​நான் மறுநாள் மூச்சிறைக்க அந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது மூட்டையை அங்கு காணவில்லை. வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. காலைக்கூதல் இன்னும் மறையவில்லை. எனது உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. பற்கள் கிட்டிக்கத் துவங்கியிருந்தது. எங்கே போயிருக்கும் அந்த மூட்டை? ஆமாம் என்னுடைய பைக் எங்கே? மூட்டை கிடந்த நடை மேடைக்கு அருகிலே தானே நிறுத்தினேன். என்னதான் போதையில் இருந்தாலும் பைக் நிறுத்தியது எனக்கு நன்றாகவே நினைவிலிருந்தது. எங்கே போனது பைக்? பயந்தது போல போலீஸ் வந்து மூட்டையையும் பைக்கையும் தூக்கிக் கொண்டு போய் விட்டார்களா? எனக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது. குப்பென்று வேர்த்தது. கடவுளே.. அவ்வளவு தானா? 

​அந்த பேருந்து நிறுத்தத்தில்... என்ன அது.. பைக்.. என்னுடைய பைக் தான்.. அப்பாடா நல்ல வேளை போலீஸ் எடுக்கவில்லை. ஆனால் யார் அதை அங்கு கொண்டு போய் நிறுத்தினார்கள்? நெஞ்சு தடதடக்க ஓடினேன். நேற்று நடந்த சம்பவங்களின் மௌன சாட்சியாக நின்றிருந்தது அந்த பைக். ஆமாம் பைக் சாவி எங்கே? பைக்கின் ஹேண்டில் பாரை அசைத்துப் பார்த்தேன். பூட்டியிருந்தது. பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் என்ன அது? நகக்கீறல்.. அச்சு அசலாக என்னுடைய புறங்கையில் இருப்பதைப் போலவே. கடவுளே. அப்படியானால் யாரோ இதை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்க வேண்டும். யாராக இருக்கும்? தலை கடுமையாக வலித்தது.

நேற்று நம்மையும் பைக்கையும் தவிர வேறு யாரேனும் இருந்தார்களா? நெற்றிப் பொட்டை அழுத்திப் பிடித்தேன். சக்கரத்துக்கு அருகில் என்ன அது? வெளிர் மஞ்சள் நிறத்தில் கோரைப் பல். இல்லையில்லை, பாதி உடைந்த கோரைப் பல். யாருடையது? ஆமாம் அந்த நாய்.. எங்கே அந்த நாய்? வழித்தெடுத்த கருப்பு. சிவந்து அரை அடிக்கு தொங்கிய நாக்கு. அதிலிருந்து வடிந்து கொண்டிருந்த எச்சில். அதன் கண்களில் தெரித்த வன்மம். அடிவயிற்றிலிருந்து எழுந்த அதன் குரைப்பு. பின்னங்காலை மடக்கி உடலைக் குறுக்கி மேலே பாய்வதற்கு எத்தனித்த அதன் ஆக்ரோஷம். எனக்கு அடிவயிற்றில் சிலீரென்று பாட்டில்கள் உடைந்தது.

​***

​இரண்டாவது மது பாட்டிலை அவர்கள் உடைக்கும் போதே நான் கிளம்பி இருக்க வேண்டும். என் போறாத காலம். கொரோனா கால ஊரடங்கில் சாத்தப்பட்ட மதுக்கடை திறக்கப்பட்ட போது இதற்கு மேல் இல்லை என்பது போன்ற குடி வெறி என்னுள் கிளர்ந்தது. பிளாஸ்டிக் டம்ளரை கசக்கி எறிந்து விட்டு, நண்பர்களை நோக்கி கை ஆட்டி, பைக்கை உதைத்த போது மணி இரவு பதினொண்ணு ஐம்பது என்றது.

