வீட்டிற்குள் நுழைந்தது முதற்கொண்டே அவள் திட்டிக் கொண்டுதான் இருந்தாள். அவளது கழுத்தில் மஞ்சள் நிற கயிற்றை கட்டிய நாள் முதல் எனக்கு அனுபவம் உண்டென்றாலும் வரவர அவள் யாரைத் திட்டுகிறாள், எதற்காகத் திட்டுகிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது இயலாத காரியமாகவே போய்விட்டது. அவள் யாரைத் திட்டுகிறாள் என்பதைக் கண்டுபிடிக்க குறைந்தபட்சம் முக்கால் மணி நேரம் ஆகும். அவளது 90 சதவீத இலக்கு எப்போதும் நான்தான் என்றாலும், சில சமயம் பக்கத்து வீட்டு பெண்மணி, காய்கறி கடைக்காரர், கீரை விற்கும் பொன்னம்மா, கேஸ் சிலிண்டர் போடுபவர் என பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த முறை மாட்டிக் கொண்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நபர் பூ விற்கும் பெண்மணியாகத்தான் இருக்கும் என்றே கருதினேன். அந்த பெண்மணி மட்டும் தினசரி கூடையில் எடுத்து வந்த பூவை விற்பனை செய்யவில்லை என்றால் தினசரி ஒன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று பூ வாங்கி வர வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்படுவேன் என்பதால், அந்தப் பெண்மணியின் உடல்நலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு கடவுளிடம் தினமும் வேண்டிக் கொள்கிறேன். ஆனால் இவளுக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படும் அளவுக்கு அந்த பெண்மணி அப்படி என்னதான் செய்தார் என்பதை என்னால் சற்றும் கிரகிக்க முடியவில்லை.

இரவு 8:15 மணிக்கு அவளது கோபத்திற்கான விடை எனக்கு தெரியவந்தது.

அந்தப் பெண்மணி பூ விற்கும் பெண்மணிதான்.

அவள் பெயர் கண்ணம்மாதான்.

அவர் நடிக்கும் சீரியல் பெயர் 'குல விளக்கு"

--------------------------

அவள் நிஜ கண்ணம்மா மீதும், பூ விற்கும் கண்ணம்மா மீதும் பேதம் பார்க்காமல் கோபம் கொள்வது கருணையற்ற செயல். சட்டப்படி அது ஒரு கிரிமினல் குற்றம். இரண்டரை மணி நேரமாக என்னை தவிக்கச் செய்தது ஒரு பாதகச் செயல். எதிர்காலத்தைப் பற்றி ஒரு நிச்சயமற்ற தன்மை (பூ, சிலிண்டர், காய்கறி உள்ளிட்டவற்றை வாங்க கிலோமீட்டர் கணக்கில் தினசரி அலைவேனா? மாட்டேனா?...) நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, நான் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டேன் என்று சொல்வது மடத்தனம் என்பதால், இனி அந்த வாசகத்தை உபயோகிக்கக் கூடாது என பிரதிக்ஞை எடுத்துக் கொள்வது உசிதம் எனப்பட்டதாலும் அவ்வாறு செய்தேன்.

--------------------------------------------

குடிகாரக் கணவன் அப்பாவி மனைவியை அடித்து நொறுக்கினால் (சீரியலில்) கோபமாக அனல் கக்கும் பார்வையுடன் திரும்பிப் பார்க்கிறாள். வீரமுள்ள பாரதி கண்ட புதுமைப்பெண் குடிகாரக் கணவனை கன்ன‌ம் சிவக்க 'பளார்........" என அடித்தால் சிரித்து மகிழ்கிறாள்.

'எனக்குத்தான் குடிப்பழக்கம் இல்லையே' என்று பட்டும் படாமலும், தயக்கத்துடனும், தைரியத்துடனும் கூறினால், வரும் காலங்களில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யுமாறு கையை நீட்டுகிறாள். சரி என அவள் மனத்திருப்திக்காக சத்தியம் செய்து கொடுத்தால்,

'ஒரு வேளை சத்தியத்தை மீறிக் குடித்தால் சீரியிலில் வரும் கதாநாயகனுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் நேரும்' என்று பயமுறுத்துகிறாள்.

அந்த கதாநாயகன் சென்ற வாரம் தான் பிரேக் பிடிக்காத லாரியில் அடிபட்டு ஐசியு வில் இருக்கின்றான்.

