"என்ன சித்திரக்காரரே..... போன் எடுக்க இவ்ளோ நேரம்........."

.............................................................

man face 400"ஹெலோ.... சாரே... என்ன சைலென்ட்...."

"...................................................................யட்சிகா.... ஒரே குழப்பமா இருக்கு...."

"பார்டா....... என்னமோ இன்னைக்குதான் குழப்பமா இருக்கிற மாதிரி......"

...............................

"என்னாச்சு....... நினைச்ச மாதிரி படம் வரலியா....?"

"இல்ல.... நீ...................இல்ல......நீ... இங்க வா..........."

"என்னாச்சு அதி.....எனிதிங் இம்பார்ட்டண்ட்....?"

"ஆமா.......................... நான்.......................... கனவுல என் ப்ரெண்ட் சுருளிய கொன்னுட்டேன்....."

"!!!!!!!!!!!!!!!!!!!!!...............உன்ன லவ் பண்ணுனதுக்கு.... சாமியாரியா போயிருக்கலாம்........ போடா லூசு....."

"அயோ.......யட்சி ....... நீ இங்க வாயேன்...."

"மணி 11 டா.... காலைல இருந்து பேசலியே, சரி பேசிட்டு தூங்கலானு கூப்டேன்...இப்போ எப்டி வர்றது?... அதும் உன் வீடு இருக்கற காட்டுக்குள்ள தனியா எப்டிடா.... காலைல வரேன்......"

"இல்ல யட்சி.... கனவுல கொலை பண்ணுனா... கைல ரத்தம் இருக்குமா...."

"கனவுல கொலை பண்ணினா.........லும் கையில ரத்தம் இருக்கத்தான் செய்யும்..."

"ஆனா சிவப்பா இருக்கே...!"

"மறுபடியும் நீ லூசுதான்.... ரத்தம் சிவப்பா இருக்காம பச்சையாவா இருக்கும்...?"

"இப்போ நீ தாண்டி லூசு... கனவுல கலரே.....தெரியாதே...."

.................................................

"யட்சிகா...."

.....................................................................................................மை காட்..... அங்கயே இரு..நான் இப்ப வரேன்.......(என்னடா பண்ணித் தொலைச்ச)?"

"................................"

எங்கும் இருள்.... ... பார்க்கும் இடமெல்லாம் இருளின் கண்கள்... பின்னிரவு பூனைகளின் கண்களைக் காட்டுவதாகப் படுகிறது...அதி, வெறித்த கண்களில் உடலின் முற்பகுதி முழுக்க ரத்தத்தால் நனைந்த, ரத்த வாடையின் வட்டத்துக்குள் ஈக்கள் மொய்க்க... அறைக்குள் நடமாடும் இருளாகவே நடந்து கொண்டும், அமர்ந்து கொண்டும்... யோசித்துக் கொண்டும் இருந்தான்...... ஒன்றும் புரியாத ஒன்றுக்குள் ரத்தம் மட்டுமே சொட்டிக் கொண்டிருப்பதாக தோன்றியது... மனதுக்குள் திரும்ப திரும்ப கேள்விகளின் வாடை.. ரத்தமாய் உறைந்து கொண்டே இருந்தது....உறைதலின் உன்மத்தம் சித்தமென சத்தம் காணாத மௌனத்துக்குள் பேரிரைச்சல் கொண்டவனாய் மிச்சம் தேடி நடப்பது போல இருந்தது அவனின் தவிப்பான குறுநடை...

"கனவில் கொலை செய்தால் ரத்தம் எப்படி சிவப்பாய் இருக்கும்.. கனவில்தான் வண்ணங்கள் கிடையாதே.... எது கனவு.. இப்போது கனவுக்குள் இருக்கிறேனா... இல்லை.. கனவு கலைந்த பின் வரும் நிஜத்தில் உலவுகிறேனா.."- அதி சிந்திக்க சிந்திக்க அந்த அறையே மாயங்களால் குறுகுவதும்... பின் விரிவதும்... மாற்று சிந்தனையின் மாற்று வழியென வரைந்து வைத்த ஓவியங்கள் எல்லாம்.. சுவரில்லாத வெளியாக பட படத்தன.... அறையின் குளிர்ச்சி வேகமாய் அதிகமாவது போல உணர்ந்தான்.....உணருதல் தொடர இருத்தலின் ஆக்கிரமிப்பின் மிகப் பெரிய வலியை வழி கொண்டு அடைத்திட முயற்சிக்கும் தெளிவற்ற மங்கலுடன் அவனின் சிந்தை விந்தை செய்து கொண்டிருந்தது......

நடக்க நடக்க தீரா பாதையின் மறு முனையை தேடிய பார்வையில் குத்திட்ட மூளையின் மடிப்பில் நீட்சி என பதிந்து கிடந்த நடந்தவைக்குள் ஓய்ந்து கொண்டு சுருண்டு படுத்தான்..... கருவறையின் சூடு.. அவனில் இருந்து வெளி வந்தது போல இருந்தது....... வெளியே பலத்த காற்றுடன் கூடிய வறட்சி.. ஆ வென.. வந்து வந்து போய்க் கொண்டிருந்தது... அத்தனை பெரிய வீட்டில் துளி வெளிச்சம் கூட இல்லை.. இரவுக்குள் இரவாய் கரைந்து கொண்டிருந்தான்... இரவாய் கரைபவனை கட்டிப்பிடித்து... தூக்கி போனது யாராக இருக்கும்.... நினைவுகளின் பின்னோக்கிய பார்வையில் அவன் சுருண்டே கிடக்கட்டும்.... அவன் கதை மட்டும் வெளிச்சத்துக்குள் வரட்டும்....வந்தது எல்லாம் கதையா என்றால் அங்கும் ஒரு கனவு குட்டித் தூக்கம் போடும்.. குட்டித் தூக்கம் போட்ட விழிப்பு நிலைக்குள் கதைமட்டும் ரத்த சிவப்பாய் சொட்டிக் கொள்ளத் தொடங்கியது....

குடி குடியைக் கெடுக்கும் ?

"அதெப்டி அதி.... ரெண்டு பேரும் ஒன்னாதான் வரையறோம்... உன் படம் மட்டும் ஒரு மார்க் கூட வாங்கிருது... என்கிட்ட என்ன குறையுது... சொல்லி குடேன்..." சுருளியின் கண்களில்..... அணைந்து விடவே முடியாத தீ அற்பத்தனமாய் உள்ளுக்குள் நீல நரம்புகளை அறுத்துக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தது...

"ஓவியம்னு இல்லடா... எந்த கலையும்... தொடர்ந்து பயிற்சி செய்றது மூலமாவும்... புதுசா தேடறது மூலமாவும்தான் அடுத்த கட்டத்துக்கு நகருது.... நீ எங்கயோ தேங்கற.. உங்கவனம் எங்கயோ அப்பப்போ நிக்குது.. அத சரி பண்ணிடு... அப்பறம்.. என்ன விட ஒரு மார்க் கூட வாங்குவ..."-தலையில் முன் நெற்றியை தேய்த்துக் கொண்டே கூறினான் அதி...

"இப்டி பொத்தாம் பொதுவாவே சொல்லு.. நுணுக்கத்த கத்துக் குடுக்காத...."-விளையாட்டாக நொந்து கொள்வது போல நடித்தான் சுருளி.. ஆனால் கனன்று கொண்டிருந்த தீயை அணைக்க நேரம் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்... என்பது தான் கதையின் திருப்பமே....அவனின் நுட்பமுமே...

