01

சிட்னியின் Redfern பகுதியில் Abercrombie வீதியில் Sydney பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இருக்கின்ற முடி திருத்தகத்துக்கு நான் காரில் புறப்பட்டபோது ஏற்கனவே நேரம் ஆகி விட்டிருந்தது. இப்போதெல்லாம் வார இறுதியிலும் நகரப் பகுதிகளில் வாகன நெருக்கடி குறைவதில்லை. இந்நேரத்துக்கெல்லாம் பொதுவாக சுந்தரத்தின் கடை சுறுசுறுப்பாகிவிடும். பாப் கட்டிங் வைத்த அந்த அழகான சீனப்பெண் முன் வரவேற்பறையில் இருந்து இன்றைய தினம் முற்பதிவு செய்தவர்களை வரவேற்று ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பாள். சற்று உயரமான, ஒரு பக்கம் கூர்ந்து கவனித்தால் சிரஞ்சிவி போலவே தோற்றமளிக்கின்ற ஆந்திராக்காரனும், மற்றய இரு மலையாளிகளும் வேலையை மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பித்திருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் “பாஸ்” ஆன சுந்தரம் அவனுக்குரிய இருக்கையில் அமர்ந்து கொண்டு இவர்களை வழிநடத்திக் கொண்டும் அன்று வந்திருக்கிற காலைப் பத்திரிகையை தேநீருடன் மேலோட்டமாக படித்துக் கொண்டும் இருப்பான்.

அந்த பிராந்தியத்திலேயே சுந்தரத்தின் சிகை அலங்கார நிலையம்தான் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் நவீன தொழிநுட்பங்களுடன் சகல சேவைகளையும் வழங்கும் நிலையமாக மிகக் குறுகிய காலத்தில் விரிவாக்கம் அடைந்திருந்தது. எனக்கு சுந்தரம் பால்ய கால நண்பன் என்பதால் இந்த முற்பதிவு செய்யும் நடைமுறைகள் தேவையில்லைதான். என்றாலும் முன்கூட்டியே இணையதளத்தில் முற்பதிவு செய்துவிட்டு வந்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களை மீறி எனது செல்வாக்கை பயன்படுத்த எனக்கு எப்போதும் மனசு இடம் கொடுப்பதில்லை. மேலும் அங்கே அதிகம் வரும் வெள்ளை வாடிக்கையாளர்கள் இப்படியாக கியூவில் முந்துவதை சற்றும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அந்த பிராந்தியத்தில் மிக அதிக வெள்ளை இனத்தவர்களை கவர்ந்த அதிக டிமாண்ட் உள்ள நிலையம் சுந்தரத்தினுடையது. இருந்தாலும் என்னைப் போலவே பல ஈழத் தமிழர்கள் வெகு தொலைவில் இருந்துகூட முற்பதிவு செய்து கொண்டு இங்கே வருவார்கள். சுந்தரம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டிருந்தது. அவனுடன் வந்தவர்களில் அவன் மிகவும் கடுமையான முயற்சியின் பின்னர் தொழிலை சிறப்பாக முன்னேற்றி இருந்தான். நான் அவனுடன் அங்கே வந்திருந்தாலும் வெறும் ஒரு அரச தொழிலுடன் திருப்தி அடைத்து விடுகிற சராசரி யாழ்ப்பாணியின் குணம் என்னையும் விட்டு வைக்கவில்லை. 

02

ஆனைக்கோட்டையில் முள்ளியடி வீதியைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனைக்கோட்டையின் பிரபலமான வழிப்போக்கர் தங்குமிடமான ஆறுகால் மடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூரம் சென்றதும் பிரதான ஆனைக்கோட்டை-மானிப்பாய் வீதியில் இருந்து தெற்குப்புறமாக கிளைத்து உட்புறமாக எங்கோ தரவை வெளியில் முடிவடையும் வீதிதான் முள்ளியடி வீதி. தரவையில் மழைக் காலங்களில் நீர் நிரம்பி தனித் தீவு போல காட்சி அளிக்கும். கோடை காலங்களில் களிமண் படிவுகள் வெடித்து தரவை பாளம் பாளமாகத் தென்படும்.

