அரை மயக்கத்துடன் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரை போலிஸ் நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் கொண்டு வந்து போட்டனர். சிறிது சிறிதாக அவர் நினைவுகள் திரும்பத் தொடங்கின. வலியில் லேசாக முனகினார். கண்களை மெல்ல திறந்து பார்த்தார்.

தான் எங்கு உள்ளோம் என்பதை அவதானிப்பதாக அந்தப் பார்வை இருந்தது. பத்தடி இடைவெளியில் ஆங்காங்கே சுவரைப் பார்த்த வண்ணம் சிலர் அமர்த்தப்பட்டு இருந்தனர். பயம், பரிதாபம், கருணையுடனும் மற்றும் சில கேள்விகளுடனும் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருந்தனர். இவர் மீது அவர்கள் ஒரக்கண் பார்வைகளை வீசுவதைக் கவனித்தார்.

torture_560

எதிரியிடம் சிக்கியுள்ள அவர் தனது குண்டடிப்பட்ட ரணத்தின் வலியையும் மீறி தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றார். நடந்தவைகளை மனக்கண்ணில் வரிசைப்படுத்த முயன்றார். அப்படி வரிசைப்படுத்தி ஏதோ ஒரு புள்ளியில் நிலை நிறுத்தினால்தான் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அவரின் அறிவு அவருக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தது.

ஒரே மாவட்டத்தில் மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தமிழக அரசு அறிவித்தது. அடுத்த நிமிடம் அந்த மாவட்ட அரசு இயந்திரங்கள் விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றும் வேலையில் மளமளவென்று இறங்கியது. பெரும்பண முதலைகளுக்குத் தொண்டு செய்வதில் எப்போதும் காவல் துறைக்கு ஆர்வம் அதிகம்.

உழவர்கள் இளித்தவாயர்களோ, ஏமாளிகளோ அல்லர். அதிருப்தியில் தொடங்கி, முனகலாய் விரிந்தது. முழக்கமாய் மாறி போராட்டமாய் முகிழ்ந்தது. புரட்சியை நிகழ்ச்சி நிரலில் கொண்டுள்ள கட்சி வழி காட்டியதன் பேரில் அந்தப் போராட்டங்களில் அவர் பங்கேற்கப் பணிக்கப்பட்டார். போராட்ட இசையின் நாடி நரம்புகளை நடைமுறையில் கண்டார். அவர்களுள் ஒருவராக வாழ்ந்து உணர்ந்து கொண்டார். அவர்களை அரசியல்மயப்படுத்தி சில கட்சிக் கருக்குழுக்களை கட்டி அமைத்தார்.

போராட்டங்கள் அலை அலையாக முன்னேறியது. ஆளும் கட்சிகளும், அரசாங்கமும், பெரும் முதலாளிகளும் அரண்டனர். போராட்டத்தன்மைகள், நிலைமைகள் உளவுதுறை மூலம் இனங்கண்டு கொள்ளப்பட்டன. காவல்துறை முடக்கி விடப்பட்டன். பொய்வழக்குகள் புனையப்பட்டன. தீவிரவாதப் பூச்சாண்டி பரப்பப்பட்டது. பெரும் ஊடகங்கள் நாலுகால் பாய்ச்சலில் நாலாப்பக்கமும் அலைந்து திரிந்து செய்திகளை உருவாக்கின.

போராட்டத்தை கருவிலேயே சிதைக்க சதிகளும், சித்ரவதைகளும் ஆரம்பித்தன. கைதுகள் அரங்கேறின. ஒவ்வொருவராய்த் தொடர்ந்து அப்படி கைது செய்யப்பட்டவர்கள் அந்த அறையில் ஆங்காங்கே குந்தி வைக்கப்பட்டு இருந்தனர். ஒரிரு நாட்கள் காவல் துறையின் ‘விசாரணைகள்’ பலன் தந்தன. அறிவியல் முறைகளை விட அடிஉதை முறைகள்தான் குற்றவியல் விசாரணைகளாக இருந்தன. தற்காலிக வெற்றி அவர்களுக்கு அதில் கிடைத்தது. போராட்டங்களை வழி நடத்தியக் கட்சி கருக்குழுக்களுக்கு வழிகாட்டிய தோழரை மடக்கிப் பிடித்தனர். ஒரு போலிஸ்காரன் புகழுக்கு ஆசைப்பட்டு அவரை துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்தான்.