"என்னடா... தலைவலியா...?"

"ஆமா சுருளி.... அடிக்கடி இந்த தலைவலிதான் படுத்துது..."

"அது ஒன்னுமில்லடா.. தொடர்ந்து வரையறீல்ல.. அதான்... நீ வா.. உனக்கு தியானம் சொல்லித்தரேன்... டே டு டே லைப்ல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்கும்......."

"இல்லடா... அதெல்லாம் வேண்டாம்.. சரி ஆகிடும்...."

"என்ன வேண்டாம்..... முதல்ல உடம்ப பாருடா.. அப்புறம் கலைய வளக்கலாம்.. இரு"- என்று உள்ளே சென்றவன்.. கையில் இஞ்சிக் கசாயத்தோடு வெளியே வந்தான்..

"இத குடி...." என்று கட்டாயமாக திணித்தான்....

புன்னைகைத்துக் கொண்டே பார்த்த அதி... "புடிச்சா.... புடிதான்.... இல்ல..."- என்று வாங்கி குடித்தான்.....

இரண்டு நாட்களுக்கு பின்....

அறை முழுக்க கோடுகளாலும்..புரியாத முகங்களாலும்... வரிகளாலும், புள்ளிகளாலும்... ஓர் ஓவியக் காடு போல ஆகி இருந்ததைப் பார்த்துக் கொண்டே புரியாத வழிக்குள் சிக்கிக் கொண்டவனைப் போல யோசித்தான்..யோசிக்க யோசிக்க யாசிக்கும் வரைதலின் தூண்டல் ஒன்று தூண்டில் இட... இட்ட தூண்டிலில் எல்லாம் விழாத மீன்களின் வியப்பில் நின்று சுற்றும் பார்த்தான், தான் வரைந்த ஓவியக் காட்டை.....வண்ண வண்ண கோடுகளில் குறுக்கும் நெடுக்குமாக... ஏதோ கதை சொல்லுவது போல.... ஏதோ மந்திர தந்திரம் போல.. புள்ளிகளும்.... இழுவைகளும்...... வட்டங்களும் சதுரங்களும்... நிறங்களும்... ஒரு கட்டுபாடற்ற கனவைப் போல... சுவர் முழுக்க அரைகுறையாக முடிக்கப்படாத ஓவியங்களை சற்று உற்றுப் பார்த்துக் கொண்டும், அடுத்த நீட்சியைப்பற்றி யோசித்துக் கொண்டும் அதி வெளியே வர..... ஹாலில் அமர்ந்திருந்தான் சுருளி....

பரஸ்பர பார்வைகள் இடம் மாறின...

"நீ கேட்ட பெய்ன்ட் எல்லாம் ரூம்ல வைச்சிட்டேன்.... எடுத்துக்கோ... அப்புறம், எப்டி இருக்கு உன் கனவு ஓவியம்" என்றான் சுருளி.... சிரித்துக் கொண்டே...

ஒரு விதமான ஆழ்மனக் கதறலின் மெல்லிசை அந்த அறையில் கசிந்து கொண்டிருந்தது......தூரத்தில், வெகு தூரத்தில் ஒரு பெண்ணை நிர்வாணமாக கழுத்தை அறுக்கும் போது பீறிடும் ரத்தச் சத்தம் போல இருப்பதாக உள்ளுக்குள் நினைத்துக் கொண்ட அதி..."ம்ம்ம்... இருக்குடா..... ஆனா நான் நினைச்ச மாதிரி இன்னும் ஷேப் ஆகல..."என்றான்....

இன்னும் ஓவியத்துக்குள் ஒரு காலை வைத்துக் கொண்டு நிற்பது போலத்தான் இருந்தது அவனின் உடல் மொழி........

"அதாவது..... உன் கனவு ஓவியம் முன்னால நின்னா, நிக்கறவன் தூங்காமலே கனவுக்குள்ள போகணும்.. இல்லையா.. அதுதான உன் கான்செப்ட்..."என்ற சுருளி... அதியை ஆழமாய் பார்த்தான்...

"எஸ்டா.."என்ற அதியின் கை நெற்றியை தடவிக் கொண்டிருந்தது...

அப்போ நீ கனவ இன்னும் இன்னும் ஆழமா புரிஞ்சுக்கணும்... நான் மனோதத்துவம் படிச்சவங்கற முறையில கனவ பத்தி கொஞ்சம் சொல்லித்தரேன்.. உனக்கு ஏதாவது உதவுதான்னு பாரு...."என்றான் சுருளி யோசித்தபடியே

யோசனையின் வெளிப்பாடாய் கண்கள் சுருக்கிய கேள்வியாய்..."ம்ம்ம்" என்பது போல தலை ஆட்டினான் அதி........கண்கள் மூடிய படி....

அவன் தேடிய ஓவியத்தில் அந்த நிர்வாணப் பெண்ணின் குருதி வழிந்து கொண்டிருந்ததை கண்ட ..... பசி கொண்ட நரியின் நாவென மூளையின் மடிப்பு எச்சில் வழிவதாக திறந்தது அவனின் மனக் கண்...

அன்று இரவு....

தன் குடுவையில் கால்வாசி மதுவும்.... முக்கால்வாசி நீரும்..... அதியின் குடுவையில் முக்கால்வாசி மதுவும்.. கால்வாசி நீரும்..... ஊத்தினான் சுருளி .... கண்கள் சுழல... மனதுக்குள் கோடுகள் விழ.... அறையில் புது வகையான இயற்கை வண்ணங்களை உபயோகித்து வரைந்து கொண்டிருக்கும் தன் கனவு ஓவியத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனை பின் பக்கம் இருந்து வந்த சுருளியின் குரல் கலைத்தது..... திரும்பிய அதி... கண்களைத் தேய்த்துக் கொண்டே மதுவை வாங்கி குடிக்கத் தொடங்கினான்.....

ஒரு மிடறு உள்ளே போனதுமே... கண்களை இருக்க மூடி....." ப்பா... செம காட் டா..." என்றான்...

"எப்பவுமே பஸ்ட் ரவுண்டு அப்டிதான் இருக்கனும்... அப்புறம் மெல்ல மெல்ல... மலை ஏறணும்..." என்று சொல்லி சிரித்தான் சுருளி...

குடிக்க குடிக்க குடிக்கத் தோன்றுவதுதான் குடி.... அது மிதப்பின் சத்தியம்.. மனதுக்குள் இருக்கும் இறுக்கம் கலையும் நொடியில் மிதக்கத் தொடங்கும் எல்லாமும்.. நம்மைப் போலவே இருப்பதில் ஒரு மஞ்சள் வட்டம்.. இருப்பதாக கண்கள் சொருகியது... அந்த வீடு முழுக்க ஒரு வித அமானுஷ்யதுக்குள் போவது போலதான் இருந்தது....போதையின் அடியாழத்தில் நின்ற அதியின் கண்கள் எதையோ தேடியது....தேடுதலும் தேடுவதும் ஒன்றா என்பதில் தேடல் குவியத் தொடங்கியது ஒரு ஓவியம் போல....

