எனக்கு கண்ணைத் திறந்தே காட்டில் விட்டது போல தான் இருந்தது. புரிந்தும் புரியாத பேரமைதியில் பலத்த சத்தம். உள் வாங்கி வெளி செல்லும் என்னை நானே ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

"டேய்... விஜிப்பையா என்ன இந்தப் பக்கம் வந்திருக்க" என்ற பார்வதிக்காவை பார்க்க பார்க்க பாழும் கிணற்றில் இருந்து எழும் கீச்சொலியை உணர்ந்தேன்.

"என்னக்கா பண்றீங்க...!" என்று அந்தக்காவை சுற்றி சுற்றி வருகையில்.....அந்தக்கா என்னை திரும்பிக்கூட பார்க்காமல் கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு வாயை கோணி கண்களை சுழற்றி மூக்கை விடைத்து ஏதேதோ செய்து கொண்டிருந்தது.

நான் சற்று அச்சத்தோடு தான் பார்த்தேன்.

"இல்லடா... மேக் அப் போட்டுட்டு இருக்கேன்.....தெரியலயா...?"

"மேக் அப் ஆஹ்....!... நீங்க இப்படியெல்லாம் மேக் அப் போட மாட்டீங்களே... முகம் கழுவி.. கண் மை போட்டு கொஞ்சூண்டு குட்டிகுரா பவுடர் பூசி முடியை ஒரு பக்கமா இழுத்து சுண்டி போட்டு அவ்ளோ அழகா வெளிய வருவீங்கள்ல..... இப்போ ஏன்க்கா....இப்டி வெள்ளையா மஞ்சளா என்னத்தையோ குழப்பி மூஞ்சில பூசிட்டு மூஞ்ச அப்டி இப்டினு என்னென்னமோ பண்ணிட்டு இருக்கீங்க...?" என்றேன். என்னுள்ளே ஓடிய இடம் பொருளற்ற தவிப்பை என்னால் அடக்கவே முடியவில்லை.

"அதெல்லாம் அப்போ விஜியா... இது டிக் டாக் காலம். பேஸ் புக் காலம். டிவிட்டர் காலம். வாட்சப் காலம். காலத்துக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கலன்னா இந்த உலகம் உன்னை கை விட்டு விடும்... புரிந்தததா சிறுவனே......" என்று சொல்லி கண்ணடித்தது.

வாயைக் கோணிக் கொண்டு கண்ணடித்ததை பார்க்க என்னவோ போல் இருந்தது. சற்று நேரத்தில் எதிரே அலைபேசியை வைத்துக் கொண்டு தாவணி போல கட்டி இருந்த புடவையை இழுத்து இழுத்து....கையில் மைக்கை பிடித்தது போல பாவனை செய்து கொண்டு, " உனக்கென பிறந்தவ ரெக்க கட்டி பறந்தவ இவ தான்...என்னை விட உனக்கிங்க மனசுக்கு பிடிச்சவ எவதான்...." வாயை குவித்து குவித்து பாடியது. பாடியதில் பாடல் சிங்க்கும் ஆகவில்லை. மீண்டும் மீண்டும் அந்த நான்கு வரிகளையே பாடிக் கொண்டும்... கண்களை சுழட்டி சுழற்றி என்னவோ செய்து கொண்டிருமிருந்தது. 49 வயதில் அந்தக்கா செய்வதை பார்க்கையில்... உள்ளே இனம் புரியாத பயம் வந்தது.

"க்கா..... நான் கிளம்பறேன்.... நீ லூசு மாதிரி என்னென்னவோ பண்ணிட்டுருக்க....!" என்றபடியே அங்கிருந்து நகர்ந்தேன்.

பக்கத்து வீட்டு திண்ணையில்... லீலாக்கா அலைபேசியை வைத்துக் கொண்டு வேறெங்கோ பார்ப்பது போல பார்த்து பின் மெல்ல அலைபேசியைப் பார்த்து கண்கள் விரித்து.... ஆஹ்ங்.... என்று வெட்கப் படுவது போல பட்டு, மீண்டும் குனிந்து பின் யோசனை வந்தது போல அலைபேசியை பார்த்து கண்களை மட்டும் மேல் தூக்கி கண்கள் சொருகுவது போல கிறக்கத்தோடு பார்த்துக் கொண்டே.....மார்பை தூக்கி இறக்கி...."இந்த மாமனோடு மனசு மல்லிகை பூ போலெ பொன்னானது...." என்ற பாடல் வரிகளை மனதுக்குள்ளேயே ஓட்டி ஓட்டி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது. அடிக்கடி அலைபேசியை விட்டு நகர்ந்து முகத்தில் டச் அப்பும் செய்து கொண்டது.