தன்னை மாறி மாறி கவனித்துக் கொண்டிருந்த தோழர்களின் பார்வைகளின் பொருளை தோழரால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. தாய்க்குத் தெரியாதா சேய்களின் பார்வைகள்!

எதிரிக்கு தானொரு “மதிப்பு மிக்க பொருள்” என்பதை தோழர் உணர்ந்து கொண்டார். இன்னும் அதனை மதிப்பு மிக்கதாக தன் கடமைகளை எதிரி செய்வான் என்றும் அவருக்குப் புரிந்தது.

ஆனால் அவர் காவல்துறைக்குப் பயன்படாத, பயன்படுத்தமுடியாத எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் மதிப்புமிக்க பொருள் என்பதை அடுத்த அடுத்த நாட்களில் அவர்களுக்கு நிரூபித்தார்.

அவர் பெயரைக் கூட அவர் வாயால் அவர்களால் சொல்ல வைக்க முடியவில்லை.

அவருடன் பிடிப்பட்டுள்ள தோழர்கள் சிலர்தான் வதையின் வலி தாங்க முடியாமல் தோழரின் பெயரையும், அவர் மேலிடப் பொறுப்பாளர் என்னும் உண்மையைக் கூறி இருந்தார்கள்.

அது கூட அவரின் உண்மையான பெயர் கிடையாது. அந்த கட்சி குழு தோழர்கள் அவரை செல்லமாக அழைக்கும் பெயரைத்தான் அவர்களால் அறிய முடிந்தது.

“வாத்தியார்” என்பது தான் அந்த பெயர்!

அவரின் அரசியல், பொருளாதாரம் பற்றிய வகுப்புகள் தெளிவாக, எளிதாக, செறிவாக இருக்கும். சரமாய்க் கோர்க்கப்பட்ட வாசமுள்ள மாலையைப் போல் இருக்கும். அதில் ஆங்காங்கே குட்டி குட்டி கதைகள் என்னும் வண்ண ரோச மலர்களும் பூத்துக் குலுங்கும். அவரை அனைவரும் “சாரு”, “வாத்தியார்” என்று அழைக்கத் தொடங்கி, அதுவே அவர் இயல்பான பெயர் போல் மாறி விட்டது என்பது தான் இந்த நான்கு நாட்கள் விசாரணையில் போலிஸ்காரர்கள் தெரிந்து கொண்ட ஒரே ஒரு உண்மை.

இந்த நாட்டில் காவல்துறையினருக்கு என்று வரையறுக்கப்பட்ட மிகத் தெளிவானச் சட்டங்கள், நீதி வழிமுறைகள் உண்டு. குறைந்தது பத்து கோடிகளுக்குக் கீழ் திருடுபவர்கள் பொருளாதாரக் குற்றவாளிகள் என்ற வரையரைக்குள் வந்தார்கள். நாலைந்து கொலைகள் செய்பவர்கள் தான் கொலைகாரர்கள் என்ற வரையறைக்குள் வருவார்கள். 48 உழவர்களை தீ வைத்தக் கொன்ற கோபால கிருஷ்ண நாயுடும், ஆயிரக்கணக்கான பேரை போபால் விசவாயுக் கொலைகாரன் ஆண்டர்சனும், 100, 200, 500, 1000 என்று கோடிகள் கொள்ளை அடிப்பவர்களும் குற்றவாளிகள் என்ற வரையறைக்குள் வர மாட்டார்கள்.

இவ்வாறான சார்பு நீதிபரிபாலனையின்படி, குற்றச்செயலில் ஈடுபாடுபவர்களை போலிஸ் லாக்கப்பில் வைத்து நாலு காட்டு காட்டினால் உண்மையைக் கக்கி விடுவார்கள். ஒருசில குற்றவாளிகள் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கமாட்டார்கள்.

காவல் துறையினர் மூளையைக் கசக்கிப் பிழிந்து சிலபல சிறப்பு விசாரணை முறைகளை வகுத்து வைத்து இருந்தார்கள்.

