தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும் தனது கவிதைக்காக இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு மூளையைக் கசக்கி கொண்டிருந்தான். ஊற்றெடுத்து பிரவாகமாகப் பொங்கி  வராமல் எழுத்துகளும், வரிகளும் முக்கி முணகிக் கொண்டிருந்தன.

பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர். இவனும் மனைவியும் மட்டும் தான் வீட்டில்  இருந்தனர். கவித்துவ சூழலில் கவிஞனின் வீடு அமைந்திருந்தது. இன்னமும் பனிமூட்டம் விலகவில்லை. தரையிலிருந்து ஒராள் உயர்த்திற்கு கண்ணுக்கெட்டிய  தூரம் வெண்பனி மூட்டம் படர்ந்து அவன் வீட்டை சூழ்ந்திருந்தது. அந்த வெண்பனி கரைந்த இடத்தில் வண்ணத்துப்பூச்சிகளும், பறவைகளும் பறந்தும், திரிந்தும் மகிழ்ந்தன. குரலை இசைத்துப் பாடி பாடி அந்த இடத்தில் இனிமையைக் குழைத்துக் கொண்டிருந்தன.

இரைச்சலும், நெருச்சலும் மிகுந்த மாநகரை விட்டு விலகி புறநகரில் கவிஞன் வீடு இருந்தது. எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காக அவன் வங்கியில் லோன் வாங்கி வீடு கட்டி குடி புகுந்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டது. இந்த மகிழ்ச்சியும், தனிமையும் நல்ல படைப்புகளை படைக்க அவனுக்கு உதவின.

ஐம்பது ஏக்கர்கள் நன்செய் விளைநிலங்களை வளைத்துப் போட்டு நீர்வளமிக்க ஏரியின் அருகில் குடியிருப்பு மனைப்பட்டாக்களை பிரபல ரியல் எஸ்டேட்காரர் உருவாக்கி இருந்தார். பெரும்பாலான மனைகளை விற்று, கொழுத்த பணம் பார்த்து விட்டு இருந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக நான்கு வீடுகளும் வந்து விட்டன. விளைநிலத்தின் எச்சமாய் பசும் புல்வெளியில் சிலந்திகள் பின்னிய வட்டவலைகள் வெண்பனி ஒளிச்சிதறலில் வைரக்கல் குவியல்களாக மின்னின. புற்களில் பூத்த குட்டிக் குட்டி மலர்கள் பனியில் குளித்து காலை புத்தொளியில் துவட்டி புதியதாய் அழகாகச் சிரித்தன. அந்த மண்சாலை மண்ணுளிப் பாம்பாக வளைந்து நெளிந்துப் படுத்திருப்பதை கவிஞன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் தெரிந்த கரும்புள்ளிகள் மெள்ள நகர்ந்து அருகில் வரவரப் பெரியதாகி வருவதை உற்றுக்  கவனித்தான். பத்து வெள்ளாடுகளுடன் பசுவையும் ஓட்டிக்கொண்டு சிறுவன் வருவதைக் கண்டதும் அவனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

“பூச்செடியெல்லாம் ஆடுங்க தினமும் மேய்ஞ்சிடுத்து. இந்த பக்கமா ஆடுகளை ஓட்டிட்டு வராதே கால ஒடச்சிடுவேன்... போ. .போ..” என்று ஆத்திரத்தில் கத்தத் தொடங்கினான்.

“என்னுடைய ஆடு இல்லீங்க... நான்தான் கூடவே இருக்கேனே... ” என்று அந்த சிறுவன் பதிலுக்கு முறைத்து விட்டு தலையைக் குனிந்து கொண்டு சென்றான்.

ஆவராம், ரோஜா, குண்டுமல்லி, வாழை என்று விதவிதமான  பூச்செடிகளை வீட்டைச் சுற்றி உள்ள இடத்தில் ஆசையாய் வளர்ப்பான். ஆள் இல்லையென்றால் அச்செடிகளை ஆடுகள் மேய்ந்து தள்ளி விடுகின்றன.