2 நாட்களுக்கு முன் அந்த கோபி தனது மனைவிக்கு 2 பவுன் தங்கத்தில் செயின் வாங்கிக் கொடுத்திருக்கிறான் (சீரியல் பெயர் அந்திமழையோ, நாதஸ்வரமோ) உடனே இவள் 90 டிகிரி முகத்தைத் திருப்பி கோபமாகப் பார்க்கிறாள். இதயம் வேறு வினாடிக்கு 2 முறை துடிக்கிறது அவளுக்கு. ஒரு பவுன் தங்கத்தின் விலை 23 ஆயிரம் ரூபாய் என்று எப்பொழுது ஆயிற்று.... கடவுளே...

நான் ஏன் ஒரு குடிகார, கோபக்கார, முரட்டுத்தனமான கணவனாக இல்லை. எல்லா வகையான குணங்களையும் பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிக்கின்றது. நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க முடிந்திருந்தால் எல்லாம் சரியாகப் போய்விடும். நினைத்ததை வாங்கி விட முடியும். எல்லாம் நிறைவடைந்துவிடும். பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

இன்னும் கொஞ்சம் குறைவான சம்பாத்தியம் இருந்திருந்தால், அரைகுரையாகக் கூட ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியாது. அதனால் அனைத்து ஆசைகளும் அணை போடப்பட்டிருக்கும். வாங்க முடிந்ததை பற்றி மட்டுமே யோசித்திருப்போம். ஆனால் இந்த இரண்டும்கெட்டான் நிலை இருக்கிறதே அது ஒரு சாபம். மதில்மேல் பூனைக்கு என்றுமே நிம்மதியில்லை. அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாக மனம் பெண்டுலம் போல் ஊசலாடிக் கொண்டே இருக்கும்.

லட்சியங்கள் எல்லாம் உயிர் வாழ்வது நடுத்தர வர்க்கத்து மக்களால்தான். அவர்கள் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கால்களில் கொப்பளம் ஏற்படும் வரை. அவர்களின் மூச்சிரைப்பே அவர்களுக்கு சங்கீதம். ஆசைகள் உயிர்ப்போடு இருக்க இத்தகைய மூச்சிரைப்புகள் தேவை.

அன்று ஒருநாள் மனைவிக்கு கால் அமுக்கிவிடும் கணவனை (சீரியலில்) பார்த்து விட்டு அவள் கேட்டாள்,

'உலகத்துல எத்தனையோ ஆண்கள் இருக்கும்போது நான் ஏங்க உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன்'

---------------------------------------------------

காய்கறிக் கடைக்காரர் மாரிமுத்து (பணக்காரர் ப்ளஸ் வீட்டு ஓனர்) இரவு 11:30 மணி வரை தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரன் படுத்து தூங்கிக் கொண்டிருப்பான் என்கிற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத நயவஞ்சக நம்பியாரை.....

'ஏன் சார் சீரியல் பார்த்து கெட்டுப் போகிறீர்கள்?'

என்று மரியாதையாகக் கேட்டால், அடுத்தநாள் காய்கறி வாங்க வரும் ஒரு நூறு பெண்களுக்காவது கதை சொல்ல வேண்டும் என்று கண்ணில் கடமையுணர்ச்சி பொங்கி வழிய கூறுகிறார். இப்பொழுதுதான் புரிகிறது, சென்னையில் ஒரு அடுக்குமாடி கட்டடத்தை, ஒரு காய்கறி வியாபாரியால் எப்படி கட்ட முடிந்தது என்று. என் அப்பா அப்பொழுதே கூறினார், 'மளிகைக்கடை வைத்துத் தருகிறேன். நல்ல வருமானம் கிடைக்கும்' என்று. ஒரு பக்கமாக சிங்கப்பல் தெரிய ஏளனமாக சிரித்து விட்டு சென்னைக்கு கிளம்பியதை நினைத்துப் பார்க்கும் பொழுது, என்மேல் ஏற்படும் எரிச்சலை என்னாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கர்ப்பிணிப் பெண் விஜயா வழுக்கி விழுந்த கதையைக் (சீரியலில்) கூறி 2 கிலோ தக்காளியில் முக்கால் கிலோவை குறைத்து விடுகிறார். சீதாவுக்கு அவள் கணவன் துரோகம் செய்ததைக் கூறி (சீரியலில்) கிலோ கணக்கில் காசு பார்த்து விடுகிறார்.

நாம் நேர்மையாகத்தானே வியாபாரம் செய்கிறோம், நமது கடையில் ஏன் பெண்கள் கூட்டத்தைக் காணவில்லை என அருகில் உள்ள கடைக்காரர்கள் எல்லாம் குழம்பித் தவிக்கிறார்கள். மாரிமுத்து அண்ணாச்சியைப் பொருத்தவரை சீரியல் என்பது ஒரு வித வியாபாரத் தந்திரம்.

