ஊ.... டங்டங்....ஊஊ...டங்டங் சங்கு ஊதி கையில் ஒரு வெண்கல மணியை அடித்து வேகமாக முன்னே சென்றார் சலூன் கடை அண்ணன் சுந்தர், அவரை பின் தொடர்நது மையத்தை தூக்கி வந்தவர்கள் சுமார் ஐம்பது அறுபது பேர் இருக்கும், மா நிறம் நடுத்தர வயது மதிப்புள்ள ஒருவர் பரிதாபமாக பேருந்து விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.சுடுகாடு அவர்கள் தெருவில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ரயில்வே ரோட்டுக்கு கிழக்கில் உள்ளது. மையத்தை தூக்கி வந்தவர் சொன்னார் 'சுந்தரபாண்டி சுத்தி போவ வோண்டாம் எல்லாரும் மெயின் ரோடு வழியா போனா சீக்கிரம் போயிடலாம்' என்று ஊரின் மேலத்தெரு வழியாக சுடுகாட்டை அடைந்தனர்.

சுடுகாடு அமைந்துள்ள கிராமம் முன்னொரு காலத்தில் குலசேகரபாண்டிய மன்னரின் கோட்டையாக இருந்ததாம் என ஊர் பெரியவர்கள் சொல்வதுண்டு.காலப்போக்கில் மெல்ல மெல்ல மக்கள் மேற்கு நோக்கி வசிக்க வந்தனர்.

மையம் எறியும் வாடையை வைத்தே இது இளைஞரா முதியவரா ஆணா பெண்ணா இல்லை வயதானவர்களா என சரியாக கூறிவிடுவார்கள் அவ்வூர் மக்கள்.இப்படி மையம்/பிணம் எறியும் வாடைக்கே பழகியுள்ளது அந்த கிராமம்.

பழைய பஸ் ஸ்டாண்டுக்கு கிழக்கே உள்ள இடத்தில் ஆரம்பித்து ரெயில்வே கேட் வரையில் இருக்கிற அனைத்து மக்களுக்கும் சுடுகாடு இருப்பது ரெயில்வே ரோட்டுக்கு கிழக்கே இருக்கும் ஊரில் தென்பகுதியில்.மொத்தம் பன்னிரண்டு சாதிகளுக்கு (உட்சாதிகள் எல்லாம் பெரிய சாதிக்குள் அடங்கும்) தனித்தனி எரியூட்டும் பரண்கள்.

'வாரத்துக்கு ஆறுநாளு ஏதாவது ஒரு பரணுல மையம் எறியுதுப்பா தினம் தினம் இந்த செத்த மையம் எறியுத வாடைய சுவாசிட்டுத்தான் இருக்கோம் இதுககு ஒரு வேற இடத்த கட்டக்கூடாதா நம்ம பஞ்சாயத்து போர்டு' நம்ம ஊருககு இந்த அம்மன் தான் நல்ல வழிய காட்டனும் யாரோட சாபம்ன்டே இது நம்ம ஊர்காரங்க மட்டுந்தான் இந்த வாடைய சுவாசிக்கோம். 'ஏ தங்கவேலு நாளைக்கு நீங்கதான் இதுக்கு ஒரு மாற்றுவழியை பாக்கனும்' என்றார் ஊர் சாமியாடி மாசானம்.

மையத்தை அடக்கம் செய்துவிட்டு தூக்கி வந்தவர்கள் அனைவரும் கிளம்பியவுடன் மையத்தோடு கொண்டுவந்த வேஷ்டி, சட்டை, பூ பழம், பத்தி எல்லாவற்றையும் ஒரு பையில் வைத்து கடைசியாக சுந்தர் அண்ணன் கிளம்பினார். அவருக்காகவே காத்திருந்தால் போல் தங்கவேலர் வந்தார் "சுந்தர் அண்ணேன் யாரு இறந்து போயிட்டா இவ்வளவு கூட்டம் வந்துருக்கு" அதுவா நம்ம ஆசாரித்தெருவுல இருக்கிற சண்முகம் அண்ணாச்சி பழைய பஸ்ஸாண்டுல நகை கைட வச்சிருக்காருல அவருதான்ப்பா, பாவம் சின்ன வயசுதான் மார்த்தாண்டம் பஸ் காரன் கண்ணு முண்ணு தெரியாம ஓட்டி ஆளுமேல விட்டுவிட்டான். பின்ன போலீஸ் கேசு ஆயிட்டு, என்ன செயய எல்லாம் டிரைவரோட கெட்ட நேரம்ப்பா' என்று ஆமாம் உங்க ஊருல அம்மன் கோவில் கொடையாமே கேள்விப்பட்டேன் எப்போம வைக்க போறீங்க என்றார்.

