யாருடைய மூளையையோ வைத்திருப்பது போல ஒரே நம நமச்சல். இதயம் கூட அப்படித்தான் இறுக்கமாக எகிறிக் கொண்டிருந்தது. நான் நடப்பது கூட வேற ஆள் மாதிரி தான் இருந்தது. என்னால் அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர முடியவில்லை. எல்லா கேள்விகளுக்கும் விடை தேடும் ஆளும் இல்லை நான். அதே சமயம் எல்லா பதிலுக்கும் கேள்விகளும் வேண்டாம் தான் எனக்கு. ஆனால் எங்கு அரிக்கிறது என்றே தெரியாமல் சில போது கைகள் பரபரக்கும் தவிப்பில் தான் இப்போது அமர்ந்திருக்கின்றேன்.

புறாக் கூண்டை கட்டடமாக்கி பத்து பேருக்கு வாடகைக்கு விட்டிருக்கும் பெரும் காடழிப்பு நிறுவனர் என்று தான் எங்கள் வீட்டு ஓனருக்கு நினைப்பு. சரி, அது அவர் நினைப்பு. அதில் ஏன் நாம் துளையிட வேண்டும். அப்படி இருக்கத்தான் வாழ்வுதனை இங்கு நான் இலகுவாக்குகிறேன். இன்று அதுவும் சிலாக்கி வேலை செய்கிறது. என்ன நடக்கிறது. அடிவயிற்றில் ஏதோ இறுக்கி பிடித்திருக்க....... ஆத்திரமாக வந்தது. தேநீர் குடிக்கையில் எல்லாம் இறுக்கிப் பிடித்த இலை மறை கதைக்குள் பழுத்து தொங்கும் மூப்பின் சனி முப்பதைக் கடந்தும் பெரும்பாடாய் படுத்துதல் எனக்கு மட்டும் என்று நம்பும் பிரம்மசாரி நான். வாய்ப்பு அமையாத தனிமைவாதி. எந்த இசங்களும் இல்லாத பீருக்கு சில சமயம் பிச்சை கூட எடுத்து விடுவேன். பிச்சை புகினும் கற்கை நன்றே... கற்றல் கேட்டலிலும் கிடைக்கும்.. குடிப்பதிலும் கிடைக்கும். கொளுத்திப் போட நெருப்பு வேண்டுமா என்ன......சொற்கள் போதுமே..!

பின்னிரவுக் கனவுகளில் கடவுளோடு புணர்ந்து கிடக்கும் காலக் கூத்தை யாரிடமும் நான் பகிர்வதில்லை. பைத்தியம் என்பார்கள். அதுவாவது பரவாயில்லை. பாவி என்பார்கள். அதுதான் என்னால் தாங்கிக் கொள்ளவே இயலாது. திக்கு தெரியாத மொட்டைமாடி இரவில் யாரோடும் பேச முடியாத போது நிலவோடு கண்ணீர் விடும் 80 களின் ஹீரோவாக நினைத்துக் கொள்வதுண்டு பாவிக்குப் பதில். "இது ஒரு பொன்மாலை பொழுது" என்று பாடினால் இரவென்ன கோபித்தா கொள்கிறது. நினைப்பு தானே எல்லாமே. துக்கத்தின் மீசை முறுக்கும் கைகளை நான் தேடிக் கொண்டே இருக்கிறேன். உடனடித் தேவை காதல் எல்லாம் இல்லை. வேற.. வேறன்னா புரிஞ்சுக்கோங்க.....எல்லாத்தையும் நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டே இருந்தா கதைக்கு வேணா சுவாரஸ்யம் கூடும். எழுதறவனுக்கு எப்டி கூடும். காக்கா விழ பனம் பழம் தப்பிச்ச மாதிரி, கதையை மாத்தி கட்டறது தான் கடினமான வேலைன்னு எங்கையோ எவனோ எழுதின மாதிரி ஞாபகம். படிச்ச மாதிரி இல்ல.

சரி விஷயத்துக்கு வர்றேன்.

என்ன நடக்குதுன்னு யோசிக்கறதுக்கு முன்னாலே அடுத்த நாள் வந்திருது.... அதுக்கு அடுத்த நாளும் அப்டித்தான் வருது. சிட்டா பறக்கற இந்த காலத்துல சிட்டுக்குருவியா மாறிடறது தான் நல்லது. பேசினால் பிலாசபி... எழுதினால்...செக்ஸ்.... நினைத்தால் நல்லவன்...... படுத்தால் செத்தவன்...... அயோ உளறல் வர வர அதிகம் ஆகுது. ஆனாலும் இன்னைக்கு ஏன் எதுவும் பத்தாது போலவே இருக்கிறது. ரோட்டோர தள்ளு வண்டி கடையில் 6 இட்லிகள் சாப்பிட்டேன்.. மூன்று வகை சட்னிகள். இதற்கு மேலே என்ன வேண்டும்.. ஆயிரம் வருஷம் வாழணுமா இந்த புத்தி கெட்ட பூமியில... செத்து தொலைங்கடான்னு சாபம் விடவாவது ஒரு குடுகுடுப்பைக்காரன் இன்னைக்கு நைட்டு வரணும். ஒரு நாள் குடுகுடுப்பைக்காரனா இருக்கணும்னு ரெம்ப நாள் ஆசை. நிறைவேறுமா பாக்கலாம். ஆனா அதுக்கு முன்னால... இன்னைக்கு உள்ள என்னமோ நடக்குதே.......அது என்னானு கண்டுபிடிக்கனும்.

மூச்சு முட்ட கால்கள் உரச கச்சிதமாக குறுகிய பாதையின் சின்ன சின்ன நடைகளோடு வீடு வந்திருந்தேன். புறாக் கூடுகளின் இறுக்கம் முட்கள் வாசம்... மிகச் சரியாக வழக்கம் போல இருக்கிறது. நான் என்னை மாற்றுவது போல ஆடை மாற்றத் துவங்கினேன். நமக்கு லுங்கி கட்டிக் கொண்டு உள்ளாடையை கழட்டி தூக்கி வீசி விட்டு ஹாயாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி தான் இப்போதும் கழட்டினேன். திக்கென்று ஆனது. இன்றைய இறுக்கத்துக்கு இதுதான் காரணமா......ஐயோ ஐயோ என ஜட்டியாலே அடித்துக் கொண்டேன். அது என்னுடைய உள்ளாடையே இல்லை. அது பக்கத்து வீட்டில் யாரோ ஒரு பெண்ணின் உடையது. பூவெல்லாம் போட்டு குட்டியூண்டு இருந்தது.

திக்கென்று எழுந்து திருடனைப் போல வாசலில் சுற்றும் முற்றும் எட்டி பார்த்தேன்.

மூன்றாம் வீட்டில் இருந்தும் இரு கண்கள் எட்டி பார்த்துக் கொண்டிருந்தன.

இடையே துணி காயப் போடும் கொடியில் இருந்து கசிவதாக இருந்தது... ரேடியோவில் ஓடிக் கொண்டிருந்த "கொடியிலே........மல்லிகைப்பூ......" பாடல்.....!

- கவிஜி