திருவிழா களை கட்டிக் கொண்டிருந்தது..... வழக்கமான ஆட்டத்தை போலவே அல்லியின் ஆட்டம் இன்றும் தூக்கலாக இருந்தது... தலையை ஆட்டிக் கொண்டே கழுத்தை ஒரு பக்கமாக வெட்டி எடுக்கையில் இளைஞர்கள் பட்டாளம்.. அதே போல '.......ஆங்.............' என்று ஒரு செல்ல சிணுங்கலோடு கத்திக் கொண்டே அவளை மேய்வதில் ஈக்களாகி விட்டிருந்தது...... மணி இரவு 12க்கு மேல் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது..... அல்லியின் கால்களும் சுழன்று சுழன்று பம்பரம் போல அங்கு இங்கும்.. ஆட்டத்தில் வெளுத்து வர்ணம் பூசிக் கொண்டிருந்தாள்...

karakam"பேர் என்ன.......?" என்று கூட்டத்தில் கத்திய ஒரு இளவட்டத்துக்கு பிளைய்ங் கிஸ் கொடுத்தபடியே "அல்லிராணி மச்சான்.. "என்று கத்தினாள்... பண மாலை... அடுத்தடுத்து போடப் பட்டது....சில பிப்டி ப்ளஸ்கள் நூறு ரூபாய் தாளை அவளின் மார்போடு உரசிக் கொண்டு பட்டும் படாமல் குத்தியும் விட்டார்கள்... பக்கவாட்டில் குழுமியிருந்த கூட்டத்தில் சில்மிஷக் கத்தல்களும்.....ஜிவ்வென்ற பார்வைகளும், திருவிழாவைக்... கொண்டாடித் தீர்க்கும் படியான சமிக்கைகளால் நிரம்பி இருப்பதாகக் கொண்டார்கள்......கண்டார்கள்... கூட்டம் வளைய வளைய வழிந்து நெளிய நடுவில் அல்லி இன்னும் வேகமெடுத்துக் கொண்டிருந்தாள்...

"இது என்ன இடுப்பா.. இல்ல.. ரப்பரா.. இந்த ஆட்டம் ஆடுது.. யப்பா....."- அழகிய வளைவுகளின் அசுரத் தனங்கள் குலுங்குவதில் கும்மியடிக்கும் கண்களில் இரவுக் காடு நிறைந்து வழிவதை இரவின் பனி கொண்டு துடைக்க மறந்த சில்லென போடோக்கள் எடுத்துக் கொண்டும் இருந்தார்கள்...

வேகம்.... வேகம்.. வேகம்...

சுழற்சி, பூமத்திய ரேகையையே அழித்து விடும் போல.... ஆடிக் கொண்டே இருந்தவள் திடும்மென வெறி பிடித்த கடவுளாக நாக்கை வெளியே நீட்டி உடல்மொழியில் மாறுபட்ட பொருள் கொண்டு அசுரத்தனமாக ஆடத் தொடங்கினாள்....... அது வழக்கமான ஆட்டம் போல இல்லாமல் ஒரு சாமியின் ஆட்டத்தைப் போல இருந்தது...... கூட்டம் மெல்ல ஒரு வகை அமைதிக்குள் போக தொடங்கியது...... யாரும் என்ன நடக்கிறது என்று கணிக்கும் முன்னமே, அல்லிராணி பக்கத்தில் பாய்ந்து, அங்கே கட்டி வைக்கப் பட்டிருந்த, நாளை வெட்டப் பட காத்து நின்ற கருப்பாட்டை பிடித்து தூக்கி கண நொடியில் கழுத்தை கடிக்கத் தொடங்கினாள்.... கூட்டம் அலறத் தொடங்கியது... சலசலப்பில்... சத்தம் அதிகமானது....ஆங்காங்கே ரசிகப் பெருமக்கள் ஒன்றும் புரியாமல் மிரளத் தொடங்கினார்கள்.......அல்லிராணியின் குழுவைச் சேர்ந்தவர்கள் கூட என்ன நடக்கிறது என்று கூட ஆடிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அவளை நெருங்க அவள் ஒரு பெண் அய்யனாரின் முழு வேகத்தோடு ஆட்டின் ரத்தத்தை தன் உடல் முழுக்க கொட்டியபடியே குடித்துக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருத்தாள்...ஒருவரும் கிட்ட போக முடியாதவாறு அவளின் ஆங்கார முகம் மிரட்டியது....தாளத்தை நிறுத்தப் போன மத்தளக்காரனை முறைத்த முறையில் அடி இன்னும் பலமானது..அடி வெளுக்க வெளுக்க.. அல்லிராணி... ரத்த சகதியோடு ஆடி மலை ஏறிக் கொண்டிருந்தாள்........ கூட்டம்... கை எடுத்து கும்பிட்டு .................."ஊஊஊ ....ஊஊஊ.........ஒ.....ஒஒஒஒஒஒஒஒ................ கல கல கல கல கல கல,...... "-என்று கத்திக் கொண்டே இருக்க... மெல்ல மயங்கிச் சரிந்தாள்...அல்லிராணி...

ஓய்வு அறையில் படுத்திருந்த அல்லிராணி அருகில் ஆட்டத் தோழி அமர்ந்திருந்தாள்.....

மெல்ல கண் விழித்த அல்லியின் முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை துடைத்தபடியே ..."என்னாச்சு அல்லி... சாமி உன் மேல இறங்கிடுச்சு....." என்று கேட்டுக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.....

அவளைப் பார்த்து அர்த்தத்தோடு சிரித்த அல்லிராணி..."அடி போடி பைத்தியகாரி.. சாமியும் இல்ல.. பூதமும் இல்ல.. இன்னைக்கு ஆட ஆடவே "தூரமா"கிட்டேன்.... அதான் ஆடரதுக்கு முன்னாலயே நம்ம முதலாளிகிட்ட உடம்பு சரி இல்ல.. இன்னைக்கு ரெஸ்ட் வேண்டும்னு கேட்டேன்.. அவன்..... உடம்பு நல்லாதானே இருக்கு ஆடுன்னுட்டான்... சரி சமாளிப்போம்னு சேப்டியோட தான் ஆடினேன்.... எங்க, பயந்த மாதிரியே.. ஆட ஆடவே 'வந்திருச்சு'..........நாம குதிக்கற குதிக்கு...கண்டிப்பா அது தாங்காது....வெளிய தெரிஞ்சா விடுவானுங்களா.... அம்மா செத்தா கூட முதல்ல போட்டோ எடுத்து பேஸ்புக்குல போட்டுட்டு தான் மற்ற வேலைய பாக்கற பயலுக.....இது கிடைச்சா விடுவானுங்களா....இருக்கற கொஞ்ச நஞ்ச மானமும் போய்டும்... அதான்.. யோசிச்சேன்... மானத்தை காக்க ஆட்டை பலி குடுத்துட்டேன்...".................................

அவள் பேசிக் கொண்டே இருந்தாள்..... அய்யனார் கூட கண்ணீர் விட்ட படியே தலை குனிந்து அமர்ந்திருந்தார்....

- கவிஜி