( 1 )

 எழுந்தது முதலே பரபரப்புத் தொற்றிக் கொண்டது ஆனந்துக்கு. எழுந்தது மெதுவாக. என்னமோ இரவு முழுவதும் தூக்கம் சரியாக வரவில்லை. வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. இரண்டு நாளாக ஊருக்கு எப்போதும் போவோம் என்ற நினைப்பிலே இருந்தான். இரவு நேர நதி போல எப்போதும் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை எதோ கணத்தில் எந்த ஒரு காரணமுமின்றி கடலலை போல் ஆர்ப்பரிக்க ஆரம்பித்துவிடும். செக்கு மாடு வாழ்க்கை தான். ஆனால் திடீரென புளிக்கும். அந்த சில கணங்களை தாண்டுவது கொஞ்சம் கடினமாய் இருக்கும். அந்த நேரத்தில் சின்னதொரு மாறுதல் தேவைப்படும் ஞாயிற்றுக்கிழமை சினிமாவைப்போல. அம்மாவின் மடி போல எதாவது, நண்பனுடனான உரையாடல் மிக ஆறுதலாய் இருக்கும். என்னடா இந்த வாழ்க்கை என்ற சலிப்பை உமிழும் அந்த மௌனப்பொழுதுகளை வெல்ல வலியதொரு அம்சம் வேண்டும். அது இப்போதைக்கு தன் மனைவியின் கரம் தான் என்பது ஆனந்துக்கு புரிந்து போயிற்று.

எட்டு மணிக்கெல்லாம் குவாரியில் இருக்க வேண்டும். இன்று குவாரியில் ப்ளாஸ்டிங். டிபனெல்லாம் பிட்டு இறங்கி ஈடி கணக்கெடுத்தற்கு அப்புறம் தான். எல்லா நாட்களும் குவாரிக்குப் போனாலும் பொதுவாக வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டும் தான் ப்ளாஸ்டிங் இருக்கும். ப்ளாஸ்டிங் அவனுக்குப் பழகிப் போன ஒரு விஷயம். பதினைந்து வருடங்களாக இதே வேலை தான் ஆனாலும்... ப்ளாஸ்டிங் அன்று சிறியதொரு அளவிலாவது பதற்றம் வந்து ஒட்டிக்கொள்ளும். இரவு ஊருக்குப் போக வேண்டும் என்ற நினைப்பு வேறு அந்த பரபரப்பை அதிகப்படுத்தியது.

மனைவியும் மகனும் கண்ணுக்குள் நின்றார்கள். பிழைப்புக்காய் அவர்களை பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆந்திர மண் தான் அவனுக்கு அன்னப்பூரணி. குவாரியிலிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் இருந்தது அந்த கிராமம். குவாரிக்குச் செல்ல வசதியாக அங்கு தங்கியிருந்தான். ஒரு சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட டவுனுக்குத் தான் செல்ல வேண்டும்.

ஆர்பாட்டம் இல்லாத மனைவி, அறிவான ஒரு பிள்ளை என்று இவ்வளவு அழகான குடும்பம் தந்ததற்கு கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று சில சமயம் தோன்றும். சில நேரங்களில் வாட்டி வதைக்கும் தனிமையின் போது எதுக்கு இந்த பொழப்பு என்றும் தோன்றும்.

sad man 292காலைப்பொழுதுகள் போவதே தெரியாது. வேலை, வேலை என்று ஓடிப்போகும். இரவு நேரங்களில் குவாரியிலிருந்து வந்து எங்கயாவது ஒரு ரோட்டோரக் கடைகளில் முட்டை தோசையும், ஆந்திர சட்னியும் சாப்பிட்டு இந்த முக்காலடி ரூமில் முட்டி மடக்கி படுக்கும் போது சில சமயங்களில் அசதி தள்ளும் இல்லையென்றால் தனிமை கொல்லும். கூட இருக்கும் கோபி பெரும்பாலும் குடிச்சனியன் பிடியில். கோபி நன்றாக இருக்கும் சமயங்களிலாவது பேச்சுத்துணையாய் இருக்கும். குடித்துவிட்டு அவன் உளறும் நேரங்களில் இதற்கு அவன் பேசாமல் இருந்தாலாவது பரவாயில்லை என்று தோன்றும். எத்தனையோ பேர் இவன் ஊர்க்காரனாய் இருந்த போதும் கோபியிடம் இருந்த குழந்தை மனம் தான் அவன் உளறல்களை சகித்துக்கொள்ள வைத்திருக்கிறது. யாரிடம் தான் குறை இல்லை. ஆனால் குறை என்பது வேறு. குணம் என்பது வேறு. ஒரு சிலருக்கு வேலை நன்றாக செய்ய வராது. அது குறை. ஆனால் இரக்க குணம் இருக்கும். ஒரு சிலரிடம் பொதுவாக எல்லா பழக்கவழக்கங்களும் நன்றாக இருக்கும். ஆனால் அடுத்தவனை அடித்துத்தள்ளி முன்னுக்கு வரப்பார்ப்பார்கள். அது கெட்ட குணம். அது மாதிரி ஆட்கள் தான் இந்த உலகத்தில் அதிகம். ஒரு கோழிக்குஞ்சு அடிப்பட்டால் கூட அதற்கு மஞ்சத்துணி கட்டி தடவிகொடுக்கும் இவனைப்போன்றவர்கள் கிடைப்பது தான் அரிது. அதற்காக இந்த தனிமையைக் கூட தாங்கி கொண்டான். அது என்னவோ இனிய பொழுதுகள் மட்டும் அனுபவிப்பதற்கள் ஐஸ்கிரீம் போல கரைந்துவிடுகின்றன. கடிய பொழுதுகளை பிடித்து இழுத்து தள்ளுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அப்போதைக்கு உலகிலே பெரிய பகை என்றால் அது நேரம் காலமாக மட்டும் தான் இருக்க முடியும். பல நேரங்களில் தனிமை தான் ஆனந்த் வாங்கி வந்த வரம்.

