ஒளி மங்கித் திரிந்த வெளியில் சற்று சாயம் வெளுத்த கருமைநிறம் ஞாயிறின் மேல்பூச்சில் காலை வேளையை சமைத்துக் கொண்டிருந்தது.

மதுவாய் சுருக்கும் கனவுகளின் கைப்பிடியில் இன்னும் தவழ்ந்து கொண்டிருந்தான் பிரேம்.

மேசை மீது துல்லிய அலைபேசியை மிகவும் சிரமத்தோடு எடுத்தான் பிரேம்.

"ஹலோ மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... என்னடா இன்னும் விடியலையா உனக்கு "

"நன்றி டா ... இல்ல டா ... என்ன பெரிய பிறந்தநாலு ... எப்போதும் போலத்தான் விடியுது ... சரி எப்போ வீட்டுக்கு வர பாலா......."

" இல்ல ... இன்னைக்கு... ஒரு முக்கியமான இன்டர்வியூ இருக்கு... இதுவாவது கிடைக்குதான்னு பாப்போம் ..."

"சரி... டா ஆல் தி பெஸ்ட் ..." என்ற வழக்கொழியாத ஆங்கில வார்த்தைகளில் நம்பிக்கையை உதிர்த்துவிட்டு அலைபேசியைத் துண்டித்தான்.

அடங்க மறுத்த தொலைபேசி திரும்பவும் அதறியது....

"சொல்லும்மா ..."

"ஹாப்பி பர்த்டே டா ..."

" ஓகே.... மா .... எப்படி இருக்க ..."

" போனவாரம் தான வந்துட்டு போனே... அதுக்குள்ள எனக்கு ... என்ன ஆகப்போகுது ..."

"சரி அப்பா எங்க ..."

" அவரு ஒரு முக்கியமான வேலையா வெளியே போயிருக்கார் டா ..."

"அடுத்தவாரம் உங்க பாட்டிக்கு வருஷாந்தரம் ... கேட்டா பெங்களூருல மழை, புயல்னு கதவிடாத... சென்னைல நாங்க பார்க்காத புயலா… மழையா.. கரெக்டா வந்து சேறு ..."

“எப்படியாவது இந்த வாரத்துக்குள்ள ஒரு நல்ல வேலையை தேடியாகணும். பெங்களூரு வந்து ரெண்டு மாசம் ஆகுது, ஒரு வேல கூட கிடைக்கல” என்று தனக்குள் தர்க்கம் தகித்தது.

வீட்டின் அழைப்பு மணியின் ஓசை கேட்டது.

கதவை திறந்தான்

பிரேம் ...?

"ஆமா..... சொல்லுங்க........"

"உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு ........."

நீட்டிய இடத்தில கையொப்பம் இட்டு, பொட்டலத்தை வாங்கிக் கொண்டு கதவை அடைத்தான் .

முகத்தில் நிறமிகளற்ற ஆர்வத்தின் மிகை, ரேகையாய் படர்ந்தது.

பளபளத்த காகித உரை வன்புணர்ச்சிக்கு ஆளானது.

பொட்டலத்தை பிரித்த பிரேமின் முகத்தில் ஆனந்த உக்கிரம்.

எடை குறைந்த, மெலிந்த உடல்வாகுடன், வசீகரிக்கும், கைக்கு அடக்கமான ஒரு ‘அலைபேசியை ‘ பரிசாய் அனுப்பியிருந்தான் ஹாங்காங்கிலிருந்து பிரேமின் நண்பன் விமல் .

செய்வது அறியது தவித்தான் பிரேம்

'யாருக்கு கூப்பிடலாம் .....?

அம்மாக்கு ... வேண்டாம் ?

பாலாவுக்கு மொதல்ல கூப்பிட்டு வெறுப்பேத்துவோம் ...'

என்று பாலாவின் எண்ணுக்கு அழைத்தான்.

எதிர்முனை ஒலி எழுந்தது.

நீண்ட ஒலி ... முடிந்த நேரத்தில் ...

வீட்டின் அழைப்பு மணிஒலித்தது .

பிரேம் கதவை திறந்தான் ... அதிர்ச்சியில் உறைந்தான் ...