'தெரியல அண்ணேன் ஆனா சீக்கிரம் இருக்கும் உங்களுக்கு சொல்லிவிடுதோம் வந்துருங்க சரியாண்னே'.

'ஆமான்டே எனக்கும் உங்க ஊருக்கு ஏதோ ஒருவிதத்துல தொடர்பு இருக்குது பாத்தியா யாராவது இறந்து போனா உஙக ஊருககு தான் வாரேன் பாரு' என்றார் சுந்தர் அண்ணன்.

உள்ளூர் காரங்களுககு இடுகாடு ஊருக்கு தெற்கு திருச்செந்தூர் ரோட்டில் வரும் வட்டக்குளம் கிட்ட இருக்கும் ஒரு முள்ளு விளங்காட்டு பகுதி எல்லாரும் மையத்தை புதைக்க தான் செய்வார்கள் எரிக்க மாட்டார்கள்.

ஊர் பெரியவங்களுக்கு சொல்லிக்கிடுதோம் இந்த வருசம் புரட்டாசி மாதம் தேதி 5, 6, 7 திங்கள், செவ்வாய், புதன்கிழமை நம்ம ஊர் மூன்று முகம் கொண்ட அம்மனுக்கு கொடை விழா வைக்கலாம். என்ன நான் சொல்லது சரிதானா...என்றார் மூனாங்ககொண்ட சாமியாடி மாாசானம். உள்ளூர் பூசாரி அவ்வூரில் பயபக்தியுடன் அம்மனை நெருங்கும் ஒரே நபர். 'நீங்க சாமியாடி நீங்க சொன்னா அந்த அம்மனே சொன்ன மாதிரி சரி வேலைய ஆரம்பிச்சிருங்க நம்ம நாட்டாம கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கிடுவோம்ப்பா' என்றார்கள் அவருடன் காளியம்மன்க்கு சாாமியாாடும் அற்புதம்மாள், சுடலைமாாடனுக்கு சாமியாடும் சுடலையாண்டி, உஜ்ஜயினி காளிக்கு சாமியாடும் ஈஸ்வரி அம்மா என இவர்கள் ஒரேவிதமாக சரியென்றார்கள். வரி பிரிக்கும் பொறுப்பை இந்த வருசம் நம்ம பசங்க கிட்ட கொடுங்க, எல்லாத்தையும் அவனோளே பன்னட்டும் என்றார் நாட்டாமை அப்பாதுரை. ஊரின் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறாததால் ஊர் மக்களே ஒரு நாட்டாமையை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மேளம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, சவுண்ட் செட்டு, கணியான் பாட்டு, வெடி வேட்டுகாரங்க இதெல்லாம் நம்ம தங்கவேல் கிட்ட கொடுங்க என்றார் நாட்டாமை அப்பாதுரை.

முதலில் இந்த அம்மனுக்கு கொடை விழா ஆரம்பித்தால் தொடர்ந்து ஒத்தப்பனை சுடலை, வடக்கு யுக காளியம்மன், சந்தேசாமி சுடலைமாடன், பண்டாரகுளம் மாவிசக்கியம்மன் என வரிசையாக விழாக்கள் வரும்.

