அவன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான்.

இந்த இண்டர்வியூவில் எப்படியாவது செலக்ட் ஆக வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருந்தது. 12000 சம்பளம், நேரத்துக்கு போய் வரலாம், ஷிப்ட் என்ற பேரில் கண்ட நேரத்துக்கு போய் வரும் தொல்லையும், அதனால் அர்த்த ராத்திரியில் போலீசிடம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்ற தேவையும் இல்லை.

'ராகவ் ப்ரமோட்டர்ஸின் சிஸ்டம் அட்மின்' மனதிற்குள் சொல்லும்போதே சந்தோசமாய் இருந்தது.

காலை 9 மணிக்கு போய் மாலை 5 மணிக்குத் திரும்பும் மக்கள் கடலோடு கலப்பதின் ஆனந்தத்தை இப்போதே உணர்ந்து கொண்டிருந்தான்.

மாலை வேளைகளில் நண்பர்களோடு கழிக்கப் போகும் நேரத்தினை நினைத்துக் கொண்டிருந்தான்.

"சார் உங்கள கூப்பிடறாங்க",அவன் கற்பனைகளை இடைமறித்தார் கிரே கலர் சட்டையும், புளு கலர் சட்டையும் போட்ட வயதான செக்யூரிட்டி.

உள்ளே போனான்.

ஒரு கண்ணாடி ரூமை கை காட்டினார் அந்த ஊழியர்.

ஒரு பெண் அதிகாரி அமர்ந்திருந்தாள், நல்ல நிறம், ப்ளூ நிற சுடிதார், அதற்கு மேட்சாக ஸ்டிக்கர் போட்டு லூஸ் ஹேர். அவள் டேபிளில் ப்ளூ நிற விரிப்பிட்டு அதில் வெள்ளை நிற பேப்பர் வெயிட், வெள்ளை நிற தண்ணீர் ஜக்கு, வெள்ளை நிற ஆப்பிள் லேப்டாப் என ராகவ் ப்ரமோட்டர்ஸின் ப்ளூ,வெள்ளை நிற லோகோ போன்றே இருந்தது.

தன்னுடைய கம்பெனியின் மேனேஜர் டேபிளை நினைத்துப் பார்த்தான். பழைய தகர டேபிளில் எப்போதும் அழுக்கு படிந்த ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியுடன் போட்டி போடும் அளவு மொத்தமான நோட்டோடு அமர்ந்து கொண்டு இவன் போகும்போதெல்லாம் ஒரு ஏளனப் பார்வை பார்க்கும் தாடிக்கார மேனேஜரை நினைத்து பார்த்தான். 'ச்ச அதெல்லாம் ஒரு கம்பெனியா'.

அவள் அவனை பார்த்தாள் மாநிறம், அதிகம் உறுத்தாத மீசை, டானிஷ் நிற சட்டை, டாமி ப்ளூ பேண்ட் வசீகரமாய் இருந்தான். இயல்பாக அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

"வாங்க உக்காருங்க"

"தேங்க் யூ மேடம்"

"உங்க பேரு"

"அசோக் "

"மிஸ்டர் அசோக், உங்க ரெசுயூம் பார்த்தேன். நீங்க படிச்சது பி.ஏ பிலாசபி பட் நீங்க 2 இயர்ஸ் சிஸ்டம் அட்மினா எக்ஸ்பிரியன்ஸ் இருக்குன்னு போட்ருக்கீங்க. ஏன் நீங்க பிலாசபி சைடு போகல.?"

"நான் எம்.எஸ்.டபுல்யூ படிச்சேன் பட் என்னோட குடும்ப சூழலால என்னால பீஸ் கட்ட முடியல. அதான் ஒரு ஹார்ட்வேர் கோர்ஸ் படிச்சுட்டு சிஸ்டம் அட்மின் ஆயிட்டேன்"

"சரி நீங்க ஏற்கனவே உங்க டெக்னிகல் இண்டர்வியூ கிளியர் பண்ணிட்டீங்க. அதுனால தான் இன்னிக்கு கூப்ட்டு இருக்கோம். உங்களுக்கு முதல்ல நீங்க அப்ளை பண்ணிருக்கற போஸ்ட் பத்தி சொல்லிடறேன்"