​ஊரடங்கில் இரவுக்கு சற்று சீக்கிரமாகவே விழிப்பு வந்து விடுகிறது. 7 மணிக்கெல்லாம் உறங்கத் துவங்கி விடும் ஊர், நடுநிசி 12 மணிக்கு புதைக்கக் காத்திருக்கும் பிணம்போல விறைத்துக் கிடந்தது. நாய்களெல்லாம் கூட எங்கோ பதுங்கிக் கொண்டன போலும். தெரு துடைத்து விட்டாற்போல இருந்தது. சாலையோரப் புளிய மரத்தில் ஒரு அசைவுமில்லை. இலைகளைச் சிமிட்டாமல் என்னையே உற்றுப் பார்ப்பது போன்ற ஒரு பிரமை. பைக்கின் உறுமல் கூட சற்றே அச்சத்தை ஏற்படுத்தியது.. அன்றைய இரவு ஏதோ ஒரு அமானுஷ்யமானதாக இருந்தது. வயிற்றினுள் கிடந்த ஆல்கஹால் எனக்குள் கொஞ்சம் தைரியத்தை ஊறச் செய்தது.

​ஹெட் லைட் வெளிச்சத்தில் ரோட்டைக் கடந்த ஒரு பூனையின் கண்கள் ஏனோ தீக்கங்கைப் போலத் தெரிய, குபீரென்று நெஞ்சடைக்க அனிச்சையாக பிரேக்கை அழுத்தினேன். பதட்டத்தில் கிளட்சைப் பிடிக்க மறக்க, என்ஜின் அணைந்தது. கடந்தது பூனை தான் என்றாலும் என்னால் பதட்டம் தணிந்து நிதானிக்க இயலவில்லை. ச்சை. இதென்ன சிறுபிள்ளைத் தனம். பைக்கை உதைத்தேன். பளீரென ஹெட்லைட் எரிந்த வெளிச்சத்தில் தான் அந்த மூட்டை தெரிந்தது. ரோட்டின் ஓரத்தில், நடைமேடையில் கிடந்தது. அரிசி மூட்டையா? இல்லை வேறெதுவுமா? பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டு போய் அதன் அருகில் நிறுத்தினேன்.

​காளை மார்க் நயம் பொன்னி என அச்சிடப்பட்டிருந்தது. அதன் வாய் ஒரு கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. ஏனோ அந்த மூட்டையை கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. பத்து இருபதல்ல.. ஆயிரம் அல்லது இரண்டாயிரம் இருக்கலாம். திடீரென எங்கிருந்தோ காற்று வீசியது. அது கொண்டிருந்த மணம், நாற்றம், இல்லை நெடி, கொஞ்சம் காடியாக இருந்தது. சதை கருகும் தீயல் நெடி. இதை எங்கோ ஏற்கனவே சுவாசித்திருக்கிறேன். பிணம்.. பிணம் எரிக்கும் மின்சார சுடுகாட்டின் காத்திருத்தல் அறையில் சுற்றும் நெடி. சற்றே குமட்டியது. பொதுவாக நான் குடித்திருக்கும் போது வாந்தி எடுப்பதை வெறுப்பவன். அதன் பின் வரும் நிமிடங்கள் நரகம்.

​சுற்றும் முற்றும் கொசுக்களைத் தவிர வேறொன்றும் இல்லை. என் கைகளில் ஏதோ குறுகுறுக்க.. தூக்கிப் பார்த்தேன். கொசுக்கள். பழ ஈக்களை விட கொஞ்சம் அளவில் பெரியவை. படீரென அடித்தேன். இரண்டு செத்து விழ மற்றவை சரேலென்று பறந்து மீண்டும் கையில் அமர வந்தன. இதென்னடா எளவா போச்சு... இத்தனை கொசுக்களா? மூட்டையை மீண்டும் ஒரு முறை கவனமாகப் பார்த்தேன். அரிசியைப் போலத் தெரியவில்லை. மேடும் பள்ளமுமாக. கொசுக்கள் அப்பிக் கொண்டு... மீண்டும் அந்த காற்று. இப்போதும் ஒரு மொக்கை நெடி. ஆனால் சதை வேகும் நாற்றம் அல்ல. இரத்தம்.. ஆமாம் ரத்த வாடை. பச்சை ரத்தம்.. எங்கிருந்து வருகிறது அந்த வாடை? என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.. மூட்டை.. ரத்த வாடை... கொசுக்கள். எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. நெஞ்சு முழுவதும் பயம் பரவியது. என்னை அறியாமல் கை நெற்றிப் பொட்டை அழுத்தியது. பின்னங்கழுத்தில் பெருகிய வேர்வை முதுகில் கோடாக வழிந்தது. பேசாமல் அந்த இடத்தை விட்டு போய் விடலாமா எனத் தோன்றினாலும், அந்த மூட்டை என்னை அதனருகில் இழுத்தது.