"எனக்கு புரியுதுடா..... உன் கனவு... நிஜமா இருக்கணும்..... உன் நிஜம் கனவா இருக்கனும்.. உன் ஓவியத்துல.. அது தான....? இந்த கனவு இருக்கே...... அதுக்கு ஆரம்பமே கிடையாது அதி.. என்னைக்காவது கனவு எந்த காட்சில ஆரம்பிச்சுதுன்னு சொல்ல முடியுமா.... அதே மாதிரி கனவோட முடிவும் தெரிஞ்சிருக்காது....... கனவு ஒரு வித படிம நிலை... அதுக்கும் உன் காலங்களுக்கும் ஒரு வகையில தொடர்பிருக்கு... உன் தேடல், தொலைதல் எல்லாமே கனவுக்குள்ள ஒரு வாழ்க்கையாகி சிறகு விரிக்குது அதி.....

அடுத்த நாள்....

"செத்தவன் கனவுல வரான்னு சொல்றாங்களே அது எப்டி.... நாளைக்கு நடக்க போறத கனவுல பார்த்தேன்னு சொல்றாங்களே அது எப்டி.... கனவுல வந்த ஆத்மா.. கனவு கலைஞ்ச பின்னாலயும் ரூம்க்குள்ள அலையுதே..... அது எப்டி.... எப்டி.... ஒரு கனவு கலைஞ்சு போகும் போது சம்டைம்ஸ் நிஜமாலுமே கனவோட தொடர்ச்சியா அழுகை வருதே அது எப்டி....??????????"

இன்றும் குடித்துதான் இருந்தார்கள்....குடியைப் போல கிளரும் மனநிலைக்குள் சொட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளை கொட்டிக் கொண்டே தான் இருக்கிறது இந்த மனித வாழ்க்கை...

அடுத்த நாள்...

இன்றும் குடித்துதான் இருந்தார்கள்......... அவன் பேசிக் கொண்டே இருந்தான். கனவுகளின் தூரங்கள் குறையத் தொடங்கிய ஒரு புள்ளியில் அவன் ஓவியமும்... சிறகு விரிக்கத் தொடங்கியது....

"ரூம்குள்ள மட்டும் விட்றாத... பெரிய பொக்கிஷமாடா.... வெளக்கெண்ணெய்...." திட்டி விட்டு போய் விட்டான் சுருளி..

அன்றைய கனவு பேச்சு.... பாதியில் நின்ற கனவாகிப் போனது போல உணர்ந்தான் அதி.. ஏனோ.. நள்ளிரவில் அந்த பேச்சு தொடர்ந்து தொடர்ந்தது...

அடுத்த நாள்....

"அதான் நேத்தே பேசி சமாதானம் ஆகிட்டோம்ல.. அப்புறம் என்ன மூஞ்ச தூக்கி வெச்சிருக்க... "என்றான் அதி....

"என்னது சமாதானம் ஆனோமா.. என்ன உளர்ற..."-என்ற சுருளி.... ஆழமாக அதியைப் பார்த்தான்...

"டேய்.. விளையாடாத.. குடிச்சா எல்லா மறந்து போகுமா?.. நேத்து சண்டை போட்டு போன உன்னை நான் கூட்டிட்டு போய்..." சரி பாத்துக்கோன்னு என் கனவு ஓவியத்தை காட்டினதுக்கு அப்பறம் தானே.. நீ சமாதானம் ஆன...."-கடைசி மிடரை சொட்டு விடாமல் வாய்க்குள் விட்டபடியே விளக்கினான் அதி...

"என்னடா குழப்பற... நான்தான் சண்டை போட்டுட்டு போய்ட்டேனே..."

"நான்தான் உன்ன ஓடி வந்து பிடிச்சு கூட்டிட்டு வந்தேனே..."

கோப்பையில் இருந்த மதுவை கட கடவென குடித்தான் சுருளி...

கேள்விக்கும் பதிலுக்குமான இடைவெளிகள்.. நுரையோடு கரைய... எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட புன்னைகையில் இடம் மாறிக் கொண்ட தத்துவத்தில் மீண்டும் மீண்டும் ஆழமாகப் பார்த்து புன்னைகைத்த சுருளி..." சரி,.,... இருக்கும்.. மறந்திருப்பேன்......" என்றபடியே மீண்டும் ஒரு மிடறு குடித்தான்.

சுருங்கிய கண்களை விரித்துப் பார்த்தான் அதி... சுருளி பேசிக் கொண்டிருப்பது கேட்டது...

"கனவுகள் நிறமற்றவைகள் தெரியுமா...?... நீ உன் பழைய காதலிய மட்டுமில்ல...... புதுக் காதலி யட்சிகாவ கூட... கருப்பு வெள்ளையிலதான் பாக்க முடியும்..."என்ற சுருளியின் கண்கள்....தீவிரமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தது......துருவி துருவி தவறும் தேங்காயின் வரிகளென அவனின் நினைவுக்குள் ஏதோ விழுந்து கொண்டே இருந்தது....

"அப்டியா.. இல்லையே...." என்று இடைவெளி விட்டு மீண்டும் யோசித்த அதி மீண்டும் யோசித்தான்... குடித்துக் கொண்டே...

அவன் தலை அவ்வப்போது கழுத்தோடு சாய்ந்து கொண்டேயிருந்தது.......

"அதி, வர வர நீ ரெம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்கறடா..குறைச்சுக்கோ..."என்றான் சுருளி ..அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே...

"ஸ்ட்ரெஸ் எல்லாம் இல்லடா........இந்த ஓவியம் வரைய ஆரம்பிச்ச பின்னாலதான் அடிக்கடி டையர்ட் ஆகிடறேன்.."என்றவன்.... முகத்தை அழுந்த துடைத்தபடியே... "அது... கொஞ்சம் சிக்கலான ஓவியம் சுருளி.. அதான்...." என்றான்.....

"குடிக்கறத நிறுத்தினா எல்லாம் சரி ஆகிடும்.. படைப்பாளினா குடிச்சிட்டேதான் இருக்கனுமா.. நான் கூட டான்செர்தான் .. அப்போ நானும் குடிக்கட்டுமா....?" என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள்.....யட்சிகா...

இருவரும் ஒரு சேர அவளைப் பார்த்தார்கள்...நீல வண்ண அறையில் தேவதையின் நிறம் கொண்டவளாக,ஜொலிப்பதாக சிரித்தான் அதி..அவன் அவளோடு இருக்கும்போது மட்டும் ஓவியத்தில் கவிதை வரைவான்...இன்று ஓவியம் பார்ப்பதாக கண் சிமிட்டினான்.

சூழலைப் பார்த்தபடியே "சுருளி நீங்கதாங்க இவர கெடுக்கறீங்க......." என்று சொல்லி... அதியை முறைத்தாள் யட்சி......

"ஆமா.. இவருக்கு ஒன்னுமே தெரியாது ....கெடுக்கறாங்க.... சாயந்தரம் 6 மணி ஆனா கை நடுங்குது.. தலை சுத்துது... கால் புடிக்குதுன்னு குடிக்க கூப்டறது நானா உங்க ஆளுங்களா மேடம்........?" என்று கேட்டு அவர்களின் பக்கம் ஏதேச்சையாக திரும்பினான் சுருளி.....

மறுகணம்... யட்சிகாவும்... அதியும் இதழோடு இதழ் பதித்து முத்தங்களில் எச்சிலும் வழிதலுமாக ஆக..... சர சரவென ஆடைகள் கலையத் தொடங்கினார்கள் அன்னிச்சை செயலாக.......