பெரும்பாலான ஊரவர்களுக்கு முள்ளியடி வீதியில் எந்த வேலையும் இருக்காது. முள்ளியடி வீதி முடிவடையும் தரவைக்கு அண்மையில் ஒழுங்காக அடைக்கப்படாத வேலிகளுடன் இருந்த வீடுதான் சுந்தரத்தின் வீடு. அப்போது முள்ளியடி வீதியில் இருந்த குடியிருப்புகளுக்கு மின்சார வசதி இல்லை. நானும் சுந்தரமும் ஒரே வகுப்பில் இருந்ததால் எனக்கு முள்ளியடி வீதி நல்ல பரிச்சயம். பொதுவாக நானும் சுந்தரமும் ஒவ்வொரு நாளும் தரவையில் ரின் போல் அல்லது ரவுண்டேஸ் விளையாடுவதற்காக எல்லா பெடியலையும் பின்னேரத்தில கூட்டிக் கொண்டு தரவைக்குப் போவது வழக்கம்.

சுந்தரத்தின் தகப்பன் சுப்புறுதான் அந்த வட்டாரத்தில் எல்லோருக்கும் முடி வெட்டி விடுகிறவர். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளுக்கு முடிவெட்ட அவரை புக் செய்து விடுவினும். அப்போதெல்லாம் சுப்புறு அண்ணர் வீட்டுக்கு வந்துதான் முடி வெட்டுறது வழக்கம். காலையில் கத்தரிக்கோலுடனும், சாணை பிடித்த கத்தியுடனும், படிகாரக் கல்லுடனும் ஆள் வேலைக்கு வந்து விடுவார்.

பொதுவாக எங்கள் வீட்டில் பின்புறமாக இருக்கின்ற தென்னை மரத்துக்கு கீழே இருந்துதான் நாங்கள் முடி வெட்டிக் கொள்வோம். எனக்கு அப்பவே ஜீன்ஸ் படத்தில பிரசாந்த் வச்சிருந்தது மாதிரி கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரே ஆசை. அதை எப்போதும் சுப்புறு அண்ணரிடம் அவர் வீட்டுக்கு வரமுதலே சுந்தரம் மூலமாக சொல்லி வைத்து விடுவேன். ஆனால் எப்போதும் அப்பாவின் விருப்பம்தான் நிறைவேறும். எனக்கு மிகவும் கட்டையாக தலைமுடி வெட்டப்பட்டு காதுகளுக்கூடாக காற்று வீசும்போது தலையின் பின்புறம் முழுவதும் கூசிக் கொண்டிருக்கும்.

ஆனைக்கோட்டையில் நான் இருந்த காலம் வரைக்கும் பிரசாந்த் போல கிராப் வைத்துக் கொள்ளும் எனது ஆசை நிறைவேறவேயில்லை. ஆனைக்கோட்டையை விட்டு வெளியேறிய போது விஜய், அஜித் போன்றோர் கதாநாயகர்களாக மாறியிருந்தார்கள்.

சுப்புறு அண்ணருக்கு ஏன் அந்த பெயர் வந்தது என்பதற்கு ஒரு கதை உண்டு. அவரது தகப்பன் அவருக்கு சுப்பிரமணியம் என்றுதான் பெயர் வைத்திருந்தாராம். பதிவாளர் சாம்பசிவத்துக்கு அது பிடிக்கவில்லை. அவர் அதனை சுப்புறு என்று பதிவில் மாத்தி விட்டாராம். தனக்கு அப்படி ஒரு பெயர் இருப்பது எட்டு வயதில் முதலாம் வகுப்புக்கு போகும்வரைக்கும் சுப்புறு அண்ணருக்குத் தெரியாது. ஆனால் அவரது ஐயா சாகும் வரைக்கும் அவரை சுப்பிரமணி என்றுதான் கூப்பிட்டு வந்தாராம். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை அவருக்கு சுப்புறு என்ற பெயர்தான் நிலைத்து விட்டது.

