அந்த அரையிருட்டில் முழங்காலுக்‍கு மேல் ட்ரவுசர் போட்டு செல்லும் உருவத்தை பார்த்ததும் தான் தூக்‍கம் கலைந்தது. எப்பொழுதுமே அழகான பெண்கள் புத்துணர்ச்சியை கொடுக்‍கிறார்கள் என்றால் அதில் மிகையில்லை. அலுவலகம் ஆனாலும் சரி, செகண்ட் ஷோ சினிமாவானாலும் சரி விழிப்படைவதற்கு (அரைத்தூக்‍கத்திலிருந்து) உதவுவது அழகான கலகலப்பான பெண்கள் மட்டுமே. அவள் மட்டும் என் அருகில் உட்காருவாள் என்றால் (2 சீட் தள்ளி உட்கார்ந்தாலும் பரவாயில்லை) இன்று ஒருநாள் மட்டும் ஆத்திகனாக மாறி கடவுளுக்‍கு நன்றி சொல்லத் தயார்........ அந்த பெண்ணிடம் தான் என்ன ஒரு ஆண் தன்மை. நடந்து வரும்போதே என்ன ஒரு தன்னம்பிக்‍கை தெரிகிறது. டெய்லி ஃபிட்நெஸ் ஜிம்முக்‍கு செல்வாள் போல. ஆனால் கால்களில் தான் சற்று முடி அதிகம்.

இந்தக் கால பெண்களுக்‍கு இதுபோன்று கால்களில் முடி இருப்பது சர்வசாதாரணமாக இருக்‍கிறது. அந்தக்‍கால பெண்கள் மஞ்சள் உபயோகித்தார்கள். இந்தக்‍ கால பெண்களுக்‍கு மஞ்சள் என்ற ஒரு பொருள் இருப்பது தெரியுமோ என்னவோ...... சரி கால்களில் முடி இருந்துவிட்டுத்தான் போகட்டுமே.... அதில் என்ன தவறு. அதுவும் ஒரு அழகு தானே. ஆனால், அவள் 6 அடி இருப்பாள் போல. ஒரு வேளை அவளது தந்தை அமிதாப்பச்சனைப் போல உயரமாக இருந்திருக்‍கலாம். அவள் உயரத்திற்கு ஒரு இணையைத் தேடுவது சற்று சிரமம்தான். நான் நினைத்தது போலவே, கடவுளின் திருவுளப்படி அவள் 2 சீட் தள்ளி உட்கார்ந்தாள். அந்த அரையிருட்டில் அவளை உற்று நோக்‍குங்கால்............ அவளது மூக்‍குக்‍கு கீழ் ஏதோ புசுபுசு வென்று இருப்பது போல் .....சற்று உற்றுப் பார்த்ததும் தான் ............. ஐய்ய்ய்யோ..........அது மீசை......... அப்படியென்றால் ......அது ........இதுபோன்று என் மனதிற்குள் நினைத்துப்பார்க்‍க முடிக்‍கவில்லை. ஒரு பேரிடி மனதிற்குள் ஒளி வேகத்தில் புகுந்து வெடித்துச் சிதறியது. அந்த மோசமான, வஞ்சக எண்ணம்பிடித்த, திமிர்பிடித்த ஆசாமி (கடவுள்) எப்பொழுதுமே இப்படித்தான், என்னை மட்டும் சந்தோஷமாக இருக்‍க விடுவதே இல்லை. ...... ச்ச்ச்சீசீய்ய்ய் என்று தோன்றியது.

அரைநிஜாரும், ஆஃப் கை பனியனும் உடுத்திக்‍கொண்டு பொது இடத்தில் வலம்வர பெண்களுக்‍குத்தான் தமிழ்நாட்டில் தடை உண்டு. அவ்வாறு ஒரு பெண் உடை உடுத்திக் கொண்டு வரும் போது ஆபாசமாக உடை உடுத்துகிறாள், கவர்ச்சியாக உடை உடுத்துகிறாள் என்று தடை விதிப்பார்கள். இதே ஒரு ஆண் உடை உடுத்தும்போது, அவன் பிச்சைக்‍காரன் என்றும், வறுமையில் வாடுகிறவன் என்றும் இடித்துரைப்பார்கள். இந்த ஊரில் ஆணுக்‍கு ஒரு நீதி, பெண்ணுக்‍கு ஒரு நீதி.

