மழை நாட்களை, சாரல் நாட்களை நான் இப்போதெல்லாம் கடந்தவனாகவே இருக்கிறேன்..... ஆனால் இன்று பணி நிமித்தமாக வந்த இடத்தில் மழையும் சாரலும்.... அதன் ஜன்னலை எனக்காக திறந்து வைத்திருப்பதாக நினைக்கின்றேன்.... நினைப்பது எல்லாமே சரியாய் இருக்க வேண்டும் என்றில்லை.. தவறாக இருந்தாலும் சரி தானே.....

yellow angelடிரைவர் பார்க்கிங்- கில் இருந்து காரை எடுத்து வரப் போன நேரத்தில் ஒரு டீ குடிக்கலாம் என்று தோன்றியது....ஏதோ..... ஆழ் மனதில் இனம் புரியாத ஒரு தேநீரின் சுவாசம் உணரச் சொல்லி உந்தித் தள்ளியது....

என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.... தமிழ்நாட்டில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் கூட அனைவருக்கும் அடையாளம் தெரிகிறது.... ஒரு படம் இயக்கி, தோற்றுப் போய்விட்டால் ஒருவருக்கும் தெரிவதில்லை....(தமிழ் நாடு என்ன தமிழ்நாடு) உலக நியதியே அது தானே....! வெற்றி பெற்றவன் தானே வரலாறாய் நிற்கிறான்.... நிஜங்களில் தெரியாதவைகள், சட்டென என் நினைவுகளில் திருப்பப் பட்டன....

ஒரு கதாபாத்திரம் தவிர முன்னால் தெரியும் அனைத்து கதாபாத்திரங்களும் அவுட் ஆப் போகஸ் ஆனது.....

மஞ்சம் வண்ணத்தில் கருப்பு வட்ட பூக்களில் புடவை கட்டிய ஒரு முதிர்ச்சியான பெண்....பேருந்தை விட்டு இறங்கிக் கொண்டிருந்தாள்...அவளுக்கும் அவள் கட்டியிருந்த புடவைக்கும் வித்தியாசமே தெரியவில்லை... அத்தனை மஞ்சள் நிறம் அவள் மேனி...

பேருந்தை விட்டு இறங்கியவள் முன்நோக்கி இரண்டு எட்டு வைத்து பின், ஏதோ கண நேர யோசனையில் சட்டென திரும்பி, நான் டீ குடித்துக் கொண்டிருந்த கடையை நோக்கி வந்தாள்....

அதே நடை..... நடக்கும் போது, பக்க வாட்டில் இருபுறமும் பார்க்கும் அதே பார்வை.... நெற்றியில் அரை வட்ட நிலா போல் அதே தழும்பு.... நுனி மூக்கில் அதே மச்சம்.... என்ன ஒரு மாற்றம் என்றால் ..., ஒல்லி தேகம் ஓங்கு தாங்காய் மாறியிருந்தது....தேடித் தேடி திட்டு வாங்க வைத்த மார்புகள் இன்று கனத்து தான் கிடந்தன... அவள் முகம் கூட இருகித்தான் இருந்தது....

அவள் தானா?.......
சந்தேகம் இல்லை .......
அவளே தான்..!

யாரையும் எளிதில் தன் வசப் படுத்திக் கொள்ளும் அதே சாவித்ரி தான். கண்ணை மறைக்கும் கூந்தலை அவள் எப்போதும் கண்டு கொள்ள மாட்டாள்.. இன்றும் அதே போல் தான்....

கடைசியாக என்று பார்த்தேன் சாவித்ரியை....?

இப்போது வெகு அருகில் நின்றபடி கடைக்காரரிடம் அரை லிட்டர் பால் என்று பணத்தை நீட்டினாள்... அவளின் அருகில் நின்றபடி அவளையே உற்றுப் பார்க்கும் ஏதோ ஒரு உருவம் என்று அவள் நினைத்திருக்கலாம்.. சட்டென வலது புறம் திரும்பினாள். அத்தனை அருகில் நின்றிருந்த என்னால் அவளின் வாசனையை நன்றாக உள் வாங்க முடிந்தது....

நிச்சயமாக சொல்ல முடியும்...அவள் சாவித்ரி தான்.... இடது காலை உள் நோக்கி திருப்பிக் கொண்டு தான் அவள் எப்போதும் நிற்பாள்.. அப்போதும் அப்படிதான் நின்றாள்... மஞ்சள் பிரியை.. மஞ்சளின் மீது தீராக் காதல் கொண்டவள்... மஞ்சள் பூசிக் கொள்வதில் மாய பேயின் வசம் அவள்.... பார்க்கும் கண்களில் மஞ்சளாகிப் போவதில்.. அவள் ஒரு மஞ்சள் நிற தேவதை....