இளவயது முதலே உடம்பின் மீது அக்கறை ஜாஸ்தி. அதனால் எத்தனையோ முறை எத்தனையோ பேர் வற்புறுத்தியும் குடியைத் தொட்டதில்லை. காந்தி குடிக்காமல் இருந்தது பெரிய விஷயமே இல்லை. இப்படியான ஆட்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு குடிக்காமல் இருப்பது தான் பெரிய விஷயம். பிளாஸ்டிங் பணியில் இருப்பவர்களுக்கு ஃபிட்டிங் ரொம்பவே முக்கியம். உடலில் ஊனமிருந்தால் ஃபிட்னஸ் சர்டிபிகேட் கிடைக்காது. அதனால் இது மாதிரி விஷயங்களில் கவனமாய் இருப்பான்.

பிட்டுக்குள் இறங்கும் போது மணி எட்டாகிவிட்டிருந்தது. பிட்டு என்பது குவாரியின் உட்பகுதி. கிரானைட் குவாரி என்றவுடன் பலருக்கு படையப்பா படத்தில் தங்க காசு தெறித்து வருவது மட்டும் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ஆனந்தை கேட்டால் கதை கதையாய் சொல்வான்.

மலையை உடைத்து எடுப்பது மட்டுமல்ல. பூமிக்குள்ளும் பல அடிகள் ஆழம் வரை தோண்டி எடுப்பார்கள். அந்த இடத்தை தான் பிட்டு என்பார்கள். படித்தவர்களுக்குத் தான் அது பிட்டு. படிப்பாதவர்களுக்கு அதுவும் மலை தான்.

மேலுள்ள வேஸ்ட், ஃபெதர் போன்றவற்றை நீக்கினால் தான் நாம் பார்க்கும் கிரானைட் கிடைக்கும். அதற்கு முன் அந்த பாறையை காட்டி இது தான் கிரானைட் என்று தெரியாதவர்களுக்கு காட்டினால் அவர்களால் நம்பவே முடியாது. மினுமினுக்கும் கிரானைட்டுக்குப் பின்னால் பலரின் வியர்வையும் ரத்தமும் சிந்தப்பட்டிருக்கும்.

பிட்டுக்குள் இறங்கி எத்தனை ட்ரில் ஓல்ஸ் இருக்கு என்று பார்க்கவேண்டும் அப்போது தான் ப்ளாஸ்டிங்கு தேவையான ஈடிக்களை கணக்கெடுத்து மைன்ஸ் மேனேஜரிடம் கையெழுத்து வாங்க முடியும். வேர்த்து விறுவிறுக்க இறங்கி கொண்டிருந்தான். காலையிலே வெயிலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வெயில் சுட்டெரிக்கும் வேலைகளில் ஒதுங்க கூட இடம் இருக்காது. பெரிய ப்ளாஸ்டிங் என்பதால் நான்கு நாட்களாக ட்ரில் ஹோல் வேலை நடந்து கொண்டிருந்தது. கூடவே ஒடி வந்து கொண்டிருந்த சூப்பர் வைசரிடம்,

‘’எத்தனை குழிகள் ஓட்டி இருக்கீங்க ரவி?”

“அறுவது குழி இருக்கும் சார்”.

“எத்தனை அடி இருக்கும்?”

“12 அடி சார்”.

பேசிக்கொண்டிருக்கும் போது லேபர் ஒடி வந்து தண்ணீர் கொடுக்க,

“ஏ ராமு பாப்பா புட்டிந்தன்னாரே?...”

“அவணு சார்.” முகத்தில் வெட்க சந்தோஷம் தாண்டவமாடியது.

“ஏ பாப்பா?...” குழந்தை பிறந்திருக்கும் விவரங்களை விசாரித்துக்கொண்டே நீரை குடித்தான்.