மனிதனை மல்லாக்காக படுக்கப்போட்டு தொடையில் குண்டுக்கட்டாக அமர்ந்து கொண்டு லட்டி உடையும் அளவிற்கு மாட்டை அடிப்பது போல் அடிக்கும் லாடம் கட்டும் முறை.

சுவரின் உச்சியில் இணைக்கப்பட்ட கிணறு ராட்டின உருளை மூலமாக கயிற்றில் தலைகீழாக மனிதனை பல மணி நேரம் கட்டி வைக்கும் ராட்டினம் இழுத்தல் முறை.

இன்னும் உருளை உருட்டுதல், பன்றி கட்டுதல் போன்ற சித்ரவதை முறைகளை உளவியல், மானுடவியல், மருத்துவம் இன்னும் பிற துறைகளின் அறிவியல் வளர்ச்சிகளை மிகவும் அதிநுட்பமாகப் பயன்படுத்தி தங்கள் மேதைமையை சில காவல்துறை அதிகாரிகள் நிரூபித்து உள்ளனர். அதற்காக அவர்களுக்கு அரசாங்கங்கள் சிறப்பு வெகுமதிகள், பட்டங்கள், பதவிகளை அளித்தும் உள்ளது. இவைகளை அமுல்படுத்தினால் உண்மைகளைக் கக்காத குற்றவாளிகள் மிகவும் அரிது.

இதற்கும் மசியாத ஒரு சிலர் உண்டு. ஆசை வார்த்தைகளை, சலுகைகளை அளித்து அவர்களை காவல்துறையினர் பேச வைத்து விடுவர். இப்படி ஒரு தடவை பேச வாய் திறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க காவல் துறையின் வாயாகவே, வாலாகவே மாற்றப்பட்டு விடுவார்கள். அவர்கள் ‘காவல்துறை நண்பர்கள்’ என்ற சிறப்புப் பெயரில் நாறிப் போய் சின்னாபின்னமாகி சீரழிவார்கள்.

ஆனால், வாத்தியாரை இந்த முறைகள் எதுவும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனது உடலின் மீதான வன்முறைகளுக்கு, உணர்வுகளின் மீதான கொடும் தாக்குதல்களுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. பற்று அற்ற ஞானியாக அவர் அவைகளை எதிர்கொண்டார் என்பது அவரை, அவரின் அறச்சீற்றத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். உண்மையான கம்யூனிஸ்டாக அவர் இருந்தார். அவரது ஐம்புலன்களும், ஆன்மாவும், அறிவும் இலட்சியவாதத்தால் நிரப்பப்பட்டு தளும்பாமல் நிறை குடமாய்க் கிடந்தன.

வாத்தியார் இப்படி பற்றற்று இருப்பதை போலிஸ் அதிகாரிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

“இவனை நாயை அடக்கிறது போல அடிங்கடா…” என்று கோபம் தலைகேறி ஒருவன் கத்தினான். அடித்த நீண்ட லத்திக் கம்புகள் முறிந்தன. உதைத்த பூட்ஸ் கால்கள் ஓய்ந்தன. சரிந்து விழுந்த அவர் தாயின் கருவறைக்குள் முடங்கி இருப்பது போல் உடம்பை குறுக்கிக் கிடந்தார். அங்காங்கே வீங்கியும், இரத்த விளாறுகளாவும் அந்த உடல் கிடந்தது.

“மீண்டும் கொஞ்சம் நேரம் கழித்து வருவோம்… கேட்கிற கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லணும்… இல்லாட்டி சொல்ல வைப்போம்...”

இந்த வசனத்தை நீட்டியும், முழக்கியும், கோபமாகவும், எரிச்சலாகவும், வன்மமாகவும், நைச்சியமாகவும், கர்ண கொடூரமாகவும் நான்கு நாட்களாக உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் மாற்றி மாற்றி வந்து சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் தோழர் ஒரே மாதிரியாய் இருந்தார். எந்தக் கேள்விக்கும் எந்தப் பதிலையும் அவர் கூறவில்லை!

சிறிது நேரத்தில் “தண்ணீர்………..தண்ணீர்……” என்று வாத்தியார் முனகினார்.