" டிக் டாக்ல... எனக்கு 800 பாலோயர்ஸ் இருக்காங்கடா... தினமும் ஏதாவது இதுல போட்டே ஆகணும்.. இல்லன்னா கை காலெல்லாம் நடுங்கி ஒரு பக்கமா வெட்டி வெட்டி இழுக்குதுடா......அதான்... உங்க மாமனுக்கு சோறு கூட ஆக்கல.....கழுதை கிடக்குது..... ரசிகர்கள ஏமாத்த முடியாதில்ல.... பொது வாழ்க்கைக்கு வந்துட்டா.... சில தியாகங்கள செஞ்சுதான ஆகணும்...." என்ற சசிரேகாவை... நான் நடுக்கத்தோடு பார்த்தேன்.

"இவர்களெல்லாம் முதலில் இப்படி இல்லையே...!." நான் தலை சுற்றி தவம் கலைந்தது போல அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

எதிரே சிவநேசன், "டேய்.. விஜி.. எப்படா வந்த... எப்படி இருக்க....?" என்பதற்குள் முப்பது முறை அவன் அலைபேசியை பாக்கெட்டிலிருந்து எடுத்தெடுத்து பார்த்துக் கொண்டான். ஓர் அனிச்சை செயலைப் போல கழுத்தை ஆட்டி ஆட்டி அலைபேசியை குஷ்டம் வந்தவன் கையில் பற்றி இருப்பது போல பற்றி இருந்தான். அதை பார்த்தே தலையை கோதி விட்டுக் கொண்டான். அவன் இடது கை அலைபேசியை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டேயிருந்தது. அவன் என் முகம் பார்த்தே பேசவில்லை.

"ஊரில் எல்லாருமே இப்படித்தான் இருக்கிறார்களா...?!!!" உள்ளூர ஏற்பட்ட நடுக்கம் என்னை சொற்களற்று நடக்க வைத்தது.

நான்கு வீடு தாண்டி மலர்மன்னன் வீடு தாண்டுகையில்...அதற்கு பின்புறம் தனித்து கட்டப்பட்ட குளியலறைக்குள் இருந்து ஈரச்சேலையை போர்த்திக் கொண்டு வெளியேறி ரேக்கா பாட்டியின் கையில் பட்டும் படாமல் அலைபேசி இருந்தது.

"என்ன பாட்டி எப்படி இருக்க...." என்றேன்.

"அப்றம் பேசிக்கலாம். லைவ் ரெக்கார்டிங் போயிட்டு இருக்கு.." என்று ஜாடை செய்தபடியே........அலைபேசியை பார்த்து " இப்போ தலை காய வைக்கிறேன்...இப்போ.... இப்போ .... இப்போ ....."என்று முணுமுணுத்துக் கொண்டும் கிசுகிசுத்துக் கொண்டுமிருப்பதில் மும்முரம் காட்டியது.

எனக்கு தூக்கி வாரி போட்டது. காலத்துக்கும் உள் இருந்த வாழ்வின் அழுத்தம் வேறு வழியின்றி காலக்கணக்கில் பீறிட்டுக் கொண்டு வருகிறது என்பதை புரிய முடிந்தது. முதலில் எல்லாம் பேய் பிடிக்கும். இப்போது செல்போன் பிடித்திருக்கிறது. எதுக்கு வம்பு என்று வீதியில் நடையை கட்டினேன்.

என் தூரத்து ஜூனியர் நண்பன்.. நடு வீதியில்... குனிந்து குனிந்து எதையோ செய்து கொண்டிருந்தான். நான் அவனருகே செல்ல முற்பட...ஜாடை செய்தான்.

" இங்க வராத...... அப்டி போ அப்டி போ......"

சரி என்று சற்று ஒதுங்கி நின்று பார்த்தேன். நடு வீதியில் ஒரு கல்லில் அலைபேசியை சரித்து வைத்து விட்டு அதன் முன்னால் ஆடியபடியே கண்களை சுழற்றி சுழற்றி எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான். அதிலும் அது பாம்பு நடனம். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் நாக்கை நீட்டி நீட்டி கழுத்தை சுற்றி சுற்றி... கண்களை உருட்டியபடியே உடலை நெளித்துக் கொண்டிருந்தான். பார்க்க கொஞ்சம் பயமாக கூட இருந்தது.