அன்று ஒருநாள் சூம்பிப்போன முருங்கைக்காயால் வைக்கப்பட்டிருந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது என் மனைவியிடம் கேட்டேன்.

'இந்த முருங்கைக்காய் மாரிமுத்து அண்ணாச்சி கடையில் வாங்குனதா?'

'எப்படி கண்டுபிடிச்சீங்க'

'இந்த வாரம்தான் பாக்கியராஜ் வாரமாச்சே'

------------------------------------------------------------

அன்று ஒருநாள் அலுவலகம் முடித்துவிட்டு அல்வாவும், பூவுமாக வீட்டிற்குள் நுழையும்போது, வாசல்படியை மறைத்தாற்போன்று அமர்ந்திருந்த 5 டபிள்யு. டபிள்யு. எஃப்...... பெண்கள், பொன்னம்பலம், அப்பாவி ஹீரோவை முறைத்துப் பார்ப்பது போல், முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு என்னைத் திரும்பிப் பார்க்கிறார்கள். அவர்கள் அவ்வளவு கோபப்படும் அளவுக்கு அப்படி என்னதான் தவறு செய்துவிட்டேன்? ஏதோ, முக்கிய அரசியல் மாநாட்டில் தீவிரவாதி நுழைந்துவிட்டதுபோல் அவர்களுக்கிடையில் நான் புகுந்துவிட்டது போல் முறைத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் தரையில் அமர்ந்திருக்கும் ஸ்டைலைப் பார்த்தால் எழுந்து செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்வார்கள் போல. எழுந்து செல்லும் போது அந்த சுமார் 90 கிலோ எடை கொண்ட மாமி கூறினார்....

'உன்னோட புருஷ‌னையும் அந்த செல்வத்தை மாதிரி விட்டிராதடி புவனா...... ஒழுங்கா பாத்துக்கோ'

ஐயோ கடவுளே நான் வீட்டிற்குள் நுழையும்போதே கவனித்திருந்தேன். அவர்கள் திருமதி செல்வம் சீரியலைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த செல்வம் அப்படி என்னதான் செய்து தொலைத்தானோ எனத் தெரியாமல் விழித்தேன்.

பரீட்சை ஹாலில் சரியாக படிக்காத மாணவன் கைகளைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருப்பதை போல் அமர்ந்திருந்தேன். நண்பர்கள்................ நண்பர்கள் என்று எதற்குத்தான் இருக்கிறார்கள். இதுபோன்ற ஆபத்து சமயங்களில் உதவுவதற்குத்தானே. காக்கும் கடவுள் கணபதியை வணங்கிவிட்டு, நண்பன் கணேசனுக்கு ஃபோன் செய்தபோது, அவன் சற்று பதைபதைப்புடன் காணப்பட்டான்.

'டேய் கணேஷ்! உடனடியா எனக்கு திருமதி செல்வம் சிரியலோட கதையை சொல்லுடா'

அதற்கு அவன் கேட்டான்.

'உனக்கு கார்த்திகை பெண்கள் சீரியலோட கதை தெரியுமாடா?'

------------------------------------

எல்லா பெண்களும், கனவிலும், நிஜத்திலும், தொலைக்காட்சியிலும்.... என பல்வேறு வாழ்க்கை வாழ்கிறார்கள். அவள் தற்போது எந்த உலகத்தில் இருக்கிறாள் என்பதை நான் துல்லியமாக அறிந்து கொள்ளும் பட்சத்தில் நானும் சிறிது வாழ்ந்து கொள்ள முடிகிறது. அவளது நிகழ்கால உலகம் எனக்குப் புரியவில்லை என்றால் என் தோல்வியை என் கண் முன்னால் என்னால் பார்க்க முடியும். இதுதான் அவளை புரிந்து கொள்வது போல. அவளிடம் சண்டை போட்டு என்றுமே நான் ஜெயித்ததில்லை.

எனக்கு இப்பொழுது புதுமாடல் புடவைகளைப் பற்றித் தெரியும், புதிய திரைப்படத்திற்கு இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்யத் தெரியும். ஒரு பவுன் தங்கம் 23 ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிட்டது என்று தெரியும், முக்கியமாக......

சுமார் 90 கிலோ எடை கொண்ட மாமியை விட, மாரிமுத்து அண்ணாச்சியைவிட சீரியலைப் பற்றி மிக நன்றாகத் தெரியும்.

- சூர்யா