சென்ற வாரம் ஆசையாய் பூக்களும், மொட்டுகளுமாய் கருஞ்சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ரோஜா செடிகளை வாங்கி நட்டான். இரண்டு நாட்களுக்குள் எல்லாவற்றையும்  ஆடுகள் தவணை முறையில் மேய்ந்து விட்டன. வெறும் குச்சிகள் மட்டும்தான் இப்பொழுது நிற்கின்றன. கவிஞன் புலம்பிக்  கொண்டு இருந்தான்.

வீட்டுப் பக்கத்தில் பசுமாட்டை சிறுவன் கட்டவில்லை. மாறாக சிறிது தொலைவில் கட்டினான். குச்சி அடித்து நீண்ட கயிற்றுடன் பசுமாட்டை இணைந்து கட்டி விட்டு ஆடுகளுடன் மறைந்து விட்டான். காற்றின் திசை வேகத்தில் குட்டி ஆடுகளின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மணிகள் கிணிங்...கிணிங்  இசை எங்கோ கேட்டுக் கொண்டிருந்தன.

மீண்டும் கவிதை எழுதுவதில் கவிஞன் ஆழ்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அம்மா...ம்மா. என்று பசு கத்தும் சத்தம் அவன் நெஞ்சைப் பிழிந்தது. தொடர்ந்து பசு எதற்காகவோ கத்திக் கொண்டிருந்தது. அவன் கவனம் சிதறிப்போனது. அந்த தீனக்குரல் அவனைக் கூப்பிடுவது போல் இருந்தது.

தன்னை அறியாமல் பசுவை நோக்கி நடந்தான். அங்கு அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது. பிரசவ வலியில் பசு துடிதுடித்துக் கொண்டிருந்தது. கன்றின் முன்னங்காலும், தலையும் மட்டும் பிறப்புறுப்பில் இருந்து இரத்தமும், நிணநீருமாய்த் தொங்கிக் கொண்டிருந்தது. பசு முன்னும் பின்னும் வலியில் அசைந்துக் கொண்டிருந்து. அவன் மனைவி பிரசவ வலியில் துடிதுடித்து, அலறி அலறி அணத்தியதும், அவன் திகிலில் உறைந்து இனிமேல் குழந்தையே பெற்று கொள்ளக் கூடாது என்று பயந்ததும்  அவன் நினைவில் வந்து மறைந்தது.

நகரவாசியான அவனுக்கு பிரசவத்தை நேரில் பார்ப்பது இதுவே முதல் தடவை. ஆண்களுக்கு அந்த வாய்ப்பு நமது சமூகத்தில் இல்லை! இந்த சூழலில் என்ன செய்வது என்று கவிஞனுக்கு விளங்கவில்லை. கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருடைய நடமாட்டமும் இல்லை.

பெருங்குரலெடுத்து தூரத்தில் ஆடு மேய்ந்துக் கொண்டிருந்தவரை அழைத்தான். அந்தப் பெரியவர் என்னமோ ஏதோவென்று ஓடோடி மூச்சிறைக்க வந்தார். சகவாசமாக கவனித்து நிலைமையை அவதானித்தார்.

“நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. முன்னங்காலும் தலையும் தான்  வந்திருக்கு.. சீக்கிரம் சுகமாய் கன்னு போட்டும். ஷாங்கானா இருக்கனும்..... அதான் வயித்திலிருந்து பூமிக்கு வர பயப்படுத்து.”

கடேறி கன்று என்றால் சீக்கரம் பசு கன்றை ஈன்றுவிடும். ஷாங்கானு என்றால் தாயின் வயிற்றில் இருந்து மண்ணிற்கு எளிதில் வராது. ஏர் பூட்டி ஷாங்கானை உலைச்சேற்றில் உழுவார்கள், பெரும் பாரத்தை வண்டியில் ஏற்றி இழுக்க வைப்பார்கள், முடியவில்லை என்றால் தூர்க்குச்சியால் சுருக் சுருக்கொனறு சூத்தாபட்டையில் குத்துவர்கள் என்று பயந்துகொண்டு ஷாங்கான் கன்று எளிதில் பூமிக்கு வராது. தாய்பசுவிற்கு துன்பமும் வலியும் அதிகம் என்று அவர் கவிஞனிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.

