“ஒரு பொருளின் மீது வெளிப்புற விசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கொட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிகொள்ளாது” - சர் ஐசக் நியூட்டன்

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆகப் பெரிய திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ஒரு நல்ல நாவலை படித்த முடித்த  திருப்தியுடன்   உடனே  அதை மட்டுமே முழுவது சுவாசித்து   ஒருவிதமான  தாக்கம் மனதில் வந்து சட்டென்று அப்பிக்கொள்ளுமே அது போல இருந்தது. தெளிவாக எதுவும் உடனே எனக்கு பிடிபடவில்லை எனினும் அந்தத் தற்காலிக செயலிழப்பு அப்படியே நீண்டுவிடாதா என்று மனது ரகசியமாக ஏங்கியது.

ஹாலின் மேஜையில் விழுந்து கிடந்த கண்ணாடிக் கோப்பைகள் காற்றில் சிறிய சிறிய அரை வட்டங்களாய் பெண்டுலம் போல அசைந்து கடைசியாக   விளிம்பில் திட்டமிடாத தற்கொலைக்குத் தயாராய் இருந்தது. பீங்கான் தட்டில் சிதறிக் கிடந்த சில மாமிசத் துண்டுகளின் மணம் அறை முழுவதும் பரவியிருந்தது. ஆப்பிள் அறிந்த கத்தியின் கூர்முனையில் அமர்ந்திருந்த ஒரு ஈ தன் பின் கால்களால் இறக்கைகளை  தூய்மைப் படுத்திக்கொண்டிருந்தது.  

நீண்ட நேரம் போராடித் தோற்றுபோய் சதுரங்கப் பலகையின் ஓரத்தில் யாரும் கேட்பாரற்று சரிந்து கிடக்கும் காய்களிற்கு நடுவில் வெள்ளை ராஜாவும், கருப்பு ராணியும் ஒன்றாகக் கிடந்தார்கள். அறையே அதிரும் வண்ணம் நான் சிரித்தேன். வாசல் கதவின் கீழ் உள்ள பிளவு வழியாக பாதி தலையை நீட்டிக்கொண்டு அன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றும் வாராந்திரப் பெண்கள் பத்திரிக்கை ஒன்றும் என் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்கும் பாணியில்  முதலில் எட்டிப்பார்த்தது. சிட்டாகப் பறந்து போகும் பேப்பர் பையனின் காலடி நிழல் என் பலத்த சிரிப்பைக் கேட்டு அசையாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தது. கசங்கிய தரைவிரிப்பின் ஓரத்தில் உடலைச் சுறுக்கி சுகமான காலைத் தூக்கத்தில் இருந்தான் என் செல்லமான  வளர்ப்புப் பூனை நியூட்டன்.

அப்பாவின் தயவால் சொந்த வீடு,  என் படிப்பு திறமைக்கேற்ற சம்பளம், அன்பான மனைவி, அழகான இரண்டு குழந்தைகள், மற்றபடி விடுமுறை நாட்களில் பொழுது போக்க வீட்டைச் சுற்றி ஒரு சிறிய தோட்டம். மாதத்திற்கு இரண்டு  திரைப்படங்கள், மார்கழியானால் கச்சேரி நாடகம் என்று ஓரே சீரான நேர் கோட்டில் எந்த விதமான தடையும் இல்லாமல் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. வாழ்க்கையின் இந்த சீரான இயக்க நிலையை நானாகவே மனமுவந்து  ஏற்றுக்கொண்டேன். நியூட்டனின் முதல் விதியை அனுபவரீதியாக என் வாழ்க்கையில் பொருத்திப்  பார்க்க  எந்த சந்தர்ப்பவும் நீலிமாவை நான் சந்திக்கும் வரை எனக்கு வாய்க்கவேயில்லை. 

வழக்கமான இரைச்சலுடன் இருந்தது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். மும்பை ரயிலிற்காக காத்திருந்தேன். வாகன நெரிசல் கருதி ஒரு மணி நேரம் முன்பே வந்துவிட்டேன். முதல் வகுப்பு  ஓய்வு அறையில் காத்திருந்தேன். எனக்கு இடது புறம் ஒரு பஞ்சாபி அமர்ந்திருந்தார். எதிரில் உள்ள இருக்கையில் ஒரு நடுத்தர மாது வானிட்டி பேக்கை திறந்து முகத்தின் ஒப்பனையை சரி செய்துகொண்டிருந்தாள். யார் யாரிடமும் பேசவில்லை. அமைதியான அறையின் இறுக்கத்தைத் தளர்த்தியது அந்த ஏழு வயதுச் சிறுவனின் திடீர் சிரிப்பு. மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவனை நோக்கி விரைந்து வந்த அந்தப் பெண் அவனை நோக்கி சைகையால் அமைதியாக இருக்கச் சொன்னாள். சிறிது நேரம் கழித்து அந்தச் சிறுவனை என் அருகில் உட்காரவைத்து ஓய்வு அறையைவிட்டு வெளியேறியவள் கையில் மூன்று குளிர் பானங்களை கைகளில் ஏந்திக்கொண்டு என்னை நோக்கி வந்தாள்.

என்னிடம் ஒரு டெட்ரா பேக்கை நீட்டியவள் ஆச்சரியத்துடன் “குட் ஹெவன்ஸ்! நந்து!” என்று என்னை நோக்கி விழிகள் உயர்த்தி உரிமையுடன் என் அருகில் வந்தமர்ந்தாள். “குட் ஹெவன்ஸ், நாம் மறுபடியும் சந்தித்திருக்கிறோம்!” என்றவள் என் கையைக் கிள்ளி “நந்து, நாம் மறுபடியும் சந்தித்திருக்கிறோம்” என்று மீண்டும் கூறினாள்.

