்வளவு இந்த குடும்பத்திற்காய் பொறுப்பாக உழைத்தும் அவனுக்கு ஒரு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்க அவன் பெற்றோர்களால் முயன்றும் முடியவில்லை. அவன் கல்யாணத்திற்குத் தடையாய் இருப்பது சொந்த வீடு இல்லாதது தான். சொந்தவீடு இல்லாததற்கு ஒரு நல்லவேலை இல்லாதது தான் காரணம். நல்ல வேலை கிடைக்காததற்கு அவன் படிப்பு தான் காரணம். பட்டயதாரியான அவனுக்கு, அவன் நினைக்கும் சம்பளத்தில் வேலைகள் கிடைப்பது எளிதல்ல. அவன் நெடுநாள் யோசனை அவனை பட்டப்படிப்புக்குள் இழுத்தது.

முதல்முறையாக அவன் செயலுக்கு எந்த ஒரு தடங்கலும் எதிர்ப்பும் ஆலோசனையும் வராதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மடமடவென கட்டங்களை நிரப்பி ஃபார்மை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவன் காலியான மேசைகளை பார்த்து ஆச்சரியத்திற்குள் போனான். "ஸ்வீட்" என்ற கேட்டி கிரஷ் கேமின் குரல் அவனை வலது பக்கம் திரும்பச் செய்தது. சின்ன உருவமும், மாநிறமும், பச்சையும் மஞ்சளுமாய் கலந்த நிறத்தில் சிறுசிறு கட்டங்களைக் கொண்ட மடிப்பு கசங்காத ஒரு சட்டையுமாய், பல ஃபைல்கள் அடுக்கப்பட்ட அந்த மேசைக்கு உண்டான நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஒருவர் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அரசு அலுவலர்களின் அலுவலகப் பணி ஏற்கனவே அவனுக்குப் பரிச்சயம் ஆனது தான்.

காலையில வந்து உடனேயே scholarship ஃபார்ம் வாங்கலாம்னு அலுவலகத்துக்குப் போனால்,

 "தம்பி இப்பதான்பா வந்தோம் மத்தியானம் போல வாயேன்..".

மதியம் சாப்பிட்ட உடனே போகக்கூடாதுனு நினைத்து ஒரு 2.30 மணிக்குப் போனால்,

"சரஸ்வதி மேடம் பருப்புசாதம் பிரமாதம். என்ன ஒன்னு உப்புதான் கொஞ்சம் குறைச்சலாயிருச்சு, பட் ஐ லவ் சின்ன வெங்காயம் போட்ட தட் காரக்குழம்பு. மீனா மேடம் கலக்கிட்டாங்க... இன்னும் அந்த ருசி நாக்குலேயே இருக்கு".

சாப்பிட்டு முடித்த பாத்திரங்களைக் கழுவி ஜன்னலோரம் காய வைத்துவிட்டு ஒரே மேஜையில் அமர்ந்து அன்றைய சாப்பாட்டைப் பற்றி நடக்கும் விவாதம் 3 - 3.30 வரை செல்லும்.

என் கடைசி பீரியட் பறி போனாலும் பரவாயில்லை என்று 4.30க்கு வந்தால்...

ஒருவர் பின் ஒருவராக கழிவறைக்குச் சென்று முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு ஜன்னலோரம் காயவைத்த பாத்திரங்களை அவரவர் பைக்குள் வைத்துக் கொண்டு வீட்டிற்குப் போக தயாராக இருப்பார்கள்.

"தம்பி எல்லாம் எடுத்து வச்சாச்சு. காலைல மொத ஆளா வந்துருங்க முடிச்சிடலாம்".

இவர் முகம் பளீரென்று இருப்பதைப் பார்த்தால் மணி நாலரை இருக்கும் போலிருக்கிறது.

"சார்"

"என்ன வேனும்" என்று கேட்டவாறே செல்போனை லாக் செய்து மேசை மீது வைத்தார்.

