அன்று வழக்கத்திற்கு மாறாக நகரம் பெரும் அமைதியாய் இருந்தது. பரத் தன் அப்பார்ட்மண்டிற்கு விரைந்து கதவின் பெல்லை அழுத்தினான். மாயா கதவைத் திறந்து புன்னகைத்தாள். 

பயணக் களைப்பாக வந்தவனுக்குக் கொஞ்சம் தேநீர் கலந்து தந்தாள். கூடவே தன் கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்தாள். பரத்தின் கவனம் சட்டனெப் முன் பகுதியில் பாய்ந்தது. "ம்.. முதல்ல டீ... அப்புறம்தான்.." லேசாகப் புன்னகைத்தாள் மாயா.

இரவின் பிடி நள்ளிரவு 12 மணியைத் தொட்டது. புராஜக்ட் இறுதிப் பணிகள் என்பதால் ஒரு வாரம் முழுவதும் நேரம் குறித்து வீட்டிற்கு வர முடியவில்லை அவனால்.

"ஏன் ஒரு மாதிரியாக வாடியுள்ளது உன் முகம்... ஆபிஸ்ஸில் ஏதாவது பிரச்சனையா?"

இல்லை என்று சொல்லிக் கொண்டே உடைகளைத் தளர்த்தினான்.

"அந்தப் பிராஜக்ட் பீஸ் ஏதாவது உன்னைச் சொன்னானா?"

"இல்லை மாயா.." வசதியான கைலிக்குள் மாறிவிட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

"இல்லை உடம்பிற்கு ஏதாவது செய்யுதாடா?" என்று கேள்விகளை அடுக்கினாள்.

அருகில் சென்று லேசான முத்தம், அந்த அரை விளக்கொளியில் அனுபவிக்க வேண்டிய முத்தம்தான்.

"இல்லை மாயா… வீட்டிலிருந்து போன் கால் வந்தது" என்றான்.

மாயாவிற்கு ஒரு மாதிரியான கலக்கம் தொற்றிக் கொண்டது. புன்னகை மறைந்தது.

"அப்பாவிற்கு உடல் கொஞ்சம் முடியவில்லையாம் மாயா. நான் வர வேண்டிய அவசியம் இல்லையாம். கடமைக்குச் சொல்கிறேன் என்று பெரிய அக்கா வனிதா போன் செய்தாள்."

"ஏன்டா பரத் எவ்வளவு நாட்கள் ஆச்சி.... நீ இங்க இருந்து போயி... ஏதாவது ஒரு போன் கால் உண்டாடா...அப்பா எப்படி இருக்கிறார், என்ன ஆச்சி என்று கொஞ்சம் கூட உனக்கு அக்கறையில்லையாடா? அவர்தான் உன் மேல் கோபமாக இருந்தாரென்றால் உனக்கு எங்கடா போச்சு அறிவு என்றாள். நாளைக்கு ஏதாவது ஒன்னுனா சொல்லாமல் செய்து விட்டார்களே என்று நீ சொல்லக்கூடாது பார்... அதற்காகத்தான் உன் கிட்ட சொல்லிட்டேன். நீ அந்த அசிங்கத்தோடு மட்டும் இங்க வரவே வராத. அப்படி வரனும்னு தோனுச்சுனா நீ மட்டும் தனியா வாடா... என்று போனை வைத்தாள்"

எது அசிங்கம், இவளும் ஒரு பெண்தானே எனக் கோபப்பட்டான் பரத். மாயாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு வருடம் ஆகி விட்டது. இருவரும் ஒரே அலுவலகம், ஒரே இடத்தில் வேலை. யாருக்கும் சொல்லாமலேயே மாயாவைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டான். முதன்முதலில் இந்தத் தகவலை பரத் தன் அப்பாவிடம் சொன்னபோது, "வேணாம்டா.. அவ சாதி நமக்குச் சரிப்பட்டு வராது. பேசாமா விட்டுட்டு வந்துவிடு" என்று சொன்னார்.

"எப்படிப்பா அவளும் பெண்தானப்பா. என்னை நம்பி வந்தவள், நான் அப்படியெல்லாம் விட்டுவிட முடியாதுப்பா" என்றான்.

