மியாவ்… மியாவ்….. மியாவ்…. ர்ர்…

டேய் புடிடா.. யேய் நீ புடிடா….

குழந்தைகள் மற்றும் ஒரு பூனையின் பயமும் கோபமும் கலந்த சத்தம் கேட்டது. ஒரு பெண், இரண்டு மூன்று பையன்கள் கருப்பு உடையணிந்து தலையில் கொம்புடன் பூனைக்குட்டியின் கழுத்தில் கயிற்றைக்கட்டி அதைப் பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். நான் அதைக் காப்பாற்ற எழுந்து ஓடினேன்… ஓடினேன்… ஓடினேன்…. கடைசியில் கீழே விழுந்த நேரத்தில் என் கையில் இருந்து சில அடி தூரத்தில் அந்தப் பிசாசுகள் பூனைக்குட்டியைச் சித்திரவதை செய்ததைப் பார்த்தேன். பூனைக்குட்டியைக் காப்பாற்ற என் கையை நீட்டினேன்…இல்லை இல்லை கையை நீட்ட முயற்சி செய்தேன். கை வரவில்லை.பின்னாலிருந்து யாரோ என் கையைப் பிடித்து இழுத்தார்கள். வேகமாக.. வேகமாக.. வேகமாக கையை நீட்ட வேண்டும். நீண்ட காலம் என்று என்னால் கருதப்பட்ட சில மணித்துளி நேரத்துக்குப்பின் கையை விடுவித்து வேகமாக முன்னால் நீட்டி அந்தப் பிசாசுக்குட்டிகளை அடித்தேன். அவற்றின் முகங்கள் இரும்பால் செய்திருக்கப்பட வேண்டும். அவற்றை அடித்த என் கை அற்றுப் போனதுபோல் வலித்தது. வலி தாங்காமல் கண்ணீர் வந்தது. கண்ணீரைத் துடைத்துக் கண் திறந்தபோது என் அறையில் படுத்திருந்தேன்.

கனவு கண்டிருக்கிறேன்…இருந்தாலும் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி உண்மைபோலவே இன்னும் தோன்றக் காரணமென்ன? கை ஏன் நிஜமாகவே வலிக்கிறது? கையைப் பார்த்தேன்.நிஜமாகவே சிவந்திருந்தது. வலியை மீறி எனக்கு சிரிப்பு வந்தது. கனவில் வந்த பிசாசை அடிப்பதாக நினைத்து ஓங்கி சுவற்றில் அடித்திருக்கிறேன். வலித்த கையை தடவிக்கொண்டே சிரித்தபோதுதான் உரைத்தது. காதில் இன்னும் அந்த சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பூனைகளின் கோபமான சத்தம் மயிர்க்கூச்செரியச் செய்யும் இந்த சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்டதால் அதைக் காண வெளியே போனேன். கனவா நிஜமா என்று என்னைக் குழப்பமடையச் செய்யும் காட்சியைப் பார்த்தேன்.

அதேபோல எட்டிலிருந்து ஒன்பது வயதிற்குள்ளான இரண்டு மூன்று குழந்தைகளில் ஒரு பெண் தன் கையில் பூனைக்குட்டியை தூக்கிப் பிடித்திருந்தாள். கருப்பு உடையும் தலையில் கொம்புகளும் மட்டும் இல்லை. இருந்திருந்தால் இதையும் கனவென்றே முடிவு செய்திருப்பேன். அவளைச் சுற்றி இரண்டு நாய்கள் திரிந்து கொண்டிருந்தன. அவள் போகும் இடமெல்லாம் அவையும் பின்தொடர்ந்தன. எனக்கு நீங்கள் எங்கே போனாலும் நாங்கள் உங்களைப் பின்தொடர்வோம் என்ற ஹட்ச் விளம்பரம்தான் நினைவிற்கு வந்தது. அந்த விளம்பரத்தில்கூட நாய்க்குட்டிதான் வரும். ஆனால் இந்த காட்சி அந்த விளம்பரம்போல் ரசிக்கத்தக்கதாக இல்லை. இரத்தசகதியில் மாட்டிக்கொண்டவன் நாக்கில், செர்ரிப் பழங்களின் சுவை ஒட்டிக் கொண்டிருந்ததுபோல் இருந்தது இரண்டும். அவள் பூனையை விட்டால்போதும் அவை அதைக் கடித்துக் குதறக் காத்திருந்தன. பூனையை விடாவிட்டால் யாரைக் கடிக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால் அவளுக்கோ பூனையை பிடித்திருக்கவும் பயம் கீழே விட்டுவிடவும் பயம். அவளிடமிருந்து அதை வாங்கிக் கொள்ள யாரும் தயாராக இல்லை அல்லது முடியவில்லை. நாய்களின் கோபம் நொடிக்கு நொடி தீவிரமாகிக்கொண்டே இருந்தது.