​பைக்கை விட்டு இறங்கி மெதுவாகச் செல்வதற்குள் ஒரு மாமாங்கம் ஆனதைப் போல இருந்தது. தொப்பலாக நனைந்து விட்டிருந்தேன். ஆனாலும் போதை முற்றிலுமாகத் தெளியவில்லை. சரக்கு அப்படி. கொசுக்கள் கம்பளிப் பூச்சியைப் போல அப்பிக் கொண்டு கிடந்தன. அவற்றின் சிறகடிப்பு யாரோ மெலிதாக மூச்சு விடுவதைப் போல இருந்தது. மெதுவாக மூட்டையைத் தொட்டேன். அரிசி, ஓட்டை உடைசல்கள், இல்லை. என் கையில் சிக்கியது.. விரல்கள். ஆமாம் விரல்கள் தான். அப்படி என்றால்.? என்னை அறியாமல் ஆவென்று அலறினேன். யாரோ என்னை தள்ளி விட்டதைப் போல இரண்டடி பின் நகர்ந்தேன். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

​நடுநிசி, மூட்டை, ரத்த வாடை, கொசுக்கள், விரல். ஆமாம் அது பிணம். பிணம் தான். உடம்பு ஜிவ்வென்று ஆனது. மூச்சு வாங்கியது. கட்டைப் பிரிக்கலாமா? பிரித்துத் தான் பார்ப்போம். மூட்டையை நெருங்கினேன். கட்டப்பட்டிருந்த அதன் வாயை அவிழ்க்க முயன்...... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பக்கவாட்டில் என்ன சத்தம்? கண்கள் தானாகத் திரும்ப, வழித்தெடுத்த கருப்பு, சிவப்பு நிறத்தில் அரை அடிக்குத் தொங்கும் நாக்கு, அதில் வடியும் எச்சில். மேலேறிய உதடுகள், மஞ்சளேறிய கூரான கோரைப் பற்கள், விடைத்து நிற்கும் காதுகள், பின்னங்காலை மடித்து முன்னங்காலை வலுவாக ஊன்றி உடலைக் குறுக்கி, அடிவயிற்றிலிருந்து அது எழுப்பிய பெரும் ஓசை... ல்ல்ல்ல்ல்லொள்ள்ள்ள்

​நான் எப்படி மறுபுறம் பல்டியடித்து, பைக்கின் மீது விழுந்தேன் என்று தெரியவில்லை. அந்த கருஞ்சாத்தான் என் மீது பாய்ந்தது. எனக்கு முன்னால் அது அந்தரத்தில் நின்ற போது, அதன் காலின் அடிப்பகுதியை என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. நகங்கள். கருக்கருவாளைப் போல வளைந்த கெட்டித்த நகங்கள். அது எனது குரள்வளையை கவ்வும் முன்பு சரேலென பக்கவாட்டில் தாவினேன். சாத்தானின் நகம் எனது புறங்கையில் ஆழமாகப் பதிந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அம்மா... அதன் முகம் பெட்ரோல் டேங்கில் மோத கீழே விழுந்தது கருஞ்சாத்தான்.