அப்பாவின் கோபம், அம்மா, அக்கா என்று அனைவரும் சேர்ந்து கொண்டு காதில் சகிக்க முடியாத சொற்களால் பரத்தை பதம் பார்த்தார்கள். சாதிக்குக் கூட இவ்வளவு விளக்கங்களையும் அவச்சொற்களையும் கட்டமைத்து வைத்துள்ளதைக் கண்டு கோபப்பட்டுக் கிளம்பியவன், கிராமத்தின் பக்கம் ஓராண்டாக தன் கால் தடம் கூட பதிக்க விரும்பாமல் சென்னையிலேயே இருந்து விட்டான்.

மாயாவின் வீட்டில் சில நாட்கள் சங்கடங்கள் இருந்தாலும், அவர்கள் பரத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பரத்தின் சொந்த ஊரைப் பற்றியோ, சாதியைப் பற்றியோ அக்கறை இல்லை. இருவரும் நல்ல மனிதர்களாக வாழ்ந்தால் போதும் என்று முழு சுதந்திரம் தந்தார்கள். மாயா வீட்டுக் கலாச்சாரமும் உபசரிப்பும் மிகவும் பிடித்துப் போயிருந்தது. இருந்தாலும் தன்னுடைய பணி அழுத்தம் காரணமாக மாமியார் வீட்டிற்குக் கூட இந்த ஒரு வருடத்தில் இரண்டு முறை தான் சென்றிருப்பான்.

தனக்கு வந்த போன்கால் குறித்த சிந்தனையின் ஆழத்தில் மாயாவோடு சேர்ந்து தேநீர் உறிந்து குடித்தான். தேநீர் சற்று சூடாகவே இருந்தது. மெல்ல கப் அன் சாசரை கீழே வைத்தான்.

மாயா நகர கலாச்சாரத்தில் தன் வாழ்வை அனுபவித்தவள். அழகான நீளமான தலைமுடி. அற்புதமான பாடிலாங்வேஜ். அதிகப் பொறுமை, அடிக்கடி சொல்லும் டியர் போன்ற வார்த்தைகளில் தோன்றும் அன்பின் பரிணாமத்தில் ஒளியாக மாறிப் போவதுண்டு. தினமும் அதில் எரிவது பரத்திற்கு மிகவும் பிடிக்கும். இவ்வளவு அழகாக இருந்தவளின் அழகை அந்த சாதி பிடுங்கிக் கொண்டது. அது அவள் சான்றிதழைக் காட்டும் பொழுதும், அதை வெளிப்படுத்த அவசியம் வரும்பொழுது மட்டும் நடந்தது.

புதுவையின் நகரப் பகுதியிலிருந்து சற்று தள்ளியிருந்தது அவள் வீடு. எப்பொழுதும் அதிகாலை அவர்கள் பேருந்து பயணத்தில் தொடங்கிய காதல் சென்னை சென்று சேரும் வரை வளர்ந்தது. காதல் ஆரம்பித்தது முதலே பரத் அவ்வளவாக கிராமத்தின் பக்கம் செல்வதைக் குறைத்துக் கொண்டான். 
காதல் எப்பொழுதும் போதையையும் நேரத்தையும் விழுங்கி விடும்.

புதுவையிலிருந்து சற்று தள்ளி ஒரு மணி நேரப் பயணத்தில் சென்றடையும் கிராமம். இன்று பெரும்பாலும் நகர வாசனை தொடாத கிராமங்களே இல்லை என்று சொல்லி விட்டாலும், இன்னும் நகரத் தன்மைக்கு முற்றிலும் மாறாத நிறைய கிராமங்கள் இருப்பதைப் போல்தான் பரத்தின் ஏம்பலம் கிராமம். நிறைய பறவைகள், மரங்கள், சேவல்களின் சப்தங்கள், பம்பரம், கிட்டிப்புள் விளையாட்டு, நடந்து செல்லும் அரசுப் பள்ளிக்கூட பிள்ளைகள் என அப்படியே இருந்தது கிராமம்.

கட்டிப் பிடித்து கட்டிலில் அமர்ந்து கொண்டே, "மாயா நீயும் கிளம்பு. காலை ஐந்து மணிக்கு பஸ் ஏறிச் செல்வோம்" என்றான். மாயா பயந்தாள்.