ஒரு 20 விநாடிகளுக்‍கு அந்த உருவத்தை ஒரு அழகான பெண் என்று நினைத்து விட்டேன். ச்சீ..... என்ன கொடுமை. என்ன கொடூரம்...என்ன பேய்த்தனமான எண்ணம். அவன் ஏன் கவர்ச்சியாக உடையணிந்து வந்திருக்‍கிறான். அவனுக்‍கு என்ன மனதிற்குள் கவர்ச்சி நடிகை என்று நினைப்போ. ராஸ்கல் ஒரு முழுக்‍கால் சட்டை போட்டு வந்தால்தான் என்னவாம். அதென்ன தொடை தெரிய ஒரு ட்ரவுசர். மானங்கெட்டவன். ஆறு அடிக்‍கு வளர்ந்திருக்‍கிறானே ஒழிய அரையணாவுக்‍கு கூட மூளை கிடையாது. இவனையெல்லாம் திருத்தி வளர்க்‍க ஆள் இல்லாமல் போய்விட்டது. நான் ஏன் நாத்திகன் ஆகிப் போனேன் தெரியுமா?..... இதனால்தான். இதுபோன்ற செயல்களால்தான் நான் நாத்திகனாகிப்போனேன். அந்த ஆளுக்‍கு (கடவுள்) இதுவே வேலையாகிப் போய்விட்டது. என்னை வைத்து விளையாடுவதே வேலையாகிப் போய்விட்டது. ஒருவேலை நண்பர்களோடு உட்கார்ந்து என்னைப் பார்த்து சிரித்துக்‍ கொண்டிருப்பானோ. என்னால் பொறுத்துக்‍ கொள்ளவே முடியவில்லை. ஒரு 20 வினாடிகள் பொறுத்துக் கொண்ருந்தால்தான் என்ன. அதற்குள்ளாக அவசரம். என்னை யாரோ குருகுருவென கவனித்துக் கொண்டிருப்பது​போலவே ஒரு பிரம்மை.....

அவன் தியேட்டருக்‍குள் நுழைந்ததிலிருந்தே சத்தமாகத்தான் பேசிக் கொண்டிருந்தான். புதிதாக ஆங்கிலம் வார்த்தைகள் சிலவற்றை தெரிந்து வைத்திருந்தான். தாய் மொழியைத்தவிர பிற மொழியில் பேசும் போது அனைவரும் இப்படித்தான் ஏதோ ஒலிப்பெருக்‍கி முன் நின்று கொண்டு பேசுவதுபோல் பேசுகிறார்கள். ஒரு காதலன் தன் காதலியை பொது இடத்தில் அரையிறுட்டில் முத்தமிடுவதுபோல மென்மையாக பிறருக்‍குத் தெரியாமல் தன் கருத்தை வெளிப்படுத்த தாய்மொழியில் மட்டுமே முடியும். ஆனால் ஆங்கிலம் வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவே, அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவனைப் பொறுத்தவரை ஆங்கிலம் அவனது சாதனை .