சில நொடிகளில், " அப்பாடா... முடிஞ்சது... ரசிகர்கள்.....வெய்ட்டிங்.." என்றான் அலைபேசியைப் பார்த்துக் கொண்டே.

"ஏன்டா..என்னாச்சு... சின்ன வயசுல ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ணக்கூட அவ்ளோ தயங்குவ... பயப்படுவ...இப்போ இப்டி வெளிய நின்னு... தனியா.....வெறித்தனமான ஆடிட்டு இருக்க...!" தயங்கி தயங்கி வார்த்தையை விட்டேன்.

"சீனியர்...! லைக் சீனியர்.. லைக்ஸ்.. லைக்ஸோட பவர் என்னன்னு உனக்கு தெரியல. அதான் இப்டி பேசிட்டுருக்க.. ஒவ்வொரு லைக்ஸ்ம் இங்க முக்கியம்... லைக்ஸ் கூட கூட ஒரு கெத்து ஏறும்பாரு.. அப்டியே... ரெண்டு பீர் குடிச்ச மாதிரி ஒரு போதை..சீனியர். அதெல்லாம் உனக்கெங்க புரிய போகுது...நீ புக்கு படிக்கற ஆளுதான.... அதும்... காடு மழைனு சுத்திட்டுருக்கற அப்டேட் இல்லாத ஆள் தான நீ.. உன்கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண நான் விருமபல..." அவன் மீண்டும் ஆடத் தொடங்கி இருந்தான்.

நான் சுற்றிலும் சிசிடிவி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சுந்தர பெரியப்பா வீடு தாண்டினேன்.

அவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சுரேஷும் அவன் மனைவி ராதிகாவும் தங்கள் ரெண்டு வயதுக் குழந்தைக்கு ஏதோ சொல்லி கொடுத்து விட்டு மறைந்து நின்று வீடியோ எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும்.... "கண்டுக்காத விஜி... சோறு தான் முக்கியம்... குழந்தை மாதிரி ட்ரெண்டிங்கானா நமக்குத்தான பெருமை....இவனாலதான் இந்த வீட்டுக்கு வெளிச்சம் வர போகுது பாரு..." என்ற அவர்களை பார்க்க சகிக்கவில்லை. அவர்கள் அழும் அக் குழந்தையை கண்டு கொள்ளாமல் நடிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒன்றும் விளங்காத சந்தடி சாக்கில் காளீஸ்வரி வீட்டு திண்ணையில் அமர்ந்தேன்.

ப்ரியங்கா திரிவேதி என்ற பெயரில் டிக் டாக் அப்லோடு செய்து கொண்டிருக்கும் காளீஸ்வரி செய்து கொண்டிருந்த அட்டகாசம் தாங்க முடியவில்லை. அலைபேசியைப் பார்த்து திடீரென அழுகிறாள். திடீரென திடீர்ரென சிரிக்கிறாள். திடீர் திடீரென மாற்றி மாற்றி செய்து... " ஏலேய்.....இது வீரம் விளைஞ்ச மண்ணுல.....இங்க காரம் அதிகமா தின்போம்......." என்று மூச்சு விடாமல்.... மனப்பாடம் செய்த வசனத்தை ஒப்பித்து விட்டு......"யாத்தா... பால்கோவான்னா உனக்கு ரெம்ப பிடிக்கும்ல.. வாங்கியாந்திருக்கேன்...இந்தா தின்னு...." என்று பட்டென்று கனிவான முகத்தில் கேமராவுக்கு இடது பக்கம் பார்த்து பேசி விட்டு... "அய்யா......அம்மா ........" என்று சிவாஜியை போல தலையை ஆட்டி ஆட்டி பேசி அழுதபடியே சிரித்துக் கொண்டிருந்தாள். டிக் டாக் வியாதி முத்திய பிரியங்கா திரிவேணி என்கிற காளீஸ்வரிக்கு ஊருக்குள் ரெண்டு மற்றும் முகநூலில் மூன்று காதல் தோல்விகளும் இருக்கிறதாம். "என் வாழ்வு என் சுதந்திரம்" என்று தத்துவமும் இடையிடையே பேசினாள். பார்க்க பார்க்க படு பயங்கரமான உத்வேகம் உள்ளே வருவதை மறைக்க முடியவில்லை. எழுந்து ஓடி வந்து அரசன் தாத்தா வீட்டுக்கு முன்னால் நின்றேன்.