"சரி மேடம்"

"இந்த போஸ்ட் சிஸ்டம் அட்மின். பேசிக் பே 4000, அலவன்ஸ் இன்சென்டிவ் எல்லாம் சேத்து 12000 வரும். அதுல P.F , E.S.I போக 10300"

"ஒகே மேடம்"

"அப்பறம் ஜாப் டைமிங் மார்னிங் 9.30 டூ ஈவினிங் 5.30. இங்க இருக்கற 25 சிஸ்டம்ஸ் ஹாண்டல் பண்ண ஒரு அட்மின் அண்ட் ரெண்டு அசிஸ்டண்டு."

"சரி மேடம்"

பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள். இவனுக்கு உள்ளூர சந்தோஷம் பொங்க ஆரம்பித்தது.

"உங்க அப்ளிகேஷன்ல உங்க அட்ரஸ் இல்ல. அப்ளிகேசனுக்கு தேவையில்ல பட் ஜாய்னிங் பார்ம்ல அட்ரஸ் ப்ரூப் தேவைப்படும்"

"இருக்கு மேடம்.லைசென்ஸ் ஜெராக்ஸ் போதும்ல மேடம்"

"போதும். நீங்க எங்க இருந்து வரீங்க? ஏன்னா, உங்களுக்கு பிக்-அப் தேவையானு தெரியணும்."

"நோ நீட் மேடம். நான் பைக்ல வந்துடுவேன். பக்கம் தான். சுப்ரமணியபுரம்"

எழுதுவதை நிறுத்திவிட்டு ஏறிட்டாள். "எங்க.?" சந்தேகமாக கேட்டாள்.

"சுப்ரமணியபுரம் மேடம்"

சர்டிபிகேட்களுக்குள் நுழைந்து தேட ஆரம்பித்தாள். இதோ டிசி கிடைத்து விட்டது. அதில் அவள் தேடிய பிரிவு கிடைத்து விட்டது.

'ஜாதி'

வேகமாக வலப்பக்கம் பார்த்தாள்

'சாதிச் சான்றிதழை பார்க்கவும்', அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

மெதுவாக அவனை ஏறிட்டாள்.

"நீங்க என்ன கேஸ்ட்ப்பா?"

அவன் சங்கடப்பட்டான். "எதுக்கு மேடம் கேக்கறீங்க? இது ப்ரைவேட் கம்பனி தான?"

"ப்ரைவேட் கம்பெனி தான்ப்பா. ஆனா எங்க கம்பெனில வேலை செய்யறவங்க கேஸ்ட் எங்களுக்குத் தெரியனும்"

சரி இவளிடம் விவாதம் செய்து பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் சொன்னான் "அருந்ததியர் மேடம்"

"என்னது அருந்ததியரா? அப்படீன்னா "

"எங்க கேஸ்ட் மேடம்"

"அப்படி ஒரு கேஸ்ட் நான் கேள்விப்பட்டதில்லையே?"

"இல்ல மேடம் எங்க கம்யூனிடி சர்டிபிகேட்ல கூட அப்படி தான் இருக்கு"

"இல்லப்பா எனக்கு புரியல. உங்க ஜாதிக்கு வேற எதாவது பேரு இருக்கா?"

வெகுநேரம் தயங்கி விட்டு சொன்னான் "சக்கிலியர் மேடம்". அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

"ம் அப்படி புரியற மாதிரி சொல்லு. உன் ஜாதிய சொல்ல என்ன தயக்கம். நீயே இப்படி தாழ்வு மனப்பான்மையோட இருக்காத. இப்பல்லாம் யாரு ஜாதி பாக்கறா". இவ்வளவு நேரம் வந்த "ங்க" என்ற வார்த்தை குறைந்திருந்ததை அவனால் உணர முடிந்தது.

"..."

"நீ என்னப்பா பீஸ் கட்ட முடியலன்னு எம்.எஸ்.டபுல்யூ படிக்கலன்னு சொல்ற?.நீங்க தான் ஸ்காலர்ஷிப்லையே படிக்கறீங்களே?" பேச்சில் நக்கலும், துவேஷமும் தெறித்தது.