“பாபு சார்”

“ஓஹோ... மஞ்சிது”.

“பெத்த கொடுக்கு ஏ கிளாஸ் சதுக்குண்டுனாரு?”

“தேர்டு கிளாஸ் சார்”.

ராமு தமிழ் பேசுவான். ஆனா கேட்க சகிக்காது. தண்ணீர் கிளாஸை வாங்கிக் கொண்டு அவன் திரும்பி போனான்.

 (2)

“ரவி ராமு முகத்தில என்ன பெருமை பார்த்தீங்களா?”

“பின்ன என்ன சார்? ரொம்ப வருஷம் கழிச்சு கோவில் கோவிலா சுத்துனதுக்கு அப்புறம் பிறந்தபிள்ளை. இப்ப மறுபடி இரண்டாவதும் பையன் பெருமை இருக்காதா?”

“ஆனால் கடைசி காலத்தில் அன்போடு உயிர் கஞ்சி ஊற்ற ஒரு பொம்பளைக் குழந்தை இருந்தால் எவ்வளவு நல்லது?”

“ஆமா சார். அது என்னமோ நிஜந்தான் சார். எங்க பெரியப்பா நாலு புள்ளை பெத்தாரு. அதுங்களை தான் நல்லா படிக்க வச்சாரு. ஆனா அவரோட கடைசி காலத்தில அவருடைய பீ மூத்திரத்தை அள்ளிப்போட்டது அவர் எப்பவும் மட்டம் தட்டின அவரோட பொண்ணு தான்”.

சரியென்று தலையை மட்டும் ஆட்டினான். கவனம் வேலையில் குவிந்து போயிற்று. வேகவேகமாக கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது. வெயில் ஏற ஏற உடம்பெங்கும் அனல் அடித்தது. கணக்கு முடித்தபின் மறுபடி மேலே ஏறினார்கள்.

டிபன் சாப்பிட்டு தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் போது ரிங் அடித்தது.

“என்னடா ராஜா?...ஆ... கண்டிப்பா வந்துடறேன்டா. அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு கூப்பிட்றேன். அம்மாட்ட சொல்லு. பை…”

பேசிக்கொண்டே, அங்கு நின்று கொண்டிருந்த மைன்ஸ் மேனேஜருக்கு விஷ் பண்ணினான்.

“என்ன ஆனந்த்... பையனா?”

“ஆமா சார்”.

“பன்னிரெண்டு வயசு ஆயிடுச்சில்ல?”

“பதினொன்னு சார்”.

“பதினைந்து வயசு வரை தான் நம்ம கிட்ட நேரடியா பேசுவானுங்க. அதுக்கு மேலே அப்பன்காரன் எல்லாம் வில்லன் தான் ஆம்பளை பிள்ளைங்களுக்கு”.

சிரித்துக்கொண்டே ஈடிவாங்குவதற்குண்டான இண்டன் பேப்பரை நீட்ட,

“நைட் ஊருக்கா?” என்ற படி கையெழுத்துப்போட்டு நீட்டினார்.

“ஆமா சார்”, என்று சொல்லி நகர்ந்து டீ குடிக்கப்போனான். கோபி நின்றிருந்தான். அவனுடன் பேசிக்கொண்டே ஸ்டோருக்குச் சென்றான்.

“என்னடா நைட் கிளம்புறீயா?”

“ம்...”

“டிக்கெட் கன்பார்ம் ஆயிடுச்சா?”

“வெயிட்டிங் லிஸ்ட் 5இல் இருக்கு. கன்பார்ம் ஆயிடும்”.

‘தங்கச்சியை கேட்டேன் சொல்லு”.

“அப்படியே நீ முன்னவிட அதிகமா குடிக்கிறதையும் சொல்றேன்”.

“டேய்...டேய்...”

“பின்ன என்ன ராத்திரி பூரா என்னய தூங்க விட்டயா நீ?”

“டேய் அது ஒரு ஜென் நிலைடா?”

“குடிச்சிப்புட்டு அடுத்தவனை தொல்லை பண்றது ஜென் நிலையா?நீயெல்லாம் திருந்தவே மாட்ட..”.

சொல்லிக்கொண்டே ஸ்டோருக்குள் நுழைந்தான் கூடவே கோபியும்.

“வாங்க சார்”

“என்ன ஈஸ்வர் சாப்பிட்டாச்சா?” சைன் வாங்கிய இண்டன் பேப்பரை நீட்டினான்.

“ஆ...சார்...”

“எத்தனை முறை சொல்லிஇருக்கேன். என்னை பேர் சொல்லிக் கூப்பிடுங்கன்னு...”

மெல்லிதாக ஒரு சோகம் இழையோடிய சிரிப்பினூடே கண் லிஸ்டை மேய்ந்தது.

“நாளைக்குப்போறேன் சார் ஊருக்கு”. சொல்லிக்கொண்டே எழுந்து தாங்கி தாங்கி நடந்து சென்று ஈடிக்களை கணக்குப்பண்ணினான்.