பயணம் முழுவதும் பேசிக்கொண்டே வந்தாள். என் மனைவி புகைப்படத்தைக் காண்பித்தேன். “வெரி கியூட், நந்து” என்று வெகுளித்தனமான வியப்புடன் புருவம் நெறுக்கி உதட்டை சுழித்தாள்.

“நீ எப்பவும் எதிலும் அதிர்ஷ்டக்காரன், நந்து. என்னைப் போல் இல்லை. அவசர அவசரமாக ஒரு திருமணம், குடும்பம், குழந்தை என்று ஒரு சுற்று போய் வருவதற்குள் ஒரு விமான விபத்தில் அவர் இறந்துவிட்டார். “

அவளின் குரல் தழுதழுத்தது. நீண்ட நேரம் அமைதியாக இருந்தாள்.

“இப்போது நான் என் வாழ்க்கையின் கடைசி படிகளில் இருக்கிறேன். அதிக பட்சம் ஆறு மாதங்கள். எனக்கு அதைப்பற்றியெல்லாம் துளியும் கவலை இல்லை நந்து. என் காலத்திற்குப் பிறகு என் மகன் விக்ராந்தை  நினைத்தால்தான்…..?

அவளின் இரு கரங்களை ஆதரவாகப் பிடித்துக்கொண்டேன்.

உடனே சமாளித்துக்கொண்டு தன் மகனை நோக்கி “இவன் இப்போது மும்பாயில் போர்டிங்கில்தான் படிக்கிறான்.  சென்னைக்கு மாற்றல் கேட்கவேண்டும்” என்றவள் நான் சென்னையில் இருப்பதை மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள்.

ஐந்து மாதங்கள் கழித்து நீலிமாவிடமிருந்து ஃபோன் வந்தது. மியாட் மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருந்தாள். ஐந்து மாத இடைவெளி அவளை முழுவதுமாகத் தின்று தீர்த்திருந்தது. அப்படியே அனைத்தும் மின்னல் வேகத்தில் வேகமாக பின்னோக்கி நகர்ந்து இந்த வாழ்க்கையை அப்படியே பழைய நிலைக்கு திருப்பிப் போட்டுவிடாதா என்று மனது ஏங்கியது. ஒரு அழகிய பட்டாம் பூச்சி மீண்டும் கூட்டுப்புழுவாக வதைபடுவதை என்னால் காணச் சகிக்கவில்லை.

என்னை அருகில் அழைத்தாள். மகனின் போர்டிங்க் விலாசத்தைக் கொடுத்தாள். இரு கைகளையும் கூப்பி என்னிடம் வேண்டினாள். பிரியா விடை கொடுத்தாள். மனதைப் பிசைந்தது. அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வர விடிந்து விட்டது.

நடந்த அனைத்தையும் மனைவியிடம் கூறினேன். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவள் உடனே ஒன்றும் பேசவில்லை. என் முடிவில் நான் மிகவும் திடமாக இருந்தேன். விக்ராந்தை என்னுடனேயே வைத்துக்கொள்ள ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அவள் சென்று விட்டாள். வீடே வெறிச்சோடி இருந்தது. ஒருவாரம் தனிமையாகவே இந்த வீட்டில் இருந்தேன். எங்கும் செல்லவில்லை. தினமும் மாலை “ஏப்போ அங்கிள் என்னை வந்து அம்மாவைப் பாக்க கூட்டிக்கிட்டு போவீங்க?” என்ற விக்ராந்தின் அப்பாவித்தனமான கேள்விக்கு என்னால் பதில் கூறமுடியவில்லை.

நீலிமா இறந்து பத்து நாட்கள் கழிந்து பதினோராவது நாளும் வந்தது. இந்த நாளும் வழக்கம் போலத்தான் இருக்கப் போகிறது. என் நிலையில் ஆகப் பெரிய மாறுதல் ஏதும் வந்து விடப்போவதில்லை என்ற என் தீர்மானத்தை அசைத்துப் பார்த்தது அடுத்தடுத்து  நடந்தேறிய நிகழ்வுகள்.

அழைப்பு மணி ஒலி அடித்தது. வாசலைத் திறந்தேன். விக்ராந்த் தனியாக தயங்கியபடி நின்றிருந்தான். உடனே அவனை இறுக அணைத்துக்கொண்டேன். என்னையும் அறியாமல் நீலிமா என்று பிதற்றினேன். என் பிடியிலிருந்து வேளியேறியவனிடம் “ யார் கூட வந்தே?” என்ற என் கேள்விக்கு உடனே பதில் அளித்தான்.

“அம்மாதான் என்னை கூட்டிக்கிட்டு வந்தாங்க”  என்று உரிமையாக கதவின் ஓரத்தில் நின்றிருந்த என் மனைவியைக் காண்பித்தான்.  அருகில் நின்றிருந்த என் இரண்டு குழந்தைகளும் ஓடி வந்து எங்கள் இருவரையும் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். யார் என் வாழ்க்கையை மீண்டும் ஒரு நேர் கோடாக்கினார்கள் என்று எனக்குத் தெரியாது. அனைத்தையும் அருகில் நின்று பார்த்துகொண்டிருந்த நியூட்டன் என் அருகில் வந்து என்னை உரசிச் சென்றது. 

- பிரேம பிரபா