எதிர் வீட்டு டேவிட்... இட்லிக்கு முப்பது லைக்குகளை தொட்டுக் கொண்டிருந்தான். இடையிடையே... தோசைக்கு பின்னூட்டங்களை வைத்துக் கொண்டு சாப்பிட்டதைக் காண அத்தனை ஆக்ரோஷமாக இருந்தது. அவன் தலை தளபதியைத் தாண்டி வி சேவுக்கு ஒரு காதை அறுத்துக் கொடுத்ததாக தகவல். "ப்பா..... ப்பா.......என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே அலைபேசியை கட்டி அணைத்தபடியே தான் தூங்குகிறானாம்.

அவன் அண்ணன் முரட்டு சிங்கிள் சொன்னபோது தூக்கி வாரிப் போட்டது.

"மீசைல மண் ஒட்டலங்கறதுக்கு சமம்தான இந்த முரட்டு சிங்கிள்ங்கிறது..." யோசிக்க யோசிக்க கேவலமாக இருந்தது.

மீன் சாப்பிடுவது போல... வாயை வைத்துக் கொண்டு சூரியனை விழுங்குவது போல உயிரைக் கொடுத்து எடுத்த போட்டோ 152 லைக்ஸை தாண்டி முகநூலில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பெருமை தாங்காமல் தூக்கத்தில் கதறி கதறி...." வெற்றி....... வெற்றி... என் வாழ்க்கைங்கிறது...... நானா செதுக்குனதுடா...." என்று பத்து நிமிடத்துக்கு ஒருமுறை நோட்டிபிகேஷனை பார்த்து பார்த்து தானாக பேசிக் கொண்டிருக்கும் புரட்சி கவி புருசோத்தமனை அணைத்து ஆறுதல் சொல்லும் நிலையில் நான் இல்லை. எனக்கு எல்லாமே வினோதமாக இருந்தது.

இந்த நாடு பெண்ணுரிமையை குடை சாய்த்துக் கொண்டிருக்கிறது என்று ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருந்த சிவராஜ் அண்ணனைப் பார்த்தேன். கண்கள் வெளியே வந்து விழும் அளவுக்கு பேசினார். புரட்சி.. போராட்டம்.. சிவப்பு சிந்தனை என்று அவர் பேசி பேசி சோர்வுறும் போதெலலாம் கிட்சனுக்கு சென்று ஒரு கட்டிங் விட்டுக் கொண்டு வந்ததை அவரின் சில்லரை நண்பர்கள் வீடியோ எடுத்து அதிலும் லைக்ஸ் பார்த்து விட்டார்கள்.... என்பதை டிக் டாக்கில் குளித்தபடியே சொன்ன அன்புரோஸ் (அன்பு அவர் பெயர்.. ரோஸ் அவர் டிக் டாக் ஐடி பேர்) "ஐயோ.... படுத்துறாய்ங்களே...." என்று அடிக்கடி வடிவேலு குரலில் பேசிக் கொண்டே இருந்தார். வார நாட்களில்... இப்படி இருந்தாலும்.... விடுமுறை நாட்களில் மட்டும் தான்... சட்டை பேண்டை கிழித்துக் கொண்டு கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து ஊருக்குள் ஓடிக் கொண்டே இருப்பாராம். அவரே பெருமையாக சொன்னார். என் கால்கள் வெலவெலத்தன. மெல்ல அங்கிருந்து நகர்ந்து குறுக்கு சந்தில் ரமா பாட்டி வீட்டு பக்கம் சென்றேன்.

எதுக்கெடுத்தாலும்... குற்றம் சொல்லிக் கொண்டேயிருக்கும்..... "ரங்கா குவேரா" வீட்டை விட்டு வெளியேறி நீண்ட நாட்களாகி விட்டனவாம். எப்ப பார்த்தாலும்.. வானத்தை பார்த்து.. மீசையை முறுக்கியபடியே....பொவிலியா காட்டுக்குள்ள போய் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தருவேன்னு சொல்லி டிக் டாக் வீடியோல பேசி பேசி தினமும் நேரத்துக்கு ஒன்று என்று அப்லோடு பண்ணிட்டு இருக்காராம். அவர் பேசுவதில் ஒன்று கூட சொந்த கருத்து இல்லை என்று அவரின் சக முகநூல் புரட்சியாளரான.. விமல் கேஸ்ட்ரோ பகிரங்கமாக பேசிய வீடியோவும் அதே யூ டியூபில் வெளி வந்தது குறித்து ரமா பாட்டி குழுவினர் பேசியதைக் கேட்கையில்... சிசிடிவி குளறுபடிகளுக்கு பஞ்சமில்லாத எங்களூரை ஆவேசத்தோடு பார்த்தேன்.