“நாளைக்கேவா?” இவர்கள் முகத்திலும் அந்த சோகம் வந்து தொத்திக்கொண்டது.

“போறீங்கன்னு கேள்விப்பட்டேன். ஆனால்... நாளைக்குன்னு தெரியாது. வேலைக்கிடைச்சிட்டுதா?”

ஒயர்களை எடுத்து வைத்துக்கொண்டே,

“லேது சார். நம்ம ஊர் தானே சார். அங்க போய் பார்த்துக்குவேன்”. பேச்சில் தெலுங்கு வாடை அடித்தது.

“சரி அங்க போய் அட்ரஸ் அனுப்பிவிடுங்க. வந்து பார்க்கிறோம்”.

“எங்களையெல்லாம் மறந்துடாத ஈஸ்வர்”, இது கோபி.

“ஆ...சார்”.

ஸ்டோரில் ஈடி மற்றும் தோட்டா ஒயர்களை கணக்குப்பண்ணி வாங்கும் போது மணி பத்தாகி விட்டிருந்தது.

“சரி கிளம்புறோம்”. லேசான புன்னகை மூவர் முகத்திலும்.

வெளியே வரும் போது கோபி சொன்னான்.

“அவன் உன்னையே ஏக்கமா பார்த்தாண்டா...”

ஈஸ்வரின் ஏக்கமான பார்வை இவன் முதுகை துளைத்துதை இவனாலும் உணர முடிந்தது.

“என்ன செய்ய? யாருக்காய் இருந்தாலும் வலிக்கும் தானே”.

“இந்நேரம் கால் மட்டும் போகாம இருந்திருந்தா நல்ல சம்பளத்தோடு கெத்தா பிட்டுக்கள் இறங்கி இருப்பான். எல்லாம் நேரம்... நம்ம கிட்ட என்ன இருக்கு? அவனுக்காய் வருத்தப்பட மட்டுமே முடிந்தது”.

“சரி, சரி இந்தா... செல்லை வச்சுக்க. நான் பிட்டுக்குப் போறேன். மதியம் எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். நீ சாப்பிட்டிடு”.

நினைவுகள் பின்னோக்கி இழுத்தது.

ஈஸ்வரும் மைனிங் பிளாஸ்டர் தான். நல்ல உழைப்பாளி. ஒரு சமயம் ப்ளாஸ்டிங்டின் போது கவனக்குறைவில் கால்களை மட்டும் இரும்புக்கூண்டுக்கு வெளியில் வைத்திருக்க வெடித்துச்சிதறிய துகள்களோடு இவன் கால்களும் சிதைந்துப் போயிற்று. அதன் பிறகு அவனால் அந்த வேலையை செய்ய முடியாது என்பதால் எம்.டி. அவனுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததோடு அவன் எதிர்காலத்தை உத்தேசித்து இந்த வேலையையும் போட்டுக்கொடுத்தார். ஆனால், தான் உயர்வாக இருந்த இடத்தில் சாதாரண வேலை செய்வது அவனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.. பார்க்கிறவர்களின் பரிதாப்ப் பார்வை, சார் போட்டவனெல்லாம் பேர் சொல்லிக்கூப்பிடுவது இவனால் சகித்துக்கொள்ள முடியாதிருந்தது. அதனால் தாழ்வு மனப்பான்மை இயல்பாய் வந்து ஒட்டிக்கொண்டது. ஆனந்தை பேர் சொல்லி அழைத்துக்கொண்டிருந்தவன் சார் போட்டுக் கூப்பிட ஆரம்பித்தும் அதனால் தான். ஒரு விபத்து வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்களை கொண்டுவந்து விடுகிறது.

இந்த வேலையிலும் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. ஒவ்வொரு முறை ஈடிக்களை எடுத்துக்கொடுக்கும் போதும் அங்கும் இங்கும் ஒடி ஈடிக்களை புதைத்தது ஞாபகம் வரும். எத்தனையோ பேர் பின்னாலே சார் சார் என ஓடி வந்து இன்னிக்கு முடிஞ்சிடுமா? நாளைக்கு வெச்சுக்கலாமா என்று கேட்டது மறுபடி மறுபடி ஞாபகத்திற்கு வரும். அதை அவனே இவனிடம் தெரிவித்திருக்கிறான். ஒரே தொழிலில் இருப்பவர்களுக்குள் போட்டி பொறாமை இருந்தாலும் அவர்களால் தான் அந்த வலியையும் புரிந்து கொள்ள முடியும் என்றுணர்ந்தோ அல்லது ஆனந்தின் நல்ல மனம் உணர்ந்தோ தெரியவில்லை, ஒரு நாள் இவன் கைப்பிடித்து எல்லாவற்றையும் சொல்லி அழுதான். இங்கிருந்து போய்விடப்போவதாகச் சொன்னான். இவனால் ஒரு பெருமூச்சை மட்டுமே பதிலாய் அளிக்க முடிந்தது.

