அனல் பரப்பும் அடுக்கு ஜன்னல். அசுரத்தனத்தில் ஆங்கார முகம் அந்த பேருந்துக்கு. 
 
அதிவேகம் என்பது ஊறுகாய். தொட்டுக் கொண்டே சரக்கடித்திருந்த வேலுச்சாமிக்கு வேகம் பிடிக்கும் தான். வேகத்தினூடாக செல்போனில் "வெட்டி வேர் வாசம்.. விடல புள்ள நேசம்....." கேட்க கேட்க பீர் வந்து சொட்டுதே காதினிலே.... தானாகவே சிரித்துக் கொண்ட போது பேருந்து நாக்கைத் துருத்திக் கொண்டு தூக்கி அடித்தது. 
 
நடுவில் அமர்ந்திருக்கும் அவனே பேருந்தின் மேற் கூரையைத் தொட்டு விட்டு வருகிறான் என்றால் பின்னால் டயர் மேல் உட்கார்ந்திருப்பவன் நிலை. மண்டை தெறித்து கூரையைப் பிய்த்துக் கொண்டு வெளியே சென்றிருக்க வேண்டுமே.....
 
திரும்பி பார்க்கையில்... திருவாத்தான்கள் மாதிரி எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
"இள நெஞ்சே......வா... தென்றல்....தேரினில் எங்கும் போய் வரலாம்" அடுத்த பாட்டு கேட்கையில் பள்ளி கால தேவதை நினைவுக்கு வந்தாள். தானாக புன்னகைக்க காரணம் எதற்கு. யோசித்த போது கண்கள் தானாக ஓட்டுநன் பக்கம் சென்றது. ஓட்டுநன் ஒரு காதில் அலைபேசியை வைத்து அணைத்துக் கொண்டு ஒரு பக்கமாக ஸ்கூட்டர் ஓட்டுபவன் போல சாய்ந்து சரிந்து சிரித்துக் கொண்டே ஓட்டிக் கொண்டிருந்தான். வண்டி முன்பு விட வேகம் தான். ஜன்னல் பின்னோக்கி சென்றதை வானம் காட்டிக் கொடுத்தது.
 
"அய்.. என்னப்பா... இவ்ளோ வேகமா ..ஓட்ராப்டி....." என்று ஒரு சத்தம் விட்டபடி பொதுவாக எல்லாரையும் கழுத்து திரும்பும் வரைக்கும் பார்த்து விட்டு மீண்டும்...சரி சரி என்பது போல ஒரு உடல் மொழியில் அமர்ந்து கொண்டே "குயிலே....... இளங்குயிலே...." பாடலில் திளைக்கத் தொடங்கினான். பஸ் சைடு எடுத்து சும்மா பஞ்சா பறந்து கொண்டிருந்தது. அவரவர்க்கு ஆயிரம் அலைபாயல்கள். குனிந்த தலை, நிமிராமல் அமர்ந்திருந்தார்கள். பேருந்துக்கு வாக்கப்பட்ட காற்றசைவுகள் ஏகத்துக்கும்.
 
ஒரு வளைவில் வண்டி மீண்டும் அப்டி இப்டி என்று அலைபாய்ந்து சைடேறி.... குனிந்து வளைந்து நிமிர்ந்து மீண்டும் நடுசாலையில் ஜம்மென்று வருகையில் பேருந்துக்குள் இருப்பவர்களின் குடல் தொண்டையை தொட்டு விட்டு சலம்பியது. கழுத்து வரைக்கும் சரக்கடித்திருந்த வேலுச்சாமிக்கு கொஞ்சம் வாந்தி கூட வந்து விட்டிருந்தது. 
 
"ஏய்.. என்ன இது...?" 
 
வந்த கோபத்துக்கு எழுந்தே விட்டான். அவன் எட்டிப் பார்க்கும் இடத்தில் ஓட்டுநன் காதில் இன்னமும் அலைபேசி அச்சு பிசகாமல் அமர்ந்திருந்தது. ஒற்றைக் கையில் பிஸ்கட்டை வேறு எடுத்து எடுத்து வாயில் போட்டப்படி கழுத்தை சாய்த்துக் கொண்டு ஒற்றை கையில் ஸ்டியரிங்கை சுற்றிக் கொண்டிருந்தான்.  
 
தான் பொறுத்தாலும் தனக்குள் போன நெப்போலியன் பொறுக்க இயலாமல்...... " ஏங்க......என்ன பண்ணிட்டு இருக்கீங்க... போன் பேசிட்டே வண்டி ஓட்டக்கூடாதுனு தெரியாதா...... அதும் இவ்ள வேகமா...... கண்ணுமுன்னு தெரியாம ஓட்றீங்க....... உள்ள இருக்கறவன் மனுசனா...... என்ன......" கீச் கீச் ஸ்பீக்கரில் பேசியது போல இருந்தது அடிக்கும் காற்றுக்கு.