“சார்... நான் போய் பையனை தேடிப் பிடித்து அனுப்பி வைக்கிறேன். சோறு வடிக்கட்டின தண்ணி இருந்தா பசுக்கு கொடுங்க... பையன் வந்த பிறகு வீட்டிற்குப் போங்க.. நாய்..கீய்யு ஏதாவது தொந்தரவு செய்யும்”

பெரியவர் சொல்லி விட்டுக் கிளப்பினார். வீட்டின் வாசலில் நின்று அவன் மனைவி பார்த்து கொண்டிருந்தாள். அவன் அவளை அழைத்தான். குக்கரில் சோறு பொங்குவதால் வடிக்கட்டின தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று நினைந்தான். இருக்கின்ற சோற்றில் பாதியை எடுத்து பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் நிரப்பி எடுத்து வரச்சொன்னான்.

பாத்திரத்தில் வைத்த கஞ்சித் தண்ணீரைப் பசு உறிஞ்சிக் குடித்து சுவாசத்தில் பெருமூச்சுவிட்டு கவிஞனைப் பார்த்தது. அதன் பளபளக்கும் ஈரக்கண்களில் தெரிந்த நன்றி உணர்ச்சியை அவனால் உணர முடிந்தது. அந்த சிறுவன் ஆடுகளை விரட்டிக்கொண்டு ஓடோடி வந்தான்.

பசு, கால்களை  மடக்கி படுத்து வலியில் அம்மா என்று அலறியது. கன்று தரையில் வந்து விழுந்தது. சிறிது நேரத்தில் கன்று எழுந்து நின்றது. தாயும் சேயும் தனித்தனியாக  பிரிந்து தனது எதிரில் இரத்தமும், நிணநீருமாய் புத்துயிர் மண்ணில் பிறப்பெடுத்ததை அவன் கண்டான்.

அதற்குள் அந்த சிறுவன் வந்து விட்டான். “நன்றி சார்...தாங்ஸ் சார்...வணக்கம் சார்” என்று வார்த்தை வராமல் திணறினான். பாத்திரத்தை எடுத்து கொண்டு போய் அவன் மனைவியிடம் தண்ணீர் கேட்டு வாங்கி வந்து பசுவிடம் வைத்தான்.

கன்றின் மேல் ஒட்டிக்கொண்டிருந்த மெல்லிய சவ்வை நாவால் நக்கி பசு சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. புதிய காற்றும், வெயிலும் பட்டதால் கன்று அடிக்கடிச் சிலிர்த்துக்கொண்டது. அடர் செவிலி நிறத்தில் வெள்ளை நெற்றிப் பொட்டுடன் கன்று கொள்ளை அழகுடன் இருந்தது.

சிறுவன் கன்றில் கால்குளம்புகளில் வெள்ளையாய் இணைந்து இருந்ததைக் கிள்ளி கிள்ளி எடுத்தான். தேங்காய் பெத்தைகளாய் குளம்புகளில் ஓட்டி இருந்த அவைகள் வந்தன.

“எதற்கு இப்படி செய்கிறாய்”

“கன்னுக் குட்டி அப்பத்தான் ஒழுங்கா நிக்கும். . ஒடும் இல்லாட்டி குளம்புகள் உறுதியாய் இல்லாமல் நொண்டும்.”

அதற்குள் தாய்ப்பசு கன்றின் மீதிருந்த சவ்வை முழுவதையும் நக்கி சுத்தப்படுத்தி விட்டது. கன்று எழுந்து நிற்க முயன்று தள்ளாடி, தள்ளாடி கீழே விழுந்தது. பசு அதை மீண்டும் நக்கி தடவிக்கொடுத்தது. குட்டி முன்னம் கால்களை மடக்கி மெதுவாய் எழ முயன்றது. காற்றில் ஆடும் மலராய் இப்படியும் அப்படியும் அலைபாய்ந்து தடுமாறியது.

“யாரிடமாவது சொல்லி உங்கப்பாவை வர சொல்லுடா... இல்ல நீயாவது போய் சொல்லு.. நா கன்றைப் பார்த்துக்கிறேன்”

“அப்பா பெரியாளு வேலைக்கு போயிட்டாரு.. அக்கா எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு போயிருக்கா” என்று இழுத்தான் அந்த சிறுவன்.