இன்னும் சில நாட்கள் சென்ற பின் இதையெல்லாம் அவனும் மறந்து போக்க்கூட கூடும். கண்ணை விட்டு போனால் கருத்தை விட்டு போவது நியாயம் தானே. ஆனால் அந்த இழப்பை மட்டும் அவனால் காலத்திற்கும் மறக்க முடியாது என்று தோன்றியது.

 (3)

ஒரு மணிக்கெல்லாம் ப்ளாஸ்டிங். ஒன்றிலிருந்து இரண்டு. அல்லது ஐந்திலிருந்து ஆறு அந்த நேரத்தில் மட்டும் தான் பிளாஸ்டிங் பிக்ஸ் பண்ணுவார்கள்.

சரியாக மூன்று மணி நேரம் இருந்தது. மறுபடி பிட்டுக்குள் இறங்கினான். பிட்டுக்குள் இறங்கிய வேகத்தில் ஒயர்களை நல்ல ஒயரா என ஆராய்ந்தான்.

சில நேரங்களில் ஒயர் உள்ளே கம்பி கட்டாகி இருந்தால் பவர் அடுத்த முனைக்குப் போகாது. அதனால் நடுவில் ஒரு லைனே கூட வெடிக்காமல் போகும். அதனால் நுட்பமான கவனத்துடன் ஈடிக்களை கனெக்க்ஷன் கொடுக்க ஆரம்பித்தான். கட்டர் மேஸ்திரியும், லேபர்களும் கூட உதவிக்கொண்டிருந்தார்கள். வீண் பேச்சுகள் அற்று அமைதியாய் இருந்தது சுற்றிலும் மரங்கள் அற்ற அந்த உஷ்ண பூமி. கேப் அணிந்திருந்தாலும் வெயிலால் உடம்பெங்கும் எரிந்தது. வியர்த்து விறுவிறுத்தது. சாப்பிட்ட சாப்பாடெல்லாம் ஒரு மணி நேரத்திற்குள் கரைந்து போயிற்று. தாகத்திற்கு அடிக்கடி தண்ணீரும் மோரும் குடித்துக்கொண்டிருந்தார்கள். எத்தனை தரம் தண்ணீர் குடித்தாலும் மறுபடி மறுபடி தாகம் எடுத்துக்கொண்டே இருந்தது. ஒண்ணுக்குப்போகக் கூட ஒதுங்க முடியாது. காய்கிற வெயிலில் முதலில் அது வரவும் வராது.

ட்ரில் ஹோல்ஸ்க்குள் ஈடிக்களை புதைத்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு ஈடியை புதைக்கும் போது அதன் மேல் லேபர் மண் வாரிப்போட்டு நிரப்புவான். ஈடி என்பது எலக்டிரிக் டெட்டர்னேட்டர்கள் அதாவது பாறைகளை தகர்த்தும் வெடி. கல்லின் தேவையற்ற பகுதிகளை அகற்ற அந்த லேயரில் சரியான இடைவெளியில் ஜாக்கிகளின் உதவியால் ட்ரில் ஹோல் போடுவார்கள். அது கட்டர் மேஸ்திரிகளின் வேலை. லேபர்களை கொண்டு தேவையான குழிகள் அதாவது ஹோல் போடப்படும். எந்த பாறை, எத்தனை அடி பாறை, எத்தனை குழிகள், எத்தனை நாளைக்குள்ள குழி போடுவது என எல்லாவற்றையும் கட்டர் மேஸ்திரி பார்த்துக்கொள்வார். சிறிய அளவில் ப்ளாஸ்டிங் என்றால் ஓரிரு நாட்களில் ஹோல் போட்டு விடுவார்கள். ப்ளாஸ்டிங் கொஞ்சம் பெரிதாக இருந்தால் ஹோல் போடும் வேலை நான்கு நாட்கள் வரை கூட நீடிக்கும். அந்த பகுதியின் ப்ளாஸ்டிங் முடிந்து அவற்றை சுத்தப்படுத்தினால் தான் அடுத்த அடுத்த பகுதிகளில் ப்ளாஸ்டிங் வேலை தொடங்கி வேஸ்ட்டுகளை நீக்க முடியும் என்பதால் ப்ளாஸ்டரை சீக்கிரம் முடிக்கச்சொல்லி வலியுறுத்துவதும் அவரது எழுதப்படாத வேலைகளுள் ஒன்று.

“ஏ பாபு அது மேலே மண்ணைப்போடு”

ஆந்திராவில் ஆண்களை பொதுவாக பாபு என்றழைப்பார்கள்.

இவன் புதைத்துக்கொண்டு வர வர பின்னாடி லேபர் மண்ணைப்போட்டுக்கொண்டே வந்தான்.