இந்த வருசம் 'ராஜன் சவுண்ட்ஸ்' நாங்க கூப்பிடமாட்டோம். 'போன வருசம் நீங்க எதயுமே சரியா பண்ணவே இல்லன்னு எல்லாரும் சென்னாங்க' என நேரடியாக நடராஜன் கிட்ட சொன்னார் தங்கவேல். ஒரு நிமிடம் அமைதியாக இருந்த நடராஜன் 'ஆமான்டே விலைய குறச்சி நான் தான் உங்களுக்கு செட் அடிச்சி தந்தேன் பாரு... போன வருசம் எனக்கு இதுவும் வேனும் இதுக்கு மேலயும் வேனும்'. 'நீஙக உள்ளூர்காரனுக்கு ஆர்டர் தரமாட்டீங்க ஆனா வெளியூர்காரனுக்கு கொடுப்பீங்க' என ஒரு கெட்ட வார்த்தையோடு ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

இந்த வருசம் தெக்குவள்ளியூர் முத்து சவுண்ட்ஸ்க்கு கொடை விழா ஆர்டர் கிடைத்ததில் முத்து அண்ணனுக்கு அதிக வேலை.செட் அடிக்கும் ஆட்களை மூணு நாளைக்கு வேலைக்கு வைக்கனும், தெருவெல்லாம் புதுப்புது டியூப் லைட், முக்குக்கு முககு ஆளுயர ஸ்பீக்கர் செட். ஊர் எல்லையில் குலாய் ஸ்பீக்கர், கரகாட்டம் ஆடும் மைதானத்தில் வண்ண வண்ண போகஸ் லைட், அம்மன் கோவில் முன்னாடி உள்ள அரச மரத்தை சுற்றி சீரியல் பல்ப், கோவில் வாசலில் ஆரச் சீரியல், அம்மன் ஊர்வலம் போகும் பகுதிகளில் இரண்டு பக்கமும் அலங்காரம் சீரியல், ஊர் வாயிலில் வணக்கம் பலகையில் சிகப்பு பச்சை நீலம் நிறத்தில் சீரியல் பல்ப், நெல்லை ராயல் சவுண்ட்ஸ் இவர்களிடம் இருந்து ஒரு முழு நீள பஸ் ஜெனரேட்டர் வாங்கி அம்மன் கோவிலை தாண்டி நிறுத்திவிட்டார் முத்து சவுண்ஸ் அண்ணாச்சி. ஊரெல்லாம் அவரை புகழ்ந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள் நிறைய வேலை செய்திருக்கிறார் என.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்தே ஊர் விழாக்கோலம் கொண்டது பள்ளியில் படிக்கும் பக்கத்து ஊர் நண்பர்கள், உறவினர்கள், சின்ன சின்ன கடை வியாபாரிகள், சின்ன ராட்டு விளையாட்டு சர்கஸ் போடும் ஆட்கள் என ஒரே கொண்டாட்டமாக இருந்தது

"கணபதியே வருவாய் அருள்வாய்
கணபதியே வருவாய்" ப..பபப..பபபபப...பப..பபப.பபப.பப.பபப."

சீர்காழி கோவிந்தராஜன் குரல் ஊரெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து எல் ஆர் ஈஸ்வரி, டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா, எஸ் பி பாலசுப்பிரமணியன், எஸ் ஜானகி, கே ஜே ஏசுதாஸ் போன்ற பின்னனி பாடகர்கள் பக்தியுடன் பாடிய பாடல்கள் ஒலித்தது. மனதை மயக்கும் இளையராஜாவின் "ஜனனி ஜனனி.... ஜனனி ஜனனி....பாடலும் மனதுக்கு இதமாக ஒலித்தது.

முத்து அண்ணனை பார்த்து ஜவகர் கேட்டான் "முத்து அண்ணே புது படத்துல வர பாட்டெல்லாம் போட மாட்டேளா" இல்லப்பா உங்க ஊரு தங்கவேலு சொல்லிட்டாரு சினிமா பாட்டு போடக்கூடாதுன்னு.

ஆனா பரவாஇல்லடே உங்க ஊரு.

எதுக்குண்னே அப்படி சொல்லுதிய.....

நானும் நிறைய ஊருக்கு கோயிலுக்கு செட் அடிக்க போயிருக்கேன் அவனோளு சாமி பாட்டு போட்டு முடிச்ச உடனே "போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே" இதைத்தான் போடனும்ன்னு சொல்லுவாங்க, இல்லன்னா கார்த்திக் நடிச்ச படத்தோட பாட்டு தான் போடனும் இப்படி சொல்லுவாஙக்கடே.

