மண்வாசனை கமகமத்தது. கருவடை மண்ணை கொழுவால் பிளந்து கொண்டே வயக்காட்டில் வியர்வை நனைய மாடுகளை ஓட்டி உழுது கொண்டிருந்தார் முத்துராமலிங்கம். "என்னளே பன்னறது... இந்த ஒரு ஏக்கரைப் பயிர் செய்வதில் உள்ள சிரமம் இம்புட்டு பாடா இருக்குதே..." என்று மாடுகளோடு பேசிக் கொண்டே நடந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் மனம் துளிர்த்தது. மாட்டுக்கு தட்டைகூட இல்லை. அந்த அளவுக்கு காய்ந்து வெடித்துக் கிடந்த மண் வெடிப்பு தண்ணீர் குடித்து உப்பிப் போய் இருந்தது.

முத்துராமலிங்கத்தின் மனைவி சின்னாத்தா புளிக்க வைத்த கேழ்வரகு மாவை கரைத்து எடுத்துக் கொண்டு, கொஞ்சம் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கல் உப்பை ஒரு தாளில் மடித்து எடுத்துக் கொண்டு வயக்காட்டிற்குக் கிளம்பினாள்.

"வயசான காலத்தில எதுக்குயா இந்த பொழப்பு... ஏதோ அரசாங்கத்தில கொடுப்பதை வைத்துக் கொண்டு அமைதியா கெடக்காமா இந்த மனுசன் வேற" என்று பேசிக் கொண்டே அருகில் சென்றவள், "வாயா வந்து சாப்பிடு" என்று அழைத்தாள்.

மாட்டை கலப்பையோடு நிறுத்திவிட்டு வந்தார்.

"கூழை கொஞ்சமாக ஊத்து சின்னாத்தா... என்னமோ தெரியலை மனசு பாரமா இருக்கு" என்றார்.

"ஏன்யா... விதை வாங்க பணம் இல்லைனு வருந்தப்படாதேயா... நான் எதையாவது தயார் செய்து கொடுக்கிறேன்" என்றாள்.

"மீசையைத் துடைச்சுக்குயா" என்று மீசை மேல் ஒட்டியிருந்த கூழைப் பார்த்து சொன்னவுடன் துடைத்துக் கொண்டார் முத்துராமலிங்கம்.

"அது இல்ல சின்னாத்தா! போன மானாவாரிக்கு அப்படித்தான் கம்பு விதைச்சோம். இரண்டு மூட்டை கூட காணலை, கம்பந்தட்டுதான் மிச்சம்... போன மகசூலுக்கு அடகு வச்ச மூக்குத்தியும் அப்படியே கிடக்கு. வட்டிமேல வட்டி போய்க்கிட்டே இருக்கிறது. நாம என்ன பண்ணறது என்று யோசனை தான் எனக்கு."

"ஆமாயா தண்ணீர் இல்லாம காய்ந்து போச்சியா... நாம என்னாயா பன்னறது? இந்த முறை நல்ல மழை இருக்கிறதா டிவியில் அடிக்கடி சொல்றாங்க.
கவலைப்படாதயா எப்படியும் மழை பெய்யும், தண்ணீரை நம்பித்தானே வாழ்கிறோம். எப்பொழுதுமே இந்த விவசாயிகளின் கனவு பொய்த்து விடுகிறது. அப்படியே கொஞ்சம் விளைச்சல் பார்த்தாலும் வாங்கின கடனுக்கும் வயித்த கழுவதற்கும் தான் சரியா இருக்குயா... காலம் காலமாக விவசாயம் இப்படித்தான் நடக்கிறது. திரும்பவும் விவசாயம் செய்யவே புது முதலீடு தேவைப்படுது. என்னுடைய கம்மல கழட்டித் தருகிறேன். அதை அடகு வச்சு கொஞ்சம் விதையும் உரமும் எடுத்து வைச்சுக்கோ.. இன்னைக்கு நிலத்த உழுதுட்ட வாயா, நாளைக்கு காலையிலே போய் நகையை வச்சுட்டு வந்து விடலாம்யா.

"எவ்வளவோ காலம் முன்னேறிப் போச்சு நீ எதுக்குயா இன்னும் இந்த மாட்டை வச்சுக்குனு கஷ்டப்படற" என்றாள்.