"அட கருமங்களா.... இதுதான் உங்க நவீனத்துவமாடா......!"- என்று திட்டிக் கொண்டே... மீதம் இருந்த மது போத்தலை எடுத்துக் கொண்டு வேக வேகமாய் ஓடி வெளியேறினான் சுருளி...

அடுத்த நான்காம் நாள்...

ஆடை தேடிய பின்னிரவில்.... அதியும் சுருளியும் நிர்வாணமாய்க் கிடந்தார்கள்....

சுருளியின் கண்கள் சிவந்து ... உள்ளுக்குள் கொப்பளித்த பெருங்காட்டு தீயில் தகித்தது....... கனவுகளில் சில போது ஆட்கள் மாறுகிறார்கள் என்பது எத்தனை நிஜம் என்று ஆமோதித்த... அன்று, கனவென்று... நிஜத்தில் சுருளியை, யட்சிகா என்று நினைத்த அதியின் உடலியல் வேகம் பாதியிலேயே மதுவின் ஆளுமையில் இயலாமைக்குள் வீழ்ந்து திரும்பியது.....வீழ்வதும் தாழ்வதும்... இடம் மாறும் பொருள் கொண்ட தத்துவத்தில் முதல் வரி எது இதழ் வரி எது என்று புலம்பிய துவாரக் கீற்றில் சரிந்து விழுந்து அழுது கொண்டே சரிந்து கிடந்த அதியோடு கலவி கொண்டான்....சுருளி..... முனங்கிக் கொண்டே தலை தொங்கிய அதியின் முதுகில் பளார் பளார் என்று அறைந்து கொண்டே இயங்கினான்......இயக்கங்கள் என்பது காலங்கள் கொளுத்தியது... என்ற வாதக் கதவின் பின் பக்கம் உடைதலின் கோரத் தாண்டவத்துக்கு, சிறு புயல் கூட போதும்...

அடுத்த நாள்...

"சுருளி.. நைட்டு ஒரு கனவுடா.. சொல்றக்கே கூச்சமா இருக்குடா..."என்று உடல் வலிக்க, பட படப்போடு கூறினான் அதி

"அதென்னடா கனவு..... கூச்சப் படற அளவுக்கு ...." என்று சிரிப்பது போல பாவனை செய்தான்...சுருளி

"இல்ல சுருளி.. நைட் நீயும் நானும் கலவில ஈடுபடற மாதிரி கனவு... முதுகுல நீ அறைஞ்ச மாதிரி வலி..." என்று அன்னிச்சை செயல் போல சட்டையைக் கழற்றி முதுகைக் காட்டினான்.... "நிஜமா வலிக்குதுடா.."-என்று முனங்கிக் கொண்டே......

அதியின் யோசனை சுழன்று கொண்டே இருந்தது அவனின் குழப்ப முக பாவனையில் புரிந்தது சுருளிக்கு...

அறைந்த ஒவ்வொரு அறைக்கும், அச்சு அசலாக இருக்க.........அச்சை வருடியபடியே...." இல்லடா... ஒன்னும் இல்ல...... அது கெட்ட கனவா இருக்கலாம்..... நாம் எப்படிடா செக்ஸ்ல.... அயே.....அது .... நாம ஒன்னாவே பேசிட்டு இருக்கோம்ல... நேத்து புல் டே உன் லவர் கூட இருந்திருக்க ..அதான் குழப்பம்...... இந்த கனவு இருக்கு பாரு.. அப்பப்போ... தன்னையும் குழப்பிகிட்டு கனவு காண்கறவனையும் குழப்பி விட்ரும்..... பாரேன்.. இப்போ.. இங்க.. இந்த அறை முழுக்க புகை வர்ற மாதிரி நீ கற்பனைல நினைக்க நினைக்க.... அது உன் ஆழ் மனசுல போய் தங்கி சில பல ரசாயன மாற்றத்தோட நைட்டு கனவா வெளிப்படும். சிம்பிள்..... பகல்ல நீ என்னெல்லாம் பண்றயோ..... அதோட ஆரம்பம்... அல்லது முடிவு.. அல்லது அது...கனவா வந்துடும்... உதாரணத்துக்கு உனக்கு இப்போ...ம்ம்ம்...இரு வரேன்.." என்று எழுந்த சுருளி........

ஹாலில்.. சுவரில் ஒரு மலையை வரையத் தொடங்கினான்.... அதி தன் சந்தேகத்தை விட்டு மலைக்கு தாவினான்....தாவுதல் தானே தழுவுதல்.... தழுவுதல் தானே ஆவது...

"இந்த மலையை உத்து பாரு.... இதுல உனக்கு என்னல்லாம் வேணும்னு கற்பனை பண்ணிக்கோ.. அதாவது ஒரு பெரிய ஆலமரம். ஒரு அருவி... வெண்ணிற இரவு... அந்த மலை உச்சில ஒரு தாய்லாந்த் பொண்ணு.... இன்னும் கற்பனை பண்ணிக்கோ..." என்று அவன் கண்களைப் பார்த்து பார்த்து திரும்ப திரும்ப கூறினான்....

ஏற்கனவே மூச்சு முட்ட குடித்திருந்த அதி...அவன் சொல்ல சொல்ல கண்கள் சுழன்று மயங்கி சரிந்தான்.....

அடுத்த கணம் அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு அங்கிருந்து அடுத்த 20 வது மைலில் இருந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வந்து சேர்ந்தான் சுருளி..... அதியைத் தூக்கிக் கொண்டு போய் மலை உச்சியில் கிடத்தி விட்டு முகத்தில் தண்ணீரை அறைந்தான்.......மலை உச்சி சில்லிட்டு நின்றது..... புல்வெளிகளின் தலையாட்டல்.... தாலாட்டல் போல இருந்தது.... பார்வைக்கும்... பறவைக்கும்...

வெண்ணிற இரவின் மூடி திறந்து கொண்டது போல... மெல்லிய இரவு அதியின் கண்களில் விரியத் தொடங்க.... அவன் பார்வை அந்தரத்தில் மூழ்கியது.... வெண்ணிற இரவும் மலை உச்சியும் கொண்ட கனவில்... நூலாடை மட்டும் அணிந்து கொண்ட தாய்லாந்து பெண் ஒருத்தி இதழ் திறந்து அமர்ந்திருந்தாள்... சில்லென வீசும் பனிக்காற்றில்... அருவியின் சாரல் மேல் எழும்ப, நனைந்த உடலில்.. நிலவுகள் மூன்றோ..... என்று தொட்டுப் பார்த்தான்... மூன்றாவது நிலவு.. களவு போனது போல... இறங்கிக் கொண்டிருந்த கைகளில் அகப்பட்ட ரகசியத்தில் சர்ச்சையான மேட்டுக்குள் தடுமாறி விழுந்த ஒற்றைத் துளியென நகம் வருடிய கீறல் ஆவேன அலையாவது போல புன்னைகைத்தாள்.......அவளும்.

கண்களில் கொட்டிய கவிதைக்குள் கண்மை நிறங்கள் வண்ணமற்று போனது....

"ம்ம்ம்.. அப்புறம் என்னாச்சு......?"-கண்கள் விரிய கேட்டான் சுருளி...