சில ஊர்ல 'சரத்குமார் நடிச்ச படத்தோட பாட்டு தான் போடனும் வேற பாட்டு போடக்கூடாதுன்னு சொல்லுவானுவ.....

எனக்கென்னப்பா இளையராஜா பாட்டுதான இதெல்லாம் ன்னு ரசிப்பேன்.

'ஆனா உங்க ஊர்ல இப்படி ஒரு நடிகரை சார்ந்து நீங்க இல்லை தம்பி. நல்ல பாடல்களை தான் ரசிக்கிறீங்க' சினிமாவையும் சாதியையும் போட்டு குழப்பிகிடல....என்றார் அழுத்தமாக.

விழாவுக்கு முதலில் தேவை மேளக்காரர்கள் அவர்கள் வந்ததும் சாமியாடி மாசானம் அன்போடு வரவேற்றார். மேளக்காரர்கள், வில்லுப்பாட்டுக்காரர்கள், கணியான் பறைஇசை கலைஞர்கள், தஞ்சை புகழ் முல்லை கரகாட்டக்காரர்கள் என தனித்தனி வீடுகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்தது. கரகாட்ட குழுவினர்களுக்கு மட்டும் இரண்டடுக்கு பாதுகாப்பு இது தங்கவேலரின் உத்தரவு.இவர்களில் சவுண்ட் சர்வீஸ் அண்ணனை தவிர்த்து மீதியுள்ள கிராமிய கலைஞர்கள் போன வருசம் வந்தவர்கள் தான்.

திங்கள்கிழமை காலையில் இனிதே ஆரம்பித்து கொடை விழா.

"மேளக்காரர்கள் எங்கிருந்தாலும் உடனே அம்மன் சன்னதிக்கு வருமாறு விழா குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்" என மைக்கில் கூறினார் தங்கவேலு.ஞாயிறு இரவும் அம்மன் கோவிலிலே இருந்தனர் சாமியாடிகள், விழா அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் விடிய விடிய யாரும் வீட்டுக்கு யாரும் போகவில்லை.எப்போது வேண்டுமானாலும் மேளம் இசைக்கலாம் ஒத்திகை பார்க.மேளம்
ஒத்திகை பார்க்கும் போதே சிறுவர்கள் ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

ஜவகர், மாணிக்கம், குட்டி, ஆறுமுகம் ஏற்கனவே கள்ளு குடிக்க ஏற்பாடுகள் செய்தனர் செவ்வாய் கிழமை நடைபெறும் கரகாட்ட நிகழ்ச்சிக்கு ஜவகர் தான் இந்த இளைஞர்களுக்கு தலைமை.ஞாயிற்றுக்கிழமை வட்டக்குளத்துக்கு பனங்கா பொருக்க போகும் போதே மாணிக்கம் 'பண்டாரவிளை' மணி அண்ணாச்சி கிட்ட 'அண்ணேன் எனக்கு ரெண்டு கலயம்' கள்ளு வேனும் நாங்க செவ்வாய்க்கிழமை மதியானம் வந்து வாங்கிடுவேன்' என முன் பதிவு செயதுவிட்டான் இப்படி ஏதாவது ஊரில் கொண்டாட்டம் இருந்தால் தான் இளைஞர்கள் கள்ளு குடிப்பார்கள் அதற்கு பனையேறி ஆட்களை தேடி அலைவது உண்டு.

செவ்வாய் காலையில் வில்லுப்பாட்டு குழுவினர் "சுடலைமாடசாமியின்" வாழ்க்கை நிகழ்ச்சியை பாடலாக பாடி விளக்கம் கொடுத்தனர்

"அறைக்குள்ளே இருந்தாலும் அரணறிய மாயமுண்டோ...

ஆமாம்....

சிமிலுக்குள்ளே இருந்தாலும் சிவனறிய மாயமுண்டோ...."

தமுக்கு......தமுக்கு.....தமுக்கு...

கொஞ்சி நல்ல விளையாட குழந்தை ஒன்று வேனும்சாமி....

மடியில் வைத்து விளையாட மைந்தன் ஒன்று வேனும்சாமி...."

