காலை பத்து மணி இருக்கும். முதியவர் சற்று முன்தான் எழுந்திருந்தார். வழக்கமாக காலை ஏழு மணிக்கே எழுந்திருப்பவர் இன்று வழக்கத்திற்கு மீறியபடிக்கு உறங்கிவிட்டார். அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கும். முதுமையின் தளர்ச்சியும், தனிமையும் அவரை ஒரு ஆரம்ப அல்சமீர் (மறதி நேய்) நோயாளியாக மாற்றி விட்டது. பிரிஜ்ஜிலிருந்து பாலை எடுத்து லேசாக மின் அடுப்பில் சுட வைத்து பீங்கான் கப்பில் ஊற்றிக்கொண்டார். மெதுவாக பால்கனிக் கதவைத் திறந்து அங்கிருக்கும் சிறிய டீப்பாயில் கப்பை வைத்துவிட்டு தடுமாறியபடி ஆடும் நாற்காலியில் வசதியாக அமர்ந்துகொண்டார்.

old man catஅவர் வசிக்கும் 600 சதுர அடிக்கும் குறைவான அந்த அடுக்கு மனை குடியிருப்பு இருபதாவது மாடியில் இருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தால் மனிதர்களும், வாகனங்களும் கார்ட்டூன் படத்தில் பார்ப்பது போல இருப்பார்கள். நோயின் தீவிரத்தால் முதியவரின் நினைவாற்றல் மங்கிக் கொண்டே வந்தாலும், பார்வையின் கூர்மை மட்டும் மிகவும் தெளிவாக இருந்தது.

முதியவர் ஆடும் நாற்காலி ஒரு சமயம் மெதுவாகவும், பல சமயங்களில் வேகமாகவும் முன்னும் பின்னும் ஆடுவதைப் பார்த்தால் அவர் கால்களால் காலப்பந்தினை கோபமாக எட்டி உதைப்பது போல் இருக்கும். முதியவர் தோமாவிற்காத்தான் காத்துக் கொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் அவன் அவரைக் காண வரலாம்.

முதியவரும் தோமாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மூன்று வருடத்திற்கு முன்பு இந்த அடுக்கு மனை வளாகக் குடியிருப்பிற்கு வந்ததிலிருந்தே இருவருக்குமான நட்பு தொடர்ந்தது. மணி பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. முதியவர் மிகவும் பதட்டமாக இருந்தார். மெதுவாக நடுக்கூடத்திற்கு வந்து பிரிஜ்ஜைத் திறந்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். தோமா எப்பொது அவரைப் பார்க்க வந்தாலும் பசியுடன்தான் வருவான். வந்தவுடன் அவனுக்கு ஏதாவது கொடுத்து விட்டுத்தான் முதியவர் பேசவே ஆரம்பிப்பார்.

கதவை யாரோ தட்டுவதைப் போலக் கேட்டது. அழைப்பு மணி ஒலியும் அடுத்து கேட்டது. அதை நன்றாக ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு கதவை நோக்கி விரைந்தார். டீபாயில் கலைந்திருக்கும் நாளிதழ்களை அடுக்கி வைத்துவிட்டு 'தோமாவாக இருக்குமே' என்று நினைத்து தனக்குத்தானே சத்தமாகச் சிரித்துக் கொண்டே கதவினைத் திறந்தார்.

“ஐயா, சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்” நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்மணி முதியவரின் அனுமதிக்குத் துளியும் காத்திருக்காமல், மூச்சிறைக்க வீட்டினுள் நுழைந்தாள். தலையில் இருந்து வழிந்த வியர்வை அவள் நெற்றியில் வைத்திருந்த ஒரு ரூபாய் அளவிற்கான பொட்டின் ஒரங்களை கரைத்திருந்தது. சோபாவிற்கு அருகில் இருக்கும் எழுது மேஜையில் முதியவருக்கான சாப்பாட்டை பரிமாறத் திறந்தாள். “வேண்டாம், பசியில்லை” என்றவர் அந்த யுவதி வாசலை நெருங்கும் போது “தோமாவைப் பாத்தியா?” என்று கேட்டார்.

