பேருந்தின் எண்ணையெல்லாம் பார்க்கவில்லை, தஞ்சாவூர் என்று போட்டிருந்ததால் ஏறிவிட்டேன்.

நம் ஊரில் பேருந்துகள் நிற்பதே ஆச்சரியம், நம்பர் பார்த்து ஏறி ஒரு ரூபாய் மிச்சம் செய்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டேன்.

காலை நேரம் என்பதால் பேருந்தில் பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி மாணவர்களின் புத்தக மூட்டை நெரிசலையும் தாண்டி ஓர் ஓரமான கம்பியில் சாய்ந்து நின்றுகொண்டேன்.

"பாஸ்'லாம் எடுத்து கைல வச்சுக்கோ..சில்லரையா கொடுத்து டிக்கெட் வாங்கு.." என கத்திக் கொண்டே வந்தார் நடத்துநர்.

காக்கி நிற சட்டை, காதில் ஒரு பேனா, கலர் கலர் டிக்கெட்டுக்கள் ஒரு மினுமினுக்கும் அட்டையோடு சுண்டு விரலின் மோதிரம் போல் மாட்டி இருந்த விசில், நடுவிரலில் சொருகப்பட்டிருந்த கத்தைப் பணம் என அவர் மேல் கம்பியைப் பிடித்து, கூட்டத்தைப் பிளந்து வரும்போது சிகப்பு நிற அரைஞாண் கயிற்றில் காக்கி நிற கால் சராயைச் சுற்றி இருப்பது நன்றாகத் தெரிந்தது.

கம்பியைப் பிடித்துக்கொண்டு இருந்த சிறுவனின் கையை எடுத்துவிட்டு அதில் சாய்ந்துகொண்டு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.

"வலுத்தூர், அய்யம்பேட்டை, கரந்தை, புது பஸ்டாண்டு, பழைய பஸ்டாண்டு என பல திசைகளில் இருந்து நீளும் கைகளுக்கும் வண்ண வண்ண டிக்கெட்டுகளைக் கிழித்து கொடுத்தார். 100 ரூபாய் நீட்டி கைகளுக்கு காசைத் திருப்பி திணித்து "சில்லரை கொடு" என்றார்.

இதற்கு இடையில் தஞ்சாவூர் என்று நான் 20 ரூபாயை நீட்ட "புதுசா..?, பழசா..?" என்று கேட்டுவிட்டு, "பழசு.." என்று நான் பதில் சொல்லும் முன் பச்சை நிற டிக்கெட்டை கிழித்து மாட்டி இருந்த தோள் பையை ஒரு குலுக்கு குலுக்கி அதில் சில்லரைகளைத் தேடி டிக்கெட்டோடு என் கையில் திணித்தார்.

இவை அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிந்தன. அப்படி ஒரு வேகம். ஆனால் அவர் முகத்தில் எந்த ஒரு சிறு பதட்டமும் இல்லை.

"இவர் மனிதர் தானா..? அல்லது ஏதாவது இயந்திரமா..?" என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

பையில் இருந்து ஒரு பேப்பரை எடுத்தார். அதை அந்த மினுமினு அட்டை மேல் வைத்து காதில் சொருகி இருந்த பேனாவால் ஏதோ கிறுக்கினார். இடையிடையே டிக்கெட்களில் எதையோ தேடி மீண்டும் கிறுக்கினார்.

டக்கென்று குனிந்து ஜன்னல் வழியாக எதையோ பார்த்துவிட்டு.. "வலுத்துர்'லாம் படிக்கிப் போ.." என்று அலறினார். பின் சிறு இடைவெளி விட்டு ஒரு விசில் அடித்தார், பேருந்தே அலறியது.

புத்தக மூட்டைகள் என் கால்களை பதம் பார்த்துவிட்டு கீழ் இறங்கின. பேருந்து சற்று விசாலமானது.

இப்போது கன்டெக்டர் என் தோளில் கை வைத்தார். "டிக்கெட் எடுத்துட்டேன் சார்" என்று நான் சொல்ல..

சிரித்துக் கொண்டே "தெரியும் சார் முன்னாடி இடம் இருக்கு.. போய் உட்காருங்க" என்றார்.

"இவர் மனிதர் தான்" என்று நான் நினைத்து முடிக்கும் முன்,

"அய்யம்பேட்டை இரண்டு.." என்று ஒரு குரல் கேட்க,

மீண்டும் மெசினாகிவிட்டார்.