உடற்பயிற்சி செய்வதை யூ டியூபில் பதிவேற்றிக் கொண்டிருந்த மங்கையற்கரசி உடற்பயிற்சி செய்கையில் மஞ்சள் உள்ளாடை அணிவது தான் சேப்டி என்று அறிவுறுத்துக் கொண்டிருந்தது. பேக்ரவுண்டில் "சிங்கப்பெண்ணே...சிங்கப்பெண்ணே.....உலகம் ஒரு நாள்" என்று பாடல் ஓடிக் கொண்டிருந்தது. தொடை முட்டிய தொப்பையை தூக்கி தூக்கி சமன்படுத்தியபடியே மூக்கு விடைக்க கை முட்டியை உயர்த்தி உயர்த்தி... "பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. பெண் தான் இங்கு சிவன்... பெண் தான்.. இங்கு சக்தி...." என்று வீராவேசத்தோடு பேசிக் கொண்டிருந்தது. அதனிடம் டிக் டாக் கேமரா மேனாக வேலை செய்யும்... சொரூபன் இடையிடையே அவன் டிக் டாக்கில் தன் பைசெப்ஸை காட்டிக் கொண்டிருந்தான். மீண்டும் ஓட்டம் எடுத்தேன்.

என் உள்ளங்காலில் ஏதோ கூச்சம்.. மண்டைக்குள் ஏதோ கிறுகிறுப்பு.. என்ன மாதிரி டிசைன் இது... ஏன் யாரும்.. யாருடனும் பேசுவதில்லை. அலைபேசி வழியாகவே உறவு கொள்ள விரும்புகிறார்கள். ஒரு அலைபேசிக்குள் மூச்சு திணறும் எறும்பின் மென்னடையில் வீதியை அளந்தேன்.

வாட்சப் வழியாக பிறந்த முதல் குழந்தையை கடந்து போகையில்... அது இடுப்பை ஆட்டி ஆட்டி முன்னும் பின்னும் ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது. எதிரே அதன் வாட்சப் தாய் தந்தையர் நின்று அலைபேசியை விரித்துப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். வடிவேலு காமெடிக்கு தகுந்தாற் போல உடல் மொழியை மாற்றிக் கொண்டிருந்த குழந்தைக்கு முதிர்ச்சியான பழுப்பேறிய கண்கள். அது பார்க்கவே படுபயங்கரமான தன் குழந்தை தன்மையை தொலைத்து விட்ட ஏலியன் மாதிரி இருந்தது.

அங்கிருந்தும் ஓடி விட வேண்டும் போல இருந்தது. நான் ஏன் இப்டி இருக்கேன்.. இவங்க ஏன் இப்டி இருக்காங்க...... என்ன நடந்துட்டு இருக்கு.....இந்த யுகம்... டிக் டாக்கில்... வாழ்ந்து கொண்டிருப்பதை நான் எப்படி புரிந்து கொள்வது. வாட்சப் வழியாக குழந்தை பிறக்கும் காலத்திலும் நான் பட்டாம் பூச்சி ரசித்துக் கொண்டிருப்பது சரி தானா...யூ டியூபை காணாத கண்களில் ரட்சிப்பு எப்படி நிகழும். இடையே தொப்புள் காட்டி ஆடிக் கொண்டிருந்த ஆண்டிகள்... முன்பெல்லாம் குனிந்த தலை நிமிராதவர்கள். கட்டவிழ்ந்த எதுவோ அவர்களை கண்ணாபின்னாவாக்கி விட்டிருந்தது. அழுத்தம் தாளாத வாழ்வு முறை வெடித்து விட்டதென எடுத்துக் கொள்ளலாமா...!

நான் சிறுநீர் கழிக்க ட்விட்டர்களால் நிறைந்திருக்கும் மரத்தின் பின்னால் மறைந்தேன்.