"அப்புறம் எல்லாமே(?)....முழிச்சு பார்த்தா கட்டில்ல கிடக்கறேன்...."கண்கள் மூடி கதைத்தான் அதி

.................................................(பேச்சில்லை சுருளிக்கு )

"ஆனாலும் செம கனவுடா..." பேச்சானது அதியின் கனவு

"இப்போ நம்பறயா.... நீ என்ன நினைச்சாலும் அது நிஜமாகும், இல்ல கனவாகும்.. இந்த இரண்டையும் தாண்டி நினைவுகள் வெறும் நினைவுகளா எப்பவும் இருக்காது..... மரணம் கூட நீ அடிக்கடி நினைக்கற ஒண்ணுதான்.. அது தேடலின் புள்ளி அதி.. புள்ளி வட்டமாகி.. நீட்சியாகி.. போய்ட்டே இருக்கும் முக்தியின் தீர்க்கம்... இறுதியா இந்த வாழ்க்கைக்கு ஒரு புள்ளி வைக்கறதுல முதல் தொடக்கம் இருக்குது ..." என்றான் சுருளி....

நெற்றியில் உள்ளங்கையால் தேய்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் அதி

கனவுத் துகள்களின் தீர்க்கம்... பார்ப்பதும் தூர்ப்பதும் ஏற்பதும்.. கற்பதும்... அதும் இதும் எதும் சொல்லும் சகலமும்.... கனவு கொள்ளும் சூட்சுமக் காற்றில் உடல் உறவு கூட சிறுமரணம் என்று பிராய்ட் சொல்லுவதில் கூட வாழ்கிறது உன் மரணமும்.... அதன் வாழ்வும்......

போதையும் போதியும் ஒரு சேர வைத்ததில்... தீட்சண்யம்.. சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய... அறை முழுக்க சுற்றுவது போல உணர்ந்தான் அதி.. நேருக்கு நேர் அவன் கண்களைப் பார்க்க முடியாமல் திண்டாடும் வெளியில்தான் ஒரு படத்தை வரையத் தொடங்கினான் சுருளி...

"மரணத்தைப் போல ஒரு சொர்க்கம் இல்லை அதி.. நம்ம எல்லாருக்கும் ஒரே கேள்விதான்.. அதுவும்.. ஒரே கேள்விதான்... மரணத்துக்கு அப்புறம் என்ன... அது ஒரு கனவைப் போல விடை தெரியாம போக விட்ற கூடாதுங்கறதுல என் மனோதத்துவம் ஒரு ஆராய்ச்சியை பண்ணிட்டு இருக்கு....... இன்னைக்கு நைட்டு ஒரே கனவு நாம ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல வரப் போகுது.....அதுக்கான தொடக்கம்தான் இந்த ஓவியம்..." என்று ஒருவன் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொள்வது போல ஒரு படத்தை வரைந்தான் சுருளி...

கண்கள் சுழன்று இன்னொரு கோப்பை மதுவை குடிக்கத் தொடங்கினான்....அதி.....அவன் மனதுக்குள் அவன் வரைந்து கொண்டிருக்கும்..தன் கனவு ஓவியத்தின் நீட்சியும் வால் அறுந்த பட்டமாய் சுழன்று கொண்டிருந்தது....ஏனோ "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" பாடல் நினைவுக்கு வந்தது...

"நல்லா பார்.. இந்தப் படத்தை பார்.. ஒருத்தன் தன்னையே கத்தியால குத்திக்கறான்..... நானும் ஆழமா பார்க்கிறேன்....இன்னைக்கு நைட்டு இந்தக் கனவு நமக்கு ஒரே நேரத்தில் ஒரு மாதிரி வரப் போகுது... அப்போ தெரிஞ்சிடும்..... இந்த மரணத்துக்கு அப்புறம் என்ன இருக்குன்னு..?

கண்ணுக்குள் பாம்பு கொத்தியது போல சுற்றியது தலை... "என்ன மரணம்.. என்ன கனவு... என்ன படம்.. என்ன தொடர்பு.. என்ன கேள்வி.. என்ன பேச்சு..." என்று புரியாத புள்ளிக்குள் நின்று வட்டம் வரைந்து கொண்டு நிற்பதாக மீண்டும் சுருளியையே பார்த்தான் அதி..

"காலையில் கண்டு பிடித்து விடும் மரணத்தின் பின் இருக்கும் வாழ்வுதனை... உன் கனவு ஓவியத்தின் அடிநாதமாக ஒலிக்க செய் ...." என்று கத்தினான்....சுருளி

பாம்பாட்டிக்கு அடி பணியும் பாம்பைப் போல.. தலையை ஆட்டி ....."ம் .....ம்........" என்றான் அதி.. அவனுக்குள் புது விதமான மின்சாரம், புது வகையான போதை.... தடுமாறும் கால்களில்... இறக்கை முளைத்ததுபோல.... உருமாறினான்... உரமாகினான்... உயிராகினான்....

ஓவியத்தை உற்று உற்றுப் பார்த்தவன்,..அதில் தன் உருவம்தான் தெரிந்தது போல உணரந்தவன் அப்படியே படுக்கையில் சாய்ந்தான்....

யட்சிகா.....

கதவை வேகமாய் தள்ளிக் கத்திக் கொண்டே அறைக்குள் ஓடி வந்தாள் யட்சிகா.....

"அதி என்னாச்சு.... என்ன பண்ணிருக்கற.... ஓ காட்........."

இடைவேளை......

அறை முழுக்க சிதறிக் கிடந்த ரத்த பிசுபிசுப்பில் காலின் வழுக்கல்கள் தடுமாறத்தான் செய்தது யட்சிகாவை.... ஒரு இனம் புரியாத இரவுக்குள் சுழலுவது போல அவளின் மனமும் கண்களும் சுழன்று கடைசியில் கண்டே பிடித்தது... கட்டிலின் ஓரத்தில் ரத்த சகதியாய் கழுத்து அறுபட்டு கிடந்த சுருளியை..

அவன் கிடந்த இடத்திலிருந்து வழிந்து கொண்டேயிருந்தது சூடான ரத்தம்.....குளிர்ந்த வாசத்தில் நீண்ட நெடிய ஒரு வகை நெடி.. நாசி துளைத்து மூளை வெளுத்தது....

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்து பிரமை பிடித்தவளாக அதியிடம் நின்றாள் யட்சி .......

"அதி.. அதி... என்ன பண்ணிருக்க.....என்ன நடந்துச்சு.. ஏன் இப்டி ... அயோ எனக்கு ஒன்னும் புரியல...நீ ஏன் இப்டி இருக்க... நேத்து என்ன நடந்துச்சு.. யாரு இவன கொன்னா..... நீதான் கொன்னயா.. இல்ல வேற என்னாச்சு...." என்று வார்த்தைகளை கடித்து கடித்து கத்தியவள் தலையை பிடித்துக் கொண்டு அறையையே சுற்றி சுற்றி பார்த்தாள், நிற்கும் பூமியாக.....

இரவு.. இரவாகவே தெரிந்த ஜன்னல் கீற்று வழியே ரத்தம் குடிக்க வந்த காற்று போல ரகசிய ஊடல், கசிந்து கொண்டிருந்தது....

யட்சிகா, யோசித்துக் கொண்டே அதியின் முகத்தில் தண்ணீரை அள்ளித் தெளித்தாள்.. அவனின் மது மயக்கமும்.. கனவு மயக்கமும் இன்னும் அவனை நிலைக் கொள்ள விடவில்லை ...