“டேய் பாலா ... உனக்கு தாண்டா கூப்பிட்டேன் ... எப்படி நீ இங்க .. வேலை இருக்குனு சொன்ன…”

"ஆமாண்டா பெங்களூருல தான் எனக்கு இன்டெர்வியூ ... திடீருனு கிளம்பி வரவேண்டியதா போயுருச்சு அதுதான் பிலைட்டை பிடிச்சு வந்துட்டேன் அதுமட்டும் இல்ல, இது பெரிய கம்பெனி வேற ... அப்பறம் நீ எனக்கு கூப்பிட்டையா ? எனக்கு எதும்... கால் வருல .. "

"இல்லடா நான் கூப்பிட்டேன் ! … சரி .. விடு புது போன் அதுனால அப்படி இருக்கும் போல .." என்று அந்த அலைபேசி பரிசாக வந்த கதை சுருக்கத்தை விவரித்துக் கொண்டிருதான் .

அவன் அன்னைக்கு புதிய அலைபேசிலிருந்து அழைத்தான், அழைப்பு போகவில்லை பிறகு எந்த எண்ணுக்கு அழைத்தாலும் அழைப்பு போகாவண்ணமாய் இருந்தது.

அன்றிரவு அவன் புது அலைபேசியுடன் பூரித்துப் போயிருந்தான் ..

காலை என்னவோ அவன் வழக்கத்திற்கு மாறாக விடியலை முந்திக் கொண்டான்.

“இப்போ அவனுக்கு பகலா ராத்திரியே ... என்னவோ ... விமலுக்கு கூப்பிட்டு நன்றி சொல்லுவோம் ... என்று விமலின் எண்ணுக்கு தொடர்புக் கொண்டான்…”

மணி ஒலித்தது ....

ஒலி அடங்கியபிறகு ... வீட்டின் அழைப்பு மணி அழைத்தது.

சோம்பலை வாரியணைத்தவாறு கதவை திறந்தான் ...

"ஹை டா ..." என்றான் விமல்

திகைப்பில் இருந்து மீளாதவனாய் ... சற்று நேரம் விமலை உற்று பார்த்திருந்தான் பிரேம்.

"பிரேம்… என்னடா ஆச்சு உனக்கு ... நான் பேசிட்டே இருக்கேன் நீ எதும் பேசாம முழிச்சுகிட்டு இருக்க ..."

"நீ ...எப்படி இங்க ....அதுவும் ...நான் கூப்பிடும்போது ..."

" என்ன நீ கூப்பிட்டையா ... எனக்கு எதும் வரலையே.. சரி ... என்ன திடீருனு ஒரு மீட்டிங்குக்காக இந்தியா அனுப்பிச்சுருக்காங்க .. அதான் வந்துட்டேன் அப்படியே உன்ன பார்த்துட்டு போலாமேன்னு வந்தேன் .." என்றான் விமல்

அதிர்ச்சியில் மீளாத பிரேம் ஏதோ கேட்டவனாய் தலை ஆசைதான்.

விமலின் திடீர்விஜயம் பற்றி கூற பாலாவை அழைத்தான். அழைப்பு போக வில்லை .

சேவை மையத்திற்கு அழைத்த வண்ணம் அவன் இரவு முடிந்து போனது.

மணி எட்டை கடந்திருந்தது

‘இன்னைக்கு அம்மாவுக்கு கூப்பிட்டு பாட்டியின் வருசாந்திரத்துக்கு என் வருகைப் பதிவை தெரிவிச்சரனும்’ என்று புதிய அலைபேசியில் தன் அம்மாவை அழைத்தான் ...

அழைப்பு போனது .. வழக்கம் போல அழைப்பு முடிந்தது ...

சில வினாடிகளில் வீட்டின் அழைப்பு மணி அடித்தது

சற்று அதிர்ந்த பிரேம் ... ‘அம்மாவா இருக்குமோ ’ ... என்ற ஐயத்துடன்

கதவைத் திறந்தான் ... உண்மை நின்று கொண்டிருந்தது .

“அம்மா ... நான் உனக்கு போன் ... நீ எங்க திடீருனு ..."

“ஆமாண்டா ... ஒரு பிரென்ட்டோட கல்யாண நிகழ்ச்சி, நேத்து நைட்டே இன்னும் ரெண்டு பேரோட பஸ் ஏறிட்டேன் உனக்குக் கூப்பிட்டேன்... நீ எடுக்கல ... என்கூட வந்தவங்கள மண்டபத்திற்கு அனுப்பிட்டு உன்னப் பார்க்க வந்தேன் ..