"அண்ணே சும்மாதான ஒண்ணுக்கு போற..... அப்டியே நில்லு.. உன்ன இடிச்சு தள்ளற மாதிரி ஒரு ஷாட் எடுத்துக்கறேன்..... அதுக்கு முன்னால பின்னால வேற ஸீன் வெச்சு பத்து நிமிசத்துல ஒரு கலக்கல் காமெடி ரெடி பண்ணிடறேன்..." என்றவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஜிப்பை இழுத்து விட்டுக் கொண்டு நடந்தேன்.

உரிமை.. நீதி... நல்லவன்ங்கற பேரில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி விட்டு.. ஆபாசம்... கூடாது என்று சொல்லி விட்டு அது பற்றியே திரும்பி திரும்ப பேசி அதில் சுகம் காணும் மண்டை பூச்சிகளின் மானுட உருவம் அவர். அரை குறை ஆடை பெண் புகைப்படத்தை பதிவேற்றி விட்டு.. இவளை மாதிரி ஆளுங்களை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கும் ஆல மரத்தினடியில் அரசு கொடுத்த லேப்டாப்பும் கையுமாக இருக்கும்.. முருகன் சார் ஒவ்வொரு நாளையும் இப்படித்தான் நடத்துகிறார். எல்லாரும் காம பேய்கள். கவனம் பெண்களே... காமத்தின் சூது உங்கள் இணையத்தின் வழி நின்று கொல்லும் என்று வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளையெல்லாம் முனங்கியபடி முகநூலில் அப்டேட் செய்தும் இருந்தார். அவர் இடையிடையே போர்ன் சைட்டுக்களைக் காண்பதை ஹிஸ்டரியில் சென்று அழிக்க கூட தெரியாத அப்பாவியாகவும் இருக்கிறார் என்பது முக்கியம்..

தண்ணீர் எடுத்து போகும் பெண்களை வார்த்தைகளால் எச்சரித்து கொண்டும்...கண்களால்...விரல்களால்........ஏடாகூடமான ஜாடைகள் செய்து கொண்டும் இருப்பது அவரின் தனி உரிமை.. தவ உரிமை.. புனித உரிமை...

"எனக்கே கெட்ட வாரத்தை பேச வேண்டும் போல தோன்றியது..."

கல்யாண கூத்தெல்லாம்... தாங்கொணாத துயரம் வாய்ந்ததாக இருப்பதாய் பக்கத்து தெருவில் நடந்த கல்யாணத்தில் தெரியாமல் நுழைந்து மாட்டிக் கொண்டபோது தான் புரிந்தது. மாப்பிளைக்கு வேண்டுமென்றே வேட்டி அவிழ செய்து தெரியாமல் அவிழ்ந்து விட்டது மாதிரியும் மணப்பெண் ஆவென வாய் திறந்து வெட்கப் படுவது மாதிரியும் அதை வீடியோ எடுத்து எல்லாரும் சிரிக்கும் குரலை பேக் ரவுண்டில் போட்டு சீன் உருவாக்கி அதற்கு 851 லைக்ஸும் 90 பகிர்வும் வாங்கிய மாப்பிள்ளையின் நண்பர்கள் நவீன நண்பர்களாக உருவெடுத்து நிற்கும் காட்சியைக் கண்ட கண்ணில் காலம் புரையோடியது. பெண்ணுக்கு ஆவென வாய் பிளக்க தெரியாததை 20 டேக் எடுத்த காட்சியையும் யூ டியூபில் ஏற்றி விட்டு லைக்ஸ் வாங்கிய தோழிகளின் செயலை கிணற்றில் போட்ட கல்லென யாரிடமும் சொல்லக் கூடாது என முடிவெடுத்தேன்.

சாவு வீட்டில் பிணத்தோடு செல்பி எடுக்க..... எடுத்த செல்போன் குறிப்பிட்ட உயர்தரமான போன் என்பதால் பிணத்துக்கு உயிர் வந்து விட்டது என்று சொல்லி "எங்க புள்ளிங்க எல்லாம் பயங்கரம்" என்று ஒரு சிறுமி வாயை கோணி இழுத்தபடியே ஸ்லோமோஷனில் நடக்க..கயிறு அறுத்துக் கொண்டு தாறுமாறாக ஓடும் மாட்டின் ஞாபகம் வந்தது.