"டிரக்டர் வச்சு உழுதா ஏக்கருக்கு ஆயிரத்து நானூறு செலவு ஆகுது. கால் இழுக்க ஒரு எழுநூறுனு செலவு அதிகமாக ஆகி விடுகிறது சின்னத்தா. இந்த மாட்டால உழுதா செலவு மிச்சம். எந்த டிரக்டரும் சாணத்தைப் போடுவதில்லை என்ற கருத்து எனக்கு நியாபகத்தில் வருகிறது. என்னால முடிகிற வரைக்கும் நான் மாட்டால உழுது பயிர் பார்க்கிறேன்" என்று கருவடை மண்ணின் மேல் அமர்ந்து கண்ணீர் மல்கக் கூறினார்.

"சரி சின்னத்தா காய்ந்த மட்டைகள், பாளைகளையெல்லாம் அடுப்பெறிக்க நீ கட்டு கட்டிக் கொண்டு போ, இன்னும் நாலு வலப்பு தான் வரும்.. உழுதிட்டு வந்து விடுகிறேன்" என்று மாடு்களை நோக்கி கிளம்பினார் முத்துராமலிங்கம்.

சின்னாத்தா அங்கிருந்த தென்னை மரத்தில் காய்ந்த மட்டைகளை எடுத்து அதில் துடைப்பம் கிழித்தாள். மூன்று சிறிய கட்டுகளாக துடைப்பத்தைக் கட்டினாள். ஒரு துடைப்பம் வீட்டிற்கு, மற்ற இரண்டையும் கடையில் கொடுத்து ஏதாவது காய்கறி வாங்கிக் கொள்ளலாம் என்று யோசித்து எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

மறுநாள் வழக்கமாகக் குளித்து விட்டு தன்னுடைய கோவணத்தை மாற்றிக் கொண்டே, "சின்னாத்தா கம்மலை கழட்டு நான் வட்டிக்கடைக்கு போய் நம்ம சேட்டுகிட்ட வச்சி வாங்கி வருகிறேன்" என்றார்.

"சரி இது ஒன்றை பவுன் கம்மல்யா... ஒன்னு ஒன்னும் முக்கா பவுன். பத்தாயிரம் போதும்... அதிகமாக வாங்கிட்டா மீட்க முடியாதுயா" என்று தன்னுடைய காதுகளில் இருந்து கழற்றி தண்ணீரில் நகையைக் கழுவி, பின்பு அதை ஒரு துணியைத் எடுத்து துடைத்துக் கொடுத்தாள்.

வெறும் காதோடு நிற்கும் சின்னாத்தாவைப் பார்த்து கலங்கினார்.

"என்னயா இதுக்குமேல ஏதுவும் இல்லை. போன மானாவரிக்கு வச்ச மூக்குத்தி அப்படியே கிடக்கு. போன வருசம் வச்ச தாலியும் சேட்டுக்கிட்டே இருக்கு. இப்ப இருக்கிறது கழுத்துல இந்த மஞ்சள் கயிறுதான்.. சீக்கிரம்யா மண்ணில் உள்ள ஈரம் காய்வதற்குள் விதைய விதைக்கோனும்... வாங்கிக் கொண்டு வாயா" என்றாள்.

இந்த வருடம் ஏதாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நடந்தார் முத்துராமலிங்கம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கறுப்புக் கொள்ளு விதைச்சா நல்ல லாபம், அதுல மருந்து செய்கிறார்களாம், நாம தூற்றி வைத்தால் அவர்களே எடுத்துக் கொள்கிறார்களாம். விலையும் கிலோ என்பது ரூபாய் போகுமாம் என்று பக்கத்து வயலில் பேசிக் கொண்டார்கள். அதைக் கேட்ட முத்துராமலிங்கமும் மனக்கணக்கு போட ஆரம்பித்தார். 'விதை பத்து கிலோ ஆயிரம் ரூபாய்கிட்ட வரும், உரம், களை எடுக்கிற செலவு எல்லாம் சேர்த்தா ஐந்தாயிரத்தில இருந்து ஆறாயிரம் ஆகும். நமக்கு மாசம் ஆயிரம் ரூபாய் குடும்பத்திற்கும் மாட்டிற்கும் என்றாலும் மூனு மாசத்திற்கு இந்த பத்தாயிரம் போதும். எப்படியும் ஒரு இருநூற்று ஐம்பது கிலோ கிடைக்கும். கிலோ எழுபது ரூபாய் என்றாலும், பதினைந்தாயிரத்து கிட்ட கிடைக்கும். செலவு போக பத்தாயிரம் கைகளில் நிற்கும்.. இப்ப வைக்கிற நகையை உடனே மீட்டு விடலாம்' என யோசித்து விதைகளை வாங்கினார்.

