மிகவும் வயதான ஒரு பூமன் ஆந்தை தூக்கக் கலக்கத்தில் களைப்புடன் ஒரு வெண்தேக்கின் மீது உட்கார்ந்திருந்த போது, காட்டுமரங்களுக்கிடையில் பாய்ந்தொழுகுகின்ற நதியிலிருந்து ஒரு பவளக்காலி பறந்து உயர்ந்தது. பகல்வேளை பூமன்ஆந்தை அமர்ந்திருக்கின்ற அதேக் கொம்பில் சென்று பவளக்காலியும் உட்கார்ந்துச் சிறகுகளை ஒதுக்கியது.

“இது கொஞ்சம் கூடுதல்தான்” பவளக்காலி தனக்குத்தானே கூறியது. வயதானதால் கேள்விக்குறைபாடு இருந்தாலும் பவளக்காலியின் குரல் பூமன் ஆந்தைக்குக் கேட்டது.

“யாரு அது?” பூமன்ஆந்தை கேட்டது.

“நாந்தா பவளக்காலி!” கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து  பூமன்ஆந்தையிடம் கூறியது. “ஏதாவது மீனப் புடிக்கலாம்னு நதியில இறங்கினா அங்க என்னமோ பயங்கர சத்தம். அதுதா இங்க வந்திட்டே”

”ம்ஹூம் என்ன ஆச்சு?” பூமன்ஆந்தை கேட்டது.

மரங்களினுடையவும் கொடிகளினுடையவும் இருண்ட பச்சை நிறம் காணமுடிந்தது. அதற்கு அப்புறமுள்ள ஒரு காட்சியும் அதன் பார்வைக்கு எட்டவில்லை. “என்ன நடந்தது தெரியுமா? ஒரு கூட்டம் மான்கள் தண்ணி குடிக்க வந்துச்சு. அதுக நிம்மதியா தண்ணிக் குடிச்சிட்டிருக்கும்போது வேறொரு குழு பாய்ந்து வந்தது. யாருன்னு பாத்தா புலிகள்.”  பவளக்காலிக் கனிவுடன் கூறியது.

“புலிகளுக்கும் தண்ணி குடிக்க வேண்டாமா?” பூமன்ஆந்தை ஒரு நியாயமான விவாதத்திற்குத் தயாரானது.

“அது சரி, ஆனா அதுக தண்ணி குடிக்கல வந்த உடனே நேரா மானுக மேல இல்ல குதிச்சதுங்க”

“மானுக பயந்திருக்கும் இல்லயா?......”

“பயந்திருச்சுன்னா? அதுக அரண்டுடுச்சு. யாரது நதிலருந்து தண்ணிக் குடிப்பது எனக் கேட்டுதான் ஆக்ரமிப்பு”

“காட்டில நதி மான்களுக்கும் உரிமையுள்ளது தானே?”

“அப்படி கேட்டதுக்குதா ஒரு புலி எனக்கு நேரா குதித்தது. நான் பயந்திட்டேன்.”

“அப்பறம் என்ன ஆச்சு?”

ஒண்ணும் சொல்லாம இருக்கறதுதா நல்லது. புலிக மான் கூட்டங்கள கடிச்சுக் கொதறியது. நெறய மானுகள் எப்படியெல்லாமோ ஓடித் தப்பியது. நதிக்கரயிலயும், புல்வெளியிலயும் இரத்தம் சிகறிக்கடக்கறதப் பார்த்தா துக்கம் சகிக்கமுடியல. இங்க இருந்தாலே பாக்க முடியுமே….”

“ஆனா எனக்குக் கண்ணு சரியா தெரியாதே”

“நல்லது……….”

பவளக்காலிக் கவலையுடன் புல்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“புலிகளும் மான்களும் ஒற்றுமையா நதில எறங்கி தண்ணி குடிச்சிருந்த காலம் எனக்கு ஞாபகமிருக்கு”. பூமன்ஆந்தை நினைவுகள் கலந்த குரலில் கூறியது. அது நினைவலைகளைப் பரப்பியது. காடு ஒரு வசந்தத்தில் பூத்துக் குலுங்கி நின்றது. பல்வகைப் பூக்களின் நறுமணம் காற்றை போதைக்குள்ளாக்கியது. பறவைகள் பாடிக் கொண்டிருந்தது. மயக்கும் மணத்தில் விலங்குகள் கலவி நடத்தின. மான்களும் புலிகளும் ஒன்றுக்கொன்று கேளிக்கைகள் பேசிக் கொண்டு சுத்தமான நீரில் முகம் நீட்டின. பூமன்ஆந்தை இளமை உற்சாகத்தோடு சத்தமிட்டது. கூவோ…. கூவோ…. கூக்

“நான் போகட்டுமா?” பவளக்காலி  பூமன்ஆந்தையை நினைவலைகளிலிருந்து மீட்டது. அது தலையாட்டியது. பவளக்காலி நதியை நோக்கிப் பறந்தது. பூமன்ஆந்தை ஒரு சிற்பம் போன்று சலனமின்றி அசையாமல் இருந்தது. அதன் மனது அப்போது சூன்யமாக இருந்தது. தான் உறங்கத் தொடங்குகிறேன் என அது நினைத்தது. கண்களில் மயக்கம் படர்வது போலத் தோன்றியது.

போஹ்…. போஹ்…. ப்போ…… போ….. என்றொரு சத்தம் கேட்டது. அது ஒரு மரங்கொத்தியாயிருந்தது.

“நீ எங்க இருக்கே?”. பூமன்ஆந்தை தலையை ஆட்டிக்கொண்டு கேட்டது.