மெயின் ரோட்டில் ஒரு தவம் முறிந்த பக்தனைப் போல நடந்து கொண்டிருந்தேன். ஒரு பேருந்து வேகமாய் வந்து பிரேக் அடித்தது. முன்னால இரு சிறுவர்கள் சாலையை கிராஸ் செய்ய முயற்சித்து அதற்குள் வண்டி வந்து விட வண்டிக்கு முன்னால் சரிந்தபடியே ஓடி தப்பித்துக் கொண்டார்கள்.

அப்பாடா என்றிருந்தது. முகநூல் மிடில் மேன் மனோபாவத்தில் வண்டி டிரைவரை அடிக்காத குறையாகத் திட்டி விட்டு பசங்களை பார்த்து, "டேய் ஒன்னும் ஆகலல....பார்த்து போங்கடா... இப்டியா ரோட்டை க்ராஸ் பண்றது?" என்று முனங்கிக் கொண்டே அவர்களைக் கடந்தேன். புளிய மரத்து சாலையில்... ஒரு காலத்தில் சைக்கிளில் ரெக்கை கட்டி பறந்த நினைவுகள் என்னை ஆட் கொண்டன. சற்று முன் சின்ன பாலத்தில் அமர்ந்திருந்த நண்பர்கள் ஒருவரும் என்னோடு என் முகம் பார்த்து பேசாதது குறித்து மனதுக்குள் ஏதோ செய்தது. என்னிடம் மட்டுமல்ல. அவர்களுக்குள்ளும் கூட அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. எல்லாரும் ஒன்றாகத்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் பேசிக் கொள்ளவில்லை. எல்லார் கையிலும் அவரவர் தனி உலகம் அலைபேசியாக இருந்ததை என்னால் புரிந்து கொள்ள்ளவே முடியவில்லை..!

என் சிந்தனையைக் களைத்து போட்டது......தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் கீழே விழுந்து வலிப்பில் கை கால்கள் இழுத்துக் கொண்டு புரண்டபடியேயிருந்தது.

நான் ஓடிச் சென்று பக்கத்தில் இருந்த கடப்பாறையை பிடித்து அவர் கையில் வைத்தேன். அவருக்கு வலிப்பு அடங்கியமாதிரி தெரியவில்லை. என்ன செய்வதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த போது அவரின் மனைவி மெல்ல ஆடி அசைந்து நடந்து வந்து அவர் கையில் அவரின் அலைபேசியைத் திணித்தார். நான்காவது நொடியில் அவருக்கு வலிப்பு நின்றது. அதை அனிச்சை செயலைப் போல செய்து விட்டு... என்னை துளியும் கண்டு கொண்டது போல இல்லாமல்..... கோழி கழுத்தை ஆட்டுவது போல காதில் பொத்தியிருந்த அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டே கையில் இன்னொரு அலைபேசியில் சாட் செய்து கொண்டிருந்தது அந்தம்மா.

எனக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது. அழுகை அழுகையாக வர.. நான் அழுது கொண்டே ஒரு சிறுவனைப் போல மேட்டாங்காடு ஒற்றையடியில் ஓடினேன்.

இந்த உலகம் எனக்கு அந்நியமாக பட்டது. ஆள் அரவமற்ற ஒரு நடுக்கத்தை கொடுத்தபடியே இருந்த மக்களைக் காணவே பிடிக்கவில்லை. பழைய பாழடைந்த ஒரு கட்டிடத்தின் மேல் நின்றபடி இரு பெண் பிள்ளைகள் ஓரே மாதிரி உடல் அசைவோடு, " காதோரம் லோலாக்கு.... கதை சொல்லுதடி...." பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார்கள். "டிக் டாக் அழகிகள்" என்று தெரிய வருகையில்.... கோபம் தலைக்கேறி மீண்டும் என்னை ஓட வைத்தது. எதிர் இருந்த சாலையில் தெரியாமல் நுழைகையில்தான் மீண்டும் கவனித்தேன். எனக்கு முன்னால் இரு சிறுவர்கள் மீண்டும் பேருந்தின் முன்னால் ஓடி தப்பித்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்குள் என்னவோ பட்டது.