அதில் ஒரு நாயை எனக்கும் என்னை அதற்கும் தெரியும். அதற்கு ஒரு சில நாட்கள் பிஸ்கட் போட்டிருக்கிறேன் என்றபோதும் என்னையும் அது நெருங்கவிடவில்லை. பூனையின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அது இந்தக் கதையின் முதல் வாக்கியம்போல இன்னும் கத்திக் கொண்டுதான் இருந்தது. ஒரு வழியாக அந்த பெண் பூனையை மேலே ஏறிப்போவதற்கு வசதியாக சுவற்றின் அருகே விட்டுவிட்டாள்..

அப்பாடி…..

.நீண்ட பெருமூச்செறிந்தேன்.

பூனைக்கும் நாய்க்கும் இடையே ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்ததால் அந்தப் பூனை தப்பிச் செல்வதற்கான போதிய அவகாசம் இருந்தது. சரி நான் திரும்பப் போய்த் தூங்க வேண்டும். இதுவும்கூட கனவாக இருக்கலாம். ஆனால் என் கை வலிப்பது மட்டும் நிஜம். கிட்டத்தட்ட திரும்பிவிட்டேன்.

அப்போதுதான் முடிந்துதோன கதையில் திருப்பம் ஏற்பட்டது.

அந்தப் பூனை மிகவும் சிறியதாக இருந்ததால் சுவற்றில் ஏறமுடியவில்லை. இந்த முறை பூனைக்குட்டியைக் காப்பாற்ற எந்த குட்டி தேவதையும் இல்லை. இவ்வளவு நேரம் காப்பாற்றிய தேவதைக்கும் பூனைக்குட்டிக்கும் இடையில் நாய்ச்சாத்தான் இருந்தது.

ஐயோ…! இது மறுபடியும் நிகழ்ந்துவிட்டது.

அந்த இரண்டு நாயும் பூனையை நெருங்கி அதைக் கடித்துக் குதற முற்பட்டது. பூனையின் வீரம் இன்றும் குறையவில்லை. இன்னும் போராடிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அதன் கற்பனைக்கே எட்டாத அளவிற்கு நாயின் உயரம் ஐந்தாறு மடங்கு பெரியதாக இருந்தது. வேறு வழியில்லை என்னுடைய இருப்பை அந்த இடத்தில் கட்டாயமாகப் பதிவு செய்தே ஆகவேண்டும். கை வேறு வலிக்கிறது. மெதுவாக நெருங்கிப் போனேன். இப்பொழுது அந்த நாய்கள் என்னையும் பூனையையும் மாறி மாறிப் பார்த்துக் குரைத்தது.

வவ்…வவ்….(பூனையைப் பார்த்து)

வவ்…வவ்….(என்னைப் பார்த்து)

வவ்…வவ்…(பூனையை)

வவ்…வவ்…((என்னை)

என் வாழ்வின் ஏதேனும் சில அர்த்த நிமிடங்கள் அந்நாயின் வேட்டைக்குத் தடையாக இருக்குமென்பதால் என்னை எதிர்த்துப் போராடத் தயாராகியது. பூனையின் பார்வையில் நாயும் நானும் ஒன்று தான். அதனால்தான் நான் அதைக் காப்பாற்றப் போனபோது என்னுடைய கையைக் கடிக்க வந்தது. அந்த நேரத்தில் நாய் பூனையைத் தாக்க வந்தது. ஆனால் பூனை என் கையில் சிக்கிக் கொண்டது.

சூழலின் பயங்கரம் இப்போது தீவிரமாகிவிட்டது. இரண்டு நாய்களும் என்னைப் பார்த்துக் குரைத்தன. மேலும் நான் எங்கும் போகாதபடி என்னை நெருங்கி வந்தன. இப்போதுதான் எனக்குப் புரிந்தது அந்தப் பெண், பூனையைக் கையில் வைத்திருப்பதை எவ்வாறு உணர்ந்திருப்பாள் என்று. அப்போது நான் மற்றொரு சுவரின் அருகில் சென்று அந்தப் பூனையைச் சுவரின் மேல் விட்டேன்.

கதை இன்னும்கூட முடிந்துவிடவில்லை..

அந்த முட்டாள் பூனை திரும்பவும் சுவற்றிலிருந்து கீழே விழுந்துவிட்டது.. நான் இன்னும் கனவு கண்டுகொண்டிருக்கிறேனா?

இப்போது அந்த நாய்க்கு எந்த தடையும் இல்லை. பூனையைத் தாக்குவதற்காக என்னைப் பூனையிடமிருந்து விலக்கின. இன்னும் ஒரு நொடி தான் நாயால் கடித்துக் குதறப்பட்ட பூனை என் கண் முன்னால் ஒரு நொடி வந்து நின்றது. இவ்வளவு நேரமும் நாயை அடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்த நாயைக் கல் கொண்டு அடித்து விரட்டினேன். நாய் ஓடிப்போனது.

இப்போது பூனையை எடுத்து பாதுகாப்பாக மீண்டும் சுவரின்மேல் விட்டுவிட எண்ணி அருகில் சென்றபோது தான் தெரிந்தது அந்த பூனை முழுமையாக பயத்திலிருந்து இன்னும் நீங்கவில்லை என்று. என் கையைக் கடித்துவிட்டு தப்பி ஓடியது.

இரு துளி இரத்தம்……

காலையில் நல்ல பரிசுதான்….