இப்பொழுது வீட்டுமனைகளாய் பிரிக்கப்பட்டு இருக்கும் லேஅவுட்டில் ஏதோ ஒரு பகுதியில் தான் சிறுவன் தாத்தாவிற்கு ஒரு காணி நிலம் இருந்தது. நாலு வாரிசுகளுக்கு அதைப் பிரித்தபொழுது அச்சிறுவனின் அப்பாவிற்கு கால் காணித் துண்டு நிலம் கிடைத்தது. அவர் கடினமான உழைப்பாளி. நன்கு பண்படுத்தி நிலத்தில் கீரைகளையும். காய்கறிகளையும் பயிர் செய்வார். குடும்பம் முழுவதும் உழைக்கும். அதில் வரும் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்கும் போதுமானதாக இருந்தது.

ரியல் எஸ்டேட்காரர்களின் தரகர்கள் நிறைய ஆசைகளை அள்ளி வீசி சில ஆண்டுகளாக சிறுவனின் தந்தையின் துண்டு நிலத்தை வாங்க முயன்றனர். ஆனால் அவர் பிடி கொடுக்கமால் நழுவி வந்தார். சம்சாரியாய் வாழ்ந்தவருக்கு எளிதில் அநத் சுயமரியாதையான வாழ்க்கையை இழக்க மனம் வரவில்லை! இந்த சமூகம் அதை வீழ்த்தி விட்டது. அவன் அம்மாவிற்கு  சோதனையாய் புற்றுநோய் வந்தது. குடும்பம் முழுவதும் அந்த நோயிடமிருந்து அந்த மகராசியைப் காக்கப் போராடியது.

இருந்த ஒரே சொத்தான துண்டு நிலத்தை விற்று சில இலட்சங்கள் செலவு செய்தது. இருந்தும்கூட, அவன் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை. கொஞ்சம் கடனும் பாக்கி இருந்தது. அதை அடைக்க சிறுவனின் அப்பாவும், அக்காக்களும் தினக்கூலி வேலைகளுக்குச் சென்றனர். பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு சிறுவனும் ஆடுகள் மேய்க்க வந்து விட்டான்! தனது முன்னோர்களின் மூச்சுக்காற்றையும், இழந்த இனிய குழந்தைப் பருவத்தையும் தேடித்தான் அந்த சிறுவன் இங்கேயே சுற்றி வந்து ஆடுகளை மேய்த்துக் கொண்டு  திரிகிறான். தயங்கியவாறு அவன் கூறினான். கேட்ட கவிஞனின் மனம் உருகி கசிந்தது!

“சார் லட்சுமி உடும்பு போடனும். நான் போயி மூங்கில் தழையை உருவி எடுத்து வரேன்!”

“உடும்புன்னா இன்னா தம்பி”

“உடும்பு தெரியாதா சார்! மாடு கன்னுப்போட்ட பிறகு கொஞ்ச நேரத்தில் அழுக்கை எல்லாம் வெளியே தள்ளும். அதை பத்திரப்படுத்தி எடுத்துப் போய் பால் வடிகிற அத்தி, அரசு போன்ற மரங்களில் கட்டனும். இல்லாட்டி நாய், நரிங்க காகங்கள் சாப்பிட்டுச்சுன்னா பசு பால் சுரக்காது...பால் இல்லாம கன்னுக்குட்டி செத்திடும்” என்று சொல்லிக்கொண்டே அந்தச் சிறுவன் கிளம்பி போனான். கன்று எழுந்து நின்றது. லேசாக துள்ளியது... குதித்தது! பருத்திருந்த பசுவின் பால்மடிக் காம்புகளைத் தானாய் அலைந்து தேடி சீம்பாலை சப்பியது! முட்டி முட்டி குடித்தது. கன்றின் மகிழ்ச்சியையும், தாய்ப் பசுவின் பரிவையும் அவன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கவிதை எழுதுவது மறந்து போய் விட்டு இருந்தது.

“ஐய்யோ ...ஏங்க ஏங்க..” மனைவி அலறினாள்.

“பூச்செடியெல்லாம் ஆடுகள் மேயுதே” என்று கத்திக் கொண்டே ஆடுகள் மேய்க்கும் வேலை செய்தாள். அவன் சிரித்தான். வேறு என்ன செய்ய இயலும்?