அவளை ஏறிட்டான். பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, "மேடம், நாம ஜாப் பத்தி பேசுவோமே" என்றான்.

அவளும் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டதை உணர்ந்தாள் சுதாரித்தபடி "இல்லப்பா நீங்க அப்ளை பண்ணின போஸ்டுக்கு இங்கயே அசிஸ்டண்டா இருக்கற பையன் அப்ளை பண்ணி இருக்கான். அவனுக்கு ப்ரமோஷன் குடுக்கலாம்னு இருக்கோம்."

"ஓ"

"நீங்க வேணா ஹவுஸ் கீப்பிங் இன்சார்ஜ் போஸ்ட் இருக்கு.ஜாய்ன் பண்றீங்களா.?"

"ஹவுஸ் கீப்பிங்ன்னா.?" சந்தேகமாக கேட்டான்.

"ஒன்னும் இல்லப்பா. இங்க கிளீன் பண்ண ரெண்டு பொம்பளைங்க வருவாங்க. அவங்கள வேலை வாங்கணும். ஒன்னும் பெரிய ப்ராப்ளம் இருக்காது. 'உங்க ஆளுங்க தான்'. ஏதாவது ஜெராக்ஸ் எடுக்கணும்னா எடுத்துட்டு வரணும். அவ்வளவு தான். இதுக்கு ஸ்கேல் பே எதுவும் இல்லை. 10000 சேலரி. நீங்க அப்ளை பண்ணின ஜாப்க்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை."

"என்ன மேடம் என் ஜாதி தெரிஞ்சதும் இப்படி பேசறீங்களா?" என்றான் காட்டமாக.

"அப்படியெல்லாம் இல்லப்பா. அந்த போஸ்ட் காலியா இல்ல அதான் இங்க ஜாய்ன் பண்ணிக்கறியான்னு கேட்டேன்."

"அந்த போஸ்டுக்கு நான் அப்ளை பண்ணவே இல்லையே? தேவையில்லாம என்ன கூப்டு இருக்க வேண்டாமே"

"நீ அந்த கம்பெனில 4500 ரூபா சம்பளம் வாங்கற. இங்க வந்தா 10000 கெடைக்கும்ல. என்ன ரொம்ப கஷ்டமான வேலை? ரெண்டு பேர வேலை வாங்க போற. எப்பயாவது அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டியது இருக்கும். அவ்ளோதான".

'அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டிது இருக்கும்' அவனுக்குத் தெளிவாக புரிந்தது.

"எங்கப்பன் இந்த வேலை செஞ்சு நானும் அந்த வேலை செஞ்சுற கூடாதுன்னு தான் மேடம் படிக்க வெச்சாரு. நீங்க எம்புட்டு காச குடுத்தாலும் மறுபடி இந்த வேலைய என் குலத்தொழிலாக்க மாட்டேன். என் சர்டிபிகேட்ட குடுங்க. நான் வரேன்." என்றபடி கிளம்பினான்.

அவன் கனவுகள் அனைத்தும் உடைந்தது போல் இருந்தது. திரும்பி ஒருமுறை கண்ணாடி அறைக்குள் இருந்த அவளைப் பார்த்தான் காறித்துப்ப வேண்டும் போல் இருந்தது.

"பெரிய ராஜ பரம்பரை, செய்ய மாட்டாரோ, கக்கூஸ் கழுவறவன் எல்லாம் கம்ப்யூட்டர் வேலை பாக்க போறானாம் சக்கிலிப்பயலுக்கு திமிர பாரு" மனதிற்குள் கறுவிக்கொண்டு ஆப்பிள் லேப்டாப்பில் சமையல் குறிப்பு படிக்க ஆரம்பித்தாள் அந்த மேனேஜர்.

"அண்ணே பாத்ரூம் எங்கண்ணே?" செக்யூரிட்டியை கேட்டான்.

மாடிப்படிகட்டை ஒட்டி இருந்த 'டாய்லெட்' என்ற பலகையை நோக்கி கை நீட்டினார்.

இரண்டு அடி வைத்தான்.

'அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டிது இருக்கும்' காதில் ஒலித்தது.

இயலாமையில் கண்கள் கலங்க திரும்பி நடந்தான்.