ஆனைக்கோட்டையில் நல்லதம்பி வாத்தியாரை தெரியாதவர்கள் அன்று இருக்க முடியாது. நல்ல உயரமான கம்பீரமான தோற்றம். ஆறுகால் மடத்தடியில் நல்ல பெரிய நாற்சதுர வீடும், வட்டுக்கோட்டை பக்கம் நிறைய நிலபுலன்களும் உள்ள மனுஷன். பிரபல தமிழ் வாத்தியாராக இருந்த அவருக்கு ஆங்கிலமும் மிக நல்ல பரிச்சயம். வாத்தியார் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு சுதந்திர தினத்தின் போது சிறப்பு விருந்தினராக யாழ் நகருக்கு வருகை தந்த அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர் இவரது வரவேற்புரையைக் கேட்டு அசந்து போனாராம்.

பொதுவாகவே முள்ளியடிப்பக்கம் ‘பெரிய’ மனுஷர் யாரும் தலை காட்டுவதில்லை. இருந்தாலும் நல்லதம்பி வாத்தியார் அடிக்கடி மாலை நேரத்தில் முள்ளியடி வீதியால நடந்து போவார். சிவந்த உயரமான அவர் வெள்ளை வேட்டியும் நேஷனல் சேட்டும் போட்டுக் கொண்டு கையை வீசி நடக்கும்போது வண்டிக்காரர்கள் ஓரமாக வழி விடுவார்கள். ரோட்டில் நடக்கிற ஆம்பிளைகள் தோளில் கிடக்கும் துண்டை கையில் எடுத்து வணக்கம் வைப்பார்கள். அதைவிட சுவாரசியம் என்னவென்றால் ஒரு சில தெருச்சண்டியர்களும், குடிக்காரர்களும் இவரைக் கண்டதும் வேலிக்குள் குறுக்காக பாய்ந்து பதுங்குவார்கள். இவற்றை உள்ளூரப் பார்த்து ரசிப்பதில் வாத்தியாருக்கு ஒரு அலாதிப் பிரியம். இடைக்கிடை அகப்பட்டவர்களை ஒரு அதட்டல் போட்டு தனது இருப்பை பறைசாற்றிக் கொண்டே செல்வார்.

ஏன் வாத்தியாரைக் கண்டதும் எல்லோரும் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் வைத்துக் கொள்கிறார்கள் என்று அப்பாவிடம் ஒரு முறை கேட்டேன். அதற்கு அப்பா “வாத்தியார் பெரிய கல்விமான். ஆசிரியர் வேற. இதனாலதான் சனம் படிப்புக்கு மரியாதை கொடுக்கிறது” என்று ஒரு விளக்கம் சொன்னார். ஆனால் சாதாரண விவசாயியான என் அப்பாவைப் பார்த்தாலும் சனங்கள் தோளில் கிடக்கிற துண்டை கீழே இறக்குவினும். ஆனால் அதுக்கு ஒரு விளக்கமும் அப்பா ஒருபோதும் சொன்னதில்லை.

அன்றொரு நாள் புது வருடப் பிறப்புக்குப் பின்னரான ஒரு கோடை காலத்தின் காலைப் பொழுது. ஆனைக்கோட்டையில் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றம் முதலில் நல்லதம்பி வாத்தியார் வீட்டிலிருந்து தொடங்கியது. வீட்டு வேலைக்கு வந்த பையனை சுப்புறு வீட்டுக்கு அனுப்பிய வாத்தியார் அவரை முகச்சவரம் செய்ய வீட்டுக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். வந்த பையன் சொன்ன பதில் வாத்தியாரை அதிர வைத்தது. 

" இனிமேல் என்னால் வீட்டுக்கு வந்து முடி வெட்ட முடியாது! மாஸ்டரை என்னோட வீட்டுக்கு வரச் சொல்லு!".