அவனும், அவன் மனைவியும் இணைந்து பசுவையையும் கன்றையும், ஆடுகளையும் கவனித்துக் கொண்டார்கள். ஒருமணி நேரம் கழித்து அந்த பையன் கூடை நிறைய மூங்கில் தழைகளைக் கொண்டு வந்து பசுவிடம் வைத்தான். பையன் கைகளில் இரத்தச் சிராய்ப்புகள் இருந்தன. மூங்கில்கள் கிழித்து இருக்குமென அவன் நினைத்தான்.

நேரம் கடந்து விட்டதால் மதிய உணவிற்கு மனைவி அழைத்தாள்! அவன் போகவில்லை. கன்று தாவித் தாவி வந்து அவனை முட்டி முட்டி நக்கியது! முதலில் கூச்சமாய் இருந்தது. அவனிடம் பால்மடியைத் தேடும் கன்றின் குழந்தைத்தனத்தை ரசிக்கத் தொடங்கி விட்டான். மென்மையான கன்றை தடவி கொடுத்தான். சுகமாய் இருந்ததால் கன்றுக்குட்டி அதை நெளிந்து மகிழ்ந்து அனுபவித்தது.

மீண்டும் பசு கீழே படுத்தது. சிறிது நேரத்தில் இரத்தமும் நிணநீரும் சதையுமாய் உடும்பை போட்டது. அந்த சிறுவன் பழைய துணியை விரித்து அதில் வைக்கோலைக் கொஞ்சம் விரித்து உடும்பை குச்சியால் அதில் தள்ளினான். வாரி அதை சுருட்டிக் கட்டினான்.

“சார்... இதைக் கொண்டு போய் மரத்தில கட்டிட்டு வந்துடுறேன்” என்று அந்த சிறுவன் இழுத்தான்.

கவிஞன் சிரித்தவாறு தலையை ஆட்டினான். அவன் சிறிது நகர்ந்தாலும் கன்று அவனிடம் தேடி வந்து நக்கி முட்டியது. பசுவும் மம்மா...மம்மம என்று அடிவயிற்றில் இருந்து அழைத்து கொண்டு கன்றைச் சுற்றி சுற்றி வந்தது. தாயுக்கும், சேயுக்குமான அற்புத அன்புமயமான உலகு அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.

சிறுவன் வந்ததும் அவன் சாப்பிட வீட்டிற்கு வந்தான். ஆடுகள் அவன் வீட்டைச் சுற்றி சுற்றி வந்து மேய்ந்தன. சிறுவனால் பசுவை விட்டு வர இயலவில்லை. கவிஞன் தான் ஆடுகளை மேய்த்தான்.

அந்தி சாய்கையில் சிறுவனின் அப்பா வந்தார். கன்றை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு நடந்தார். பசு அவரின் பின்னே நாய்க் குட்டி மாதிரி யம்மா...யம்மா என்று கத்திக் கொண்டு ஒடியது. அந்த சிறுவன் நன்றியை கண்களால் புன்னைகையாலும் தெரிவித்து ஆடுகளை ஒட்டிச் சென்றான்.

அவைகள் கண்ணை விட்டு மறைந்தாலும், ஆட்டுக்குட்டிகளின் கழுத்து மணிகளின் ஓசைக்குகிடையில் அம்மா..அம்மா என்று கன்றும் பசுவும் ஒன்றை மாற்றி ஒன்றை அழைப்பது காதில் ரீங்காரமாய் ஒலித்தது. மறுநாள் அந்த சிறுவனின் அப்பா காலையில் சிறுபாத்திரத்தில் தந்த ஏலக்காய் வாசனையுடன் கூடிய கடும்பின் சுவை நாவில் மட்டுமல்ல அடித்தொண்டைவரை இனித்தது. அதை விட,

“உங்க புள்ளகுட்டிங்க நல்லா இருக்கனும் அய்யா...... நாங்க கும்பிடுற குல தெய்வம் காட்டேரி தான் உங்கள‌ இங்க அழைத்து குடி வைத்திருக்கு” என்று வாழ்த்தியது இனித்தது.

அந்த ஆண்டுப் பொங்கல் மலரில் அவனின் கவிதை இரத்தமும், அழுக்கும், நிணநீரும், தாய்மையும், பாசமும், எதார்த்தமும், மாயையும், துள்ளலும், போராட்டமுமாய் கழிந்த இந்த நாளின் வாழ்க்கைச் சித்தரிப்புகளால் எழிலுடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.