சட்டென திரும்பியவள் என்னை ஒரு கணம் உற்று பார்த்தாள்...மீண்டும் கடைக்காரரிடம் திரும்பியவள் இன்னும் ஒரு கால் லிட்டர் பால் என்றாள். வாங்கி ஹான்ட் பாக்கில் வைத்தவள், என்னைப் பார்த்தாள்....

"இன்னும் தாடி எடுக்கலையா....? தாடிப்பையா....! வா...." என்றாள், எந்தவொரு முக பாவனையுமின்றி....

இன்னும் மழை தூறிக் கொடிருக்க, நான் டீக்கு காசைக் கொடுத்து விட்டு, அவள் பின்னாலேயே சென்றேன்....

வாகனங்களை கடந்து, ஒதுங்கி, ஒதுங்கி, அந்த நகர சாலையை அவள் கடந்த லாவகம், அடேங்கப்பா.. .......ஒரு பக்கம் பார்த்தபடியே சாலையை கடந்து என்னிடம் திட்டு வாங்கிய சாவித்ரியா இவள்..?

நாம பார்த்து பல வருஷம் ஆகிடுச்சுல்ல என்று மெல்ல ஆரம்பித்தேன்.... என்னால் அவளைத் தாண்டி வேறு எதையும் பார்க்க முடியவில்லை.. சிந்திக்க முடியவில்லை... இன்னும் இன்னும் வசீகரம் அதிகமான அவள் முகத்தில், அந்த துறு துறு மட்டும் காணாமல் போயிருந்தது...

"ம்ம்ம்....22 வயசுல பார்த்தது... இப்போ முப்பத்தி எட்டு வயசாச்சு....விக்ரம்.... அப்போ.... கணக்கு போட்டுக்கோ..." என்றாள்.... ஏதோ ரோபோ போல் பேசினாள்.....

ஆமா.... எனக்கு நாற்பது வயசாச்சு..... என்னை விட இரண்டு வயது சின்னவள்...

ரெண்டு வயசு பெரியவன அண்ணான்னுதான் குப்பிடுவேன்னு அடம் பிடிச்சு, என்னை சரக்கடிக்க விட்டு சிரித்தவள் தானே...

கடையில் இருந்து நடக்க ஆரம்பித்த பின் ஒரு முறை கூட என்னைப் பார்க்கவில்லை... எப்படி இருக்கன்னு நான் கேட்டதுக்கும், முன்னால வந்த பைக்கிற்கு வழி விட்டபடியே......"ம்ம்ம்..... ஓகே" என்றபடியே நடந்தாள்...

சாலையின் பரபரப்பு தாண்டி வீதிக்குள் செல்லும் போது, அங்கிருந்த ஒரு மரத்திலிருந்து பூக்களாக மழைத்துளிகள் சடசடவென எங்கள் மேல் விழுந்தது..... நான் கணங்களில் கரைந்து......ஸ்......ஸ் ....... ... ஸ்.......ஹே..... என்று என்னையும் அறியாமல் கத்தி, தலையை தடவியபடி திரும்பி பார்க்க, அந்த மரத்தின் கிளையை பற்றி ஆட்டிக் கொண்டிருந்த அந்த வீட்டின் சிறுவன்.....ஹோ...... வென கத்தி சிரித்தான்....

நானும் மெல்ல சிரித்தபடி கை காட்டினேன்....

அந்த காண நேரத்தில் சாவித்ரி, இன்னும் சற்று முன்னால் நடந்து கொண்டிருந்தாள்....

என்ன பெண் இவள்... மழைக்கும் மரியாதை தர மாட்டேன்ங்றா........ மனசுக்கும் மரியாதை தர மாட்டேன்ங்றா........மழை வந்தா குடை வெறுத்து குதூகளிப்பவள் எப்படி இப்படி மாறிப் போனாள்....?

ஏண்டா இவளைப் பார்த்தோம் என்றாகி விட்டடது.... முன்பு ஒரு நாள் நினைத்ததுண்டு..... என்றாவது ஒரு நாள் இவளைப் பார்க்க நேரிடும் போடு, ஓடி வந்து, "விக்கி.... நான்தாண்டா.... சாவி.. உன் சாவிடா...." என்று கண்கள் விரிய கத்துவாள் என்றும், அப்போது மெல்ல அவளைப் பார்த்து...... ஒ...... சாவியா.... எப்டி இருக்கா.. என்று மென்மையாக, அதாவது நான் பெரிய ஆள் ஆகி விட்டேன் என்பதை சொல்லாமல் சொல்லுவது போல பேச வேண்டும் என்றும் எண்ணியதுண்டு....ஆனால் என் முதல் பட தோல்விக்கு பின் எனக்கு வேறு விதமான யோசனைகள், பாடங்கள் எனக்குள் எழுந்தது...