நிலத்தைச் சுற்றிலும் சூரிய காந்தி விதைகளைப் போட்டால் ஏதாவது கிடைக்கும் என்று அதிலும் ஒரு கிலோ வாங்கிக் கொண்டு கொஞ்சம் உரம் எடுத்துக் கொண்டு அன்றே மூவாயிரத்தி ஐநூறு செலவு செய்து விட்டார்.

"காலையில விதை விதைக்கோனும் விடிய போகனும் சின்னாத்தா" என்று விடியக்காலை ஐந்து மணிக்கே கிளம்பினார்கள் இருவரும். விதையை நிலத்தின் சனி மூலையில் வைத்து, சூரியன் உதிக்கும் திசையில் கும்பிட்டு விதைத்தார் முத்துராமலிங்கம். சாணத்தை எடுத்து மூன்று பிள்ளையார் பிடித்து ஒரு செங்கலில் வைத்து பாத்திரத்தில் எடுத்துச் சென்ற கூழை வைத்து படையல் இட்டாள் சின்னாத்தா.

விதையின் வாசமும் மண்ணிண் வாசமும் கமகமத்தது. மெல்லிய சூரியன் தன் தோகையைத் தயார் செய்து கொண்டிருந்தான். ஈர சாக்கில் இருந்து விதைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றினார். அப்படியே வானத்தை அண்ணார்ந்து பார்த்து விதைகளை விதைத்தார்.

இரண்டாவதாக சூரிய காந்தி விதைகளை எடுத்து நிலத்தை சுற்றிலும் ஊன்றினார்கள். விதைப்பை முடித்தவுடன் படையிலிட்ட கூழை இருவரும் அருந்தினார்கள்.

விதை விதைத்த இரண்டு வாரத்தில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. அந்த ஈரத்திலே உரத்தைத் தூவினார். முத்துராமலிங்கத்திற்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. விதைகள் நன்றாக முளைக்கத் தொடங்கியது. இந்த ஈரம் காய்வதற்கு எப்படியும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும், அதற்குள் செடிகள் காய் வைக்க ஆரம்பித்து விடும் என்று மகிழ்சியோடு நிலத்திற்குச் சென்று வந்தார்.

நிலத்தில் அங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் தேங்கி இருந்தது. அவருக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் எங்குமே கேணி நிரம்பவில்லை. உடனே ஒரு முடிவுக்கு வந்தார். முளைவிட்டு செடி வளர்ந்த நிலையில் கொஞ்சம் தேங்காய் நார், பஞ்சுவைத் தூவி ஈரப்பதத்தைக் காப்பாற்ற எண்ணி சின்னாத்தாவோடு சென்று பத்து கூடை தேங்காய் நார் பஞ்சுவை விலைக்கு வாங்கி நிலம் முழுவதும் தெளித்தார். சூரியக் கதிர்கள் நேரடியாக மண்ணில் படாமல் தேங்காய் நார் பஞ்சு காத்தது. ஈரப்பதமும் அப்படியே இருக்கும் என்று வேலை செய்தார்கள்.

ஒரு வழியாக செடிகள் நன்றாக தளதளவென வளர்ந்தன. இரண்டு மாதங்கள் முடியும் தருவாயில் பூ வைக்க தொடங்கிய செடியைப் பார்த்து மனதிற்குள்ளே பெருமிதப் பட்டார். எப்படியும் இந்த முறை ஜெயிக்கலாம் என்ற தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு வருவது காலம் காலமாக நடந்தேறி வருகிறது.

