மலையாள சிறுகதை ஆசிரியர்- சி.வி.பாலகிருஷ்ணன்

தமிழில் மொழிபெயர்ப்பு: தீபா சரவணன்

ஃப்ளாட்டின் பின்புறம் மைதானத்திற்கு நேராக பால்கனி. அங்கே நின்றால் அவருக்கு, கீழே மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கலாம். மைதானத்தின் மேற்கும், வடக்குமுள்ள இடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைக் காட்சிகளைக் காணலாம். வீடுகளுக்கு அப்புறமுள்ள நீண்ட குன்றின் பச்சையத்தைக் காணலாம்.

எப்போதும் பால்கனியிலேயே காணப்படுவதனால் உஷாகிரண் அப்பார்ட்மென்டில் வசிக்கும் குழந்தைகள் அவரை ‘பால்கனிக் கிழவன்’ என்று அழைத்தனர்.

மழைக் காலத்து குன்றிலிருந்து ஒழுகிவருகின்ற தண்ணீர் மைதானத்தை நிறைக்கும் போது கிழவன் குனிந்து பார்த்துக் கொண்டு பால்கனியில் நிற்பார். குன்றின் மீது ஒரு திரைச்சீலை போல பனி படர்ந்து கிடக்கும் போதும் பால்கனியின் அரைச் சுவருக்கருகில் அசையாமல் நிற்பார் பால்கனிக் கிழவன்

“நானெதுக்காக இங்க இப்படி இருக்கறே?” ஒரு நாள் அவர் தன்னோடு கேட்டார்.

“எதுக்குன்னு கேட்டா!?” அவரே பதிலும் கூறினார். ‘உங்களுக்கு வரவேற்பறையில் ஒரு வேலையுமில்ல. அங்க இப்போ நிறைய விருந்தினர் வந்திருக்காங்க. அவங்க எல்லாரும் உங்க மகனோட அஞ்சாவது திருமண ஆண்டிற்காக வந்திருக்காங்க”

“அதுக்காகத்தா அவன் படுக்கையறை அலங்கரிச்சானா?” அவர் கேட்டார்.

“நீங்க அத கவனிச்சீங்க இல்ல!;”

 அவர் கூறினார். படுக்கையறையில் அவன் பலூன்களும் வண்ண ரிப்பன்களும் கட்டியிருந்தான். போட்டோ எடுப்பதற்காக பூச்செண்டுகள், பூமாலையும் கொண்டு வந்திருந்தான்.

“ஸ்கோச் விஸ்கியைப் பற்றி ஏ சொல்லுல?”

“அதயும் பார்த்திடுச்சா உங்க கண்ணு”

“மூணு பாட்டில் இருக்கும்னு தோணுது”

“சரிதா! மூணு பாட்டில்தா. ரெட் லேபிள்”

“விருந்தினரின் மக்களுக்காக ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்”

“ரெண்டு ஃபேமிலி பேக்”

“நாலு கோழிகள்”

“ஆமாம்”

“ஒன்றரைக் கிலோ இறால்”

“ஒரு கிலோ மீன் முட்டை”

“அல்ஃபோன்சா மாம்பழம் மூணு கிலோ”

“சொல்லித் தயாரிக்கப்பட்ட ரெண்டு கிலோ கேக்”

“அஞ்சு பாட்டில் மினரல் வாட்டர்”

“பெப்சி”

“கொக்கக் கோலா”

“வில்ஸ்”

“வீடியோ கேசட்”

“போப் ஆல்பம்”

“விருந்தினரெல்லாம் வந்திட்டாங்களே இனியும் நீங்க ஏ இங்க இருக்கறீங்க.”

“அதற்குக் காரணமிருக்கு”

“சொல்லுங்க”

“வரவேற்பறையோட கதவெ மகனோட பொண்டாட்டி அந்தப்பக்கமா தாழ் போட்டு வெச்சிருக்கா”

“மகன் ஒண்ணும் சொல்லலையா?”

“தாழ் போடச் சொன்னதே அவன்தா.”

“உங்களுக்குப் பசிக்கலியா?”

“விருந்தினர் போகற வரைக்கும் நான் பசியைக் கட்டுப்படுத்தித் தான் ஆகவேண்டும்.”

“ஹ!... அவர் திடீரென நடுங்கினார். ஒரு பஞ்சாபி சிறுவன் நீட்டியடித்த கிரிக்கெட் பந்து அவரின் நெற்றியில் வந்து விழுந்தது.

சிறுவர்கள் அவரைப் பார்த்துக் கையடித்துச் சிரித்தனர்.

அவர்களை அவர் பார்க்கவில்லை. கீழ் பார்த்துப் போய்க் கொண்டிருந்த பந்துதான் அவரது கண்களில் தெரிந்தது. பாதி வழியில் அது வாயுவில் அசைவற்று நின்றது போல அவருக்குத் தோன்றியது. அடுத்த நிமிடம்… அவர் பால்கனியிலிருந்து கீழே குதித்தார்.