எழுந்து ஓடத் துவங்கினேன். பேயோட்டம். நெஞ்சு தடக் தடக்கென அடித்துக் கொள்ள என் மூச்சிறைப்பு எனக்கே அச்சமூட்டுவதாக இருந்தது. ஓட்டம். என் பின்னால் அந்த சாத்தான் துரத்தி வந்து கொண்டிருந்தது. அதன் உடல் வாகும் ஆக்ரோஷமும், வெறி தெறிக்கும் கண்களும், சாவுப்பறை போன்ற குரைப்பும் என் உடலை விட்டுவிட்டு உயிரை மட்டும் அள்ளிக் கொண்டு போகத் தோன்றும் அளவுக்கு எனக்குள் பீதியை ஏற்படுத்தி இருந்தது. தொடையைக் கவ்வும் நாயென மட்டும் என் கண்ணுக்கு அது தெரியவில்லை. அதன் வலது முன்னங்காலில் பற்றியிருப்பது பாசக் கயிறா.. தெய்வமே.. ஓட்டம்.. மூச்சிறைப்பு... ஓட்டம்.. திரும்பிப் பார்.. ஓட்டம்.. கொலைவெறி.. ஓட்டம்.. கருஞ்சாத்தான்.. ஓட்டம்...

​ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக் குரைப்புக்கு உறங்கிக் கொண்டிருக்கும் மொத்த நாய்களும் பின்னால் குரைத்துக் கொண்டு ஓடி வந்திருக்க வேண்டும். ஒன்றைக்கூட காணவில்லை. வாயைக் கட்டும் குரளி வித்தை. சீரான வேகத்தில் துரத்தி வருகிறது கருஞ்சாத்தான். போதை இருப்பினும் கால்கள் பின்னிக் கொள்ளவில்லை. தம் தம் என பூமியை உதைத்துக் கொண்டு ஓடினேன். உயிர் பயம். ஒரு மைலுக்கு மேல் ஓட்டம். துரத்தல்.

வீட்டின் கேட்டைப் பிடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்தேன். பாய்ந்து விடும் தூரத்தில் அந்தக் கோரைப்பற்கள். ஒரே கவ்வலில் ஈரல் கொழகொழத்துப் போய்விடும். சட்டென்று கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்து கேட்டை மூடினேன். கருஞ்சாத்தான் பாயத் தயாரான நிலையில் முறைத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஓர் ஆச்சர்யம். குரைப்பதை முற்றிலுமாக நிறுத்தி இருந்தது. வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்து கதவை அறைந்து சாத்தினேன். மெதுவாக ஜன்னலைத் திறந்து பார்த்த போது கருஞ்சாத்தான் பாயத் தயாரான நிலையிலேயே நின்றிருந்தது. ஜன்னலைப் படாரென சாத்திவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

​உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்வையில் தொப்பலாக நானைந்திருந்தேன். கால் வெட வெடவென ஆடிக் கொண்டிருந்தது. ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றேன். என்ன ஆயிற்று? ஏன் இன்றைக்கு இந்த அமானுஷ்யம்? புறங்கையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அந்த பச்சை ரத்த வாடை திடீரென நினைவுக்கு வந்து தொலைக்க.. உவ்வ்வேக்க்க்க். வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வாயிலெடுத்தேன். ரத்த வாடை மட்டுப்பட அறை முழுக்க ஒரு துர்நாற்றம். எழுந்து முகம் கழுவக்கூட பயமாக இருந்தது. அப்படியே படுத்திருந்தேன். ஜன்னலில் கசியும் மூச்சிறைப்பு அந்த கருஞ்சாத்தானுடையதா?