"நான் எதற்கு பரத்? என்னால் உனக்கு நிறையப் பிரச்சனைகள் வரும்டா, ப்ளீஸ் நான் வரவில்லை" என்று ஒதுங்க நினைத்தாள்.

பரத் விடுவதாக இல்லை. அவன் மீண்டும் "இல்லை மாயா... நீ வந்துதான் ஆக வேண்டும்" எனச் சொல்லிக் கொண்டே செல்லமாக இறுக்கி அணைத்து முத்தமிட்டான். எவ்வளவு சுதந்திரமான முத்தங்கள்! அப்பார்ட்மண்டில் இவ்வளவு சுதந்திரமான முத்தங்கள் இருக்கிறது என்பதால்தான் இவ்வளவு உயரம் வளர்ந்து நிற்கிறது. மாயா தன் இதழ்களைப் பிரித்துச் சிரித்தாள். அறைவிளக்கை மறுகையால் அணைத்தாள்.

காலை ஐந்து மணிக்கு அடையாற்றிலிருந்து ஈ.சி.ஆர் பயணத்தில் பஸ் புறப்பட்டது. வழக்கமான பயணங்கள் என்றாலும் மாயா சற்று பதற்றத்துடன் இருந்தாள். மூன்று மணி நேரத்தில் பஸ் புதுவையை அடைந்தவுடன் அங்கு காத்துக் கொண்டிருந்த மாயாவின் தந்தை "நானும் வரலாமா மாப்பிள்ளை? என்றார். அதற்குள் டாக்சியையும் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டையுமே மறுத்தான் பரத்.

"வேண்டாம் மாமா! நாங்கள் பஸ்ஸிலே போகிறோம். போய் அங்கிருக்கும் நிலவரம் குறித்து போன் செய்கிறோம்" என்று அவசரமாகத் தன் கிராமம் நோக்கிப் பயணிக்கும் பேருந்தில் ஏறினார்கள்.

"bye மாமா"

"bye அப்பா" என்று கூறிக் கொண்டிருக்கும்போதே புறப்பட்டது பஸ்.

வழியெங்கும் தனது சிறுவயது அனுபவங்களை ஆங்காங்கே கை காட்டிச் சொல்ல ஆரம்பித்தான். பஸ் நிறுத்தங்களில் கூட அவன் மனதில் நிறைந்த நினைவுகளின் தடங்களைப் பகிர்ந்து கொண்டே வந்தான்.

"ஏம்பலம் இறங்குங்கள்" என்று விசிலடித்தார் கண்டெக்டர். என்னதான் அப்பாவின் மேல் கோபப்பட்டாலும் தன் சொந்த மண்ணின் மூச்சுக்காற்று பட்டதும் கொஞ்சம் புத்துணர்வு பிறந்தது. மனிதர்களும் இந்த மண் போல் இருந்து விட்டால் என்ன? எதையும் ஒரு போதும் பிரித்துப் பார்ப்பதில்லையே இந்த மண்.

இருவரும் நடந்தார்கள். கிராமம் முழுவதும் முன்பைவிட சாதிக்கான தடங்கள் நிறையவே இருந்தன. அது கொடிக் கம்பங்கள், சுவரில் படங்கள் என முன்பைவிட இப்பொழுதுதான் அதிகமாக இருப்பதைப் பார்த்தான். ஒரு வேளை சாதியை ஞாபகப்படுத்தவே முளைத்துள்ள இந்த நிறங்களின் மேல் வெள்ளை அடித்தால் என்ன? எதற்கு இவ்வளவு வெளிப்பாடு, வேண்டாம் என்று சொன்ன பெரியாரின் படம்தானே இருக்க வேண்டும். அந்தத் தெருவிலிருந்தவர்கள் அனைவரும் மாயாவைப் பார்த்து வியந்தார்கள். 'எவ்வளவு அழகு, நல்ல பெண்ணைத்தான் புடிச்சிருக்கான்' என்று பேசிக் கொண்டார்கள். அதற்குள் பரத்தின் நண்பன் குரு எதிரில் வந்து "இந்தாடா மாப்பிள்ளை நீங்க இருவரும் போங்க" என்று தன் வண்டியைக் கொடுத்தான்.

