என் அறை சாளரத்தை திறந்தேன்... பனிக் காற்றின் நிறம், வண்ணம் கொண்ட பாலின் ஈரத் துளிகளை விரவிக் கொண்டிருந்தன.... முகம் நீட்டி முகர்ந்த பொழுதில் உறைந்து விடும் நிலைக்குள் உடல் மொழி கூட கரைதலாகக் கொண்டேன்... நுரையீரல் தீண்டும் சிலிர்த்த துளிகளின் சுவாசத்தில் சில் பயணம்... சிலிர்க்கும் வனமெங்கும்... பட்டாம் பூச்சியின் ஊடுருவலாய்... நான் என்ற விதைக்குள் முளைக்கும் பனி கொட்டும் கவிதையை கடக்கவே முடியாத பக்கத்தில் அப்பிக் கொண்டேன்... மரபின் கவிதை தாங்கிய பெண் பாதக் கடற்கரையென......

globe boy'அப்பப்பா.....'- என்றபடியே சாளரத்தை இழுத்து அடைத்தேன்.. கப்பென்று காணாமல் போன பனியின் நேசத்தின் தொடர்புகளாய் ஒரு சூடு அறைக்குள் நிரம்பியது..... நான் மெய் மறந்த கணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு மெல்லமாக கதவைத் திறந்தேன்... ஓ..... சாரல் மழை.... அரிசியை தூவினாற் போல மழைத் துளிகள் பொழிந்து கொண்டிருந்தன..... ஆச்சரியப் பார்வையில் நான் முகமற்று மனமானேன்...

அள்ளி இரைந்த மழை.. கதவுக்குப் பின்னால்... சாளரத்துக்கு பின் பனி மூட்டம்.. ஒருவேளை என் கனவோ என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்... அல்லி பூத்த இதயம் போல சிணுங்கிய என் தேடல்... மீண்டும் ஓடிச் சென்று வலப்புறம் இருக்கும் சாளரத்தை திறக்க சொன்னது..... ஓடினேன்.. திறந்தேன்... அடர் வெயில்.. சுட்டெரிக்கும் பாலைவனத்தின் முகப்பின் நறு நறுப்பாக கண் கொண்ட தேடல் எதுவும் ஒரு வெயில் போல.. நிறமற்ற பாலையாகிக் கிடந்தது... கணத்தில் முகம் வியர்த்து உடல் வேர்த்து.. கண்கள் கூட வியர்த்துக் கொட்டியது...

ஓடிச்சென்று எதிர்ப்புறம் இருக்கும் பின் கதவையும் திறந்தேன்... இலையுதிர் காலத்தின் சுவடுகளால் மரங்களின் தலையாட்டலோடு பழுப்பு நிற இலைகள் பாதி பழுத்த இலைகள் எல்லாமே கதை சொல்லியாக, பறந்து கொண்டும்.. மிதந்து கொண்டும்... இணுங்கிய காற்றோடு செல்ல சிணுங்களின் உயிர்ப்போடு கடந்து கொண்டிருந்தன.....ஒன்றிரண்டு கதவு தாண்டி என் கன்னம் உரசியும் சென்றன....... இலையுதிர் காலத்தின் வாசம் வரையறுக்கமுடியாத ஒன்று.. தேகம் நிறைக்கும்.. ஆனாலும் மிச்சம் ஒன்று உண்டு என்று சொல்ல சொல்பவையாக அது நிறைந்தேயிருக்கும்...... நிறைதலின் கணம் முழுக்க ஓர் இலையின் மெல்லிசை வாசித்துக் கொண்டே இருக்கும்... சிறு வயது தோழியின் காற்றுக்கு தூக்கிக் கொண்ட பாவாடையின் வெட்கமென தலை கவிழ்ந்து அமரும் நாட்குறிப்பின் வர்ணங்களோடு அவைகள் சொல்லிக் கொண்டே இருக்கும் மிதவைகளின் ரகசியத்தை,...நான் ஓடி ஓடி ஜன்னல் வாசல் என்று நால்புறமும் திறந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.. ஆச்சரியக் காட்சிக்குள் மலையளவு உயர்ந்து கொண்டே போனேன், சிறு துளியென...அப்போது தான் ஒன்றை கவனித்தேன்...

என் எதிரே என் குழந்தை அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்... சற்று உற்று கவனித்தேன்...

அவன் பூமிப் பொம்மையை மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டிருந்தான் சற்று வேகமாகவே.......

- கவிஜி