வாத்தியாருக்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும் மறுபுறம் பயங்கர கோபமாகவும் இருந்தது. வழக்கமான நேஷனல் சேட்டையும், செருப்பையும் மறந்துவிட்டு துண்டை உதறிக் கொண்டு முள்ளியடி வீதிக்கு இறங்கினார். வழியில் எதிர்ப்பட்ட சனங்கள் தோளில் கிடந்த துண்டை கீழே இறக்கவில்லை போல அவருக்குப் பட்டது. அல்லது, அவர் அவற்றை கவனிக்கும் மனநிலையில் அன்று இருக்கவில்லை. அவரை எதிர்கொண்ட சுப்புறுவிடம் அவர் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தில் இருந்து பலர் ஓடி வந்தார்கள். சுப்புறு மிக அமைதியாக, வழமைக்கு மாறான ஒரு நிதானத்துடன் பதில் சொன்னார். அவரிடம் நிதானமும் அமைதியும் இருந்தாலும் வழமையான பக்தி அன்று தென்படவில்லை என்பதை வாத்தியார் கவனிக்கத் தவறவில்லை.

"இனிமேல் இதுதான் மாஸ்டர் நடைமுறை. உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் கோண்டாவில் நந்தவனத்தில் கேட்டுக் கொள்ளுங்கள்".

அதே வேகத்துடன் நந்தவனம் போன வாத்தியார் போன வேகத்தில் திரும்பி வந்தார். அவருக்கு நடப்பவற்றை ஜீரணிக்க முடியவில்லை. அவரது கொள்ளுத் தாத்தா, அவருக்கு முதல் எத்தனையோ தலைமுறைகள் தொடங்கி நடந்துவந்த ஒரு நடைமுறை ஏன் நேற்று வரை கூட பக்கத்துக்கு வீட்டு மணியத்தார் வீட்டில் கூட இயல்பாக நடந்த ஒரு விடயம், ஆனைக்கோட்டையில் மனிதர்கள் குடியேறிய காலத்தில் இருந்து மாறாத ஒரு வழக்கம், ஒரே இரவில் தலைகீழாக மாறிப் போனது. சனங்கள் தெருவில் சிறிது கூட்டமாகவும், தேநீர் கடைகளிலும் தன்னுடன் கதைப்பவனுக்குக்கூட கேட்காத தொனியில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நடப்பவை பிடிக்கவில்லை, என்றாலும் எவருக்கும் உரத்துப் பேசக்கூட வாய் வரவில்லை.

ஊரில் தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. எப்போதும்போல ஊரில் மேளம் அடித்து பிரசித்தம் போடும் கந்தன் அன்றோடு பிரசித்தம் போடுவதை நிறுத்தி விட்டிருந்தான். ஊருக்கு அறிவித்தல் விடுப்பதாக இருந்தால் ஏதேனும் ஒரு சனசமூக நிலையத்தில் ஒலிபெருக்கியை கட்டி அறிவியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்டுக்கு ஒவ்வொரு நாளும் வந்து தீட்டு சேலை எடுக்கும் பழக்கமும் முடிந்து போனது. செத்த வீடு முடிந்தவுடன் எட்டுச் செலவுக்கு மாலை வேளையில் செக்கல் நேரத்தில் எச்சில் சாப்பாடு எடுக்கும் வேலைக்கும் ஆட்கள் வரவில்லை. ஆடு மாடுகள் கன்று ஈன்றதன் பின்னர் இளங்கொடியை அறுத்து உரப்பையில் கட்டி சுடுகாட்டு ஆலமரத்தின் உச்சத்தில் கொண்டு போய் கட்டுவதற்கு எவரும் கிடைக்கவேயில்லை. அதனால் அந்த வருடம் மாடுகள் குறைவாக பால் சுரக்கத் தயாராகிக் கொண்டிருந்தன. அரிசிக்கும் வாழைக்குலைக்கும் வீட்டு வளவு துப்பரவாக்கிக் கொடுத்த கூலி ஆட்களெல்லாம் தற்போது கறாராக கூலியை பேரம் பேசத் தொடங்கினார்கள். பணமாகக் கொடுக்க மனசில்லாமல் வீராப்பு பேசிய சிலர் நந்தவனத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருந்தது. ஊரவர்கள் சிறிது காலம் முணுமுணுத்தார்கள். பின்னர் பேசாமல் தங்களது வேலையை தாங்களே பார்க்கத் தொடங்கினார்கள்.