அவருக்கு காவலாக இருந்த ஏட்டு டம்ளரில் நீரைக் கொண்டு வந்து நீட்டினார். கைவிரல்கள் வீங்கிக் கிடந்த‌தால் டம்ளரை சரியாகப் பிடிக்க முடியாமல் நழுவி தண்ணீர் கொட்டிவிட்டது. அந்த ஏட்டு மீண்டும் தண்ணீர் கொண்டு வ்ந்து கொடுத்தார்.

நீரைப் பருகிய வாத்தியார் தனது பார்வைகளால் நன்றியைத் தெரிவித்தார். ஒளி உமிமும் அந்த விழிகளின் அர்த்தம் அந்த ஏட்டிற்குப் புரிந்தது போலும்….

“வாத்தியார்…… ஏங்க இப்படி சித்ரவதைப்படுறீங்க… தெரிந்த ஏதாவது ஒன்னு ரெண்டை சொல்லுங்க…. ஏதாவது பேசுங்க… பொய்யையாவது சொல்லுங்க”

அந்த போலிஸ்காரர் அப்படி சொன்னது அன்பினாலா அல்லது அதுவும் ஏதாவது சதியா என்று புரியாமல் தோழர் அவரை நோக்கினார். வாத்தியார் இந்த நான்கு நாட்களில் அதிக நேரம் இந்த ஏட்டு பாராவில் தான் கண்காணிக்கப்பட்டு இருந்தார். மற்ற போலிஸ்காரர்களும் பராவில் இருந்தார்கள்.

புதியதாக வந்த மைய அரசின் உளவுப் பிரிவு அதிகாரி தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகளின் முகங்கள் கடுகடுவென இறுகிக் கிடந்தன. வாத்தியார் கைதுக்குப் பின்பு புரட்சிகரக் கட்சியின் மாநில தலைமைக் குழுவை நெருங்கி விடலாம் என்ற அவர்களின் எண்ணம் தூள் தூளாகிப் போனது. அவர்களது விசாரணை, வதைகளின் மூலம் அவர் பெயரை-அதுவும் அவரின் பட்டப் பெயரை மட்டும்- தான் அறிய முடிந்துள்ளது. ஆத்திரத்தில் குமைந்து கொண்டிருந்தனர்.

“அவனை என்கவுண்டரில் போட்டு தள்ளிடலாமா……” என்று ஒரு அதிகாரி திருவாய் மலர்ந்தார்.

“நாலு பேரை போட்டு தள்ளிடனும்… ஹீரோ போஸ் கொடுக்கனும்… மெடல் குத்திக்கனும். இப்படி அலையாமா.. அவனை உருப்படியா விசாரிச்சு பேச வைங்க”

“மக்கள் போராடுவதை நாம தடுக்க முடியாது… தலைமையும் அமைப்பும் இல்லாமல் பண்ண நம்மால முடியும்… அதுக்குத்தான் நமக்கு சம்பளம் தராங்க”

பெரிய உளவு அதிகாரி வர்க்க அரசியல் பேசினார். ஆனால் வேறு வகையாகப் பேசினார். தாங்கள் எப்படி யாருக்காக குலைக்க வேண்டும், யாரைக் கடித்து குதற வேண்டும் என்று விளக்க முயன்றார்.

“சார்… அவன் எங்க வாயை திறக்கிறான். இத்தனை டார்ச்சருக்குப் பிறகும் அவன் கதறவில்லை… அவன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை”

“ஈ..ஸ்ட்..”

ஆமோதிப்பது போன்று ஒருவரை ஒருவர் பார்த்து மண்டையை மண்டையை ஆட்டினார்கள்.

“மற்றவர்களை 124 செக்சன் போட்டு நாளை கோர்ட்டிற்கு கொண்டு போங்க... வாத்தியாரை என்ன பண்ணறதுன்னு சொல்றேன்..”

“நாம கொடுக்கிற டிரீட்மெண்டில் அவன் அலறி அழுது கண்ணீர் வடிக்கணும்… உண்மையைக் கக்கனும்” என்ற சபத்துடன் கலைந்தனர்.

நடுநிசிப் பேய்கள் கும்பலாய் அந்த அறைக்குள் நுழைந்தன. வட்டமாய் ஆங்காங்கே நின்று கொண்டன.