இப்படி பாடும் போது விழா அரங்கமே அதிரும் சுடலைமாடனாக ஆடும் சுடலையாண்டிக்கு ஆமாம்...ஆமாம்...அந்த மாடசாமிதான் என்று ஆட ஆரம்பித்தார்.

மதிய கொடை ஊரில் ஆரம்பித்து முருகன் கோவிலில் சென்று பின்னர் திரும்பவும் ஊர் அம்மன் கோவிலுக்கு வருவது தான் நிகழ்ச்சி நிரல்.முருகன் கோவிலுக்கு போய் திரும்பி வந்தவுடன் மதியான கொடையில் ஆடு கோழிகளை நேந்துவிட்டவர்கள் அவர்களது நேர்த்தி கடனை அடைக்க சாமியாடிகளிடம் கொண்டுவந்தனர்.

'மைக்கை பிடித்து தங்கவேலர் சொன்னார் சீக்கிரம் ஆடு கோழியை கொண்டு வாங்க நேரம் ஆகிகொண்டே இருக்கிறது'.

மேளக்காரர்கள் "மாரியம்மா மாரியம்மா திரு சூலியம்மா நீலியம்மா" இந்த பாடலை வாசித்ததும் அம்மன்கொண்டாடி மாசானத்திற்க்கு கட்டுப்படுத்த முடியா சாமியாட்டம். முதலில் மாசானம் ஆடியவுடன் பிற சாமி ஆடிகளும் ஆட ஆரம்பித்தனர்.

"கணியான் தப்பட்டை குழுவினர் உடனடியாக விழா மேடைக்கு வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" தங்கவேலு மைக்கில் சொன்னவுடன் கணியான் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். கணியான் குழுவினர் தப்பட்டை அடிப்பது பிரத்தியேகமாக சுடலைமாடனுக்குதான். சுடலைமாடனாக ஆட ஆரம்பித்தார் ஊர் 'சுடலையாண்டி' கருப்பு டவுசர் தலையில் குல்லா என சுடலைமாடனாகவே மாறிவிட்டது களம்.
வில்லு பாட்டுகாரர்கள் தொடர்ந்து சுடலைமாடன் கதையை சொல்லி கொண்டு இருந்தனர். ஊர் மக்கள் பக்தியோடு கதையை கேட்டுக்கொண்டிருந்தனர்.

"கட்டையிலே பிணமிருந்து
கத கதவென்று வேகுதய்யா
என்னி நல்ல எருகடிக்கி
ஈரமண்ணை மேல்பொதிந்து
தில்லை வன காட்டினிலே
மாண்ட பிணம் வேகுதய்யா வேகுதய்யா"

ஆமாம்

"மயானம் போகவேண்டும்
மாண்ட பிணம் திங்க வேண்டும்
இடுகாடு போகவேண்டும்
இறந்த பிணம் திங்கவேண்டும்" ஆமாம்......ஆமாம் பாட்டும் தொடர்ந்தது

இடைவிடாது சாமியாட்டமும்.

"கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடசாமி" இந்த பாட்டுக்கு தப்பட்டை அடித்ததும் துள்ளி குதித்து ஆடினார் சுடலைமாயாண்டியார்.

அம்மன் கொண்டாடியிம் வாக்கு கேட்பது ஒவ்வொரு வருசமும் நடைபெறும் நிகழ்ச்சி.

பாக்கியம் அம்மா முதலில் கேட்டார் 'இந்த வருசமாவது மழை தண்ணி வருமா வயக்காடு எல்லாம் தண்ணி இல்லாம வரண்டே போயிட்டு'

அம்மன் கொண்டாடி உடனே 'கண்டிப்பா இந்த வருசம் மழை வரும்மா நீ போய் நெல்லு விதைக்க வேலைய பாரு'.

அடுத்து கணகம் அக்கா கேட்டாங்க 'தினம் தினம் இந்த ஊருல செத்துப்போன பிணம் எரியித வாடை தான் வருது அததான் மூச்சு விடுதோம் அதுக்கு நம்ம அம்மன் ஏதாவது செய்வாளா'? இந்த பிண வாடையில இருந்து தப்பிக்க முடியுமா?.

