கர்ச்சிப்புகளினால் நான் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல! எங்குதான் போய்த் தொலைந்தன எல்லாமும்? அடைந்து கிடக்கின்ற துணிகளுக்குள்ளிருந்து இதோ நானிருக்கிறேனென்று ஒன்றாவது தலைகாட்டக்கூடாதா? “ச்சே.. எரிச்சலா வருது”

“என்னப்பா செய்யிறீங்க.. பீரோவப் போட்டு டம்மு டிம்முன்னு எத்திக்கிட்டு!” முதல் நாள் வாங்கி வந்த சமையலறை சாமான்களை பிரித்து ஒழுங்கு படுத்தி அடுக்கிக் கொண்டிருந்தவளின் சத்தம் அடுப்படியிலிருந்து என்னை நோக்கி வந்தது.

“கர்ச்சிப்பயெல்லாம் எங்கனதாம்ப்பா எடுத்து வைப்ப.. ஒன்னக்கூடக் காணாமே”

“எங்க போகும்? தேடிப்பாருங்க” சொல்லிவிட்டு அவள் வேலையில் கண்ணும் கருத்துமானாள். ஓன்றும் கிடைக்கவில்லையென்பதால் வழக்கமான ஊமைக் கோபத்துடன் ‘போய் வருகிறேன்’ என்றுகூட அவளிடம் சொல்லாமல் பெரிய கட்டைப் பை ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறி வேகமாய் நடந்தேன்.

எங்கள் வீட்டிலே எப்போதுமே இது ஒரு பிரச்சனைதான். எனக்கு மட்டுமென்றால் பரவாயில்லை.. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அதே கதிதான். ஜவுளிக்கடை செல்லும் தருணமெல்லாம் டஜன் கணக்கிலே அதுகளுக்குக் கர்ச்சிப்பும், லஞ்ச் டவலும் வாங்கி வருபவள் கூடவே எனக்காக ஓரிரு கைலி வேட்டிகளையும், அதை துண்டு துண்டாய் வெட்டியது போன்;ற சில கர்ச்சிப்புகளையும் வாங்கி வருவாள். “இந்தாங்க பத்தெரமா வச்சுக்கோங்க” இரண்டொரு வாரம் கண்களில் தட்டுப்படுபவை பின் ஒவ்வொன்றாக எப்படித்தான் மறைந்து போகுமோ தெரியவில்லை!

கடந்த வாரத்தில் ஒருநாள் கடையில் சாப்பிட்டுவிட்டு கையையும் முகத்தையும் கழுவியபின் துடைக்க பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டபோதுதான் கர்ச்சிப் இல்லையென்பது தெரிந்தது. அதுகூடப் பரவாயில்லை அதேபோலொருநாள் மாலை நேரம் வேலை நிமித்தமாக அலுவலகம் சென்று இன்ஜினியரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ஜலதோசத்தினால் மூக்கில் வடிந்ததை துடைக்க முடியாமல் நான் பட்ட பாடு சொல்லில் அடங்காது. இப்படி எத்தனை எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இனி பேசாமல் ஒன்று செய்யலாம். பால்வாடிக் குழந்தைகளின் ஆடையில் ஊக்கு போட்டு தொங்க விடுவது போல நானும் கர்ச்சிப்பை சட்டைப் பாக்கெட்டின் மேல் தொங்குமாறு எப்போதும் குத்திக் கொள்ள வேண்டியதுதான். இல்லையென்றால் இன்னொன்றும் செய்யலாம்.. என்னுடைய தாத்தா ஒரு சிறந்த மாட்டு வியாபாரி.. ‘மாடு வாங்க விற்க.. எங்கிட்ட வாங்க’ என்பது போல் எழுபது வயதிலும் இன்னும் படு பிஸியாக இருக்கிறார் மனு~ன். வெள்ளை வேட்டியும், ஜிப்பா சட்டையுமாய் தோன்றும் அவரின் தோளில் முன்னும் பின்னுமாய் எப்போதும் நீளமான துண்டு ஒன்றும் தொங்கிக் கொண்டே கிடக்கும். அது அவருக்கோர் மந்திர வஸ்திரம்! வெக்கையும் வேர்வையும் தட்டுப்படும் நேரத்தில் எடுத்து வீசிக்கொள்வார், சில சமயம் உருமாவாகவும், புல்லு தட்டை வைக்கோல்கள் வாங்கிவரும் நேரத்தில் தலைச் சுமாடாகவும், சாப்பிடுவதற்கு முன் மற்றும் கை கால் முகத்தை கழுவும் போதும் அதை டிஸ்யு பேப்பராகவும், சத்திரம் சாவடிகளில் ஓய்வெடுக்கும் போது விரிப்பானாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக மாடுகளின் வியாபாரத்தின்போது இடைத் தரகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளுடன் கைகளில் துண்டு போட்டு மறைத்து விரல்களினால் ரகசிய பார்வை பேசவும் என அத்துண்டை பயன்படுத்துவார்.