அவனது கவனம் முழுவதும் ஈடிக்களை கனெக்ட் செய்வதில் குவிந்திருந்தது. பிள்ளை, குடும்பம் என எல்லாம் மறந்து போயிருந்தது. ஒரு கனெக்க்ஷன் தவறாய் இருந்தால் கூட ப்ளாஸ்டிங் வேஸ்ட்டாவதோடு விபத்துகள் ஏற்பட வாய்ப்பளித்துவிடும். பத்து ஈடிக்கள் தொடர்ச்சியாக இணைத்திருக்கும் போது அவற்றை வெடிக்கச் செய்யும் சமயத்தில் ஒன்றின் இணைப்பு சரியில்லாமல் போனால் அது மட்டும் வெடிக்காமல் நின்று போயிருக்கும். அதனால் பாறை முழுவதுமாக உடைந்திருக்காது அது மட்டுமல்ல எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் நேரத்தில் திடீரென வெடிக்கும். அது போலத்தான் ப்ளாஸ்டிங் முடிந்த களத்தில், பாறைகளை பார்க்க வந்த மேஸ்திரி ஒருவர், வெடிக்காமல் இருந்த ஈடி வெடித்ததில் இறந்து போன கதையெல்லாம் உண்டு. ஆனால் இன்று வரை கடவுள் புண்ணியத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதில்லை.

அவ்வளவு சின்சியாரிட்டி. அதனால் தானோ என்னவோ ஆனந்த் என்றால் அங்கு தனி மரியாதை தான். உயிர் என்பது எவ்வளவு முக்கியம். மரணம் என்பது எவ்வளவு கொடியது என்பதையெல்லாம் உணர்ந்தவன் அவன்.

அவன் தாயின் மரணம் மரணத்தைப்பற்றி மட்டுமல்லாமல் வாழ்க்கையைப்பற்றியும் அவனுக்கு உணர்த்திப்போயிருந்தது.

விடுமுறை நாட்களில் அத்தையும், மாமியும் பெரியம்மாவும் கூடும் வேலையற்ற மதிய பொழுதுகளில் எதிர்த்த வீடு பற்றி அடுத்த தெரு கல்பனா பற்றி என ஊர் கதைகளை மென்று துப்பிக்கொண்டிருப்பார்கள். அம்மா மட்டும் பரமபதம், பல்லாங்குழி, தாயபாஸ் என விளையாடிக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளோடு ஐக்கியமாகி விட்டிருப்பாள். இவன் தோற்றுப்போய் விடுவான் என தெரிந்தால் போதும் ஆட்டத்தை கலைத்து விட்டு சிரிப்பாள். தன் மகன் தோற்கக்கூடாது, அதுதான் அவளுக்கு வேண்டும். போங்காட்டம் ஆடாதீங்க அத்தை என பிள்ளைகள் கத்துவார்கள். ஆனால் யாருக்கும் அவளை கோபிக்க தோன்றியதே இல்லை. அவளின் வெள்ளை மனம், குழந்தை குணமும் எல்லாப்பிள்ளைகளுக்கும் பிடிக்கும். குழந்தைகள் தானே உண்மையில் அன்பை உணரும் சக்தி கொண்டவர்கள். அன்பை அள்ளிக்கொடுக்கும் ஆற்றலும் அவர்களிடமே இருக்கிறது.

எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து, எல்லாரையும் அன்போடு உபசரித்து என வாழ்ந்து வந்தவள், வந்த மருமகள் நேக்கு போக்காக செய்த உள் அரசியலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிப்போனாள். இவளால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு அதை உணர்த்தவும் முடியவில்லை. எல்லாருமே ஆணாய் இருந்ததால் இவளின் அவஸ்தைகள், வீட்டில் நடப்பவைப் பற்றி புரியாமல் போயிற்று. சூது வாது தெரியாததால் இவள் தன் மருமகளை எதிர்த்துப்போராட திராணி இல்லாமல் ஆனாள். ஒரு நாள், வாழ்க்கை ஆட்டத்தில் தோற்றுப்போய்விடுமோ என்று நினைத்தவள் திடீரென்று ஆட்டத்தைக் கலைத்து இறந்து போனாள். இவனை மற்றவர்கள் முன் தோற்க செய்து விட்டு.

ஆம்... அதே அண்ணியின் கையால் சாப்பிட வேண்டிய நிலைமை இவனுக்கு. கல்யாணம் பண்ணி அம்மாவின் ஆசிர்வாத்த்துடன் வாழ்க்கையை தொடங்க எண்ணிய இவனது கற்பனைக்கோட்டைகள் சரிந்த போது இவனுக்கு வயது பதினெட்டு. அப்போது தான் டிப்ளமோ முடித்திருந்தான். வேலை தேடிக்கொண்டிருந்த சமயம், பாசமற்ற அந்த கைகளில் உணவருந்தும் போதெல்லாம் அம்மாவின் நினைவு வந்து இதயம் வலிக்கும். மரணத்தின் வலியை மரணிக்காமலே உணர்ந்துவிட்டான் தாயின் இழப்பால்.