இதோ.... இன்று கூட என் அடுத்த படத்தின் வேலைக்காகத்தான் இந்து வந்தேன்...இவள் ஓசூரில் இருப்பதாகத்தான் கேள்விப் பட்டேன்....ஆனால் மூணாறில் இருக்கிறாள்.....

எனக்குள் ஒரு வித அமைதியை கிளறி விட்டிருந்தாள்....

மழைக்காக ஏங்கி யாகம் நடத்துபவள்.... இன்று கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை... நான் பின்னால் வருகிறேனா.. என்று கூட பார்க்கவில்லை.... பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்பது உண்மைதானோ.....!

எனக்கு கோபமாய் வந்தது.... 'என்ன பண்ற.. உன் படம் பார்த்தேன்... நல்ல படம்..... நம்ம மக்களுக்கு உன் அறிவ ஜீரணிக்கற சக்தி இன்னும் வளரலன்னு ஆறுதல் சொல்லுவான்னு நினைச்சா?......."---ஒரு வேளை நான் இயக்குனர் ஆனதே தெரியவில்லையோ.....!

வந்த அலைபேசியில், இதோ வந்தறேன்... என்று, கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னேன் டிரைவரிடம்....

இன்னும் பாரதம் ஆடிக் கொண்டிருக்கிறாளா.....? ஆடுபவளாக தெரியவில்லை.... உடல் பூசினாற் போல் இருந்தது....

வேகமாய் நடந்தவள், அந்த கடைசி வீட்டின் கேட்டுக்குள் நுழைந்தாள்..... பேக்கில் இருந்து சாவியை எடுத்த சாவி.. கதவை திறந்து உள்ளே சென்றவள், என்னை உள்ளே வரச் சொல்லி தலையை மட்டும் ஆட்டினாள்.. நான் ஷூ வை கழற்ற எத்தனித்த போது, வேண்டாம் என்று ஜாடை செய்தாள்...

ஆம்... நான் எப்போதுமே என் வீட்டிற்குள் செல்லும் போது ஷூவை கழற்ற மாட்டேன் என்று அவளுக்கு தெரியும்....

உள்ளே சென்றேன்.... உள்ளே சென்ற மறு வினாடி கதவை அடைத்தாள்....அடைத்த மறு வினாடி, சட்டென எனைக் கட்டிக் கொண்டாள்... என் மார்பில் புதைந்த அவள் முகம் நடுங்கியது.... உடல் சிலிர்த்தது..... இன்னும் இன்னும் இறுக்கினாள், இரும்பாய்....என்னை துளைத்து வெளியேறும் தோட்டா போல் தன்னை மாற்றிக் கொண்டிருந்தாள். என் கழுத்தில் அவள் ஈரமுகம்.... என்னால் உணர முடிந்தது, அவளின் சூடான கண்ணீர் துளிகளை...சில நொடிகளில் வாய் விட்டு அழத் தொடங்கினாள்..... அந்த அழுகை ஒரு பெரும் மழையை எனக்குள் விழச் செய்தது.... அவள் நடுங்கினாள். எனக்குள் சென்று ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொள்ளும் உடல் மொழியில் அவள் என்னை கட்டி இன்னும் இன்னும் இறுக்கினாள்.. அவள் உயிர் எனக்குள் ஊடுருவதை என்னால் உணர முடிந்தது....

மழைக் காலத்தில் கம்பளிக்குள் சுருண்டு கொள்ளும் போது கிடைக்கும் ஒரு ஆசுவாசம் அவள் கொண்ட அணைப்பில் உணர்ந்தேன்.....ஏனோ... கண்கள் கலங்குவதை தடுக்க முடியவில்லை.... அவள் இதழில் அழுந்த பதித்த முத்தம் என்னைப் பார்ப்பதற்குள் நான் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.... என் முகம், கழுத்தில்,சட்டையில் ஒட்டிக் கிடந்த மஞ்சளில் சாவித்ரி தேங்கி கிடந்தாள்.... விழுகின்ற தூரலில் அவளின் மஞ்சளும் அவளும் நனைந்து விடாதபடி, கவனமாக, காரை நோக்கி நடந்தேன்...

நான் திரும்பி பார்க்கவில்லை.... அவள் கண்டிப்பாக பார்த்துக் கொண்டிருப்பாள்....மழை இன்னும் தீவிரமானது.....................................

- கவிஜி