மேகம் அலைமோதிக் கொண்டிருந்தது... வெயில் அதை ஆமோதித்திருந்தது…

“நீங்கள் டயல் செய்யும் நம்பர் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது ...

"என்ன ஆளுடா அவன் ... மொதல்ல போன எடுக்கல, இப்போ… சுச் ஆப்னு வருது."

"சிவா… நீ டென்ஷன் ஆகாதே ..."

"அப்பறம் என்றா ‘குமாரு’... இந்த செல்வராஜ் தடி பய, இப்படி பண்ணிட்டுக்கறான் .... நாலு மாசத்துக்கு முன்னே ஒரு பேக்கரி வைக்கறேன்னு ரெண்டு லச்சம் வாங்க தெரிஞ்சவனுக்கு ... போன் பண்ணா எடுக்கமுடியில..."

"சிவா….. இன்னைக்கு உனக்காகத்தான் ஆபிஸ் லீவு போட்டேன் ... அவன் வேல செய்யற கடைகிட்ட போய் பார்த்த என்ன..."

இருசக்கரவாகனம், திவான்பகதூர் சாலையை நோக்கி விரைந்தது.

சாலையோரத் தேநீர்க் கடையில் கூட்டம் நிறைந்திருந்தது. சிவாவின் கண்கள் செல்வராஜை மட்டும் தேடித் திரிந்தது.

"செல்வராஜா… அவன் ஒரு வாரமா வேலைக்கே வரதிலைண்ணா..."

சிவா நட்பு விரும்பி, உதவிக்கரம் நீட்டுவதில் கரம் சிவந்தவன். அப்படி செல்வராஜுக்கு உதவிய கடன் தொகையை பெறுவதில் பொறுமை இழந்தவனாய் அன்று காணப்பட்டான்.

"ஏன்டா குமாரு மேக்கால கரடிமடை வரைக்கும் ஒரு அலுத்து அலுத்துனா என்ன... இன்னைக்கு பொழுதுக்குள்ள அந்த மடப்பய பாக்கிய வாங்கிறணும் "

"வீடு தான்… ஒருக்கா பன்னெண்டாவதிலியோ... பதினொன்னாவதிலியோ போனது... இப்போ சரியாய் ஞாபகம் வரமாட்டேங்குது ... பரவால்ல.. உடு பாத்துருவோம் .." என்றான் சிவா வாகனம் வீறிட்டு பாய்ந்தது…

சிறுவாணி சாலை பசுமையின் சந்தையாய் இருபுறமும் தீர்க்கமென நிறைந்திருந்தது பச்சை. நண்பகல் சுமந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது புளிய மரங்கள். காற்றின் கணத்தில் மோதி முறிந்தது கண்களின் நீர்த்துளிகள்.

எதையெதையோ கற்பனை செய்துகொண்டு வந்தான் சிவா, அவன் மனம் நிலைகொள்ளவில்லை.

“நீங்க எனத்தையோ பண்ணுங்கோ ... என் பொண்ணு சீறு நல்லபடியா இருக்கோனு... நீங்க உருப்படியா இந்த வீட்டுக்கு ஒன்னும் புடுங்க கானோம். இதையாவது கொஞ்ச செலவு பண்ணி... என் பொறந்தூட்டுக்கு முன்னாடி... என் தல குனியாம பாத்துகோங்கோ… எவனோ கேக்கறானு இருக்கற நகையை பாங்குல வச்சு என் தாலியறுத்தது போதும்... இனி நான் வாழ்க்க முச்சூடும் தரித்தரத்தோட பொழங்கணுமான்னு யோசிங்க ...”

நேற்று இரவில் மனைவி உதிர்த்த வார்த்தைகள் இன்னும் கலையாமல் சிவாவின் கண்முன் அவ்வப்போது உருப்பெற்று சென்றது.

"மாதம்பட்டி வந்தாச்சு… இன்னும் எவ்ளோ தூரம் போகணும்..."

"இப்படியே தெக்கால போ ஒரு அஞ்சு கிலோ மீட்ருல வந்துரும் ..."

மாதம்பட்டி தாண்டியவுடன் சாலை அதன் போக்கில் நெளிந்தும், வளைந்தும் சென்றது. எங்கும் கிளை விரியாததால் ஒரு நூல் பிடித்தாற்போல வாகனம் ஓட்டுனரை மீறி உருண்டது.