​நெஞ்சு முழுவதும் பயம் மண்டிக் கிடந்தது. அந்தப் பிணம் யாருடையது? ஆணா பெண்ணா? மூட்டைக்குள் இருக்கிறது என்றால், அது சாதாரண இறப்பு இல்லை. யார் கொன்றது? போலீஸுக்குப் போலாமா? ஊரடங்கு காலத்தில் இரவு12 மணிக்கு முழு போதையில் இருக்கும் தன்னை போலீஸ் சந்தேகப்படாது என என்ன நிச்சயம்? தன்னை யாரும் பார்க்காத நிலையில் நாமே ஏன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டும்? என்னுடைய பைக்.. அய்யய்யோ.. அது அங்கு தான் இருக்கிறது. பிணம் குறித்து விசாரிக்கும் போலீஸ் பைக்கை துப்பறிந்தால்... முடிந்தது கதை. நாய் துரத்தியதால் ஓடி வந்ததாகச் சொல்வதை நம்பும் அளவுக்கு அவர்கள் அவ்வளவு பலவீனமானவர்கள் இல்லை. தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்ன செய்யலாம். பைக்கை அங்கிருந்து எடுத்து வந்து விடுவது தான் சரி. ஆம்.

​நானும், மூட்டைப் பிணமும், சில ஆயிரம் கொசுக்களும், அந்த கருஞ்சாத்தானும் என் பைக்கும் மட்டுமே நடந்த விஷயங்களுக்கு சாட்சி. பிணமும், கொசுக்களும் அந்த சாத்தானும் சாட்சி சொல்லப் போவதில்லை. என்னுடைய பைக் இதுவரை என்னிடம் பேசியதில்லை. பைக்கை எடுத்து வந்து விட்டால் இந்தக் கர்மம் தொலையும். ஆனால் அந்த கருஞ்சாத்தான்.?

​ஜன்னலைத் திறந்து பார்த்தபோது இம்மியளவுகூட மாறாமல் அதே பொசிஸனில் நின்று கதவை முறைத்துக் கொண்டிருந்தது கருஞ்சாத்தான். மூச்சிறைப்பு மட்டுப் பட்டிருந்தது. ஆனால் அந்த கண்களின் தெரிந்த வெறி... முதுகுத்தண்டு சில்லிட்டது. என்ன வேண்டும் அந்த சாத்தானுக்கு. ஒரு வேளை அந்த மூட்டைப் பிணத்துக்கு காவல் இருந்ததோ? அதை களவாடிச் செல்ல வந்தவன் என்று நினைத்து வைட்டதோ.. அய்யோ சாத்தானே நான் கள்வன் இல்லை. கொரியர் நிறுவன ஊழியன். என் போதாத காலம் இன்றைக்கு கொஞ்சம் அதிகமாகக் குடித்து விட்டேன். பிணத்தைத் திருடி நான் என்ன கிட்னியா திருடப் போகிறேன். கிட்னி அடி வயிற்றில் இருக்கிறதா இல்லை முதுகில் இருக்கிறதா என்பது கூடத் தெரியாது. ப்ளீஸ் ஓடிப்போ. என்னுடைய பைக்கை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன். சாத்தான் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அதே முறைப்பு, அதே எச்சில் வடியும் அரையடி நீள செந்நாக்கு, தீக்கங்கு கண்கள்.

​திரும்ப வந்து படுக்கையில் விழுந்தேன். வாந்தி நாசநசத்தது. இருந்தால் என்ன. இப்போது சுத்தம் செய்யத் தேவை இல்லை. அறை முழுவதும் துர்காந்தம். எப்படிக் கொன்றிருப்பார்கள்? பெண்ணாக இருந்தால் முறை தவறிய உறவாகக் கூட இருக்கலாம், ஆணாக இருந்தாலும் அப்படித்தான். பெண்கள் மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டுமா என்ன? ரத்தம் இருந்ததா?

மூளைக்குள் மின்னலடித்தது. அடடா, பதட்டத்தில் சரியாகப் பார்க்கவில்லை. ஆனால் ரத்த வாடை?. அது ரத்த வாடை தானா? இதற்கு முன் ரத்தத்தை முகர்ந்து பார்த்திருக்கிறோமா? நகம் வெட்டும்போது சதையை வெட்டி, துளிர்க்கும் ரத்தத்தை நக்கியிருக்கிறோம். அது தனி ருசி. மீண்டும் புறங்கை ரத்தத்தை நக்கினேன். உப்புக் கரித்தது. ரத்த ருசி. ஆனால் நேற்றிரவு நாசியிலேறிய வாடை? ஒருவேளை ரத்தம் வராத அளவுக்கு கழுத்தை நெருக்கிக் கொன்றிருந்தால்? விஷம் கொடுத்திருந்தால்? தலையணையை முகத்தில் அமுக்கியிருந்தால்?