அவர்களை ஒளிந்து நின்று பார்த்தேன். திட்டி விட்டு பேருந்து நகர்ந்தபோது மரத்துக்கு பின்னால் இருந்து இரண்டு இளைஞர்கள்... அந்த சிறுவர்களுக்கு கொஞ்ச நேரம் வீடியோ கேம் விளையாட தங்களது அலைபேசியைத் தந்தார்கள். அதே நேரம் வேறொரு அலைபேசியில்... அவர்கள் சற்று முன் நிகழ்த்திய சாகசத்தை, "உயிரைக் கொடுத்தெல்லாம் தேவை இல்லை. சும்மா பார்த்தாலே கச்சக் என்று நிற்கும்... 'எங்கள் தல போட்டோ போதும்... உங்கள் வாழ்வின் ஆயுள் கூடும் ' என்று செமயான கேப்சனோடு டிக் டாக்கில் அப்லோட் செய்தார்கள்.

"சூப்பரா பண்ணுனீங்கடா... செமயா போகுது.... லைக்ஸ் அள்ளுதுடா... ஷேர் லெவல் எங்கயோ போகுது...அதும் தல போட்டோ காட்டிட்டே திரும்பி பார்த்துட்டு ஓடறத ஸ்லோமோஷனில் காட்றப்போ... கைதட்டல் அள்ளுதுடா.... "என்ற அடுத்த நொடி... லைக்ஸ்ம் பகிர்வும்.. பின்னூட்டமும் கொழுந்து விட்டு எரிந்தது. கஞ்சா குடித்தவன் போல தலையை சிலுப்பிக் கொண்டு "ஆஹ்..... ஆஹ்.......அற்புதம்" என்று ஆர்கஸம் தொட்டவன் போல இருவரும் வாய் திறந்து கொண்டு முனங்கினார்கள்.

நான் பயந்து நடுங்கி ஓடினேன். இந்த டிக் டாக் என்னை துரத்துவது போலவே இருந்தது. யாரோ என்னை பின் தொடர்ந்து டிக் டாக் எடுத்துக் கொண்டிருப்பது போல நம்பினேன். ஒருவேளை நானே என்னை இப்படியெலலாம் 'ஒரு நாள் நான்' என்ற தலைப்பில் டிக் டாக்குக்கு ஷூட் பண்ணிக் கொண்டிருக்கிறேனோ என்று கூட தோன்றியது.

ரயில் வரும் சத்தம் தூரத்தில் கேட்டது. எனக்குள் என்னவோ மாற்றம் ஏற்பட்டது. ரயில் சத்தம் கொஞ்சம் கிட்டத்தில் கேட்டது. எனக்குள் ஏற்பட்ட மற்றம் அதி தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்தது.

நேற்று என் அலுவக பெண்கள் முன்னால் ஒரு ஹீரோவாக, ரயில் வருகையில்...... "பா.....ம்ம்ம்" என்று கத்திக் கொண்டு வரும் ரயிலின் முகப்பு தெரிகிற மாதிரி செல்பி எடுத்துக் கொண்டிருந்தேன். மெய்ம்மறத்தல் யாருக்கும் நிகழும். செல்பிக்காரனுக்கு வெகு சுலபமாக நிகழும். எனக்கு நிகழ்ந்தது. ரயில் வருவது மறந்து செல்பி எடுப்பதில் கவனம் குவிகையில் பயங்கரமாய் பின்னால் வந்து பட்டென்று என்னை அடித்து தூக்கி வீசி சென்ற ரயில் தான் இது என்று இப்போது நினைவுக்கு வருகிறது.

"படக்கென்று வந்த மரணத்தில் மரணித்ததை மறந்து போயிருந்த எனக்கு... இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பிக் கொண்டு வருகிறது போல...."

இங்கு எல்லா பக்கமும் கேமரா இருக்கிறது. காற்றின் கண்களில்... அவை இந்த உலகை கண் காணிக்கிறது.

"ஒரு பேயின் ஒரு நாளைய தவிப்பு" என்று என்னைப் பற்றிய டிக் டாக்கில் லைக்ஸ்ம் ஷேர்ம் அள்ளிக் கொண்டிந்ததை டாய்லெட்டில் அமர்ந்தபடி ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மறு ஜென்மத்தில் கரப்பான் பூச்சியாகி விட்டிருந்த நான் செய்வதறியாது அவன் தலையில் அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் அவன் தலையில் இருந்து இறங்கி அவன் முகத்துக்கு வந்தேன். இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது போல... அலுங்காமல்.... குலுங்காமல் என்னோடு செல்பி எடுக்க ஆரம்பித்தான் அவன்.

நான் ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் அவன் அலைபேசிக்குள் மாட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். டிக் டாக்கில் இனி கரப்பான் பூச்சியும் கதை சொல்லும்.

- கவிஜி