பேசாமல் அப்படியொரு துண்டை வாங்கி இனி நானும் என் தோளில் தொடுக்கிக் கொள்ள வேண்டியததான். எதை எதையோ இலவசமாய் சொல்லி ஆசைகாட்டும் அரசாங்கம் தோளில் தொங்கப்போட ஆளுக்கொரு துண்டு கொடுக்கும் திட்டத்தைக்கூட கொண்டு வரலாமே.. அப்படியே அதை முக்காடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ச்.சே இந்த பாழாய்ப் போன கர்ச்சிப் என்னை எதையெல்லாம் பேசத் தூண்டுகிறது. ‘எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது..’ என்றோ வானொலியில் ஒலித்த பாடல் இப்போது நினைவலைகளில் வந்து ரீங்காரமிடுகிறது. ஆனால் என்னவள் மட்டும் அவளுக்கான கர்ச்சிப் இல்லையென்றாலும் கவலைப்படுவதில்லை. சேலை முந்தானையையும், சுடிதாரின் துப்பட்டாவையும் கொண்டு கர்ச்சிப் இல்லாத குறையைப் போக்கிக் கொள்கிறாள்.

பேன்ட் சட்டையை நிரந்தரமாக்கியதிலிருந்துதான் இந்த கர்ச்சிப்புகளின் மீதான கவனமெல்லாம். கைலி வேட்டியுடன் சுற்றிய காலங்களில் எல்லாவற்றுக்கும் அதுவே போதுமானதாயிருந்தது. ஒன்றா இரண்டா? கடந்த ஓராண்டில் மட்டும் வாங்கிய கர்ச்சிப்புகளின் எண்ணிக்கை இன்றைய ஆளும் கட்சி தேர்தலின்போது கொடுத்திருந்த வாக்குறுதிகளைப்போல அதிகம்தான். அந்த வாக்குறுதிகளைப் போலவே இப்போது கர்ச்சிப்புகளும் காணாமல் போய்விட்டன.

இந்த நேரம் பார்த்துத்தான் அவள் மீது எனக்குக் கோபமும் வருகிறது. சரி.. எட்டரை மணிக்கு பள்ளிப் பேருந்து வந்துவிடும் அதில் பிள்ளைகளை அனுப்ப வேண்டுமே என்ற எண்ணமிருக்கிறதா அவளுக்கு! அப்போதுதான் குக்கரில் விசில் அடிக்கும், குழம்பு கொதிக்கத் துவங்கும், பாத்திரம் விளக்குவாள்.. ஏனென்று கேட்டாள் தண்ணீர் வந்தது துவைத்ததால் தாமதமாகிவிட்டதென்று சொல்லுவாள். என்ன வீடு இது ஒரே குப்பையும் கூழமுமாக இருக்கிறது, யாராவது வந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள்.. இதில் சுவரெல்லாம் பென்சில் பேனா கலர் கிரயான்ஸ்களின் கிறுக்கல்கள் வேறு.. எனப் புலம்பினால் “வந்து பாக்குறவங்கவேன்னா வீட்ட சுத்தப் படுத்திக் குடுத்துட்டுப் போகட்டும்.. நம்ம பாடு நமக்குத் தெரியும், அடுத்தவங்களுக்குத் தெரியுமா.. பிள்ளைக இருக்கிற வீடு இப்பிடித்தே கலகலப்பா இருக்கும்” என சட்டமாய் பேசுவாள்.. சரி.. பிள்ளைகள் கிளம்பிவிட்டார்கள் எனக்கும் வேலைக்குத் தாமதமாகிவிட்டது.. “சோறும் வேனாம் ஒன்னும் வேனாம்” என கிளம்பினாலும் விடுகிறவளில்லை. சாப்பிட்டுத்தான் போக வேண்டுமென்று அடம் பிடிப்பாள்.