பல தலைமுறைகள் நீடித்து வந்த வழக்கங்கள் ஒரே இரவில் ஒழிந்து போனதை பலராலும் சகிக்க முடியவில்லை. பல பெரிய வீட்டு மனிதர்கள் இந்த நாடு வாழத் தகுதியற்றது என்ற முடிவை எடுக்கத் தலைப்பட்டார்கள். நல்லதம்பி வாத்தியாருக்கு இது எதுவும் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. ஒரே இரவுக்குள் எவ்வாறு இப்பிடி மனிதர்கள் தமது வழமையான பண்பாட்டை தூக்கி எறிந்தார்கள் என்று வாத்தியாருக்கு விளங்கவில்லை. கலி காலம்! நாடு அழியப் போகுது என்று தினமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். இவை எல்லாவற்றையும் விட அவரைக் கண்டதும் தோளில் போட்டிருந்த துண்டை இறக்குபவர்களும் பயந்து ஒதுங்கிப் போகிறவர்களும் இப்போது சற்று தைரியத்துடன் தன்னை ஏறெடுத்துப் பார்ப்பதுபோல அவருக்குப் பட்டது. ஒரே நாளுக்குள் அவரது தலையில் ஏறியிருந்த கிரீடம் தூக்கி வீசப்பட்டதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இடையிடையே இந்த மாற்றங்களை பொதுவெளியில் மறைமுகமாக குத்திக் காட்டவும் அவர் தயங்கவில்லை. என்றாலும் வாத்தியாருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருந்தது.

ஒரு சில பெரிய வீட்டு இளவட்டங்கள் இந்த மாற்றங்களுக்கு எதிராக கொஞ்சம் துடினமாக இயங்கத் தொடங்கினவை. நல்லதம்பி வாத்தியாரின்ரை மூத்த மகனும் அவங்களில ஒருத்தன். எண்டாலும் அவை எல்லோருக்கும் நந்தவனத்தில் நல்ல உரிச்சமட்டை வைத்தியம் சிறப்பாக தரப்பட்டது. அதுக்குப் பிறகு எவனுக்கும் மாற்றங்களுக்கு எதிராக கதைக்கிற துணிவு வரவில்லை. உரிச்ச பனைமட்டை வைத்தியத்துக்கு பிறகு வாத்தியாரின்ரை மூத்த மகனை ஊரில் காணவில்லை. சரியாக ஒரு மாதம் கழித்து அவன் கட்டுநாயக்காவில் இருந்து பிரான்ஸ் போகும் விமானத்தில் கள்ளப்பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்து கொண்டிருந்தான்.

சுப்புறு அண்ணர் தான் வசித்த முள்ளியடி வீட்டில் முகப்புறமாக ஒரு ஓலைத்தட்டி அடைத்து சிறிய குடில் போல அமைத்துக் கொண்டார். அங்கேதான் அவரது புதிய முடிவெட்டும் கடை அமைந்திருந்தது. எல்லா ஊரவர்களும் முடி வெட்டுவதற்காக காலை வேளையில் இருந்து மதியம் வரை வெய்யிலுக்குள் அங்கே காத்திருந்தார்கள். மிகப் பலருக்கு அன்றுதான் முள்ளியடியையே தெரிந்திருந்தது. எல்லோரும் மறக்காமல் தங்கள் கையோடு தண்ணீர்ப் போத்தல்களையும் கொண்டு வந்திருந்தனர். டோக்கன் வாங்காத குறையாக எல்லோரும் வரிசை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள்.

சுப்புறு அண்ணர் ஒவ்வொருவராக கூப்பிட்டு முடி வெட்டி விட்டு நண்பகல் ஒரு மணிபோல உள்ளே போய் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஒரு குட்டி தூக்கம் போடுவார். பின்னர் அவர் வந்து தொடங்கும் வரை மற்றவர்கள் காத்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் சுந்தரத்துக்கு எனக்கும் உள்ள நட்பு கைகொடுத்தது. முன்பு பல வேளைகளில் நான் சுந்தரத்தோடு அவன் வீட்டுக்கு போயிருக்கிறேன். அந்த வகையிலே எனக்கு இந்த கால் கடுக்க காத்திருக்கும் அவஸ்தையிலிருந்து விடுதலை கிடைத்தது. நான் முடிவெட்டி முடிந்த பின்னர் சுந்தரத்தோடு தரவைக்கு விளையாடப் போய் விடுவேன்.