"அட்மிஷன் ஃபார்ம் கொடுக்கனும்". அவன் கையில் இருந்த ஃபார்மை வாங்கி மெதுவாகப் புரட்டினார்.

"என்னப்பா இந்த பேஜ் ஃபில் பண்ணாம வச்சிருக்க. உங்கூட பேரன்ட்ஸ் யாரும் வரலையா?”

"இல்ல சார்".

"ஓ... BA தமிழ் சூப்பர்பா. தமிழ்ல ஆர்வம் இருக்க பையனா நீ. சூப்பர். ஆல் த பெஸ்ட். வாழ்த்துக்கள் பா."

"பேரன்ட்ஸ் சிக்னேச்சர் வேனுமே"

"இல்ல சார் அவங்களால வர முடியாது வயசானவங்க சார். அதுலாம நா கரஸ்ல படிக்கப்போறது அவங்களுக்குத் தெரியாது சார்".

"ஓஹோ அப்படியா. நோ பிராப்ளம். நீ இந்த ஃபார்மா வீட்டுக்கு எடுத்துட்டுப் போட்டு பேரன்ட்ஸ் சிக்னேச்சர் மட்டும் வாங்கிட்டு வா"

 "சார் இன்னிக்கு டேட் போட்டுட்டேன் சார்".

"நோ பிராப்ளம். நா பாத்துக்குறேன்பா. நீ நாளைக்கு வா சரியா."

சில சமயங்களில் அறிமுகம் இல்லாதவர்களின் அன்பு ஒரிசாவில் கரையைல் கடக்கும் பெயரிடப்படாத பல புயல்களைப் போல பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

முதல் முறையாக அவன் முடிவை ஒருவர் ஆதரித்தது ஆச்சர்யமாக இருந்தது. ஃபார்மை சர்டிவிகேட்கள் இருந்த சரவணா ஸ்டோர்ஸ் கவரில் வைத்துக் கொண்டு சந்தோஷத்தின் எக்காளத்தில் பேருந்தினுள் ஏறினான். உட்கார இடமில்லை. இம்முறை அவன் ஜன்னலோரம் அமரவும் விரும்பவில்லை. ஜன்னல் கம்பிகளிடம் கூற இப்போது அவனிடம் புலம்பல்கள் இல்லை.

"தம்பி ஒரு பவர் அவுஸ் வாங்குபா"

"ண்ணா ஒரு பவர் அவுஸ் ஒரு வடபழனி வாங்குனா" ஆதவன் இன்னொருவரிடம் கடத்தி விட்டான்.

"தம்பி வடபழனி ரெண்ட்ரூபா குடுபா ஐஞ்சிருபாவா குடுக்குற".

"ரெண்ட்ரூபா இல்லநா"

"இல்லனா இன்னா பன்றது இறங்கும்போது வாங்கிக்கோ".

"சரிநா".

ஆதவன் சில சமயங்களில் சில விஷயங்களை மறப்பதுண்டு. கண்டெக்டர் கிட்ட சில்லறை வாங்குவதை மறந்துடக்கூடாதுனு அடிக்கடி அவனே அவனுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டான்.

"ஏம்பா இது பூந்தமல்லி போகுமா, 25ஜி தான இது"

“ஆமா ஆமா இருவத்திமூன்றுபா குடு".

அந்த கூட்டத்திலும் ட்ரைவர் யாருனு தெரிஞ்சிக்க முயற்சி செய்தான்.