இப்போது நான் ஏன் அவள் மீது கோபத்துடன் கானப்படுகிறேன்? இப்படித்தான் எது எதற்கோ உணர்ச்சிவசப்பட்டு பாய்வதும் பின் வருந்தி அவளிடம் மன்னிப்பு கோருவதும் வாடிக்கையாகிப் போனது. இந்த கர்ச்சிப் வி~யத்திலும் அப்படித்தான் நடக்கிறது. யோசித்துப் பார்த்தால் அவள் வாங்கிக் கொடுத்த பல கர்ச்சிப்புகளை தொலைத்துவிட்டுத்தான் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறேன். நியாயப்படி அவள்தான் என்மீது கோபப்பட வேண்டும்.. “ஏன்யா உன் ஆசைப் பொண்டாட்டி வாங்கிக் குடுத்துருக்கேன் அதுல ஒன்னக்கூட உன்னால உருப்படியா வச்சுக்க முடியலயா” என்று.

‘ஒரு சாதாரண கர்ச்சிப்தானே அதற்கேன் இப்படி அளக்கிறாய்’ என்று என் மனது இப்படியும் என்னைக் கேட்கிறது. என்னைப் போன்ற சக மனுஷர்களும் மனுஷிகளும் அது நிமித்தம் அடைந்த பயன்களையும் அது இன்றிப் பட்ட அவஸ்தைகளையும் ஓரளவுக்கு அறிந்திருக்கிறேன்.

மருத்துவமனை, திரை அரங்கம், திருமண மண்டபம், மற்றும் பேருந்துகளின் இருக்கைகளில் இடம் பிடிக்கவும், துக்கம் கவலை கண்ணீரின் போது ஒத்தாசையாய் கண்களை துடைக்கவும், முகத்துக்கு அரவணைப்பாய் வைத்துக் கொள்ளவும், காதல் மொழியை பொறித்து தூது அனுப்பவும் இந்த கர்ச்சிப்புகள் உதவியிருக்கின்றன. லஞ்சப் பணத்தை தன்னுள் அடக்கிக்கொண்டு உரியவர்களிடம் போய்ச் சேர்ந்த கர்ச்சிப்புகளும் உண்டு. அது ஒருபுறமிருந்தாலும் சாலைகளில் விபத்துக்குட்பட்டவர்களின் காயங்களைக் கட்டவும், வழியும் குருதியைத் துடைத்துக் கொள்ளவும் எத்தனையோ வழிப்போக்கர்கள் தங்கள் கர்ச்சிப்புகளைக் கொடுத்து உதவியிருக்கிறார்கள். ஏன் நானே அப்படி ஒருவருக்கு உதவியதோடு அதை புகைப்படம் எடுத்து எனது முகநூல் தளத்திலும் போட்டு லைக் வாங்கியிருக்கிறேன். இன்னொன்று ஞாபகத்திற்கு வருகிறது.. பல ஆண்டுகளுக்கு முன் தீவிர வாதிகளால் முந்நூறு பயணிகளோடு பறந்த விமானம் கடத்தப்பட்டு பல நாட்கள் பேச்சு வார்த்தையில் இருக்கையில் அதிலிருந்த பெண்கள் தங்கள் மாதவிடாய் போன்ற இக்கட்டான தருணங்களில் சக பயணிகளின் கர்ச்சிப்புகளை உதவியாகப் பெற்று பயன்படுத்தியதையும் ஒரு பேட்டியின் வாயிலாக அறிந்து சங்கடப்பட்டிருக்கிறேன்.