இந்தா பாரு தாயி 'நம்ம அம்மனும் இந்த பிணம் எரியுத வாடையதான் சுவாசித்துட்டு இருக்கா.அவளுக்கு இந்த ஊர்ல நடக்கிறது எல்லாம் தெரியும்.அவளை கும்பிடுகிற மக்களை கைவிட மாட்டா" எப்படியும் அரசாங்கம் ஒரு நலல வழி காட்டும்மா இதுக்கு அம்மன் துணையா இருப்பா".

மேளக்காரர்கள் வேக்த்தை கூட்டினர் சாமியாடிகளும் மேளத்துககு போட்டி போட்டு ஆடினர்

அம்மனோட அந்த பதில் ஊர் மக்களுக்கு ஒரு மன நிறைவை கொடுத்தது.

இரவு கரகாட்டம் நிகழ்ச்சிக்கு மாணிக்கம் ஏற்கனவே ரவை சீனி காப்பி பொடி சுககு கலர் பொடி ஜேக்கரின் பொடி எல்லாவற்றையும் அவன் சேமித்த பணத்தில் ராஜா ஸ்டோரில் இருந்து வாங்கிவிட்டான்.
ரவையை வைத்து கேசரி கிண்டி விற்பனை செய்வது சுக்கு காப்பி போட்டு சுட சுட விற்பது லாபம் கிடைக்கும்.தங்கவேலரின் அக்கா பையன் தான் மாணிக்கம் அதனால் அவனை எதுவுமே சொல்வதில்லை தங்கவேலர்.

கரகாட்டம் ஆடும் பகுதியில் வட்ட வடிவில் கலர் டியூப் லைட்டை ஏற்கனவே நடராஜர் கட்டி அலங்கரித்துவிட்டார்.

இரவு சாமியாட்டம் முடிந்த பிறகே கரகாட்டம் ஆரம்பிக்கும். கரகாட்டம் பார்பதற்கு இளைஞர்கள் கூட்டமே அதிகமாக இருக்கும்.

"சந்தைக்கு வந்த கிளி
சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெட்கமா"

இந்த பாடலை மேளக்காரர்கள் வாசிக்க கரகாட்டம் அதற்கு ஏற்றால் போல் ஆடினார்கள் தஞ்சை புகழ் முல்லை குழுவினர். பாடல்களுக்கு இடையில் ஆண் பெண் உரையாடல் இருக்கும் சிறிது இரட்டை அர்த்தங்கள் உள்ள (ஆண்கள் பெண்கள் என வித்யாசமின்றி அதை ரசிப்பதுண்டு)

மாணிக்கத்தின் கேசரிக்கு நல்ல வியாபாரம் சிறுவர்கள் முந்திக்கொண்டு வாங்கினர்.

மூன்றாம் நாள் முடிந்த கொடையோடு எல்லோரும் கரகாட்டம் வில்லுப்பாட்டு கணியான் கிளம்பும் போது ஏதோ ஒன்றை இழந்ததை போல இருந்தது கிராமத்தில்.

சாயாங்காலம் மீண்டும் சுந்தர் அண்ணன் வேறு ஒரு மையத்தை எடுதது வந்தார் அவர் பின்னால் சுமார் இருபது பேர் இருப்பார்கள்.

மையத்தை எரித்துவிட்டு சுந்தர் அண்ணன் வீட்டுக்கு கிளம்பும் போது தங்கவேலர் கண்ணில் பட்டார்.

காற்றில் பிண வாடை ஊரெல்லாம் அலைமோதியது.

"என்ன சுந்தர் அண்ணேன் இன்னக்கி யாரு இறந்துட்டாங்க" என கேட்டார் 'அதாடே நம்ம மகாதேவன் சார் தான் நேத்தே அவரு இறந்துட்டாரு, ஆனா உங்க ஊர்ல கொடை இருந்ததால மையத்தை நேத்து எடுகக வேண்டாம் நாளைக்கு சாயங்காலம் எடுக்கலாம்ன்னு அவங்க வீட்டுல சொல்லிட்டாங்க'.

வேற கொடை எலலாம் நலல படியா முடிஞ்சதா என கேட்டு அவரும் கிளம்பினார்.

இனி அடுத்த பிணம் ஊருக்குள் எப்போது வருமோ!.

- பாண்டி, பாஸ்டன்