மாயாவை ஏற்றிக் கொண்டு வீடு வந்ததுதான், இதற்காகவே காத்திருந்தவர்கள் போல் ஆரம்பித்து விட்டார்கள், "என்னடி தைரியம் உனக்கு? நீ எப்படி இங்க வருவே? எங்களையும் என் பிள்ளையையும் பிரித்து விட்டுட்டயேடி பாவி" என்று கத்தும் அம்மாவைப் பார்த்து முறைத்தான் பரத். இதையெல்லாம் அறிந்து தெளிந்தவள் தான் மாயா. அவளுக்கு ஓஷோவை அதிகமாகப் பிடிக்கும், பரத்திற்கும்தான். அந்த இடத்தில் அமைதியாகவே இருந்தாள்.

"எங்க அப்பா?" என்று கேட்டான்

"ம்.. வீட்டுக்குப் பின்னாடி தோட்டத்தில் உள்ள அறையில் படுக்கப் போட்டிருக்கு" என்றாள் அம்மா.

அதற்குள் பரத்தின் நண்பன் குரு, "உங்க அப்பாவிற்கு நீ போனதிலிருந்தே ரொம்ப முடியலடா மாப்பிள்ளை. படுத்த படுக்கையா இந்த மூனு மாசமாக கிடக்கறாரு, இவர்கள் யாரும் அப்பாவைத் தொட மாட்டார்கள். உங்கள் வீட்டிற்கு வேலைக்கு வரும் தனுசு தாண்டா இத்தனை நாளா குளிப்பாட்டி துணியை மாற்றிவிட்டு போவுது" என்றான்.

"என்ன இது? அப்பா எந்த மாதிரி வாழ்ந்தவர், ஹாலில் படுக்க வைத்து பார்த்துக் கொள்ளலாமே" என்றான் கோபத்துடன் பரத்.

"ம்... எங்களால வார முடியல, கழுவ முடியல... தனுசு வீட்டுக்குள்ள வரக்கூடாது, அதனால் தோட்டத்து வழியா வந்து வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, இந்த மனுஷனையும் அப்படியே கழுவி விட்டுவிட்டு, இடத்தையும் சுத்தம் செய்து விட்டுப் போவாள். எங்களால் இதெல்லாம் செய்ய முடியாது" என்றாள் சப்தமாக.

"அப்படியென்றால் இவ்வளவு நாள் வேலை செய்யும் தனுசுவும் மனிதர் தானே!"

அப்பாவின் முன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் நின்றிருந்த அம்மாவிற்கு எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல், யார் தந்தது என்பதைப் புரிந்து கொண்டு தன் இரண்டு அக்காவையும் அவர்கள் வீட்டுக்காரர்களையும் பார்த்து முறைத்தான்.

அவனுக்கு வீட்டிற்குள் போகப் பிடிக்கவில்லை. மாயாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே தோட்டத்து வழியாக பின்புறமாக அப்பாவின் அறையை அடைந்தான். மாட்டுக் கொட்டகையை ஒட்டிய அறை சற்று நீளமாக இருந்தது. ஒரே ஒரு மின்விசிறி கடகடவென சப்தத்துடன் ஓடியது.
அந்த அறையில் மாட்டுத்தீவனங்கள் சில மூட்டைகள் இருந்தது. மற்றொரு மூலையில் அப்பா படுக்கையில் கிடந்தார். அப்பொழுதுதான் தனுசு சுத்தம் செய்திருக்கிறாள். பீனாயில் வாசனையும், சோப்பு வாசனையும் கலந்து வந்தது. அவர் மேல் ஒடிக்கலம் பூசப்பட்டிருந்தது. அவருக்கு அந்த வாசனை பிடிக்கும்.

தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனுசு இவர்களைப் பார்த்து "வாங்க சாமி" என்றாள். கூடாட்டம் உடம்பு, வயதானவள். இரண்டு பிள்ளைங்களையும் கரைசேர்த்து பேரன் பேத்திகளைப் பார்த்தவள். இந்த குடும்பத்திற்காக உழைத்த உழைப்பு அளவில் சொல்ல முடியாது. இவற்றை எல்லாம் சிறிய வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் பரத். இப்படி வசதி படைத்த கருணையற்ற மனிதர்களுக்காக மற்றொரு மனிதர்கள் கூட்டமாக அடிமையைப் போன்று உழைப்பதை கொஞ்சமும் விரும்பாதவன் பரத்.