எனக்கு தலைவலி அதிகமானது. நான் கொன்றிந்தால் தானே அது எப்படி செத்தது என்பது எனக்குத் தெரியும். ஆனால் போலீஸ் நம்புமா? மெனக்கெடாமல் ஒருவன் வசமாக சிக்கும் போது எதற்காக விசாரணை செய்ய வேண்டும்? மூட்டைக்குள் இருந்த பிணத்தைக் கொன்றதற்காக இபிகோ செக்‌ஷன் படி..மரணம். தூக்கு.. வெளித்தள்ளிய நாக்கு. அய்யோ..

​எனக்கு உடம்பு தூக்கித் தூக்கி போட்டது. நான் வண்டியை நிறுத்தி இருக்கக் கூடாது. நான் மூட்டையைத் தொட்டேனா? இந்தக் கைகளால் தொட்டேன். கை முழுக்க கொசுக்கடி. கொசுக்களுக்கு ரத்த வாடை மிகவும் பிடித்திருக்க வேண்டும். என்னுடைய ரத்தம் ஓ பாஸிட்டிவ் தானே? யுனிவர்சல் டோனர். அந்தப் பிணத்துக்கு என்னவாக இருக்கும்?. ச்சீ.. என்ன நினைப்பு இது. அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் ஒரு வழிப்போக்கன். அவ்வளவு தான். அந்த பைக். மீண்டும் குப்பென்று வியர்த்து. வெளியே கருஞ்சாத்தான். தலை சுற்றியது. போதை. மூட்டைக்குள் பிணம், கருஞ்சாத்தான். ஈரலைக் குத்திக் கிழிக்கும் கோரைப்பல்.. பைக்.. போலீஸ்.. போதை..மயக்க்க்க்க்க்....

​விழிப்பு வந்த போது சுவர்க் கடிகாரம் 4.30 என்றது. போதை முற்றிலுமாக தெளிந்திருந்தது. தலை சம்மட்டியால் அடிபட்டதைப் போல வலித்தது. கைகளால் தலையை பரபரவெனத் தேய்த்துக் கொண்டேன். ச்சைக். என்ன சரக்கு இது. ஆளைத் தள்ளும் சரக்கு. என்ன நடந்தது நேற்று இரவு. மூட்டை, பிணம், ரத்த வாடை கொசுக்கள். கருஞ்சாத்தான் போலீஸ், பைக் என்னுடைய பைக்.. விலுக்கென படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னைத் திறந்தேன்.

​கருஞ்சாத்தான் கண்களுக்குத் தட்டுப் படவில்லை. எங்கேயாவது ஒளிந்திருக்குமோ? மெதுவாக கதவைத் திறந்து வெளியே வந்தேன். அது ஒருவேளை அங்கிருந்து போயிருக்கக் கூடும். அது இரவு பாயத் தயாராக இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தேன். மண்ணில் நகக்கீறல். சரியாக என்னுடைய புறங்கையில் இருந்த அதே அளவு. அடிவயிறு ஜில்லிட்டது. பைக் இருந்த இடத்தை நோக்கி நடையை எட்டிப் போட்டேன் என்பதை விட ஓடினேன் என்று தான் சொல்ல வேண்டும். பின்னால் கருஞ்சாத்தான் துரத்துவது போன்ற ஒரு பிரமை. ஓடு.. ஓடு..

​***

​பைக்கில் இருப்பது நக்கீறல் அல்ல. பல் தடம். மோதிய வேகத்தில் அந்த சாத்தானின் பல் உடைந்து விட்டிருக்கிறது. அதைத் தடவிக் கொண்டிருந்த போது என் பின்னாலிருந்து வந்தது அந்த சத்தம்.