“வாத்தியாரை தூக்கி ஸ்டூலில் உட்கார வையிங்க” என்றார் அந்த அதிகாரி.

ஏட்டும், இன்னொரு போலிசும் தோழரைத் தூக்கி ஸ்டுலில் உட்கார வைத்தனர். தானாக எழுந்து உட்காரும் நிலையில் அவர் இல்லை. அவருக்கு நெருக்கமாய் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவாறு அந்த அதிகாரி இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

“வாத்தியாருக்கு டீ கொடுங்கப்பா”

பீங்கான் கோப்பையில் சூடான தேநீர் வந்ததது. வீங்கிய நடுங்கும் கைகளில் அதை ஆசையுடன் வாங்கிப் பருகினார். பீங்கானின் சூடு வீங்கிய விரல்களுக்கு ஒத்தடமாய் ஆறுதல் அளித்தது. சுடச் சுட ஸ்டிராங் தேநீர் அருந்துவது வாத்தியாருக்குப் பிடித்த பழக்கத்தில் ஒன்றாகும்.

அவரின் ஆவலைப் பார்த்தவாறு தனது செயலை ஆரம்பித்தார்.

“கேட்கின்ற கேள்விக்கெல்லாம் ஒழுங்கா பதில் சொல்லி விட்டால்.. ஏதோ ஒரு கேசைப் போட்டு உள்ள தள்ளிடுவோம். இல்லாட்டி எல்லா வழக்குகளையும் உம்மேல போட்டு வாழ்நாள் முழுக்க செயிலை விட்டு வராம செய்துடுவோம்” என்ற பீடிகை மிரட்டலுடன் ஆரம்பித்தார்.

இதைக் கேட்ட தோழர் தேநீர் அருந்துவதை நிறுத்தி விட்டு தலையை நிமிர்ந்து அவரைக் கவனித்தார். அந்தப் பார்வையில் கம்பீரம் மட்டுமல்ல அலட்சியமும் பொதிந்து கிடந்தது. ஒருகணம் அந்த அதிகாரி துணுக்குற்றான்.

அவன் மனம் கானகத்து கழுதைப் புலியாய் மாறி ஊளையிட்டது. எரிச்சலுடன் கண் அசைத்தார். இறைச்சிக்காக பன்றியை பெரிய கோணியில் போட்டுக் கட்டி நையப்புடைத்துச் சாகடிப்பார்கள். ஊவ்….ஊவ்..ஊவ் என்று அந்தப் பன்றி ஊளையிட்டு உயிர் போகும் வலியில் அலறித் துடித்து கதறுவது அரை கிலோ மீட்டர் அப்பாலும் கேட்கும். அப்படியானதொரு வன்மத்துடன் வாத்தியாரை அடித்துக் காயப்படுத்தினார்கள். அவரிடமிருந்து முனகல்கள் மட்டும் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

“இவனைத் தூக்கி டேபிளிலில் கிடத்துங்கடா.. எப்படி துடிக்காமல்… கண்ணீர் விடாமல் போகிறானெனப் பார்க்கிறேன்..” என்று கெக்கலியிட்டான்.

வாத்தியாரை தூக்கி டேபிளில் வீசினார்கள். மல்லாக்காக காலிலும், கைகளிலும், மார்பிலும் தின்று கொழுத்த பிசாசுகள் ஏறி அமர்ந்து கொண்டன.

உயிர்நிலையைப் பிடித்து ஒருவன் கசக்கினான். கொடும்வலி மின்னலாய் உடல் முழுவது கொடி கொடியாய் நாடி நரம்புகள் முழுவதும் பரவியது.

முழு நீளப் பென்சிலை தோழர் கண்ணில் மற்றொருவன் காட்டினான். பென்சில் முனை மிகவும் கூராய் சீவப்பட்டு இருந்தது. தோழரின் தொடை அருகில் கொண்டு சென்றான். அவனையும் மீறி அவன் கை சிலிர்த்தது. தொடையில் ஏற்பட்ட குண்டு காயத்திற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் செய்யாததால் அந்த இடம் சீழ் பிடித்து சிதைந்து கிடந்த‌து. உயிர் வலியில் துடிக்கும் இரையை வீழ்த்தி விட்டதைக் கண்டு சாகசத்துடன் சிரிக்கும் கழுதைப்புலியாய் அந்த அதிகாரி சிரித்தான். கூரான பென்சிலை திருகாணியைப் போன்று அந்த துளையினுள் திருகினான். சர்ர்….ர்ர்ர் வலி நாடி நரம்புகளில் பரவி உடல் முழுதும் சிலிர்த்து துடித்தது.