எந்த நொடியில் அவனிடம் ஏமாந்து போனோன் வாயில் பபிள்காமை போட்டு ஸ்டைலாக மென்று கொண்டே வந்தானே அப்பொழுதா..... கண்ணகி கூந்தலை அவிழ்த்து வைத்தது போல பரப்பி வளர்த்து வைத்திருந்தானே முடியை அதைப் பார்த்த பொழுதா, ஒற்றைக் காதில் இருட்டில் மின்னும் ஃப்ளோரசென்ட் தோடு போட்டிருந்தானே அதைப் பார்த்த பொழுதா...... இவன் ஏன் ஒரு பெண்ணைப் போல அத்தனை துல்லியமாக தென்பட்டான். அவனுக்‍கு ஏன் ஒரு பெண்ணாக மாறுவதற்கு அவ்வளவு விருப்பம். இவனையெல்லாம் தூங்கிக் கொண்டிருக்‍கும் பொழுது மொட்டை அடித்து விட வேண்டும். அடுத்தநாள் தலையில் கூந்தல் இல்லாததைப் பார்த்து கதறி அழ வேண்டும். அதை நான் பார்த்து ரசிக்‍க வேண்டும். என்னவொரு திமிர். காதில் ஒரு தோடு வேறு..... ஏன் ஜிமிக்‍கி போட்டுக் கொள்ள வேண்டியதுதானே. ராஸ்கல். விட்டால் திருமணத்திற்குப் பின்னர் தாலியை இவன் கட்டிக்‍ கொள்வான் போல. ச்சேய் என்னவொரு கோர அணுபவம். இனி படம் பார்த்தது போலதான். புலம்ப வைத்துவிட்டான்.

அவன் தன் கையில் பெரியதாக ஒரு செல்போனை வைத்திருந்தான். அனைவரும் நினைத்திருக்‍கலாம் அந்த மொபைல்போனை அவன் அனைவருக்‍கும் வெளிச்சம்போட்டு காட்டுகிறான் என்று. அதில் சிறிதளவு உண்மை இருந்தாலும், உண்மை வெளிப்படையாகவே இருந்தது. அவன் அந்த சில்க்‍ஸ்மிதா உடையில் எங்கு கொண்டு போய் அந்த செல்போனை தினிப்பான். அவனது வசதிக்‍குறைவை அவன் உணர்ந்திருப்பான். அடுத்தவர்களால் அதை உணர முடியாமல் போயிருக்‍கலாம்.

2 சீட் தள்ளி அமர்ந்தவன் வந்ததும் வராததுமாக காலைதூக்‍கி எதிர்சீட்டில் போட்டான். அப்பொழுதுதான் திரையில் அந்த விளம்பர அட்டையை காட்டினார்கள்.

"எதிர்சீட்டில் கால் வைக்‍காதீர்கள்....." அவன் வேகமாக இருந்தான். தவறு சுட்டிக்‍காட்டப்படுவதற்கு முன்னரே அதை மீறிவிட்டான்.

என்னவொரு பயனற்ற விளம்பரம், பிரதமருக்‍கு காவிரி தண்ணீர் கேட்டு முதலமைச்சர் கடிதம் எழுதுவது போல. ஏன் சினிமா தியேட்டரில் மட்டும் எதிர்சீட்டில் கால்போட வேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்துதல் சிலருக்‍கு ஏற்படுகிறது. அவர்கள் வெளிச்சத்தில் அவ்வாறு செய்வதில்லை. ஆக்‍கிரமிப்பு உணர்வு மனிதனுக்‍கு ஆதியிலிருந்தே வளர்ந்து வரும் ஒருவித உள்ளுணர்வு. ஒவ்வொரு அறியாமை மிக்‍க மனிதனும் தன்னையறியாமல், தனது ஆக்‍கிரமிப்புத் தன்மையை தன்னால் இயன்ற வழிகளிலெல்லாம் வெளிப்படுத்துகிறான். அதில் திருப்தியும் அடைகிறான். தன்னைச் சுற்றியிருக்‍கும் இடம் தனக்‍கு மட்டுமே சொந்தம். தன்னைத்தவிர வேறு யாருக்‍கும் அதில் உரிமை இல்லை என்ற உள் உந்துதலை அவனால் கட்டுப்படுத்தவே முடிவதில்லை.

சற்று உற்று நோக்‍கினால் அவன் ஏதோ வித்தியாசமாக காற்று வாங்க விரும்புபவன் போல் தெரிந்தது. அவன் ஏதோ கடற்கரையில் காற்று வாங்குவதுபோல படுத்திருந்தான். ஏதோ லாரி டயரில் அடிபட்ட தவளையைப் போல, அதில் ஏதோ ஒரு சுதந்திர உணர்வை அவனால் உணர முடிகிறது போல.

சற்று நேரத்தில் அடுத்த விளம்பர அட்டையில் இந்த விளம்பரத்தைப் போட்டார்கள்.