கரடிமடை பெயர்ப்பலகை கண்டவுடன் சற்று வேகமாக செயல் பட்டது, சிவாவின் மனது.

ஒரு ஆலமரத்துடன் வரவேற்ற கரடிமடை மூவழி சாலையாகப் பிரிந்தது.

"சிவா எந்த வழின்னு ஞாபகம் இருக்கா..."

"வடக்கால ஒரு வழி போகுது பாரு அதுல வண்டிய உடு ...."

"ஏனுங்க இந்த பாக்கெரிக்கு ‘டி’ மாஸ்டரா ஆர்.எஸ். புரத்துக்கு வேலைக்கு போற செல்வராஜ் வீடு எதுங்க..."

“செல்வராஜூ... அப்பிடின்னு எனக்கு தெரிஞ்சு யாரும் இல்லையே... எதுக்கும் கெழவரத்துல ஒரு ‘டீ’ கடை இருக்கு அங்க விசாரிங்க தம்பி..."

"சிவா… சரியாய் ஞாபகப்படுத்திப் பாரு கரெக்டான ரூட்டா... இந்த ஊர்ல தான் நீ குப்பை கொட்டின… அதுக்குள்ள மறந்துருச்சா..."

"அட ஏன்டா நீவேற ... நான் இருந்தது வெள்ளருக்காம்பாளையத்துல, அது இங்கிருந்து ஐஞ்சு மயில் போகோணு..."

கிராமத்தில் நுழைந்ததும் அவன் பூர்விக பாஷை அவனை முழுவதுமாய் சூழ்ந்துகொண்டது .

"இங்க செல்வராஜுன்னு பாக்கெரிக்கு ‘டி’ மாஸ்டரா ... போறவரு வீடு..."

"செல்வராஜுன்னு ஒருத்தர் பாக்கெரிக்கு வேலைக்கு போயிட்டு இருந்தாரு... ஆனா அவரு போன வாரம் தான் இறந்து போனாரு..."

சிவாவிற்கு செவி இரண்டும் அடைத்துப் போனது. "எண்ணுங்கய்யா சொல்றிங்க... செல்வராஜூ செத்து போய்ட்டானா ...."

"ஆமா தம்பி… எம்பது வயசு ஆகுதில்ல..."

பெருமூச்சுடன் நகர்ந்த சிவா, குமாரை வெறிக்க பார்த்தான்.

வந்த இடத்திற்கே வந்து சேர்ந்தார்கள். ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த நால்வரில் ஒருவர், "யார வெகுநேரம் தொழாவரிங்க..."

சிவா விவரித்தான் . “அட நம்மப் பய… இந்தப் பக்கத்து சந்துல ஐஞ்சாவது வீடு போய் கேளுங்க... ஆமா நீங்க பைனான்ஸ் காரரா ..."

இந்த முறை குமார் குறுக்கிட்டு இல்லைங்க. அவன் எங்க பிரெண்டு சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தோம்..." என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.

"அம்மா வீட்டுல யாரும் இல்லைங்களா..."

"யாரு வேணும் உங்களுக்கு ..." ஒரு நடுத்தர வயது உடைய பெண் குரல் கேட்டது.

"செல்வராஜ்..."

"செல்வா இல்லைங்க ..." என்று பதில் உடனுக்குடன் வந்தது.

இருவரும் வீட்டின் வாசலில் நின்றபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மீண்டும் அந்த பெயரை சொல்லி முடிப்பதற்குள் .

“உங்களுக்கு என்ன வேணும் ... நீங்க யாரு ..” என்று அந்த உருவம் வாசலுக்கு வந்தது.

"என் பேரு சிவா... நான் செல்வராஜோட பிரண்டு ..."

மேலும் கீழும் பார்த்தவாறு "உள்ள வாங்க ..." என்றாள் அந்த பெண்மணி.

பழைய வீடு, நாட்டு ஓடு வேயப்பட்ட கூரை. விசாலமாக நீண்டிருந்தது திண்ணை. அந்த வீட்டின் மொத்த பரம்பரையை சொல்லிவிடும் அங்கு அமர்ந்திருந்த ஒரு கிழவியின் தோற்றம்.