ஆழ்மனதின் அடித்தொண்டையின் ஆழத்தில் இருந்து “புரட்சி வெல்க” என்று குரல் ஓங்காரமாய் எழும்பி தேய்ந்தது. ஆனாலும் புரட்சி வெல்க என்ற அந்த குரல் ஒராயிரமாய் அவன் மனம், அறிவு, நாடிநரம்புகள், தசை, செல்கள் என்று எங்கும் எதிரொலித்தது.

படீரென்று அந்த இடம் முழுவதும் பிரகாசமாய் ஒளிர்ந்தது. தான் சின்னக் குழந்தையாய் தனது தாயின் மடியில் குதூகலமாய் மகிழ்ந்து கொண்டிருப்பதை தோழர் கவனித்துக் கொண்டிருந்தார். தாயும் சேயும் கொஞ்சிக் குலாவும் ஆனந்தம் முழுமையாய் அங்குக் கொட்டிக் கிடந்தது. பசியென்று குழந்தை அழுது சிணுங்கியது. அம்மா கையை நீட்டினாள். வானில் ஒளிர்ந்து கொண்டிருந்த முழுவட்டமான வெண்ணிலாவை பறித்து எடுத்தாள். மிக லாவகமாய் அதைக் குழைத்து சின்ன வெள்ளிக் கிண்ணமாக்கினாள். கண்சிமிட்டிக் கொண்டிருந்த விண்மீன்களை ஒவ்வொன்றாய் பறித்து அக்கிண்ணத்தில் இட்டாள். விண்மீன்களை மசித்து, பிசைந்தாள். குழந்தைக்கு ஊட்டினாள். குழந்தை சிரித்தது. சிரிப்பில் சிதறி ஒழுகிய உணவில் கலந்த ஜொள்ளில் இன்னும் விண்மீன்கள் வண்ணமயமாய் ஒளிர்ந்தன.

குழந்தைக்குப் பசி அடங்கவில்லை. “தங்க பழம் தா..தா” வென மழலையில் கொஞ்சியது. அம்மாவோ காலையில் பறித்துத் தருவதாகக் கூறினாள்.

கிழக்கு வானில் பழம் பொன்னொளி வீசி மெல்ல கனிந்தது. அம்மா பழத்தைப் பறிக்க கைகளை நீட்டினாள். கோடி கோடியான கரங்களும் அந்தப் பழத்தை பறிக்க நீண்டன. ஆச்சரியம்.. தேவைக்கு ஏற்ப அனைவருக்கு தங்க பழங்கள் கிடைத்தன. அம்மாக்கள் குழந்தைகளுக்கு அமுதூட்டி மகிழ்ந்தனர். குழந்தைகளின் உடல்களில் ஒளிர்ந்த பொன்னொளி தரணி முழுவதும் பரவி பிரகாசித்தன.

வாத்தியாரின் இமைகள் சட்டென அகலமாய் விரிந்தன. அவரின் கருவிழிகள் அசைவற்று நிலைகுத்தி நின்றன. இமைகள் இமைக்காமல் கிடந்தன. ஒரு பொன்னுலகம் ஒளிர்ந்து கொண்டிருப்பதை அவர் கண்டார். மெல்லிய புன்னகை அவர் இதழ்களில் அரும்பி நிலைத்தன.

போலிஸ்காரன் வெறி பிடித்தவாறு பென்சிலை தொடையின் ஆழத்திற்குள் கொண்டு சென்று திருகினான். பீறிட்ட இரத்தம் கொப்பளித்து கொப்பளித்து வழிந்தது. அந்த புண்ணை சுற்றி இருந்த இடத்தில் இருந்த சதைகள் மட்டும் தனியாய் துடி துடித்தன. தோழரின் நினைவுகள் அங்கு இல்லை.