‘சரி’ ...என்று சுதாரித்துக் கொண்ட பிரேம் தன் நண்பன் பாலாவை அலைபேசியில் அழைத்தான் .

அழைப்பு போகவில்லை

"அப்போ நாம யாருக்குக் கூப்பிடறோமோ அவங்க, நேரிலேயே வந்தராங்க, அதும் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் இதுல அழைக்க முடியுது ..."

“சரி இது உண்மையானு நாளைக்கு சோதிச்சுப் பார்க்கலாம்..” என்று அவசரமாக உறங்கப் போனான்.

அவன் காத்திருந்த "நாளை' சீக்கிரமே விடிந்துபோனது.

எழுந்தவுடன் அவன் சந்தேகம் தணிக்க, அலைபேசியில் எண்களை தேர்வுசெய்து கொண்டிருந்தான்.

அவனுடை பால்ய சிநேகிதி ரேஷ்மாவை அழைக்கத் தோன்றியது, நான்கு வருடத்திற்கு முன் அவள் வேலைக் காரணமாக மலேசியாப் போயிருந்தாகத் தகவல்.

அழைத்தான் ... எண்கள் ... உறுமியது

நீண்ட உறுமலுக்குப் பின் அடங்கியது...

நிமிர்ந்து பார்த்தான்.. அவன் எதிர்பார்த்த அழைப்பு மணி அடிக்கவில்லை.

பெருமூச்சுடன் கண்களை மூடினான்.

வீட்டின் அழைப்பு மணி அடித்தது…..

மிகுந்த எதிர்பார்ப்பும், படபடப்பும் கலந்த தோரணையில் கதவைத் திறந்தான்,

"ஹை பிரேம் ... ஹாவ் ஆர் யூ..."  

"ரேஸ்... ஸ் ... மா ... ? எப்படி ... இருக்க ... நீ எப்படி இங்க..."

"உன் வீட்டுக்கு கீழ இருக்கற கீதா என் ரிலேஷன் ... நீ மேல இருக்கறத உன் அம்மா மூலமா கேள்விப்பட்டேன் ... அதுதான் பார்த்துட்டு போலாமேன்னு ..."

"நீ மலேசியாவுல ..."

"நான் வேலைய விட்டு ரெண்டு மாசம் ஆகுது, இங்கயே ஒரு வேல தேடிட்டு இருக்கேன்."

‘சரி’ என்ற பிரேமிற்கு ரேஷ்மாவை பார்த்த மகிழ்ச்சியை விட,தன் பரீட்சை வெற்றி பெற்றதில் தான் மகிழ்ச்சி.

அன்று உறக்கமற்ற இரவை மேய்ந்திருந்தான் .

அடுத்த நாள் யாரை அழைப்பது என்ற குழப்பம் அவனுக்கு இருந்தது. முதலமைச்சர் ... பிரதம மந்திரி ... அமெரிக்கா அதிபர் ... வகுப்பு ஆசிரியர் ... அத்தை... இப்படி எண்களை கொதறிக் கொண்டிருந்தான், இறுதியில் பாட்டிக்கு, பாட்டி தான் செத்து ஒரு வருஷம் ஆகுதே ... அந்த நம்பர் அப்போவே தூக்கிப் போட்டாச்சு ... சரி நாளை முயற்சிப்போம் ... என்ற தீர்க்கமான யோசனைக்குப் பின் தூங்கிப் போனான்.

விடியலுக்குக் காத்திருந்தவனாய், அலைபேசியுடன் எழுந்தான்.

தன் பாட்டியின் எண்ணை தேடிப்பிடித்து... அழைத்தான்

அழைப்பு மணி ஒலித்தது ... திடீரென்று நின்று போனது ... சில நொடிகளில்…

வீட்டின் அழைப்பு மணி கேட்கிறது…

படபடத்தவன் உடலில் வேர்வை கொப்பளித்தது … கதவை நெருங்குவதற்கு முன் ... கதவு திறக்கிறது...

அவன் பாட்டி கதவைத் திறக்கிறாள்…

"பிரேமு... ஏன்டா... அதுக்குள்ள அவசரப்பட்டு இங்க வந்தே…".

- சன்மது