"அதி பேசு.. என்ன பண்ணிருக்க... என்ன நடந்துச்சு.. இது கொலை... ஓ காட்... வர வர என்ன பண்ற... ஏன் இப்டி இருக்கன்னு எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது......."-அவளின் உடல் நடுங்கிக் கொண்டும் மனம் கலங்கிக் கொண்டும்.. நிலை இல்லாத நிலவு போல அந்தரத்தில் தொங்குவது போல தடுமாறினாள்...

மெல்ல தலை நிமிர்ந்து யட்சியைப் பார்த்தான் அதி... அறையை சுற்றி ஒரு நோட்டம் விட்டான்... சுருங்கும் கண்களை விரித்துக் கொண்டே மீண்டும் சுருக்கிக் கொண்டே... மீண்டும் விரித்துக் கொண்டே..."இல்ல யட்சி... நான் கனவுலதான் சுருளிய கொலை பண்ணினேன்.... இது கனவு .. இப்போ கனவுக்குள்ள நீ வந்திருக்க.. பயப்படாத.... கனவு கலைஞ்சதும் அவன் பொலைச்சுக்குவான்...." -என்று ஒரு கனவு போலவே பேசினான்....

அவளுக்கு திக் என்று இதயம் நின்று பின் துடிப்பது போல நடிக்கத் தொடங்கியது.. கண்கள் இருண்டது போல வந்து போனது ஒரு கனவு....

"கனவா....!!!!" அவளுக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது.....அல்லது மயக்கம் வந்து தலை சுற்றுவது போல இருந்தது...

"ஒரு வேலை கனவா......?"- அவள் தண்ணீரை எடுத்து தன் முகத்தில் அறைந்து கொண்டாள்...முகம் பட்டு சூடான குளிர்ந்த நீரில் புது புது கொப்புளங்கள் போல, மூளை எண்ணியது....

" இல்லை.. இது கனவு இல்லை.. இவனுக்குதான் எதுவோ ஆகி விட்டது...." உருண்ட கண்களில் திரண்ட கண்ணீரோடு, சரிந்து கிடந்த அதியை பார்த்துக் கொண்டே காவல் நிலையத்துக்கு போன் செய்தாள்.

அறை முழுக்க ரத்த வாடை கசிந்து கசிந்து... ஒரு கசியலின் தீவு போல விரிந்து ஆவெனக் கிடந்தது அறை....

சொல்வதும்... கேட்பதும்....

"அதியும் சுருளியும் எனக்கு தெரிஞ்சு 2 வருசமா பிரெண்ட்ஸ்தான்... அவுங்களுக்குள்ள எந்த ப்ராப்ளமும் வந்ததில்ல....அப்டி இருக்கும் போது ஏன் அதி சுருளிய கொலை பண்ணனும்...? கேட்டா கனவுன்னு சொல்றார்.... எனக்கு ஒன்னும் புரியல சார்.... பயமா இருக்கு...அதிய ஜெயில்ல போட்ருவீங்களா...?" என்று கேட்டு கண் கலங்கினாள் யட்சி...

"இல்லமா.... இப்ப ஒன்னும் சொல்ல முடியாது.... கேஸ் எங்க நிக்குதுன்னே தெரியல..."-என்று இன்ஸ்பெக்டர் பேசிக் கொண்டிருக்கும் போதே உள் அறையில் இருந்து வெளியே வந்தார்.. நிபுணர்........ஆம்.. மன நல நிபுணர்........

அவர் என்ன சொலல் போகிறார் என்று இருவரும்.. அவரையே பார்க்க...திடீரென அந்த அறையில் மின்விசிறி சுற்றுவது நிற்பது போல தோன்றியது யட்சிக்கு.......

"இது கொஞ்சம் சிக்கலான கேஸ்... பேசண்ட்டை ஆழ் நிலை உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினதுல சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைச்சிருக்கு.... நான் சொல்றத கவனமா கேளுங்க.." என்று பேச்சை ஆரம்பித்தார் நிபுணர்.. பொதுவாக இருவரையும் பார்த்தபடி....

முகத்தை கைகுட்டையால் துடைத்துக் கொண்டாள் யட்சிகா....மனதை துடைக்க முடியாத பயமும் வலியும்... கனமாகிக் கொண்டிருந்தது....

"கொல்லப்பட்டவருக்கு ஹிப்னாடிசம் தெரிஞ்சிருக்கு... அது மூலமா... அவர் அதியை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்... இல்லனா... சந்தர்ப்பத்த உருவாக்கிகிட்டு தன் வசப் படுத்தியிருக்கார்.. மித மிஞ்சிய குடிக்கு அதியைக் கொண்டு போனதே சுருளிதான்.. ஏற்கனவே தன் கனவு ஓவியத்தை, தான் நினைச்ச மாதிரி வரைய முடியாம ஏதோ குழப்பத்துல இருந்த அதியின் மனநிலையை தனக்கு சாதகமா பயன் படுத்தி, கனவை பத்தி பேசி பேசி... கனவுக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு கண்டு பிடிக்க முடியாம செஞ்சுருக்கார்......அதுக்கு அவர் கத்துக்கிட்ட ஹிப்னாடிசம் உதவியா இருந்திருக்கு.... கேள்வியே கேக்காம சொன்னத கேக்கற நிலைக்கு அதியை தள்ளிட்டு போயிருக்கிறார்...... மனம், ஓவியம், குடி, கனவுன்னு, அத பத்தி மட்டுமே சுத்தி சுத்தி, கிட்டத்தட்ட மன நலம் பிறழ்ந்த ஒரு கட்டத்துலதான் அதி இருந்திருக்கார்....

கண்களைத் துடைத்துக் கொண்டாள் யட்சி...கண்களை இமைக்க மறந்தார் இன்ஸ்பெக்டர்.

அதிகப்படியான தனிமைக்குள்ள உழன்றுட்டு இருந்த அதியை இயல்பாகவே ஒரு நண்பனா சுருளி, தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கார்... அதாவது.... "அயே உனக்கு சிவப்பு சட்டை நல்லா இல்ல.. பச்சைதான் எடுப்பா இருக்கு.... என்னடா உன் டேஸ்ட்.. நீ வா... அப்டின்னு அவருக்கு பிடிச்ச ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறது... இப்டி நிறைய.....நல்லது கெட்டது... குடிக்கற பிராண்டு... ஏன் யட்சியோட காதலையே சுருளி ஓகே பண்ணின பின்னாலதான் அதி ஓகே பண்ணிருக்கார்..அந்தளவுக்கு நம்பி இருக்கார்... அவர ஒரு சகோதரனாத்தான் பார்த்திருக்கார்....... இத உபயோகப் படுத்திக்கிட்ட சுருளி..கொஞ்சம் கொஞ்சமா தன் கட்டுப்பாட்டுக்குள்ள அதிய கொண்டு வந்து ஒரு கட்டதுக்கு மேல அதியோட கனவுகளையே கட்டமைத்திருக்கிறார்...

"புரியல டாக்டர்....." இன்ஸ்பெக்டர் கூர்ந்து கேட்டபடியே பதிலுக்காக மீண்டும் கூர்ந்து பார்த்தார்....

சொல்றேன்... என்பது போல தலை ஆட்டிய நிபுணர்.. தொடர்ந்தார்....