"தம்பீ”..திடுக்கிட்டுத் திரும்பினேன்.

"யாரு? யாரது?”

"பைக் உன்னோடதா?”.. அந்த உருவம் சராசரிக்கும் குறைவாக இருந்தது.

"நீங்க யாரு?"

"நான் நான் தான். நீங்க யார்?”

"இல்ல.. ஆமா பைக் என்னோடது தான்.”

"என்ன திணறுரீங்க.. உண்மையா உங்களோடதா?”

பைக் நம்பரைப் பார்க்காமல் சொன்னேன். "டேங்க் கவர்ல ஆர்.சி புக் ஜெராக்ஸ் இருக்கு பாருங்க”.

"ஹ்ம்ம்.. இந்தாங்க சாவி.”

ஓடிச் சென்று சாவியைப் பறித்துக் கொண்டேன்.

"அந்த பிளட்பாட்பாரத்துக்கு பக்கத்துல நின்னுட்டு இருந்துச்சு. நான் தான் இங்க கொண்டு வந்து நிறுத்தினேன்.”

"நீங்க எப்போ இந்த வண்டிய பார்த்தீங்க"

"நைட் அங்க தான் தம்பீ நான் தூங்குவேன். காலைல எந்திரிச்சு பார்க்கும் போது இருந்துச்சு.”

எனக்கு வெடவெடவென்று வந்தது.

"அதுக்கு பக்கத்துல ஒரு மூட்டை கெடந்ததே.”.

"மூட்டையா? என்ன தம்பி ஒளருறீங்க"

எனக்கு புகை பிடித்தால் தேவலாம் போல இருந்தது. பேண்ட் பாக்கெட்டில் துழாவினேன். காலி.

"சிகரெட் இருக்கா?”

"நான் பீடி தான் குடிக்கறது தம்பி"

"ஒண்ணு தாங்க.”

அந்த உருவம் தனக்கு கீழே விரித்திருந்த சாக்கின் அடியில் கை விட்டது. சாக்கில் "காளை மார்க் நயம் பொன்னி" என்றிருந்தது. என்னை அறியாமல் ஒரு துளி சிறுநீர் கிழிறங்கியது. முகம் வெளிறிப் போனது.

"ஏங்க.. அந்த சாக்கு?”

"சும்மா கீழ விரிச்சு படுக்கறதுக்கு தான். இந்தாங்க”.

பீடியையும் தீப்பெட்டியையும் வாங்கிக் கொண்டேன். பதட்டத்தில் 3 குச்சிகளை உரசிய பிறகே பீடி பற்றிக் கொண்டது.

"நீங்க அங்க தான் நேத்து தூங்குனீங்களா?"

“4 வருசமா அங்க தான் தூங்குவேன்.”

"கொசுத் தொல்லை இருக்காதா?”

"இந்தியாவில கொசு இல்லாத இடம் இருக்கா தம்பீ..”

எனக்கு அவமானமாக இருந்தது. நான் கேட்ட கேள்வி சுத்த அபத்தம். அப்போ நேத்தைக்கு நைட் நான் பார்த்தது இவரைத் தானா?

"அங்க ஒரே ரத்த வாடையா இருக்கே”.

"அந்த பிளாட்பாரத்துக்குப் பின்னாடி பாத்தீங்களா? டிச்சு. ஊருல இருக்குற கோழிக்கடை கழிவ எல்லாம் அங்க தான் கொட்டுறானுக. நாறாம இருக்குமா?”

"அப்போ அங்க கெடந்த மூட்டை.."

"என்ன தம்பீ சொல்றீங்க. நான் ஒரு மூட்டையும் பாக்கல.”

எனக்கு நன்றாக நினைவு இருந்தது. வாயைக் கயிற்றால் கட்டி இருந்த மூட்டை. இவரை நான் அங்கு பார்க்கவில்லை. நிச்சயமாக. மூட்டையைச் சுற்றி அட்டை போல் ஒட்டிக் கிடந்த கொசுக்கள். நான் வந்து வண்டியை நிறுத்தி தொட்டது கூட அவருக்குத் தெரியாத அளவுக்கா தூங்குவார். ஆங்.. குறட்டை..