ஒரு பயல் காதிலும் விழவில்லை. படித்து வைத்த ஜடம் மாதிரி எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். 
 
டிரைவர்க்கு சிரிப்பு முகம் இப்போது. எதிர்முனை என்ன பேசியதோ......! 
 
"தான் சரியாகத்தான் பேசுகிறோமா " என்ற படபடப்பில் வேலுச்சாமிக்கு இன்னமும் கோபம் அதிகமானது. யாரும் கண்டு கொள்ளாதது தன்னை அவமதித்ததாக கருதினான். சட்டென்று திரும்பி நடத்துனனிடம் சென்று முறையிட்டான். அவன் காசை எண்ணியபடியே, " சரி சரி போ..... பார்த்துக்கலாம்" என்பது போல ஜாடை காட்டி....ஒரு ஜில்லா கலெக்டரின் முக பாவனையை போர்த்திக் கொண்டு புருவம் தூக்கி தன் வேலையைத் தொடர்ந்தான்.
 
"ஒரு தப்பு நடக்குது.. அதை யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க... கேக்கறவனயும் கண்டுக்க மாட்டேங்கறாங்க... முள்ள முள்ளாலதான் எடுக்கணும்.... இரு வரேன்....." என்று முனங்கி கொண்டே தன் அலைபேசியின் வீடியோ ஆப்ஷனை ஆன் பண்ணினான். ஓட்டுநன் அருகே சென்று அவன் செய்கைகளை படம் பிடிக்க ஆரம்பித்தான் வேலு. 
 
"இப்ப தான்... சாமி கண்ண தொறக்குது போல" என்பதாக திரும்பி பார்த்த ஓட்டுனன்......" என்ன பண்ற.....? என்றான். அப்போதும் அவன் காதில் பழுக்க காய்ச்சிய செம்பை ஊற்றியது போல அலைபேசி ஒட்டிக் கொண்டுதான் இருந்தது.
 
"என்ன பண்றன்னு" கேட்டபடியே, " இல்ல இ ல்ல..... இங்க.." என்று அலைபேசியில் பதில் சொல்லிக் கொண்டும் வண்டியை குலுக்கு குலுக்கென குலுக்கிக் கொண்டே ஒற்றை ஆளாக ஒரே நேரத்தில் மூன்று வேலைகளை செய்யும் அர்த்தபுஷ்டி முகத்தோடு பார்த்தான். 
 
"இப்டி செல்போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டுவது தப்பில்லையா...? சொல்லியும் கேட்காமல்.... இது அராஜகம்.... அத்துமீறல்...!" என்று தான் எடுத்துக் கொண்டிருக்கும் வீடியோவுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துக் கொண்டிருந்தான் வேலு. 
 
எதிர்பாராத கனத்தோடு பளாரென அரை மண்டையோடு சேர்த்து ஒரு அப்பு விழுந்தது. ஒரு ஆட்டம் ஆடி கிர்ரென்று சுற்றி தடுமாறி அப்படி இப்படி என்று கம்பியைப் பற்றி பதறி நின்று பார்க்கையில் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது.
 
பின்னாலிருந்தது நடத்துனன் எப்போது வந்தான் என்று தெரியவில்லை. ஓட்டுனன் எப்போது வண்டியை நிறுத்தினான் என்றும் தெரியவில்லை.  அலைபேசி வழியாக வீடியோவில் மூழ்கி இருக்கும் போது இப்படித்தான் எதுவுமே தெரிவதில்லை. ரயில் முன்னால் நின்று செல்பி எடுப்பவன் சாவதெல்லாம் இப்படித்தான் போல. அந்த நேரத்திலும் புத்தி கூர்மையாகத் தான் வேலை செய்தது வேலுவுக்கு.
 
சராமரியாக விழுந்த அடியினூடே..."  நானும் பார்த்துட்டேருக்கேன். அங்க இருந்து சலம்பல் குடுத்துகிட்டே வந்துட்டுருக்கான்...." மூக்கில் விட்ட பஞ்சில் சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.  அப்போதும் அவை எல்லாவற்றையும் படம் பிடித்துக் கொண்டேயிருந்த வேலுவுக்கு கோபம் உச்சி மயிரை நட்டுக் கொள்ள செய்தது சூழல். 
 
"உங்களையெல்லாம் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்..."  வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க...அங்க வெச்சு பேசிக்கலாம் " என்று புலம்ப ஆரம்பிக்கையில் அவனையும் மீறி அழுகை வந்தது. அடி  சூடாக வலித்தது.
 