"எச்சில் துப்பக் கூடாது"

அருகில் அமர்ந்திருந்த அவ(ள்)ன் "பிளிச்ச்ச்ச" என்று எதையோ துப்பினான். அடக்‍கருமமே இவ்வளவு நேரம் அவன் வாயில் வைத்து மென்று கொண்டிருந்தது பபிள்காம் இல்லை. பாக்‍கு என்ற வாசனை வஸ்து. அதை வாயில் வைத்து குதப்பி வைத்திருக்‍கிறான்போல. என்ன கொடூரம். அவனுக்‍கு எப்படி மனசு வருகிறது என்றுதான் புரியவில்லை. கழிவரையையும், சினிமா தியேட்டரையும் உபயோகிப்பதில் அவன் பேதம் பார்ப்பதில்லை போல. பழங்காலத்துக் கிழவிகள் கொட்டைப்பாக்‍கை இடித்து வெத்தலையை மடித்து ஒரு நாளில் சுமார் 18 மணி நேரம் உழைத்து வாயில் போட்டு மென்று வீட்டு வாசலை செந்நிற மண்ணாக மாற்றியிருப்பார்கள். ஒரு மணிதனால் தன் வாழ்நாளில் செய்ய முடியாத அபரிமிதமான செயல் என விஞ்ஞானிகளே வியக்‍கும் வண்ணம் மண்ணின் தன்மையை மாற்றியிருப்பார்கள். அதுபோன்ற கிழவிகளின் தொடர்ச்சியாக, அவர்களை மிஞ்சும் வகையில் மண்ணின் மைந்தன் செந்நிற உமிழ்நீரை பொது இடத்தில் உமிழ்ந்து மரபைக் காப்பாற்றுவதில் வல்லவனாகத் திகழ்கிறான். அவனை ஏன் கொலை செய்யக்‍கூடாது. தகுந்த விளக்‍கம் கொடுக்‍கவும் என எந்த‍ நீதிமன்றத்திலாவது வழக்‍கு தொடரலாம். சிங்கப்பூருக்‍கு சென்று இவ்வாறு துப்ப முடியுமா என்று அவனிடம் பெட் கட்டலாம். (குனிய வைத்து பிரம்பால் அடிப்பார்களாமே....). இல்லையென்றால் இந்தியா சார்பாக எச்சில் துப்பும் போட்டிக்‍கு வெளிநாடு அனுப்பலாம். போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னரே இந்திய பதக்‍கப் பட்டியலில் ஒரு தங்கத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு மனிதனுக்‍குள் இவ்வளவு உமிழ்நீர் எங்கிருந்துதான் வருகிறது. சென்னையில் வாய் கொப்பளிக்‍க தண்ணீர் இல்லாவிட்டாலும் மனிதனுக்‍கு உமிழ் நீர் மட்டும் மானாவாரியாக சுரக்‍கிறது. ஒரு கம்ப்ரசர் மோட்டரில், கிரவுண்ட் வாட்டர் குறைதுவிட்ட நிலையில், பூமியிலிருந்து தண்ணீரை இழுக்‍க முடியாமல் இழுத்து புரிச் புரிச் என்று துப்புமே, அதைப்போல, அவன் தன் அடிவயிற்றிலிருந்து காரி புரிரிரிரிச்ச்ச்ச...... புரிரிரிரிரச்ச்ச்ச் என்று உமிழ்நீரைத் துப்பி தரையை செந்நிறமாக ஆக்‍கிக் கொண்டிருந்தான். உலகிலேயே அவன் எச்சில் துப்பாக்‍கூடாது என்ற நினைக்‍கின்ற ஒரே இடம் அவனது சொந்த வீடாகத்தான் இருக்‍கும்.