"25ஜி. செல்வகுமார் அப்பா வெங்கடேசன் இந்த ரூட்லதா பஸ் ஓட்டிட்டு இருந்தாரு. முன்னாடி ஏறி "அங்கிள் ஹாய்" அப்டீனு சொல்லிட்டா போதும்... அந்த ரூட்ல டிக்கெட்டே வாங்கம எங்க வேணுனாலும் இறங்கிக்கலாம். தீபாவளி பொங்கல் எதுனா பண்டிகைனா அவுங்க வீடே கோலாகலமா இருக்கும். போனஸ் காசு வாங்கி வூருக்கே குடி வாங்கிக் குடுப்பாரு. நெய்யோட வாசனைய மொத மொதல்ல அவங்க வீட்டுலதா உணர்ந்தது. அவங்க வீட்டு சாம்பார் சாதத்த சாப்டதுக்கப்றம் நெய் இல்லாதது சாம்பார் சாதமே கிடையாதுனு விவாதம் பண்ணே".

ஆதவனுக்கு உட்கார ஓர் இடம் கிடைத்தது. இருக்கையில் அமர்ந்தான். இம்முறை பச்சை நிற போர்டில் இருந்த திருக்குறள் ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்".

"ரொம்பவே அன்பானவர் தா MTC வெங்கடேசன். எல்லார் கிட்டையும் ரொம்ப அன்பாவே நடந்துப்பாரு. எங்க அப்பா குடிச்சிட்டு வந்து சண்ட போட்டு எங்கள அடிச்சி தெருத்தும்போது அவங்க வீட்லதா நா, அம்மா, உதயா மூணு பேரும் இருப்போம். எனக்கு அவருகிட்ட பிடிக்காத விஷயம் அவரும் ரொம்ப குடிப்பாரு. எனக்கு குடிக்கறவங்களப் புடிக்காதுனு இல்ல, அவரு ரொம்ப குடிப்பாரு… ரோட்ல விழுந்து கிடக்குற அளவுக்கு குடிப்பாரு. அந்த குடிதா கடைசி காலத்துல அவர பாடாப் படுத்துச்சி. நெறைய அனுபவிச்சி ஒரு வழியாகிதான் இறந்து போனாரு".

பவர்வுஸ் பேருந்து நிறுத்தம் தாண்டியதும் இறங்கத் தயாராகி எழுந்து படிக்கட் அருகில் சென்றான், ஏதோ ஞாபகம் வந்தவன் போல நிதானித்து கன்டெக்டரை தேடினான்.

"ண்ணா சில்லறை தரனும்".

"எவ்வளோ"

"ஏல்ரூபா"

கண்டெக்டர் பையை துலாவி ஏழு ரூபாயை எடுத்துக் கொடுக்கிறார். மறந்துவிடுவேன்னு நெனச்ச பரவால ஞாபகம் வச்சிட்டு வாங்கிட்டோமேனு ரொம்பவே ஆச்சரியப்பட்டான்‌.

நம்ப சந்தோசமாக இருக்கும் போது நமக்கு எதுவும் மறந்துபோறது இல்லனு அவனுக்குள்ளயே மகிழ்ந்து கொண்டான்.

வடபழனி பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்திலிருந்து இறங்கினான். பேருந்து கிளம்பியது. அவன் ரொம்ப சந்தோசமா இருந்தான். நாளைல இருந்து அவன் நினைத்த விஷயங்கள் எல்லாம் கைகூடக் போகிறது. நாளைக்கு அட்மிஷன் கிடைக்கப் போகிறது. பட்டப்படிப்பு முடிந்ததும் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கப் போகிறது. நல்ல வேலை கிடைத்ததும் அவன் கனவு வீட்டை கட்டிமுடிக்கப் போகிறான். வீடு கட்டி முடித்ததும் திருமணம்‌, குழந்தைகள், அழகான வாழ்க்கை.....

 பேருந்து அவனைக் கடந்து சென்றது. ஆதவன் அமர்ந்திருந்த இருக்கையில் வயதானவர் ஒருவர் அமர்கிறார். அவர் காலுக்கடியில் ஒரு சரவணா ஸ்டோர்ஸ் கவர் தட்டுப்படுவதை உணர்கிறார்.

கனவுகளை நோக்கி மிதந்தபடியே நடந்து செல்கின்றான் ஆதவன்.

- சக்கரவர்த்தி

Pin It