"அந்தாள இறக்கி விட்டுட்டு வண்டிய எடுங்க... டைம் ஆச்சு..."  பொதுமக்கள் பக்கம் இருந்து சத்தம் வர........பார்வையை அவர்கள் பக்கம் திருப்பிய வேலுச்சாமி, " ஏங்க... உங்களுக்காகத்தான பேசிட்டுருக்கேன்..... உங்களுக்காகத்தாங்க பேசி இப்டி அடி வாங்கி மானங்கெட்டு நிக்கறேன்...... ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் போராடுவீங்களா.......செல்போன் பேசிட்டே பஸ் ஓட்றதுக்கெல்லாம் போராட மாட்டிங்களா....தப்பு அவுங்க பண்றாங்க . கேட்டா அடிக்கறாங்க.......தமிழ் உறவுகள் நீங்க யாரும் கண்டுக்க மாட்டிக்கறீங்க....."
 
பொதுவாக பார்த்து தொண்டை கிழிய கத்தினான் வேலுச்சாமி. குபீரென்று மீண்டும் முகத்தில் குத்து விழுந்தது. இம்முறை ஆஜானுபாகுவான ஓட்டுனன் கைவரிசை.  
 
நிற்க முடியாத தடுமாற்றத்தில் முன்னால் இருக்கும் ஒற்றை இருக்கையில் சரிந்து விழுந்தான் வேலு. இயலாமையில் அவன் பார்வை மங்கியது.
 
"நீங்க வண்டிய எடுங்க....அடுத்த ஸ்டேசன்ல தள்ளி விட்டுட்டு போய்டலாம்.... குடிகார நாய் ஒளறிட்டுருக்கு..." என்ற நடுத்துனன், பொதுவாக ஒரு பார்வை எல்லாரையும் பார்த்தான். ஒருவன் அதையும் ஒளிந்து ஒளிந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.
 
"பத்து லைக்குக்கு ஆசைப்பட்டு உசுர விட்றாத தம்பி.... ஊர் போய் சேர்ற வழிய பாரு..." கர்ண கொடூரமாக முணங்கிக் கொண்டே தன் இருக்கைக்கு சென்றான் நடத்துனன். வண்டி மீண்டும் அதே வேட்டை நாயைப் போல அலைபாய்ந்து சென்றது.
 
சிறு மயக்கம் தெளிய படக்கென்று எழுந்து மக்களை பார்த்து......"ஏங்க இது தப்புனு உங்க யாருக்குமே தோணலயா... கேள்வி கேட்ட என்னை அடிச்சு அவமானப் படுத்திருக்காங்க....ஆமா...  நான் குடிச்சிருக்கேன்... ஆனா என் கேள்வி ஒன்னும் தப்பில்லயே.... போன் பேசிட்டு வண்டி ஓட்டக்கூடாதுதான...அவர் ஓட்றார்......நீங்க இப்டி சூடு சொரணையே இல்லாம இருக்கீங்க...." முகத்தில் வழிந்த குருதியை அனிச்சையாக துடைத்துக் கொண்டான். 
 
"டேய் மயிறு.... ஒழுங்கா உக்காரு. வந்தேன்.......... வண்டில இருந்து தூக்கி வெளிய வீசிடுவேன்....." நடத்துனன் கத்தினான்.
 
"டேய் மயிறு நீ  என்னடா என்ன தூக்கி வீசறது....டேய் தம்பி இதையும் வீடியோ எடுடா..... எடுத்து எல்லாருக்கும் சேர் பண்ணுடா.... " குறுக்கே கண்கள் மாற்றி பேசிவிட்டு மீண்டும் நடத்துனன் பக்கம் திரும்பி பேசினான் வேலு.   
 
"என்ன மயிறு........நான் குடிகாரனா....... நானா காய்ச்சி குடிச்சேன்........ நீங்க விக்கறீங்க....... நான் வாங்கி குடிக்கிறேன்.. நீ விக்கறத நிறுத்துனா.....நான் குடிக்கறத நிறுத்தறேன்.... செல் போன் பேசிட்டு வண்டி ஓட்றது தப்புன்னு சொன்னா அடிப்பீங்களா... கேட்டா.......குடிகாரன்... !......ஏன்....... நீயெல்லாம் குடிக்கறது இல்லையா... இந்த பஸ்ஸுக்குள்ள ஒருத்தன் கூட குடிக்கலையா...சொரணையில்லாத மனுஷனுங்க... குனிஞ்சே உக்காந்துருக்கானுங்க...சொரணை கெட்டவன் போற பஸ்ல நான் போக விரும்பல... " என்று சொல்லிக் கொண்டே முன் வாசல் வழியாக ஓடும் பேருந்திலிருந்து எட்டிக் குதித்தான் வேலுச்சாமி.
 
(காகிதப்பூ தொடரும்)
 
- கவிஜி