"வா… கண்ணு... நீங்கெல்லாம் செல்வா பிரண்ட்ஸா... அவனெங்கோ ஒரு ஜோலியா போயிருக்கான்... நான் தான் அவன் அம்மா... அது அவன் அக்கா ... அந்த திண்ணையில இருக்கறது எங்கம்மா.."

"தப்பா நினைச்சுக்காதீங்க இங்க வரவங்க கடன்காரங்களா தான் வராங்க... நீங்களும் அப்படிதானு நினைச்சுட்டேன்.." என்றாள் அக்கா.

"தம்பி... காபி சாப்படறீங்களா..." என்று குறுக்கே பேசினாள் செல்வராஜின் தாய்.

"இல்ல… தண்ணி மட்டும் குடுங்க போதும்" என்றான் குமார் .

சிவா எப்படி ஆரம்பிப்பது என்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்திருந்தான்.

"இது உங்க வீடு கூச்சப் படாதீங்க..." என்று மூச்சிரைத்தபடி ஒருநிமிடம் தாமதித்து பேச்சைத் தொடர்ந்தாள் அக்கா.

“ஒரு ஆறுமாசமா மூச்சிரைப்பு இருந்துது ... ஆஸ்பத்திரிக்கு போனா ஆஸ்துமானு சொல்லிட்டாங்க ... மருந்து மாத்திரையுல வாழ்க்கை ஓடுது... இதுனாலையே கட்டுனவனும் விட்டுட்டு ஓடிட்டான் .." என்று விசும்பிக்கொண்டே அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள் அக்கா.

"புள்ள வேலைக்கு போகமுடியுளேன்னு, நான் பாவாடை, ரவிக்கைன்னு தெருத்தெருவா வித்துட்டு இருந்தேன் தம்பி, இந்த ஒரு மாசமா முட்டில வீக்கம் வந்து சரியா நடக்கமுடியில ... தொண்டாமுத்தூருல இருக்கற ஒரு கம்பெனில செக்யூரிட்டி வேலைபாக்கறாரு என் வீட்டுக்காரர், என்னை வேலைக்கு போக வேண்டாம்னு நிறுத்திட்டாரு. என் புள்ள செல்வா பயலுக்கு ஒரு வேல உருப்படியா கிடைக்க மாட்டேங்குது. இருங்க தம்பி உங்களுக்கு சாப்பிட பலகாரம் வாங்கியாறேன் " என்று நூல்களால் கட்டப்பட்ட அருந்த செருப்பை மாட்டிக்கொண்டு காலை விசுக்கி, விசுக்கி நடந்தாள் அம்மா.

எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தான் சிவா.

"செல்வராஜ் எங்க..." என்றான் குமார் குரல் உடைந்தவனாய்.

"அது ஏன் தம்பி கேக்கறீங்க, என் புள்ளைக்கு ரத்தத்தில எதோ கோளாறு இருக்குனு ஆபரேஷன் பண்ண சொன்னாங்க, அதுக்கு எங்கெங்கோ கடன் வாங்கினோம் பத்துல. செல்வா யார்கிட்டையோ தொழில் தொடங்கணும்னு வாங்கின கடன் தான் இப்போ இவள உசுரோட வைச்சுருக்கு. அந்த கடனை அடைக்கத் தான் கிடைக்கற வேலைய செய்ய கிளம்பிட்டான். செல்வா இவளோ பெரிய கடன் வாங்குனது கூட ஆத்தா, அப்பனுக்கு தெரியாது, தெரிஞ்சா ஆத்தா உசர விட்டுரும் " என்று மூச்சிரைக்க பேசி முடித்தாள் அக்கா

இந்த முறை சிவா பேச வந்ததை சுத்தமாக மறந்துபோனான்

ஆமா நீங்க என்ன ஜோலியா அவனை பாக்கவந்திங்க....."

குமார் சொல்வதற்கு முன் முந்திக்கொண்ட சிவா

“சும்மா பாத்துட்டுப் போலாம்னு தான் வந்தோம் ...” என்ற முடித்த சிவாவின் கண்களில் குளம் கட்டியது.

வெளியில் மேகம் கருத்திருந்தது…

-சன்மது