சரி.. ஆனது ஆகட்டும் ஒரு படத்தில் ‘வடிவேலு’ சொல்வதுபோல கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது இன்னும் பல கர்ச்சிப்புகளை வாங்கிக் குவித்துவிட வேண்டும்

நடந்தே லான்டரிக் கடைக்கு வந்து விட்டேன். “அண்ணே இல்லையாங்க்கா”

“உக்காருங்கப்பா.. இப்ப வந்துருவாரு..” தேய்த்துக் கொண்டிருந்த அந்தம்மா சொன்னதும் சற்று நேரம் காத்திருந்தேன்.

‘வீரணன் சலவை நிலையம்’

எனக்கு விபரம் தெரிந்து முன்பெல்லாம் தொடதொடத்த வண்டியைப் போட்டு தெருமுனையில்தான் தேய்த்துக் கொண்டிருப்பார் வீரண்ணன். வீட்டு வீட்டுக்கு அழுக்குத் துணிகளை வாங்கி வெளுத்து வருவார். ஆனால் இப்போது ரொம்பவே மாறிவிட்டார். பதினாறுக்கு பத்து அளவு கொண்ட ஸட்டர் கதவு போட்ட கடை.. அதனுள்ளே கண்ணாடிகளால் ஆன பல அலமாரிகள், தேய்ப்பதற்கென்று இரண்டு மூன்று மேஜைகள், அதன்மேலே கனமும் அகலமும் ரகரகமான தேய்ப்புப் பெட்டிகள், வேலைக்கு ஆள், கல்லாப் பெட்டி, நாற்காலி, தொலைக்காட்சிப் பெட்டி, மெமரிகார்டில் படிக்கும் ஹோம் தியேட்டர், திரைக்குப் பின்னால் சலவைக்கும், தேய்ப்பதற்குமாய் வந்து மூட்டை வடிவுகளில் மலைபோல் குவிந்து நிற்கும் துணிப்பண்டல்கள், முகப்பில் அர்னால்டின் அரை நிர்வானப் போட்டோவோடு ‘வீரணன் சலவை நிலையம்’ என தமிழிலும் ஆங்கிலத்திலும் பெயர் பொறித்த பெயர்ப் பலகை என்று தன் தொழிலின் ஸ்தலத்தை முன்னேற்றியிருந்தார். வீரணன் கடையில் வெளுக்கப் போடுவதென்றால் அது பணக்காரனாகத்தானிருக்க முடியும் என்றாகி விட்டது.

பெரும்பாலும் நாங்கள் வெளியில் எங்கும் துணிகளை கொடுப்பது கிடையாது. வீட்டில் நாங்களே.. ஸாரி அவளே துவைத்து விடுவாள். ஏனெனில் வா~pங் மி~pனை கையாளும் கலையும், காலரில் அழுக்குப் போக வைக்கும் லாவகமும் அவளுக்கு மட்டுமே தெரியும். அதை அவ்வப்போது ஒன்றிரண்டாய் தேவைக்கு வீட்டு அயன்பாக்ஸ் வைத்து தேய்த்தக் கொள்வேன். கடந்த நாட்கள் பள்ளியில் தொடர் விடுமுறையென்பதால் பத்து நாட்களுக்கும் மேலாக அவள் தன் அம்மா வீட்டிற்குப் பிள்ளைகளுடன் விருந்துக்குப் போய்விட்டாள். போகும் போதே சில பேன்ட் சட்டைகள் அழுக்காய்த்தான் கிடந்தன. “அது அப்படியே இருக்கட்டும்ப்பா.. நா வந்து பாத்துக்கறேன்” என்று சொன்னாள். வேலை நிமித்தமாக ஊருக்குச் சென்று அவர்களை விட்டு வந்த நான் அந்த நாட்களில் பட்ட அவஸ்தை சொல்லி முடியாது.