என்ன காலநிலை மாற்றமோ தெரியவில்லை, வெயில் சற்று கடுமையாக இருந்தது. இன்னும் ஒரு மழை பெய்தால் போதும் என்று சின்னாத்தாளும் முத்து ராமலிங்கமும் வேண்டினார்கள். வேண்டியது என்று நடந்திருக்கிறது? கடுமையான வெயில் காரணமாக கேணியிலும் தண்ணீர் இல்லை. செடியில் இருந்த பூக்கள் கருக ஆரம்பித்தது. இரண்டு லாரி தண்ணீர் வாங்கித் தெளிக்கவும் பணம் இல்லை. அப்படி செய்தாலும் அதற்கான விலை இல்லை. சரி பார்ப்போம் என்று காத்திருந்து மேகத்தை பார்த்து வெறுக்கத் தொடங்கினார்.

செடிகள் பச்சயத்தை இழக்கத் தொடங்கியதும் நா வறண்டு போனது முத்துராமலிங்கத்துக்கு. ஊர் மக்கள் கூடி கோவிலுக்குத் திருவிழா எடுத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், திருவிழா ஏற்பாடுகளைச் செய்தார்கள். கிராம மக்கள் வருத்தத்தோடு கலசம் எடுத்து கூழ் ஊற்றினார்கள். மேள தாளங்கள் ஒலித்தன. எந்த மாற்றமும் இல்லை, செடிகள் அனைத்தும் காய்ந்து வதங்கி இறந்து விட்டன. அருகில் உள்ள நிலத்தில் எல்லோரும் மாடுகளை மேய்த்தனர்.

இருந்த நம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் ஆனது முத்து ராமலிங்கத்திற்கு.

அவருடைய நிலத்திலும் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. சரியான நேரத்தில் மழை இல்லை. அந்த ஆண்டு இழப்பீடாக ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்தது அரசு. அந்தப் பணத்தை வேளாண் அலுவலகத்தின் மூலமாக வாங்குவதற்கு கையெழுத்திட்டு வீட்டிற்கு வந்தார். எப்படியும் இன்னும் ஒரு வாரத்தில பணம் வந்நிடும். இதுல வட்டி கட்ட முடியுமா? குடும்ப சாப்பாட்டிற்கு என்ன செய்வது? என்ற வருத்தத்துடன் அப்படியே சாய்ந்து அமர்ந்தார்.

அன்றிரவு மீண்டும் நல்ல மழை பெய்தது. வெறுத்தே போனார் முத்து ராமலிங்கம். தேவையான நேரத்தில் மழை இல்லை, இந்த மழையை நம்பி, கடன் வாங்குவதெல்லாம் தவறு எனப் புலம்பினார். அவரைப் பார்த்த சின்னாத்தா "விடுயா.... பேசாமல் இந்த மாட்டை விற்று கொஞ்சம் நாளைக்கு வாழ்கையை நகர்த்தலாம்" என்றாள்.

"வீட்டுல பிள்ளையா வளர்த்த இந்த உழவு மாடுகளை எப்படி விலைக்கு கொடுப்பது?" என்று அழுதார். இருந்தாலும் முடியாத நிலை ஏற்பட்டு விடவே விற்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். மாடுகளும் விற்றாகி விட்டது. அந்தப் பணத்தை சின்னாத்தாவிடம் கொடுத்து "உன்னுடைய தாலியை மீட்டு விடு சின்னாத்தா" என்று கூறிவிட்டு நிலத்திற்குச் சென்று அங்கு எப்பொழுதும் மாடுகள் கட்டியிருக்கும் இடத்திற்குச் சென்று, அங்கு மாடுகள் இருப்பதைப் போன்று கற்பனை செய்து கொண்டு பேசிக் கொண்டே இருந்தார். எழுந்து காய்ந்த சூரியகாந்தி செடியைப் பார்த்து அழுது கொண்டே கீழே விழுந்துவர் எழுந்திருக்கவே இல்லை. 

மண்ணில் ஈரமும் காய்ந்து கொண்டிருக்கிறது. மீண்டும் வெயில் பயங்கரமாகக் காயத் தொடங்கியது.

மீட்டெடுத்த தாலியை கையில் வைத்துக் கொண்டே சின்னாத்தா வீட்டின் மூலையில் அழுது கொண்டே இருந்தாள். இரண்டு இடங்கள் காலியானது சின்னாத்தாவின் மனதில்.

- ப.தனஞ்ஜெயன்