"அதாவது ஒரு கனவை பத்தி பேசி பேசி அந்த கனவை தூங்காத போது கூட கனவுன்னு நம்ப வைக்கறது.... ம்ம்.. இப்போ உதாரணத்துக்கு மலை உச்சியப் பத்தி விலாவரியா... தெளிவா... படம் பாக்கற மாதிரி பேசிட்டு, அதி, குடிச்சு மயங்கி சரிஞ்ச பின்னால, அதிய தூக்கிட்டு போய் மலை உச்சிலியே போடறது.... அப்பறம் தண்ணிய முகத்தில அடிச்சு தெளிய வைக்கறது.. இப்போ கண்ணு முழிக்கற அதியை , அவர் பார்க்கற அந்த மலை உச்சி, கனவுன்னு நம்ப வைக்கணும்.......இதுதான் சுருளின் திட்டம்...... இன்னும் சொல்லனும்னா ஒரு காட்டப் பத்தி பேசிட்டு அதே மாதிரி பின்னிரவுல காட்டுக்குள்ள போதைல இருக்கிற அதியை கொண்டு போய் விடறது... அந்த காட்டுக்குள்ள எதிரே நின்னு கனவுல தானும் உள்ள இருக்கறதா காட்டிக் கிட்ட சுருளி அதியோட மனசோட ஒரு கோரமான விளையாட்ட விளையாடிருக்கார்...... கிட்டத்த ஒரு விதமான கனவு போதையை நஞ்சு மாதிரி கொஞ்சம் கொஞ்சமா திணிச்சிருக்கிறார்... அதியும் நம்ப ஆரம்பிச்சிருக்கிறார்.... மலை உச்சியை கனவுன்னும்... காட்டுக்குள்ள, தான் சுருளியோட கனவுக்குள்ள நிற்கிறோம்ன்னும் நம்பியிருக்கிறார்....இந்த மாதிரி நிறைய நிகவுகளை சுருளி திட்டம் போட்டு நிகழ்த்திருக்கிறார்...... இதுல இன்னொரு விஷயமும் தெரிய வந்துருக்கு.. அதி,தன் கனவு ஓவியத்தை வரைய பயன் படுத்தின பெயிண்ட்ல ஸ்லொ பாய்சன் கலந்துருக்கு... இன்ஸ்பெக்டர் இது உங்களுக்கே தெரியும்...."

"எஸ் சார்.. ரிப்போர்ட்ல அது ஸ்லொ பாய்சன்தான்னு ப்ரூவ் ஆகிருக்கு..."

பெயின்டல விஷத்தை கலந்ததது கூட சுருளியா இருக்கலாம்னு தோணுது.... இது ஒரு மெதட்... அலெக்ஸ் சாண்டர கூட அறையில விஷம் கலந்த பெயின்ட் அடிச்சு அடிச்சுதான் கொஞ்சம் கொஞ்சமா கொன்னாங்கனு ஒரு தகவல் இருக்கு...அதே மெதட்தான் இங்கயும் இங்கயும் உபயோகப் படுத்தி இருக்காங்க....விஷம் அவரோட உடல் நிலைய கொஞ்ச கொஞ்சமா சிதைச்சிருக்குன்னா...... மது... தனிமை... ஏற்கனவே இருந்த மன அழுத்தம்... கனவு பத்தின தொடர் சிந்தனை.... எல்லாம் சேர்ந்து அவரோட மனநிலைய சிதைச்சிருக்கு...இப்டி, ஒருவகை தனிமைக்குள்ள தள்ளப் பட்ட அதியின் மனசை முழுக்க முழுக்க ஆட்கொள்ள ஆரம்பிச்சிருக்கார் சுருளி...... கொஞ்ச கொஞ்சமா கனவுக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாட்ட மறக்கடிச்சு கனவுன்னு நினைச்சு அதி தன்னை தானே குத்திகிட்டு சாகனும்ங்றதுதான் சுருளியோட மாஸ்டர் ப்ளான்....அதுக்காகத்தான்.... ஒருத்தன் தன்னை தானே குத்திக்கற மாதிரி ஒரு ஓவியத்தை வரைஞ்சு, அத பத்தி நிறைய பேசி... போதைல தள்ளி.... அப்புறம் ராத்திரில முகத்துல தண்ணி ஊத்தி எழுப்பி.... அது கனவோட தொடர் கனவுன்னு நம்ப வைச்சு.... அந்த கனவுல அதி தன்னையே குத்திக்கற கனவுக் காட்சியை நிஜமா அரகேற்ற முயற்சி பண்ணியிருக்கார் சுருளி......."

இருவரும் ஒரு வித கட்டுப்பாட்டுக்குள் நடப்பது போல பாதைக்குள் சிதறிய பாதங்களாய் பதிந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்....

"ஆனா...இந்த இடத்துல கதை அப்டியே மாறி இருக்கு.. அதி சுருளிய கழுத்தறுத்து கொன்னுருக்கார்... இந்த இடம்தான் புரியல... எவ்ளோ கேட்டும் இந்த இடத்துல அதி தடுமாறரார்... ஆனா அவரோட சின்ன வயசு வாழ்கையைப் பத்தி நிறைய சொன்னார்....."

இடைமறித்த இன்பெக்டர் "சுருளி கணக்குபடி அதிதான சார் செத்திருக்கணும்.. ஏன் சுருளி..... ஒண்ணுமே புரியலியே.....?" என்று முனகியபடியே... நீங்க சொல்லுங்க டாக்டர் என்பதுபோல நிபுணரின் முகத்தையே பார்த்தார்....செய்வதறியாது....

கண்களைத் துடைத்துக் கொண்டே .. பயந்தபடி அமர்ந்திருந்த யட்சிகா.... ஒரு வகையான இயலாமைக்குள் மிரண்டு போய் கிடந்தாள்... கலங்கிக் கொண்டே இருந்தன....அவளின் மீன் கண்கள்.....

"நிறைய சொல்லிருந்தாலும்... இப்போ நான் சொல்ல போற இந்த ஒரு விஷயத்துக்கும் இப்போ நடந்துட்டு இருக்கற சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்குனு தோணுது......."என்ற நிபுணர்... அந்த சம்பவத்தை சொல்லத் தொடங்கினார்....

15 வயது திக் திக்...

"பேசாம படு.... பையன் முழிச்சுக்கப் போறான்..."

...........................

"சொன்னா கேக்கவே மாட்டியா..... அவனக்கும் 15 வயசாச்சுயா... தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம நடந்துக்கறியே... நல்லாவா இருக்கு....,புருசன்னா இதுக்கு மட்டும் தானா?"

"ம்ம்...ம்கும்......ம்ம்...."

"மானம் போகுதுய்யா..... அவ்ளோ ஆம்பளன்னா ரெண்டு........................ர்ர்ர் ரூமு இருக்கற ஒர்ர்ரு...........ஒரு வாடகை வீட்டுக்கு கூட்டிட்டு போயேன் பாக்கலாம்.. கவர்மெண்டு குடுத்த ஒத்த ரூமுல......."

அம்மாவின் கிசு கிசுப்பு கதறலும்.. அப்பாவின் பெருமூச்சு கதறலும்.. திரையாகி தொங்கிய அம்மாவின் புடவை தாண்டி கசிந்து கொண்டிருக்க, இருட்டுக்குள் குப்புறப் படுத்து விழித்துக் கிடப்பது அவனக்கு தினமும் ஆன செயல் ஆகிப் போனது.........அன்றும் அபப்டித்தான்...