"உங்கப் பெயரைத்தான் இத்தனை நாட்களாக சொல்லிக் கொண்டே இருந்தார். என் காதில் உங்கப் பெயரை கேட்டு கேட்டு எனக்கு கூட
உங்க நினைவுதான் சாமி" என்றாள். அப்படியே அவள் கைகளைப் பிடித்து முத்தமிட்டான்.

"விடுங்க சாமி... யாராவது பார்க்கப் போகிறார்கள்" என்றாள் தனுசு.

"உங்க வீட்டு சோத்தை சாப்பிட்டிருக்கேன் சாமி, ஐயாவிற்கு இதைக் கூட செய்யவில்லையென்றால் நான் சாப்பிட்ட சாப்பாடு உடலில் ஒட்டாதுங்க சாமி" என்றாள்.

"இந்த சாமியெல்லாம் விடு தனுசு. நீ இந்த மாதிரி இனிமேல் சொல்லக்கூடாது" என்று கட்டிப் பிடித்தான். அவள் மேல் மாட்டு சாணத்தின் வாடை வீசியது. "என்ன இது இந்த புள்ள இம்புட்டு பாசமா இருக்கிறது... எல்லாம் உங்க வேலையா சின்னமா?" என்று மாயாவைப் பார்த்து கேட்டாள் தனுசு.

மாயா "இல்லை... எங்க ஆபிஸ் பழக்கம்" என்றாள்.

"பராவாயில்லையே நல்ல ஆபிஸ்தான்" என்று சொல்லிவிட்டு இவர்களை அழைத்துக் கொண்டு பெரியவர் படுத்திருந்த இடத்திற்குச் சென்றாள்.

"ஏங்க சாமி.. இங்க பாருங்க நீங்க அடிக்கடி கூப்பிடுவிங்களே நம்ம சின்ன ஆண்ட வந்திருக்காங்க" என்றாள் தனுசு.

"தனுசு..." என்றான் பரத்.

"இல்லைங்க சாமி அப்படியே கூப்பிட்டு, கூப்பிட்டு பழக்கமாயிப் போச்சு" என்றாள் தனுசு.

இப்படி கூப்பிட்டுக் கொண்டிருக்கும் கடைசி மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள். அப்படி கூப்பிடுவதை ரசிக்கும் மனிதர்களும் நிறையவே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே, "அப்பா..." என்றான்.

எப்படி இருந்தவர், தேகமெல்லாம் சுருங்கி போச்சு... படுத்த படுக்கையிலே எல்லாம்... மருத்துவர்கள் கைவிரித்தாலும் சில காலம் தாங்கிக் கொள்ளும் இயற்கை எப்படியெல்லாம் விளையாடுகிறது.

"அப்பா நான் பரத்பா" என்றான். கண் திறக்கவேயில்லை.

"அப்பா என்னோடு நான் கல்யாணம் செய்துகிட்ட பொண்ணும் வந்திருக்கா... ஒரு முறை பாரேன்" என்றான்.

"மாமா…" என்று அழுகையோடு மாயா அழைத்தாள்.

மெல்ல கண்வழித்து மாயாவைப் பார்த்தார் அப்பா. அவர் கண்களில் இருந்த அடையாளங்கள் அழிந்து போயிருந்தது.

பேச முடியாமல் முக்கி முக்கி பேசத் தொடங்கினார். "டேய் உடம்பில் தெம்பு இருக்கிற வரைக்கும் தான் எல்லா பலமும். அது போயாச்சு. எல்லாத்தையும் பொண்ணுக்கே எழுதி வாங்கிக் கொண்டார்கள். இந்த கொசுக்கடியில மூனுமாசமா கிடக்கிறேன்மா." 