“என்னத் தெரியலியா?” மரங்கொத்தி நேர் முன்னால் உள்ள ஒரு சிறு கொம்பிலிருந்து கொண்டு கேட்டது.

பூமன்ஆந்தைக்கு அதைப் பார்க்கமுடியவில்லை. இருந்தாலும் அதன் இருப்பிடம் அறிந்தது.

“நா  கொஞ்சம் களப்பில அசந்திட்டே” பூமன்ஆந்தை கூறியது.

“என்னோட விஷயம் சொல்லணும்னா நா அங்கே நதிக்கரயில பொந்துக்குள்ள நல்லா தூங்க ஆரம்பிச்சே. அப்பதா ஒரு ஆரவார சத்தம் கேட்டுச்சு. ’நாசம்!’ மரங்கொத்தி கோபத்தோடுக் கூறியது.

“புலிக மானுகள ஆக்ரமிச்ச சத்தமா இருக்கும் இல்லயா?” பூமன்ஆந்தை ஒரு முக்கால் ஞானியாகக் கூறியது.

‘ஹா அதில அசாதாரணமா என்ன இருக்கு? மரங்கொத்தி முழுவதும் எதிர்ப்புடன் தன்னுடைய சிறகுகளை குடைந்து ,தவிட்டு நிறத்திலுள்ள வாலை ஆட்டியது.

பூமன்ஆந்தை ஆச்சர்யமடைந்தது. “தண்ணிக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லி ஒரு புலி மற்றொரு புலியை ஆக்ரமிச்சுக் கொதறுவதைத்தான் நான் பார்த்தே” மரங்கொத்திக் கூறியது.

“என்னது?”

சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. ஆனா இதுதா உண்மைச் சம்பவம். நா என்னோட ரெண்டு கண்ணால பாத்தே”

“விசித்திரமா இருக்கு” பூமன்ஆந்தை மனம் நொந்தது. மரங்கொத்திக் கவலையுடன் என்னமோ முணுமுணுத்துக்கொண்டு பறந்து சென்றது. பூமன்ஆந்தையின் கண்களில் காட்டின் இருள் கடந்து சென்றது.

சிறிது நேரம் சென்றபோது எதையோப் பார்த்து பயந்து படபடப்புடன் ஒரு கரும்பச்சைக்கிளி ஒன்று  அது வழிவந்தது.

“நானொருக் காட்சியப் பாத்தே. என் கடவுளே!” பச்சைக்கிளி பூமன்ஆந்தைக்கு அருகிலிருந்து கூறியது.

“ங்ஹே.” பூமன்ஆந்தை திடுக்கத்துடன் எழுந்து செவிமடுத்தது.

“நா ஒரு பயங்கரமான காட்சியப் பாத்திட்டு வர்றே” யோசிச்சுப்பாத்தாலே என் ஒடம்பெல்லா நடுங்குது.”  பச்சைக்கிளி நினைவுகளை ஞாபகப்படுத்தியது.

“அது என்னது?” பூமன்ஆந்தை மெதுவாகக் கேட்டது.

“ஒரு புலி” நா என்னமோ சத்தம் கேட்குதுன்னு பாத்தா ஒரு புலி தன்னைத்தானே கடிச்சிட்டிருக்கு. தன்னுடைய உடம்பிலிருந்தே அது மாமிசத்தக் கடிச்சு இழுக்குது. நானே பாத்தே. அது பயங்கரமா முரண்டுட்டு இருந்துச்சு.”

கரும்பச்சைக்கிளிக் கூறி முடித்ததும் பூமன்ஆந்தை சிரிக்கத் தொடங்கியது. கரும்பச்சைக்கிளி ஆச்சர்யத்தோடு அதைப் பார்த்தது. இவ்வளவு பயங்கரமான ஒரு தகவலக் கேட்டுட்டுச் சிரிக்கிறதா?.  கரும்பச்சைக்கிளி முழித்தது.

எதற்காகத் தான் சிரிக்கிறேன் என்பதை விளக்காமல் பூமன்ஆந்தை ஒரு பயணத்திற்குத் தயாராகச் சிறகுகளை விரித்தது.

“எங்கப் போறீங்க?” கரும்பச்சைக்கிளி ஒரு ஆவலுடன் கேட்டது.

பூமன்ஆந்தை ஒன்றும் கூறாமல் பறந்தது. கரும்பச்சைக்கிளி குழப்பத்துடன் அதன் பின்னால் சென்றது.

நதிக்கரையில் விழுந்து உருண்டு தன்னையே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற புலிக்கருகில் பூமன்ஆந்தை வந்தடைந்தது. இரத்தமும் மாமிசமும் புற்களில் சிதறிக்கிடந்திருந்தது. புலி ஆக்ரமிப்பைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

“கடைசில நீ ஒன்னோட எதிரிய கண்டுபுடிச்சிட்டே இல்லயா?” பூமன்ஆந்தை ஒரு மரக்கொம்பில் அமர்ந்துகொண்டு புலியை அழைத்துக் கேட்டது. புலி அதை கேட்கவில்லை. வலியின் வேதனையால் அலறிக்கொண்டே அது வீர்யத்துடன் தனது உடலை கடித்து இழுத்துக்கொண்டிருந்தது. அதன் அலறல் காடு முழுவதும் ஒலித்தது.

“இப்படித்தான் விலங்குகள் மனிதர்களுக்குச் சமமானவர்களாகிறார்கள்” பூமன் ஆந்தை பச்சைக்கிளிக்கு நேராகத் திரும்பி தத்துவ உபதேசம் கூறியது.

மூல மொழி: மலையாளம்

மூலநூல் ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்

தமிழில்: தீபா சரவணன், கோவை