“இந்நேரம் வந்திருக்கனுமே, இன்னுமா வரலை” என்று அந்த யுவதி மாற்றுக் கேள்வி கேட்டாள். இருமிக்கொண்டே கதவைச் சாற்றியவர், மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார். பால்கனியில் இருக்கும் ஆடும் நாற்காலியில் வந்தமர்ந்தார். தோமாவைச் சுற்றியே அவரின் நினைவு இருந்தது. மணி பன்னிரெண்டை நெருங்கியது. பால் வாடியில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் அடுக்கு மனை நுழை வாயிலில் வந்து நின்றது. முதியவருக்கு லேசாகப் பசி எடுத்தது. தோமாவும் வந்தால் இருவரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்றிருந்தார்.

மணி மூன்றாகியும் அன்று தோமா வரவே இல்லை. எப்படியும் அவன் முதியவரைக் காண வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் மீண்டும் கதவினைத் திறந்து எதிர் பிளாட்டில் குடியிருக்கும் ஆங்கிலேயப் பெண்மணியிடம் தோமாவைப் பற்றி விசாரிக்க உதட்டை பிதுக்கியபடி தோளைக் குலுக்கினாள். மாலை ஆனது. முதியவருக்கு எல்லாம் கனவு போலத் தெரிந்தது. தான் இருக்கும் இடம் குறித்தான குழப்பமும் வேறு உடன் சேர்ந்துகொண்டது. முதலில் வாசல் கதவு சாற்றியிருப்பதை ஒரு முறைக்கு பல முறை சோதித்தார். மேஜையில் இருந்த உணவை சிறிது தட்டில் பரிமாறிக் கொண்டு பிரிஜ்ஜில் இருந்து குளிர் நீர் பாட்டிலை எடுத்து வைத்தார். இனிமேல் தோமா வருவான் என்ற நம்பிக்கை முதியவரிடம் இருந்து மெல்லக் குறைந்தது. அப்படியே சோபாவில் உறங்கிவிட்டார்.

அடுத்த நாள் முதியவர் காலையில் வழக்கம் போல கையில் காப்பிக் கோப்பையுடன் பால்கனியில் இருக்கும் ஆடும் நாற்காலியில் வந்தமர்ந்தார். குற்ற உணர்வுடன் தோமா அவரின் எதிரில் நின்றது. கண்களால் ஏக்கத்துடன் மன்னிப்பும் கேட்டது. தோமாவிற்காக எடுத்து வைத்த பீங்கான் கோப்பை காலியாக இருந்தது. முதியவரின் காலருகில் வந்து அவரின் பாதத்தை ஒற்றைக் காலால் சொரிந்து பீங்கான் கோப்பையையும் முதியவரையும் மாறி மாறிப் பார்த்தது.

முதியவர் தோமாவை சிறிதும் கண்டு கொள்ளவே இல்லை. முதியவரின் கோபத்தை அறிந்த தோமா அவரின் கவனத்தை திசை மாற்ற பால்கனிக் கம்பியில் வேகமாக நடந்தது. மற்ற சமயங்களில் தோமா அப்படி கம்பியில் நடந்தால் பெரியவர் பதறிப்போய் அவனை அப்படியே பிடித்து பாசமாக அணைத்துக்கொண்டு செல்லமாகக் கண்டிப்பார். ஒரு முறை தோமாவை உற்றுப் பார்த்தவர் பிறகு பார்வையை விலக்கிக்கொண்டார். “மியாவ்” என்று பலவாறு குரல் எழுப்பியும் தோமாவால் முதியவரின் கவனத்தைப் பெறமுடியவில்லை.

முதியவர் தன் கையில் வைத்திருந்த நாளிதழை ஒரு குழல் போல உருட்டி தோமாவை விரட்டினார். வீட்டை மட்டும் நேசிக்கத் தெரிந்த தோமா முதன் முதலாக மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொண்டது முதியவரிடம்தான். முதியவரும் தோமாவும் நேற்றுவரை நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தார்கள்.

- பிரேம பிரபா