வீடு என்பது வெறும் வீடு மட்டுமே. அழகிய நபர்களால் தான் அது இல்லமாகும். அது போல் உணவு என்பது வெறும் வயிற்றுப்பசி தணிக்கும் ஒரு பொருள் தான். அது விருந்தாய் மாறுவது அன்பான கைகளால் தான். அம்மாவின் இழப்பிற்குப் பிறகு இழப்பின் வலியை உணர்ந்த்தாலோ என்னவோ ஒரு உயிர் கூட வீணே இறந்து போவதை கூட அவன் விரும்பவில்லை. அது எதிரியாய் இருந்தாலும்...

“ஏம்பா வயரை இன்னும் இழு”.

“ஈடியை இறக்கு”.

எல்லாவற்றையும் கனெக்ட் செய்து அதிலிருந்து ஒரு ஒயரை இழுத்துப் போய் மெக்கர் பாக்ஸில் கடைசியாய் இணைக்க வேண்டும். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. ஒயரை இழுத்து இழுத்து இணைத்து கைகள் எரிய ஆரம்பித்தன. கிட்டதட்ட எல்லா ஈடிக்களையும் இணைத்தாகி விட்டது. பாதுகாப்பிற்காக வேண்டி வெடிக்க சில நிமிடங்களுக்கு முன்பு மெக்கர் பாக்ஸில் இணைத்தால் போதும்.

மெக்கர் பாக்ஸை இழுத்து நாலு சுத்து சுத்தினால் தான் பவர் உற்பத்தியாகும். அதன் பிறகு அதன் சுவிட்சைப்போட்டால் ஈடிக்கள் வெடிக்கும்.

ஆட்கள் தயாராக இருந்தார்கள். பல மீட்டர் தொலைவு வரை யாரும் வராமல் தடுப்பதற்கு. வெடித்து சிதறும் பாறைகளிலிருந்து தப்பித்துக்கெள்ள மைன்ஸ் மேனேஜர் தொடங்கி, ஃபோர்மேன், சூப்பர் வைசர், மேஸ்திரி, லேபர் என அனைவரும் பாதுகாப்பான கட்டிடத்திற்குள் சென்று பதுங்கி கொண்டார்கள். பல மீட்டர் வரை கூட சிதறி விழும் என்பதால் எந்த அளவிற்கு அதன் வீரியம் இருக்கும் என்பதை அறிந்து அங்கு யாரும் வராதபடி தடுத்து நிறுத்த ஆளுக்கொரு மூலையில் சிவப்புநிறக்கொடியுடன் ஆட்களை நிற்க வைப்பார்கள். அவர்கள் விசில் அடித்தவுடன் தான் இவன் இயக்க வேண்டும்.

 (4)

அந்த ஒட்டு மொத்த இடத்தில் இவன் மட்டும் தனியாளாய் நின்றிருந்தான். வெளி எங்கும் வெறுமையாய் இருந்தது. வெளிச்சத்தின் மொத்த இடமாய் தகித்துக்கொண்டிருந்த அந்த இடத்தில் இவன் மட்டும். அங்கு கல், பாறை, மண், வெயிலோடு அவனையும் தவிர்த்து வேறொன்றும் இல்லை. அவன் மூச்சுக் காற்றை தவிர்த்து வேறு சப்தமே இல்லை. வெளியில் இருக்கும் அமைதி மனதின் உள்ளே இல்லை. மனைவியை அணைத்துக்கொள்ளும் அந்த நிமிடத்திற்காய், மகனின் சிரிப்பைப் பார்க்கப்போகும் அந்த நொடிக்காய் இவ்வளவையும் பொறுத்துக்கொள்ள சொல்லி மனது அவனுடன் பேசிகொண்டே இருந்தது.

ஒரு ஆள் நிற்கும் அளவுள்ள இரும்பு ஷெல்டருக்குள் இருந்த சிறிய வழியின் வழியாக உள்ளே நுழைந்து கொண்டான். அவன் காதுகள் விசில் சத்தத்துக்காய் காத்துக்கொண்டிருந்தன. விசில் சப்தம் வந்ததும் சுவிட்சைப்போட்டவுடன் வெடித்துச் சிதறின பாறைகள். அடுத்தடுத்து சரவெடி போல வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. காதை கிழிக்கும் சத்தம் அடங்கியவுடன் வெளி வந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை புகை புகை புகையைத் தவிர வேறொன்றுமில்லை. புகை அடங்கியதும் எல்லா ஈடிக்களும் சரியாக வெடித்திருக்கிறதா என கணக்கெடுத்தான். எல்லாம் சரியாக இருந்தது. பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து அனிச்சையாக வெளியேறியது. தூரத்தில் ரவி ஓடி வந்து கொண்டிருந்தான். வெடித்து சத்தமும் புகையும் அடங்கியவுடன் ஒவ்வொருவராக வெளிவருவது வழக்கம்.