சில நாட்களுக்கு பின்...

அவன் அங்கும் இங்கும் நடந்தான்.... நின்றான்.... வெகு நேரம் வெற்றிடம் முறைத்தான்.... பின் சென்று விட்டான்...

அடுத்த நாள்....

அதே இடத்தில் நின்றான்....வெகு நேரம் வெற்றிடம் வெறித்தான்... கால்கள் முன்னோக்கி நகர.. மனம் நகராமல் நின்று கொண்டிருந்தது.........

அடுத்த நாள்...

நின்று கொண்டே நடப்பது போல உணர்ந்தான்...பின் வெற்றிடம் உற்று நோக்கினான்.. பார்வையின் விளிம்பில்... ஒரு வீடு திறந்தே கிடந்தது....

சர சரவென வீட்டை நோக்கி வேகமாய் போனவன்.. வாசலில் ஒரு கணம் நின்று தயங்கி.. திரும்பி பார்த்து...இன்னும் வேகமாய் வீட்டுக்குள் சென்றான்....

நாற்பது...

"என்னப்பா யார் நீ.. என்ன வேணும் ?.." 40 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா கேட்டுக்கொண்டே பளிங்கு போல சுத்தமாக இருந்த வீட்டில் ஒரு அறைக்குள் இருந்து வெளியே வந்தாள்.....

அவன் குனிந்தே நின்றிருந்தான்...

அவள் மீண்டும் கேட்டாள்..மௌனம் கூட பிரதிபலித்தது வீ டெங்கும்....

ஒரு ரப்பர் பேண்டில் போட்டு கட்டி இருந்த கசங்கிய முப்பது,நாப்பது பத்து ரூபாய் தாள்களை பாக்கெட்டில் இருந்து எடுத்து பக்கத்தில் இருந்த டேபிளின் மேல் வைத்தான்...அவன்... அவன் கைகள் கடுங்கிக் கொண்டிருந்தன..

அவள் பணத்தையும், குனிந்தே நின்ற அவனையும் பார்த்தாள்...கூர்ந்து பார்த்தாள்....

பார்வைக்கும்... மூளைக்கும் ஓடிய கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு "தம்பி பணத்த எடுத்துகிட்டு போ.." என்றாள்...தீர்க்கமாக..

கீழ் பாக்கெட்டில் இருந்த கடைசி பத்து ரூபாயையும் எடுத்து டேபிளில் வைத்தான்......தலை மட்டும் குனிந்தே இருந்தது....ஒரு வகை புழுக்கம் அறைக்குள் சுழன்று கொண்டிருந்தது..... ஒரு காகம் வாசல் வரை வந்து கத்தி விட்டு பறந்து போனது....

"தம்பி.. வெளிய போ... மரியாதை கெட்ரும்..."

எதிர் பாராத ஒரு நொடியில் சட்டென காலில் விழுந்தான் அவன்...

பதறிப் போன அவள் பின் வாங்கியபடியே.. "இது தப்புடா.. நீ என் மகன் மாதிரி இருக்க... நான் தப்பானவதான்.. ஆனா இதுக்கு சம்மதிக்க மாட்டேன்... போய்டு...." என்று காலை உதறி விட முயற்சிக்க.. அவனின் கரைதல், தேடல், கால்களின் ஸ்பரிசத்தோடு இன்னும் நெருங்கி, இன்னும் பலமாகி காலை பிடித்து கீழே இழுத்துப் போட வைத்தது....

எதிர்பாராத வேகத்தில் விழுந்ததில் அவளின் பின் மண்டை சுவற்றில் மோத, தெறித்து வழியத் துவங்கிய குருதி....... நொடிக்குள் அறையில் பாம்பென ஊர்ந்தது....

நடுங்கிக் கொண்டே , முட்டி வரை மேலேறிய புடவையை இன்னும் கொஞ்சம் தூக்க முயற்சிக்க...அதே நேரம் பள்ளி விட்டு வீட்டுக்குள் வந்த அந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுவனைக் கண்டதும்.....

கதையின் காட்சியை சற்று நிறுத்தி பின் வார்த்தையில் தொடர்ந்தார் நிபுணர்...

"என்ன செய்றதுன்னு தெரியாம வெளியே ஓடி வந்திருக்கிறான் அதி....அதுக்கப்புறம் ஊரை விட்டே ஓடி வந்திருக்கிறான்,....."

இன்ஸ்பெக்டரும் யட்சியும் மர்மக் கதை கேட்பது போல வாயடைத்துக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்....

"அந்த எட்டு வயசு சிறுவன்தான் இந்த சுருளியாக இருக்கும்னு நினைக்கிறேன்,....இது தீராப் பகை.... தீர்த்துக் கட்ட வேண்டி, வந்த பகை.... பெரிய திட்டம் இது.... அதியை அணு அணுவா கொல்லணும்னு போட்ட திட்டம்...அவனும் சரியாதான் திட்டத்த நோக்கி முன்னேறி வந்திருக்கான்... ஆனா இடம் பொருள் கணம் எப்படியோ மாற திட்டம் போட்ட சுருளியே செத்துப் போனதுதான் புரியாத புதிரா இருக்கு.... அதையும் கண்டு பிடிப்போம்..." என்று சொல்லி நம்பிக்கையோடு புன்முறுவல் தந்தார் நிபுணர்........

இருவரும் ஒருவரையொருவர் மிரட்சியோடு பார்த்துக் கொண்டார்கள்....

அவர்களின் பார்வையை கலைப்பது போல இடையில் குறுக்கிட்ட நிபுணர்.."அதி சமநிலைக்கு வரதுக்கு ஒரு வாரம் ஆகும் இன்ஸ்பெக்டர்... அது வரை அவர் நோயாளிதான்.. உங்க விசாரனையை அப்பறமா வச்சுக்கோங்க...."என்றார் சாந்தமாக.......

பின் யட்சிகாவின் பக்கம் பார்த்து "இப்போ உங்க அதரவு அவர்க்கு முக்கியம்மா... போய் பாருங்க..." என்று சொல்லி... அவரின் அறைக்கு சென்றார்...

"சரி.. நான் நாளைக்கு வரேன்" என்பது போன்ற உடல்மொழியில் இன்ஸ்பெக்டர் எழுந்து வெளியே போக.. யட்சி எழுந்து அதி இருந்த அறைக்குள் சென்றாள் நடுங்கிக் கொண்டே........

அவளின் கண்கள் சிவந்து கனன்று கொண்டிருந்தது..... கன்னப் பரப்பில் கண்ணீர் கூட குருதி போல வழிந்து கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.......மிகப் பெரிய பாரம் மனதுக்குள் பாறையாய் குடையும் பாம்பென நெளிந்து கொண்டே இருக்க.... கையுரை மாட்டிய கையை அதியின் கழுத்தோரம் கொண்டு சென்றாள்.......மருத்துவர் முடித்த கதையின் கடைசி காட்சியில்.... அந்த எட்டு வயது சிறுவனுக்கு பின்னால் 6 வயசு சிறுமியாக தான் வந்து கொண்டிருந்ததை நினைத்தபடியே.....

- கவிஜி

*தன்னை தானே குத்திக் கொள்ளும் கனவை நிஜம் என்று நம்ப வைக்கும் அந்த இரவில் சுருளியைக் கொல்வது போல நிஜமாகவே கனவு கண்டிருந்தான் அதி....