இது எல்லாம் நடந்து சரியாக பத்து வருடங்களுக்குப் பிறகு சுந்தரமும், நானும், இன்னும் சிலரும் சிலாபத்தில் இருந்து அவுஸ்திரேலியா புறப்பட்ட படகில் இருந்தோம். நல்லதம்பி வாத்தியார் குடும்பம் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து விட்டிருந்தது. ஊரில் எவருக்கும் ஊரில் திடீர் மாற்றங்கள் வருவதற்கு முன்பு தாங்கள் செய்த வேலைகள் மறந்து விட்டிருந்தன. பலர் மத்திய கிழக்குக்குப் போனார்கள். வேறு சிலர் பிரான்ஸ்க்குப் போனார்கள். வேறு சிலர் இடைத்தங்கலாக கொழும்புக்கு போனார்கள். மிகச் சிலர் படிப்பதற்கு என்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், வேம்படிக்கும் போனார்கள். முள்ளியடி வீதியும் அதைச் சூழவுள்ள குடியிருப்பும் ஆளரவமற்ற வனாந்தரமாக மாறிப் போயின. வெயில் காலங்களில் தரவையில் கிட்டி அடிக்கவும், மழைக் காலங்களில் வெள்ளத்தில் படகு விட்டு விளையாடவும் இப்போது எவரும் வருவதில்லை. ஆனால் மறக்காமல் பிரதேசசபை முள்ளியடி வீதியின் தொடக்கத்தில் இருந்து தரவை வரை தெரு விளக்குகளைப் பொருத்தியிருந்தது. டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் பிரதேச சபை ஊழியர்கள் மட்டும் அவ்வப்போது முள்ளியடிப் பக்கம் தலை காட்டினார்கள். வாரம் தவறாமல் பிரதேச சபையின் கழிவகற்றும் பிரிவும் முள்ளியடியைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இவ்வாறாக மனிதர்களே இல்லாத முள்ளியடிப் பிரதேசத்தில் உள்ளூர்ப் பிரதேச சபை எல்லா அடிப்படை சேவைகளையும் திறம்பட வழங்கிக் கொண்டிருந்தது.

03

சுந்தரத்தின் கடையை நெருங்கியபோது பத்துமணி ஆகி விட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் முழு இருக்கைகளையும் ஆக்கிரமித்திருந்தார்கள். முற்பதிவு செய்யாமல் வந்த எனது முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டேன். எனக்கு அறிமுகமான வரவேற்பாளினி இளநகை புரிந்துவிட்டு 

"உங்கள் நண்பர் இன்று விடுமுறையில் இருக்கிறார். காலையில் இருந்து இந்தப் பக்கம் வரவில்லை" என்றாள். எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக சுந்தரம் இவ்வாறான வார இறுதி நாட்களில் எந்த விடுமுறையும் எடுப்பதில்லை. வாடிக்கையாளர்களின் வரவு அதிகமாக இருக்கும். 

நான் அவனது வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். மகள்தான் எடுத்தாள். 

"ஏன் அப்பா இன்று கடைக்கு வரவில்லை? ஏதும் பிரச்சினை இல்லைத்தானே?"

"அதொன்றுமில்லை மாமா, உங்களோட ஊரில் படித்தாரே நல்லதம்பி மாஸ்டரோட கடைசி மகன் சிவநேசன் அங்கிள்? வுலன்கொங்கில் இருக்கிறார்; அவருக்கு போன வருடம் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததல்லவா?"

"ஆமாம்"

"அந்தப் பிள்ளைகளுக்கு இன்றைக்கு முடியிறக்கினமாம். அதுதான் அப்பாவை நேரத்தோடை அவர்களின் வீட்டுக்கு முடி இறக்கிவிட வரச் சொன்னவை. அதுதான் ஏழு மணிக்கே அப்பா காரையெடுத்துக் கொண்டு அங்கே போய்ட்டார். காலமைச்சாப்பிடும் சாப்பிடேல்லை”.

அப்பா காலை உணவை முடிக்கவில்லை என்பது அவளுக்குப் பெரிய குறையாகப் பட்டது.

- அலைமகன்