திடீரென வெள்ளித்திரையில் ஏற்பட்ட வெளிச்சத்தில் அவனது வாய் சற்று தெளிவாக தெரிந்தது. அது எவ்வாறு இருந்தது எனில்,.......மிக மோசமாக சீர்கேடடைந்த, இனிமேல் சுத்தம் செய்யவே முடியாது என்று கைவிடப்பட்ட, அந்த இடத்தை அப்படியே அணுகுண்டு போட்டு அளித்துவிடலாம் என்று முடிவுக்‍கு வரக்‍கூடிய அளவுக்‍கு மிக மோசமாக சீர்கேடடைந்த ஒரு பொதுக் கழிவறையைப் போல (நிச்சயமாக ஏதேனும் ஒரு பேருந்து நிலையத்தில் காணமுடியும்) காணப்பட்டது. அதில் அவனது பற்கள்...... அது என்ன நிறம் என்று கண்டுபிடிப்பது நிச்சயமாக ஒரு சாதனையாகத்தான் இருக்‍கும். இயற்கை வழங்கிய அற்புதமான பற்களை இவ்வளவு மோசமாக நாசமடையச் செய்வதற்கு மனிதனைத் தவிர வேறு யாராலும் முடியாது. நிச்சயமாக அவன் ஒரு பல் மருத்துவமனைக்‍கு செல்வானேயானால், ஒரு பல் மருத்துவர் உயிரிழக்‍க நேரிடலாம். கடவுளே அவனுக்‍கு இன்னும் ஒரு 3 மணி நேரத்திற்கு கொட்டாவி வந்து விடக்‍கூடாது. அவ்வாறு நேரிடும் பட்சத்தில் அருகில் இருக்‍கும் நால்வர் சினிமா முடிந்த பின்னும் அங்கேயே (மயக்‍கத்தில்) உட்கார்ந்திருக்‍க நேரிடும்.

கடைசி வரை சினிமாவை ரசித்துப் பார்க்‍கவே முடியவில்லை. மனம் கோரத்தையும், வன்முறையையும், அசிங்கத்தையும் கடந்து செல்லவே முயல்கிறது. அவ்வாறு முடியவிலை எனில் அதிலேயே உழல்கிறது. கண்ணை மூடிக்‍கொண்டு எனக்‍கென்ன என்று இருக்‍க ஆயிரம் முறை கற்பிக்‍கப்பட்டாலும், இந்த சமுதாயத்தில் மனஉளைச்சலை ஏற்படுத்தும் பல்வேறு ​விஷயங்கள் கண்முன்னே நடமாடிக் கொண்டுதான் இருக்‍கிறது. என் கண்களுக்‍கும், மனதிற்கும் என்னால் லாடம் போட்டுக் கொள்ள முடியவில்லை. கோபம் வன்முறைக்‍கும், வன்முறை அழிவுக்‍கும் வழிவகுக்‍கும் என்ற விளைவை எண்ணி, சகிப்புத்தன்மையையும், அஹிம்சையையும் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக் கொண்டு அரைகுறையாக கடந்த சென்ற தருணங்களை எண்ணிப் பார்த்தால், சுயபட்சாதாபமும், தோல்விகளின் எச்சங்களுமே எண்ணம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.

அன்று இரவு எண் எண்ணங்களுக்‍கு லாடம் போட்டுக் கொண்டு தூங்கினேன். விழித்த போது (கனவில்) ஏனோ சிங்கப்பூரில் இருப்பதுபோல் தோன்றியது. மனதின் இயல்பு அதன் ஆழ்படிமங்களிலிருந்து இயல்பாக வெடித்துக் கிளம்பும் போது, நான் என்னதான் செய்வது. எனது ஆதங்கங்கள் என்னை தூக்‍கத்திலும் நிம்மதியாக இருக்‍க விடப் போவதில்லை என்கிறபோது, என் மனதில் ஆழ்படிமங்கள் என்னை இயங்கச்செய்து கொண்டிருக்‍கும்போது, தன்னிச்சையாக காந்தியமும், அஹிம்சையும், வன்முறைக்‍கு எதிரான எண்ணங்களும் என்னை எங்கு கொண்டு செல்லப் போகின்றன. லாடங்கள் எப்பொழுதும் தற்காலிக தற்காப்பு மட்டுமே. சுயபாதுகாப்புக்‍கு மட்டுமே. அது நிறைவைத் தருவதில்லை.