கழுதைப் புலிகளின் முகங்களில் இருந்த கெக்களிப்பு மறைந்து இருண்டன.

குற்றுயிராய் கொண்டு வந்து அந்த மாநாட்டு அறையின் மூலையில் வாத்தியாரை கிடத்தினர்.

“சீ ஒரு மயிரையும் புடுக்க முடியவில்லை” என்றான் அந்த அதிகாரி

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. வலியின் உபாதையில் மென்மையாய் அரற்றிக் கொணடிருந்தார்.

“தண்ணி…..தண்ணி” என்று முனகினார்.

ஏட்டு தண்ணீர் தருவதா வேண்டாமா என்று ஒரு கணம் யோசனை செய்தார். பின் இன்னொரு போலிஸ்காரரை காவலுக்கு வைத்து விட்டு பக்கத்து அறையில் இருந்து ஏட்டு தண்ணீர் கொண்டு வந்து தந்தார்.

“இவ்வளவு வீம்பு நல்லத்திற்கில்லை…… ஏன் இப்படி பல்லைக் கடித்து வதைப்பட்டு சாகணும்” என்று ஏட்டு கேள்வி கேட்டு விட்டுப் பேசி கொண்டிருந்தார்.

நீர் அருந்துவதை இடையில் நிறுத்திய வாத்தியார் “ஜீலியஸ் பூசிக்குகள் சாவதுமில்லை…மண்டியிடுவதுமில்லை” என்று சிறிது உரக்கவே தோழர்கள் அனைவருக்கும் கேட்கும்படி சொன்னார்.

ஏட்டுக்கு அதன் பொருள் விளங்கியதோ இல்லையோ.. அங்கிருந்த தோழர்களுக்குப் புரிந்தது.

ஒரிரு மணிகள் கடந்தன. கொடும்வலியை தூக்கம் கரைத்துக் கொண்டிருந்தது. திடீரென காவல்நிலைய வாயில் அமளி துமளி அல்லோகலப்பட்டு கொண்டு இருந்தது.

சப்பாத்து கால்களின் அணி வகுப்பு சத்தங்கள் இருளைக் கிழித்து அறைக்குள் விழுந்தன. வேன்கள் உறுமல்களும், ஜீப்களின் சீறல்களும் கேட்டன. நடுநிசிப் பேய்கள் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றன.

“பெரிய ரெய்டு போல…நிறைய வேன்கள் போகுது” என்றார் ஏட்டு.

“ஆமாம்…. கவர்மெண்ட் எதிரா ஆர்ப்பாட்டம்.. மறியல்ன்னு தொடர்ந்து தொல்லை கொடுக்கிற நாலைந்து கிராமங்களில் மிட்நைட் ரைய்டு…… எவ்வளவு பேரை பிடிப்பாங்களோ தெரியல்ல…. நம்ம பாடு கஷ்டந்தான்” என்றார் அலுத்துக் கொண்டே மற்றொரு போலிஸ். இப்படி அந்த உரையாடல் நீண்டு கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் மெல்லிய விசும்பலும் அழுகையும் அந்த இரவு இருளின் அமைதியை குலைந்தன. யார் அழுவது என்று ஏட்டு ஒவ்வொருவராக கவனித்துப் பார்த்தார். முடக்கி படுத்து கிடந்த வாத்தியார் குலுங்கி குலுங்கி அழுவது அவர் உடல் அதிர்வதில் இருந்து புரிந்தது. வாத்தியார் கண்களில் கண்ணீர் ஆறாய் வழிந்து ஒடின.

வதையின் வலியால் அழுகிறாரா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா?

கொடூர வதைகளுக்கு அழாதா இந்த மனுசன் ஏன் இப்பொழுது அழுகிறார் என்பது போலிஸ்காரர்களுக்கு விளங்கவில்லை. புரியாமல் விழித்தனர். ஆனால் அங்கிருந்த தோழர்களுக்கு அவரின் கண்ணீரின் பொருள் புரிந்தது!

சேய்களுக்கு தாயின் மனது தெரியாமல் இருக்குமா? அவர்கள் கண்களும் லேசாய் கலங்கின‌!!