"தூங்கும்போது குறட்டை விடுவீங்களா?"

அந்த சிறிய உருவத்தின் கண்களில் ஒருவித எரிச்சல் தெரிந்தது.

"வெளயாடுறீங்களா?”

"இல்லைங்க. நான் நேத்து பைக்க அங்க நிறுத்தும் போது குறட்டை சத்தம் கேக்கல.”

"உங்களுக்கு கடன் இருக்கா தம்பி?”

நான் ஆமாம் என்பதாகத் தலையாட்டினேன்.

"எனக்கு இல்ல. படுத்தா அடுத்த செகண்ட் தூக்கம் தான். கடன் இருந்தா தூக்கம் வராது. குறட்ட மட்டும் வரும். பிச்சக்காரனுக்கு கடனுமில்ல குறட்டையும் இல்ல.”

எனக்கு இப்போது மண்டை காயத் துவங்கியது. என்னதான் நடந்து தொலைத்தது நேற்று. மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த பிணத்தை நான் பார்த்தது நிஜம். என்மீது அந்த நாய் பாய்ந்து பிராண்டியது நிஜம்.. ஆமாம் அந்த நாய்..

"உங்ககிட்ட நாய் இருக்கா?”

அந்த உருவம் என்னை வினோதமாகப் பார்த்தது.

"எதுக்கு கேக்குறீங்க?"

"சொல்லுங்க ஐயா.”

அவர் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு "டேய் மணி" என்றார்.

எங்கிருந்தோ வந்தது அது.

நாய் தான். ஆனால், கருஞ்சாத்தான் அல்ல. பால் வெள்ளை. நேற்று வந்தது இந்த நாய் இல்லை. கண்டிப்பாக இல்லை. இதன் கண்களின் ஆக்ரோஷம் இல்லை. அரை அடி நீளத்துக்கு தொங்கும் நாக்கு இல்லை. நாக்கில் வடியும் எச்சில் இல்லை. விடைத்து நிற்கும் காதுகள் இல்லை. கால் நகங்களை கவனித்தேன். சொத்தையாக இருந்தது. வாலைச் சுருட்டிக் கொண்டு அந்த உருவத்தின் காலை நக்கியது.

இவன் தான் மணி. நல்ல பையன்.

"எங்கடா போயிட்ட" என்றவாறு கையிலிருந்த தடியால் நாயை அடித்தது அந்த உருவம். அது வீல் என்று கதறிக் கொண்டு வாலை பின்னங்காலுக்கு இடையில் சொருகிக் கொண்டது.

"ரொம்ப பயந்தவன்".

கண்டிப்பாக இந்த நாய் இல்லை. இந்த நாய் கதவிடுக்கில் மாட்டிய எலியைப் போல கீச்சிடுகிறது. அந்த கருஞ்சாத்தானின் குரைப்பு. அப்பப்பா. சாவுப்பறை.

"வேற ஏதாச்சும் நாய் இருக்கா.. கருப்பா?”

"இல்ல தம்பி. இது தான்.” பொறுமை இழந்திருந்தார்.

"இந்தாங்க.” 100 ரூபாயை பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். இறுக்கமான முகத்துடன் அந்த உருவம் வாங்கிக் கொண்டது.

பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு அவரைப் பார்த்தேன். அவர் சாக்கின் அடியில் கைவிட்டு ஒரு பொறையை எடுத்து மணியை நோக்கி வீசினார். மணி அதைக் கவ்வுவதற்கு வாயைத் திறந்தது. பல்..கோரைப்பல். அதன் பாதி உடைந்த கோரைப்பல். என்னுடைய ஈரல் கொழகொழத்துப் போனது.

நான் பைக்கை பலம் கொண்ட மட்டும் மிதித்து ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.

- காலச்சித்தன்