அவள் அருகில் இல்லாத போதுதான் அவளருமை ரொம்பவே புரிகிறது. குக்கரில் சோறு வைப்பேனே தவிர குழம்பு வைக்கத் தெரியாது.. அதே பருப்பு அல்லது தயிர் பாக்கெட், ஊறுகாய்ப் பொட்டலம், உருளைக்கிழங்கு என்று எதையாவது சமைத்து சாப்பிடுவதும், டீ போட்டு வடிக்க சோம்பேரித்தனப்பட்டு கடைக்குப் போய்க் குடிப்பதும், அழுக்குகள் சேரச்சேர கொடியில் தொங்கப் போட்டுவிட்டு அடுத்த பேன்ட சட்டைகளை எடுத்து மாட்டுவதும் என ஊன்றுகோலில்லாத முதியவர் போல அவளின்றி சோர்ந்து போயிருந்தேன் நான்;. வெறுமனே இந்த வேலைக்கு மட்டுமல்ல என்னிடம் செல்லமாய் பேசவும், திட்டவும், வேலை சொல்லவும், கோபிக்கவும், கொஞ்சவும் என அந்த நாட்களில் எல்லாவற்றையும் இழந்திருந்தேன் நான். எப்போது பிள்ளைகளுக்குப் பள்ளி திறக்கும் என்றிருந்தது.. நினைத்தது போல நேற்று திறந்தார்கள். முந்தாநாள் அவள் வந்திறங்கினாள்.

அதற்கு முன் நான் செய்த காரியம் ஒன்று! ‘நான் வந்து பார்த்துக்கொள்கிறேன், வேண்டாம்’ என அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் சேர்ந்துவிட்ட எனது பேன்ட் சட்டைகளை இருபது உருப்படிக் கணக்கிற்கு எடுத்துக் கொண்டு போய் வீரணன் கடையில் போட்டுவிட்டு பில்லையும் வாங்கி வந்துவிட்டேன். அவளுக்கான வேலைப்பளுவைக் குறைக்கும் நல்லெண்ணம் எனக்கு.

‘ச்.சே வரவர பூமியின் பருவநிலை மாற்றம் ரொம்பவே மாற்றம் காண்கிறது போலும். குளிர் காலத்தில் வெக்கை அடிக்கிறது, வெயில் காலத்தில் சாரல் தூறுகிறது.. இப்போது பாருங்கள் சம்பந்தமில்லாமல் வியர்க்கிறது. ஒரு வேளை மழை வருமோ என்னமோ! தொலைஞ்சு இந்த நேரம் பார்த்து கர்ச்சிப் இல்லையே.. ஊரிலிருந்து வந்தவுடன் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தினாளே.. அப்படியே எனக்காக ஒன்றிரண்டு கர்ச்சிப்புகளையும் தேடி எடுத்திருக்கக்கூடாதா..’

அதோ வீரணன் பைக்கில் வந்திறங்குகிறார். “வாங்க தம்பி. நம்ம எம்.எல்.ஏ வீட்டு வரைக்கும் துணி குடுக்கப் போயிருந்தேன். அதாங் கொஞ்சம் லேட்டாகிப் போச்சு.. உங்களுக்கு ரெடியா இருக்கு வாங்கிக்கிறீங்களா”

“கண்டிப்பா. அதுக்குத்தானண்ணே வந்துருக்கேன். ம்.. நீங்க வெளுக்கிற சட்டை சட்டசபைக்கெல்லாம் போய் வருது”

“சட்டைய மட்டும் வெளுத்து என்னப்பா செய்ய? வெளுக்க வேண்டியது இன்னமு நிறையக் கெடக்கேப்பா” சொல்லிக் கொண்டே துவைத்து தேய்த்து மடித்து அடுக்கப்பட்ட எனக்கான உடைகளை கண்ணாடிக் கதவு போட்ட அலமாரியிலிருந்து எடுத்து பவ்யமாய் ஏந்தி வந்து பூப்போல நீட்டினார். கூடவே அதன்மேலே சில கர்ச்சிப்புகளும்! அதற்கென கட்டைப்பையை விரித்த நான் அப்படியே ஆ-வென வாய் பிளந்தேன்.

“இதெல்லாம் எங்கண்ணே இருந்துச்சு!”

“எல்லாம் பேண்ட் பாக்கெட்டுகளுக்குள்ள அங்கங்க சுருண்டு கெடந்துச்சு தம்பி.. வெளுக்கப் போட்டா எல்லாமே வெளிய வந்துருமில்ல….!”

(18.3.2018 அன்று வண்ணக்கதிரில் வெளியான சிறுகதை)