மாயா அவர் வற்றிப்போன கையை அழுத்திப் பிடித்தாள். "ஒரு முறை நீ வந்து பார்க்க மாட்டாயா என்று ஏங்கியிருந்தேன். உன்னை கடைசியாகப் பார்த்து விட்டேன்" என்று அழுதார்.

"உன் மேலே கொஞ்சம் பணம் போட்டு வச்சிருக்கேன். அதுக்காகத்தான் உன்னை வரச் சொல்லியிருக்காங்க. நீ பாட்டுக்கும் தானம் அது இதுனு சொல்லிட்டு ஏதாவது செய்துவிடாத.. அதை எடுத்துப்போயி கூட கொஞ்சம் பணத்தைப் போட்டு சென்னையில ஏதாவது பிளாட் வாங்கி சந்தோஷமாக இருப்பா" என்று சொன்னார்.

"அப்பா நீயும் என் கூட வந்துடேன்பா. மாயா இருக்கா. நான் இருக்கிறேன் பா, பார்த்துகிறோம்பா" என்றான்.

"அப்படி ஒரு வாழ்க்கை வாழனும்தான் ஆசையா இருந்தேன். மாயாவைப் பார்ப்பதற்கு நல்ல லட்சனமாகத்தாண்டா இருக்கிறாள். நான் பார்த்து கல்யாணம் செய்திருந்தால் கூட இப்படி ஒரு பெண் கிடைத்திருப்பாளா தெரியலை பா.."

சற்று நேரம் எந்தச் சொல்லும் வரவில்லை.

பிறகு..."மாயா என் பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக்கோமா" என்று அவள் கையை இறுகப் பற்றினார்.

மாயாவின் கண்ணீர்த் துளிகள் அவர் கைமீது பட்டது.

"இது போதுமா" என்று சொன்னார்.

"இந்த மூனுமாசமா ரொம்பவும் முடியலைப்பா" என்று தேம்பி அழுதார்.

"அப்படி நான் ஏதாகினும் தப்பித் தவறிப் பிழைத்து விட்டால் நானும் வரேன்பா உங்க அப்பார்ட்மண்ட்க்கு. அதையெல்லாம் பார்க்க வேண்டும் போல் ஆசையாகத்தான் இருக்கிறது" என்று சொல்லிக் கண்மூடியவர்தான், திறக்கவேயில்லை.

அப்பா அனுமதி கிடைத்து விட்டது. வீட்டிலிருந்த மற்றவர்கள் யாரும் அனுமதிக்கவேயில்லை. வீட்டிற்குள் செல்லாமலேயே அதே தோட்டத்து வழியாகவே மீண்டும் இருவரும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். சில நாட்கள் நடந்த கசப்பான நிகழ்வில் மாயா கொஞ்சமும் பரத் மேல் கோபப்படவேயில்லை. அந்த கிராமத்திலேயே அவனைக் கட்டிப்பிடிக்க ஆசைப்பட்டாள். அவன் கண்ணீரும் விவாதங்களும் விடுதலையை நோக்கியே நகர்ந்தது அவளுக்கு மிகவும் பிடித்தது. அவள் காதல் கடலளவு பெருகி அடக்கி வைத்திருந்தாள். அப்பார்ட்மண்டை அடைந்து கதவைத் திறந்து தாழிட்டவள், தனக்குள்ளிருந்த தீராத அன்பை மடைதிறந்த வெள்ளம் போல் திறந்துவிட்டாள். அப்படியே பரத்தை கட்டிப்பிடித்து அழுது முத்த மழையில் நனைத்தெடுத்தாள்.

இந்த சுதந்திரம் தான் அவளுக்கு மிகவும் பிடித்தது. இருவர் தனிமையில் எதுவுமே இல்லை. அங்கே அன்பின் விளக்கு பிரகாசமாய் எரிந்தது.

ஒருவர் மனதில் அடையாளம் அழிந்து விட்டாலும், மீண்டும் அடையாளம் முளைத்து விடுகிறது. சில மாதங்கள் அழகாக நகர்ந்து சிறகடித்தது அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை.

முற்றிலும் அடையாளம் அழிந்த, அழிக்க மூன்றாவது குரல் ஒன்று அப்பார்ட்மண்டில் அவர்கள் அறையில் ஒலித்தது.

- ப.தனஞ்ஜெயன்