“சார் வாங்க சீக்கிரம்”.

“என்னாச்சு?”

“வாங்க சொல்றேன்”.

அவன் ஓடிய திசையில் பின்தொடர்ந்தான்.

அங்கு அவன் கண்ட காட்சி

சுற்றி குவாரி ஆட்கள் நின்றிருந்தனர். எட்டிப்பார்த்தான். ராமுவின் மடியில் அவனது பத்து வயது மகன். பின் மண்டையில் ரத்தம் வழிந்திருந்தது. “சார்…” என ராமு ரத்தம் தோய்ந்த கோலி குண்டு சைஸே ஆன அந்த சிறிய கல்லை காட்டி ஆனந்தின் காலைப்பற்றி கதறினான். அந்த ஓலத்தில் இத்தனை நேரம் அவன் உணர்ந்து கொண்டிருந்த அத்தனை மௌனமும் உடைந்து வழிய ஆரம்பித்தது.

வெலவெலத்து நின்றிருந்தான் ஆனந்த். அந்த பிள்ளையை ஒரு கணத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. ராஜாவின் முகம் வந்து போயிற்று.

“யார்டில் இருக்கும் கல்லுக்குப் பின்னாடி நின்னிட்டு இருந்திருக்கிறான் சார். விசில் சத்தம் கேட்டு எதேச்சையா வெளிய ஓடி வந்திருக்கான். அவன் அங்க எதுக்காக வந்தான். எப்ப வந்தான் எதுவும் தெரியலை சார். எவ்வளவோ குரல் கொடுத்தும் அந்த பையன் கவனிக்கலை சார்” கலவரத்தோடு தெரிவித்துக்கொண்டிருந்தான் அந்த பக்கம் நின்றிருந்த சூப்பர்வைசர்.

“ஏ மேலே எந்த தப்பும் இல்லை சார். அவன் குரலில் பதட்டம் இருந்தது”.

ப்ளையிங் ராக் பின் மண்டையில் பட்டுட்டுச்சி சார்... அவன் சொன்ன எதுவுமே இவன் காதில் விழவே இல்லை.

சின்ன கல் அவனின் உயிரை பறித்தது எல்லாரிடத்தும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் உண்டாக்கி இருந்தது. வெடித்த வேகத்தில் அது வந்த வேகம் அப்படி.

யாரைச் சொல்லியும் குற்றமில்லை.

மைன்ஸ் மேனேஜர் ராமுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். அவரவர் கஷ்டம் அவர்களுக்கு.

ராமு பதிலேதும் சொல்லாமல் அரற்றிக்கொண்டிருந்தான். மைன்ஸ் மேனேஜர் இவனிடம் ஓடி வந்தார்,

“நீங்களாவது சொல்லுங்க ஆனந்த். நீங்க சொன்ன கேட்பாப்பல”. அவர் முகம் பயத்தில் சிவந்திருந்தது. அழுதுவிடுவார் போலிருந்தது. மனசாட்சியை அறுத்து... எப்படி?

எல்லோரும் இப்போது இவனை சூழ்ந்து கொண்டார்கள். இவனை நோக்கி வலிய கரம் நீள்வதையும் அது இவனை அழுத்துவதையும் இவனால் உணர முடிந்தது.

அந்த வலிய கரம் ராமுவை நோக்கி அவனை செலுத்திற்று. ராமுவின் கையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டான். கேட்கப்போனதையும் மறந்து அந்த பிள்ளையின் முகத்தை பார்த்து கலங்கி மௌனமாகிப்போனான். நிமிர்ந்து பார்த்த ராமு,

“மீரு பயப்பட ஒத்து சார்...கீழ உழுந்துட்டான்...அதனால தான்னு...”

சொல்லிய வாக்கியத்தை முடிக்க முடியாமல் கலங்கியபோது யாரோ ஓங்கி முகத்தில் அடித்தது போல் இருந்தது.

மைன்ஸ் மேனேஜர் ராமுவின் கைகளை தன் கண்களில் ஒற்றிக்கொண்டிருந்தான். ஆட்கள் வர வர ஓலம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

நடந்தவை மறுபடி மறுபடி இரவில் நினைவுக்கு வந்த வண்ணம் இருந்தன. வருத்தத்தில் அதிகமாய் குடித்தும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் கோபி. இப்போது தனிமையின் துயரங்கள் தன்னை மறுபடி சூழ்ந்துகொள்வதை ஆனந்த் உணர ஆரம்பித்தான். இருந்தும் பாக்கெட்டில் இருந்த ரயில் டிக்கெட்டுகளை எடுத்து கிழித்துப்போட்டான். இந்த தனிமை இவனுக்கு இப்போது வேண்டுமாயிருந்தது.

- ஸ்ரீதேவி மோகன்